- நாம் யாரும் உலகின் இந்த மூலையில், இந்தக் குடும்பத்தில், இந்த உருவத்தில், இந்தப் பாலினத்தில் பிறப்பேன் என்று முடிவெடுத்து அதற்காக முயன்று பிறப்பதில்லை. ஓர் ஆணும் ஒரு பெண்ணும் மனமுவந்தோ கட்டாயத்தாலோ ஏதோ ஒன்றால் உந்தப்பட்டு நிகழ்த்தும் உறவின் காரணமாகக் கரு உருவாகி அந்தக் கரு உருக்கொண்டு நம் உருவில் இங்கு வந்து விழுகிறோம்.
- இப்படிப் பிறந்துவிட்ட பிறகு, ஏதோ பிறப்பிலேயே தான் சாதித்து ஆணாகப் பிறந்துவிட்டதான இறுமாப்பு, சிலருக்கு எப்படி வருகிறது என்பது விந்தையிலும் விந்தை. தற்செயலாக ஆணாகப் பிறந்துவிட்டதாலேயே ஆண் எப்படி உயர்ந்தவனாக முடியும்? அதே தற்செயலாகப் பெண்ணாகப் பிறந்துவிட்ட பெண் எப்படித் தன் சுயம் தொலைத்து அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படலாம்?
- இதற்குப் பொதுவாகப் பலரும் முன்வைக்கும் காரணம் பெண்ணுக்கு ஆணின் பாதுகாப்பு அவசியம், அவள் தனியாக விடப்பட்டால் அது அவளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதுதான். பெண் பலவீனமானவள்; ஒன்று அவளுக்குப் பாலியல் துன்புறுத்தல் நிகழலாம், இல்லையெனில் அவளே எந்த ஆணிடமாவது ஏமாந்து தன்னைப் பறிகொடுத்துவிடுவாள் என்று இந்தச் சமூகம் கருதுகிறது. எப்படியிருந்தாலும் அவளைப் பாதுகாக்க எடுக்கும் அத்தனை முயற்சியும் அவள் குழந்தையாகப் பிறப்பதிலிருந்தே தொடங்கிவிடுகிறது.
யாரிடமிருந்து பெண்ணுக்குப் பாதுகாப்பு?
- ஆணும் பெண்ணும் சரிநிகராகப் பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், அதாவது சரிநிகராகத்தான் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம்கூடத் தோன்றாமல் அவரவரால் எது சாத்தியமோ, எது அவசியமோ, எது அவர்கள் இயல்போ, இயற்கை எப்படி அவர்களை உந்தியதோ அப்படி வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் பெண்ணுக்குத் தனியாகப் பாதுகாப்பு என்கிற தேவையே இல்லை.
- ஆனால், என்றைக்குப் பெண்ணுக்குக் கற்பு என்கிற ஒன்றை இலக்கணமாகப் படைத்தனரோ அன்று அவள் பாதுகாக்கப்பட வேண்டியவளாகிவிட்டாள். யாரிடமிருந்து அவள் பாதுகாக்கப்பட வேண்டியவளானாள் என்றால் அது இன்னும் வெட்கப்படவேண்டிய விஷயம். சக மனிதர்களான ஆண்களிடமிருந்துதான்!
- இந்தச் சமுதாயம் நம்மால் உருவாக்கப்பட்டது. இதில் நடக்கும் நன்மைக்கும் தீமைக்கும் நாம் அனைவருமே காரணம். பெண்களைப் பாதுகாப்பாக வளர்க்க நினைக்கும் பெற்றோர்களில் பலர் தங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளைச் சரியாக வளர்க்க நினைப்பதில்லை. ஒரு பெண்ணுக்கு முதல் பாதுகாப்பு அவள் தந்தை எனத் தொடங்கி, பிறகு சகோதரர்கள், பின் கணவன் அதற்கும் பின் அவள் மகன் எனப் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவள் யாரையாவது அண்டிப் பிழைக்கவும் அதன்வழி அடிமைப்பட்டுக் கிடக்கவும் செய்துவிட்டாகிவிட்டது.
- அவளது உலகம் அவள் குடும்பத்தினர் மட்டுமே என்று சுருக்கப்பட்டது போதாதென்று அப்படிச் சுருங்கிக்கிடப்பதால் அவளுக்கு எதுவும் தெரியாது என்கிற நிலைக்கும் தள்ளிவிட்டோம். குடும்பத்தில் எந்த முடிவெடுத்தாலும் அவளைக் கேட்க வேண்டிய அவசியமில்லாத நிலைக்கும் கொண்டுவந்தாகிவிட்டது. குடும்பத்தில் ஒரு பெண்ணின் நிலை சமைப்பது, சமைத்த உணவைப் பரிமாறுவது, வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்வது, கணவன் - பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வது என்று மாற்றிவிட்டோம். கிட்டத்தட்ட வீட்டை நிர்வகிக்கும் ஒரு பணிப்பெண்.
சமநிலையை நோக்கிச் செல்வோம்
- எல்லாப் பெண்களுக்கும் இதுதான் கதியா, எல்லா ஆண்களும் இப்படித்தானா என்றால் கண்டிப்பாக இல்லை. பெண்களுக்கான கட்டுகளை உடைத்து வரலாற்றில் சாதனையாளர்களாகத் தடம்பதித்த பெண்கள் நம் நாட்டிலேயே பலர் உண்டு. அவர்கள் இந்தச் சமூகக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டுத் தங்களுக்கென தனிப் பாதைகள் வகுத்துச் சென்றவர்கள். அவர்களின் சாதனைகள்தாம் இன்று பெண்கள் கல்வி பெறவும், விளையாட்டுத் துறைகளில் கால் பதிக்கவும், பலப்பல துறைகளில் மிளிரவும் வழிகாட்டியாக இருந்திருக்கின்றன.
- ஆனால், சாதித்த பெண்களில் பலரது பாதைகள் கண்டிப்பாக எளிதான பாதையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒன்று அவர்கள் தனிமனிதராக மனோ திடம் கொண்டு எதிர்ப்புகளைப் புறந்தள்ளியோ போராடியோ வந்தவர்களாக இருப்பார்கள். இல்லையெனில் அவர்களுக்கு உறுதுணையாகப் பெண்ணின் சுதந்திரத்தை மதிக்கும் ஒருவர் நின்றிருப்பார். இல்லை தான் பட்ட துயரம் போதும், தன் மகளுக்கும் அப்படி ஒரு வாழ்வு இருந்துவிடக் கூடாது என்று நினைத்த ஒரு தாய் இருந்திருப்பார்.
- ஆணுக்குச் சமமாகப் பெண்களும் இருந்தாலும் எத்தனை பெண்கள் இந்த நிலையை அடைந்திருப்பார்கள் என்று பார்த்தால், நாம் இன்னும் ஆணாதிக்கச் சமூகமாகத்தான் இருக்கிறோம் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும்.
- இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் பெண் பூப்பெய்தியதும் திருமணம் செய்துவைப்பதும், கணவன் இறந்ததும் பொட்டும் பூவும் துறப்பதும், ஆணின் இரண்டாவது திருமணம் சாதாரணமாகக் கடக்கப்படுவதும், பெண்ணின் இரண்டாவது திருமணத்துக்குச் சமூகத்தில் உள்ள அனைவரும் தங்கள் கருத்துகளைச் சொல்லியே ஆக வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துவதும், பெரும்பாலான குடும்பங்களில் படித்துப் பெரிய பதவியில் இருந்தாலும் ஈட்டும் வருமானத்தைக் கணவனிடமே கொடுத்தாக வேண்டிய சூழல் நிலவுவதும், வேலைக்குச் சென்றாலும் சமையல் வேலையும் மற்ற வீட்டு வேலைகளும் பெண்ணின் கடமையாக மட்டுமே இருப்பதும் அவலம். நாம் ஆண் - பெண் சமநிலை நோக்கி எடுத்துவைக்க வேண்டிய அடிகள் பல உண்டு என்பதையும், கடக்க வேண்டிய தொலைவு ஆயிரமாயிரம் மைல்கள் என்பதையுமே இவை பறைசாற்றுகின்றன.
நன்றி: தி இந்து (18 – 06 – 2023)