TNPSC Thervupettagam

ஆண்கள் ஸ்பெஷல்

January 21 , 2024 220 days 213 0
  • பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு 2023ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகளைக் கடந்த ஜனவரி 13 அன்று தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் வழங்கினார். அதில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், திருவள்ளுவர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட ஆளுமைகளின் பெயரால் விருதுகள் அளிக்கப்பட்டன. பெண் ஆளுமைகளின் பெயரில் ஒரு விருதுகூட அறிவிக்கப்படாதது ஒரு பக்கம் என்றால் ஆண்களின் பெயரால் அளிக்கப்பட்ட இந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர்கூடப் பெண் இல்லை.
  • தேசிய நூலக வார விழாவையொட்டி எழுத்தாளர்கள், கலைஞர்கள் குறித்த ஆவணப்பட விழா பொது நூலகத்துறை, சென்னை மாநகர நூலக ஆணைக்குழு சார்பில் 2023 நவம்பரில் நடத்தப்பட்டது. இது குறித்து முதல்கட்டமாக வெளியிடப்பட்ட அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த ஆளுமைகளில் ஒருவர்கூடப் பெண் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்த பிறகு, முதலில் வெளியிடப்பட்டது முழுமையான அழைப்பிதழ் இல்லை என்று சொல்லப்பட்டதோடு, பெண் கலைஞர்கள் குறித்த ஆவணப்படங்களும் திரையிடப்பட்டன.
  • பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பும் இடம்பெறும் பட்டியலே சமூகநீதியைப் பிரதிபலிக்கும் என்பது தமிழக அரசுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படியிருந்தும் 2023ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுப் பட்டியலில் பெண்கள் விடுபட்டுள்ளனர். பெண்களுக்காக மகளிர் தினத்தன்று வழங்கப்படும்அவ்வையார் விருதுஎன்பது மகளிருக்கான தனிப்பட்ட விருது. இது சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு வழங்கப்படுவது. இதை ஆண்களுக்கு வழங்க முடியாது என்பதால் அந்தப் பட்டியலில் ஆண்கள் இடம்பெறவில்லை. இல்லையென்றால் அந்த விருதையும் ஆண் ஆளுமைகளுக்கே பரிந்துரைத்திருப்பார்கள். பெண்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட விருதுகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது பாலினச் சமத்துவத்துக்கு எதிரானது. விருதுபெறும் அளவுக்குத் தகுதியான பெண் ஆளுமைகள் இருக்கிறபோதுமுழுக்க முழுக்க ஆண்களுக்கு மட்டுமே அரசு விருதுகளை அளித்திருப்பது ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு. இப்படியொரு சமூகக் கட்டமைப்புக்காக நாம் வெட்கப்பட வேண்டும். இனி வழங்கப்படும் விருதுகளாவது பெண்களை உள்ளடக்கியதாக இருப்பதே அரசின் பாலினச் சமத்துவத்துக்கான உண்மையான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories