ஆதரவை வழங்கும் ‘மதி சிறகுகள்’ தொழில் மையம்
- வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது (VKP), தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களில் உள்ள 3,994 கிராமங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையை, தொழில் ஊக்குவிப்பு மூலம் சுயசார்புள்ள சமூகங்களாக உருவாக்குவதற்கு நிறுவப்பட்டுள்ளது.
- வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் பெருமைக்குரிய நிறுவனங்களில் ஒன்றான ஓரிடச் சேவை மையமான ‘மதி சிறகுகள் தொழில் மையம் (MSTM)’ ஊரகத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்குப் பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு சேவை, வணிக ஒருங்கிணைப்புச் சேவைகளை வழங்குகிறது. நாற்பத்து இரண்டு MSTM மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையமும் அடுத்தடுத்த இரண்டு அல்லது மூன்று வட்டாரங்களில் உள்ள தொழில்முனைவோர் / தொழில் நிறுவனங் களுக்குச் சேவை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
- இந்த மையம் ஒருங்கிணைந்த சேவை மையமாகச் செயல்பட்டு, அரசுத் துறை திட்டங்கள், தொழில் கருத்துருவாக்கம், தொழில் தொடங்கத் தேவைப்படுகிற அனைத்து உதவிகளையும் செய்துதருகிறது.
- இதுவரை மதி சிறகுகள் தொழில் மையத்தின் கீழ் 70,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இதில் வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கான தொழில் திட்டம் தயாரித்தல், தொழில் நடத்துவதற்கான சான்றிதழ்கள், பதிவு மற்றும் துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல் ஆதரவு, சந்தைப்படுத்துதல், பிராண்டிங் ஆதரவு போன்ற பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இ-சேவை மற்றும் GST (சரக்கு மற்றும் சேவை வரி) தொடர்பான சேவைகளும் வழங்கப்படுகின்றன.
- இ-சேவையின் கீழ் 400க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கிவருகிறது. இதில் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஓய்வூதியத் திட்டம் (Pension Scheme), புதிய ஆதார் அட்டை விண்ணப்பித்தல், விவசாயப் பயிர்க் காப்பீட்டுச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
- தொழில் திட்டம் - தொழில் ஆரம்பிக்கத் தேவைப்படுகிற வணிகத் திட்டத்தைத் தயாரித்துத் தருகின்றனர். நமது வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானியத் திட்டத்திற்கும் அதேபோல் பல்வேறு அரசுத் துறையில் உள்ள கடன் திட்டங்களுக்கும் (DIC, TAHDCO) வணிகத் திட்டச் சேவை தரப்பட்டுள்ளது.
- தொழில் சார்ந்த வழிகாட்டல் சேவைகள் - வணிகத்தை மேம்படுத்தத் தேவைப்படுகின்ற அனைத்து வழிகாட்டல்களும் இந்தச் சேவையின் மூலம் பெறலாம். மேலும் இதில் வணிகத்தை வலுப்படுத்துதல், வணிகத்தில் நிதி மேலாண்மை, மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் பயிற்சிகளும் தரப்படுகின்றன.
- மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் மூலம் PAN Card, GST, MSME, Udyam Registration, FSSAI போன்ற தொழிலுக்குத் தேவைப்படுகிற பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன.
- தொழில் முனைவோராக வேண்டுமென்ற ஆர்வமுள்ளவர்கள், தற்போது தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் அல்லது தொழில் தொடங்கத் திட்டமிடுபவர்கள் மிகக் குறைந்த செலவில் MSTM மையங்களிலிருந்து பல்வேறு சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
- இந்த மையங்களிலிருந்து வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்திக்கொண்டு, சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் தொழில்களை நிலைத்தன்மை மற்றும் செழிப்பு போன்றவற்றைத் திறம்பட வளர்த்துக்கொள்ள முடியும். மேலும், உதவிகளைப் பெற Toll Free No: 1800 599 1600 / 155 330, அல்லது கீழே குறிப்பிட்டுள்ள QR Codeஐ ஸ்கேன் செய்யுங்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 01 – 2025)