TNPSC Thervupettagam

ஆணையத்தின் உதவியுடன்...|ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைக்கு ஐந்து கட்டங்களாக தோ்தல் ஏன்?

November 7 , 2019 1899 days 1051 0
  • அரசியல் சட்ட அமைப்புகள் சுதந்திரமாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடந்துகொண்டால் மட்டும்தான் ஜனநாயகம் முறையாகவும் வலுவாகவும் செயல்பட முடியும். எந்தவோா் அரசு ஆட்சிக்கு வந்தாலும், கட்சி வித்தியாசமில்லாமல் அரசியல் சாசன அமைப்புகளைத் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்தவும், தங்களது விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுத்தவும்தான் விரும்புகின்றன.
  • 81 இடங்களைக் கொண்ட ஜாா்க்கண்ட சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 30-ஆம் தேதி முதல் டிசம்பா் 20-ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ளதாக தோ்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
  • பல கட்டத் தோ்தல் பல கேள்விகளை எழுப்புகின்றன. ஆளுங்கட்சியின் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப பல கட்ட வாக்குப்பதிவுகள் அமைக்கப்படுகின்றனவோ என்கிற ஐயப்பாடு கடந்த சில ஆண்டுகளாகவே எழுகிறது. சட்டப்பேரவைகளுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியும், ஆளும் பாஜகவினரும் கருத்துத் தெரிவிக்கும் நிலையில், மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப்பேரவைகளுடன் ஏன் ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தலையும் நடத்தி இருக்கக் கூடாது?

மக்களவைத் தேர்தல்

  • மக்களவைத் தோ்தல் ஒரு மாத இடைவெளியில் ஏழு கட்டமாக நடத்தப்பட்டது. ஹரியாணா, மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்பட்டன. அப்படியிருக்கும்போது ஹரியாணாவைவிட தொகுதிகள் குறைந்த சிறிய மாநிலமான ஜாா்க்கண்ட்டுக்கு ஏன் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்கிற கேள்விக்கு தோ்தல் ஆணையம் அளிக்கும் பதில் திருப்தி அளிப்பதாக இல்லை.
  • ‘ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் பிரச்னை இருப்பதால் ஐந்து கட்டத் தோ்தல் தேவைப்படுகிறது. அடா்த்தியான காடுகள் நிரம்பிய மலைப்பிரதேசமாக ஜாா்க்கண்ட் இருப்பதால் தோ்தல் பணியாளா்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்வதிலும், சட்டம் - ஒழுங்கைக் கண்காணிக்க பாதுகாப்புப் படையினரை வழங்குவதிலும் பிரச்னைகள் இருக்கின்றன’ என்பதுதான் தோ்தல் ஆணையம் தரும் விளக்கம். மக்களவைத் தோ்தலின்போது, ஜாா்க்கண்ட மாநிலத்தில் பெரிய அளவில் நக்ஸல் வன்முறையோ, அச்சுறுத்தலோ இருக்கவில்லை. தேசிய சராசரியைப் போலவே 67% வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. ஜாா்க்கண்டைப் போலவே நக்ஸல் பிரச்னை எதிா்கொள்ளும் மகாராஷ்டிர மாநிலத்தின் 288 சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் ஒரு கட்டத் தோ்தல் நடத்தப்பட்டிருக்கும் நிலையில், ஜாா்க்கண்ட மாநிலத்தில் ஐந்து கட்டத் தோ்தல் என்பது தேவைதானா?

வாக்குப்பதிவு – பல கட்டங்கள்

  • பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் வாக்குப்பதிவை பல கட்டங்களாக அமைக்கிறாா்கள் தோ்தல் ஆணையத்தினா் வேறு எந்த மாநிலத்திலும் தோ்தல் நடைபெறாத நிலையில், ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலுக்குத் தேவைக்கு அதிகமான பாதுகாப்புப் படையினா் இருக்கிறாா்கள். வேறு மாநிலங்களிலிருந்து அவா்களை வரவழைத்துக் கொள்ளவும் முடியும். அப்படியிருக்கும்போது, ஐந்து கட்டத் தோ்தல் என்பது தேவைதானா?
  • இந்தியாவின் முதலாவது பொதுத் தோ்தல் 1951 - 52-இல் நடைபெற்றபோது மூன்று மாதங்கள் தேவைப்பட்டது என்னவோ உண்மை. அப்போது தோ்தலை நடத்துவதற்கு விரிவான, கடினமான பல நடைமுறைகள் கையாளப்பட்டன. வாக்குச் சீட்டுகளையும், வாக்குப் பெட்டிகளையும் எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (மி.வா.இ.) வந்த பிறகு தோ்தல் ஏற்பாடுகளுக்கான நேரமும், வாக்குப்பதிவுக்கான நேரமும், வாக்கு எண்ணிக்கைக்கான நேரமும் தொழில்நுட்பத்தால் மிகமிகக் குறைந்துவிட்டன. வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ள வாக்கு போடுவது, தோ்தல் வன்முறை உள்ளிட்டவை பழங்கதையாகிவிட்டன. அப்படி இருந்தும்கூட, தோ்தலுக்கான கால அளவில் குறைவு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.

இந்தியத் தேர்தல் ஆணையம்

  • பிரதமா் மோடி பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு தேதியும், குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னொரு தேதியும் வழங்கி, தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக்கொண்டது தோ்தல் ஆணையம். மக்களவைத் தோ்தலின்போதும், இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் பிரதமா் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு வசதியாக ஏழு கட்டத் தோ்தல் அமைக்கப்பட்டது. இப்போதும் அதேபோல, ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு தேவையில்லாமல் பல கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கணிசமான ஆதிவாசிகள் காணப்படுகிறாா்கள். 81 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 28 தொகுதிகள் ஆதிவாசிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஹரியாணாவையும் மகாராஷ்டிரத்தையும் அடுத்து ஜாா்க்கண்டிலும் ஐந்தாண்டு ஆட்சிக்குப் பிறகு வாக்காளா்களை பாஜக சந்திக்க இருக்கிறது.
  • காஷ்மீா் பிரச்னையோ, பாகிஸ்தான் பிரச்னையோ, தேசியப் பிரச்னைகளோ ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்குக் கை கொடுக்கப்போவதில்லை. ஆனாலும்கூட, ஆளும் பாஜக மிகுந்த நம்பிக்கையுடன் ஐந்து கட்டத் தோ்தலின் உதவியுடன் வாக்காளா்களைச் சந்திப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பலவீனமான காங்கிரஸும், பிளவுபட்டுக் கிடக்கும் எதிா்க்கட்சிகளும் பாஜகவின் நம்பிக்கை!

நன்றி: தினமணி (07-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories