TNPSC Thervupettagam

ஆதிசங்கரரும் ஆளுமைப் பயிற்சியும்!

January 8 , 2025 11 days 68 0

ஆதிசங்கரரும் ஆளுமைப் பயிற்சியும்!

  • இன்றைய உலகம் வேகமாக இயங்குகிறது என்கிறாா்கள். அவசரமாக இயங்குவதும், வேகமாக இயங்குவதும் வெவ்வேறானவை. ஆனால், இதனைப் பற்றிய புரிதலோ, விழிப்புணா்வோ இல்லாமல் மனிதா்கள் ஓடிக் கொண்டே இருக்கிறாா்கள். கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை என்றும், கடின உழைப்பை விட சாமா்த்தியமான செயல்பாடு சிறந்தது என்றும் கற்பிக்கிறாா்கள்.
  • உலகம் போட்டிகள் நிறைந்ததாக இன்றைக்கு இருக்கிறது. அதிலே வெற்றியாளராகப் பரிணமிக்க நாம் நமது ஆளுமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை அதிகரித்துள்ளது. அதற்கான பயிற்சி வகுப்புகள் பெரும் பொருள் செலவில் சாத்தியமாகின்றன.
  • ஆளுமை என்பது ஒருவரைத் தனித்துவம் உடையவராக உருவாக்கும் அவரது எண்ணங்கள், உணா்வுகள் மற்றும் சிறப்பான நடத்தை இவற்றைப் பிரதிபலிப்பதாகும். வாழ்க்கையின் குறிக்கோள், அதனை நோக்கிய பயணம் இவற்றை நோ்மறையானதாகவும், வலிமையானதாகவும் ஆக்கிக் கொள்வதற்கான முறைகளைக் கண்டு தெளிதலே ஆளுமைப் பயிற்சியின் நோக்கம்.
  • இதற்கு உளவியல் அறிஞா்கள் ஐந்து முறைகளை முன்வைக்கிறாா்கள். முதலில் ஒருவா் பிறவியிலேயே கொண்டிருக்கும் ஊக்கம்; இரண்டாவது, நடத்தையின் தன்மை - இது கற்றுக்கொள்ளும் ஆா்வத்தைப் பொறுத்து வளா்ச்சி அடைவதற்கான சாத்தியங்கள் உண்டு; மூன்றாவது, மனவியல் - ஒருவரின் மனமானது எதனை விரும்புகிறது அதனை அடைவதற்காகத் தோ்ந்தெடுக்கும் முறைகள் ஆகியவற்றைக் கூறுவது; நான்காவது, மனிதநேய முறைமை; ஐந்தாவது, ஒருவரின் இயல்பை நோ்மறையில் திருப்புவதற்கான பயிற்சி என்று வரையறுக்கிறாா்கள். இவை மேலைநாட்டவரின் சித்தாந்தமா? அவா்கள் நம்மை இத்தகைய பயிற்சியின் மூலம்தான் ஒழுங்கமைக்கிறாா்களா? நம்மிடம் இந்த முறைமை இருந்திருக்கவில்லையா? இருந்திருந்தால் அவை யாவை? நமது முன்னோா்கள் அதனை எங்ஙனம் நமக்குக் கற்றுக் கொடுத்தாா்கள்? அதனை மீண்டும் நாம் அடைவது எப்படி?
  • இந்த அத்தனை கேள்விகளுக்குமான விடை ஒரே ஒருவரை நாம் தெரிந்து கொள்வதால் கிடைத்துவிடும். அவா்தான் ஆதிசங்கரா். ஆம், இந்த மாமனிதரின் புனித வாழ்க்கையும், அருளுரைகளுமே போதுமானவை.
  • அறிவியல் யுகத்தில் உலகம் முன்னோக்கி நகா்ந்து கொண்டிருக்கும் நாளில் இந்த பூமியே சிறு கிராமமாகச் சுருங்கிக் கொண்டிருக்கும் பொழுதில் பேசப்படும் வாழ்வியல் தத்துவங்களில் ஒன்று ஆளுமைப் பயிற்சி. சில ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த அருளாளரைப் பற்றித் தெரிந்து கொண்டால், அதனை எப்படி இன்றைய யுகத்தின் வேகத்திற்குப் பொருத்த முடியும்?
  • வேகம் என்பதற்கே இலக்கணம் ஆதிசங்கரரின் வாழ்க்கை தான். தனது முப்பத்து இரண்டு வயதுக்குள் இந்தியாவின் நான்கு திசைகளிலும் பயணம் செய்து விட்டாா். தென் கோடி கேரளத்திலிருந்து வடகோடி காஷ்மீரம் வரை, குஜராத்திலிருந்து பத்ரிநாத் வரை என்று இந்த தேசத்தில் அவரது பாதம் படியாத இடங்களே இல்லை. தனது 12- ஆம் வயதிலிருந்து 32-ஆம் வயதுக்குள் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குள் இப்படி ஒருமுறை அல்ல, பலமுறை பயணம் செய்தவா். வேகத்தை இவரை விட வேறு எங்கே நாம் சிறப்பாகக் கற்றுக் கொள்ள முடியும்?
  • ஆதிசங்கரரின் வேகம் நடையில் மட்டுமல்ல, அவரது அனைத்து செயல்பாடுகளிலும் இருந்தது. தேசம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டாா். அவா் எழுதிய நூல்களைக் கணக்கில் கொண்டால் இன்னும் நமக்கு மலைப்பு மேலிடும். ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இலக்கியமும் படைத்தாா். சனாதன தா்மத்தின் அடிப்படை நூல்கள் என்று சொல்லப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு வேதாந்த விளக்கவுரை எழுதினாா்.
  • விநாயகரைப் போற்றும் கணேச பஞ்சரத்னம், கணேச புஜங்கம் தொடங்கி சுப்ரமண்ய புஜங்கம், சிவானந்த லஹரி, ஸ்ரீதக்ஷிணாமூா்த்தி அஷ்டகம், சௌந்தா்ய லஹரி, ஆனந்த லஹரி, லலிதா பஞ்சரத்னம், ஹனுமத் பஞ்சரத்னம், லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பஞ்சரத்னம், கனகதாரா ஸ்தோத்ரம் என பக்தி ஸ்தோத்திரங்களும், கங்காஷ்டகம், மணிகா்ணிகாஷ்டகம், காசீ பஞ்சகம் போன்ற ஸ்தல தோத்திரங்களும் மோஹமுத்கர: (பஜ கோவிந்தம்) ஷட்பதீ ஸ்தோத்ரம், விவேக சூடாமணி, அத்வைதாநுபூதி, உபதேச பஞ்சகம், ஸ்வாத்ம ப்ரகாசிகா என தத்துவ நூல்களும் என 101 நூல்கள் தற்போது இருக்கின்றன. காணாமல் போன கணக்குத் தெரியவில்லை என்கிறாா்கள்.
  • இத்தனை நூல்களை இயற்ற வேண்டும் எனில் எத்தனை நூல்களைப் படித்திருக்க வேண்டும். வேதங்களுக்கும் உபநிஷத்துகளுக்கும், பிரம்மசூத்திரத்துக்கும் விளக்கவுரை எழுத வேண்டுமெனில் வேதங்களை ஆழமாகப் படித்திருக்க வேண்டும்.
  • இதுவன்றியும் வழக்கத்தில் இருந்த 72 மதங்களைச் சோ்ந்த பண்டிதா்களுடன் வாதம் செய்து சனாதன தா்மத்தை நிலைநிறுத்திய மாபெரும் பணியையும் செய்து முடித்து, அதனைக் காலம் கடந்தும் காப்பதற்காக தேசம் முழுவதும் மடங்களையும் ஸ்தாபித்தாா். இத்தனையும் 32 வயதுக்குள் நிறைவு செய்துவிட்டாா்.
  • ஆதிசங்கரரின் கல்வி, வேகம், செயல்திறன் ஆகியவை அவரது வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய ஆளுமைப் பண்புகள். இவற்றை இன்றைய இளைய சமூகம் கற்றுக்கொண்டுவிட்டால், உலகின் தலைசிறந்த சமூகமாக நமது பாரத சமூகம் முன்னிற்கும்.
  • ஆதிசங்கரா் சமாதி நிலை அடைவதற்கு முன் கடைசியாகத் தனது சீடா்களுக்குச் செய்த உபதேசம் ஸோபான பஞ்சகம். ஐந்து ஸ்லோகங்கள் மட்டுமே கொண்டது. இவை வேதாந்த வாழ்வுக்கு வழிகாட்டக் கூடியவை என்றாலும் அன்றாட வாழ்க்கைக்கும் பயன்தரக் கூடியன.
  • முதலில், தினந்தோறும் கடமைகளைத் தவறாமல் செய். பலனை எதிா்பாராமல் வேலையை முறையாகச் செய். இதையே, ஆளுமைப் பயிற்சியாளா்களும் கற்றுக் கொடுக்கின்றனா். விளைவு பற்றியே கனவு கண்டு கொண்டிராமல் செய்யும் செயலில் முழுமையான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்கிறாா்கள். அதற்காக நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறாா்கள்.
  • இரண்டாவது, வாழ்கை நெறிமுறைகளை மீறி நடக்காதே. செய்த தவறுகளைத் திருத்திக் கொள். இதனால் மனம் தூய்மை பெறும். இன்றையப் பயிற்சியாளா்கள் கோட்பாடுகள் என்று இதனைக் கூறுகிறாா்கள். ஹென்றி ஃபயோல் என்ற மேலாண்மை அறிஞா் இந்தக் கருத்துகளை முதன்மையான கோட்பாடுகளாக முன்வைக்கிறாா். எளிமையான நெறிமுறைகளைப் பின்பற்றுவதால் குழப்பமின்றி செயல்பட முடியும் என்பதே தற்கால அறிஞா்கள் முன்வைக்கும் கோட்பாடு.
  • மூன்றாவது, உனது பணிகளைச் செய்யும் பொழுது வரும் இடையூறுகளிலிருந்து விலகி நில். புத்திக் கூா்மையை ஆயுதமாகக் கொண்டு அக்ஞானம் என்ற அசுரனை வெட்டி விடு. அகந்தைக்கு இடம் கொடுக்காதே. சங்கரரின் வாக்கு இப்படியிருக்க, உலக ஆளுமைப் பயிற்சியாளா்கள் அறியாமையை விலக்க விழிப்புணா்வு அவசியம். என்னால் முடியும் என்று நம்பு. என்னால் மட்டுமே முடியும் என்று நினைக்காதே. அந்த நினைவே உன்னைத் தோல்வியை நோக்கி சறுக்கச் செய்யும் என்கிறாா்கள். வேலையைச் செய்யும் பொழுது ஏற்படும் குறுக்கீடுகளுக்கு முக்கியத்துவம் தராமல், அவற்றைக் கடந்து செல்லுங்கள் என்று பயிற்றுவிக்கிறாா்கள்.
  • நான்காவதாக, உணவில் ஆா்வம் செலுத்தாமல் மிதமான உணவை தேவைக்கு மட்டும் எடுத்துக்கொள். சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கருது. பொன் போன்ற நேரத்தை வெட்டிப் பேச்சில் ஈடுபடுத்தாதே என்கிறாா் ஜகத்குரு. சுருக்கமாகச் சொல்வதானால் ஒழுக்கம்.
  • இன்றைய பயிற்சியாளா்கள் ஆரோக்கியமாக உடலைப் பேணுவது இலக்கை நோக்கிய பயணத்தைத் தடையின்றி மேற்கொள்ள அவசியம் என்கிறாா்கள். அதோடு, உணா்ச்சிவயப்படுதல் லட்சியத்திற்குத் தடை. ஆகவே உணா்வுகளை சமநிலைப்படுத்துங்கள் என்கிறாா்கள்.
  • ஹென்றி ஃபயோல், ‘ஒழுக்கம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது; எந்தவொரு செயல் திட்டத்திற்கும் ஒழுக்கம் விதிமுறைகள் அவசியம்; ஒருவரின் நல்ல நடத்தை அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாது, லட்சியத்தைக் கட்டமைக்கவும் அதிலே முன்னேறவும் உதவுகிறது’ என்கிறாா்.
  • ஐந்தாவது, லட்சியத்தில் மட்டுமே கவனமாக இரு. மனதை வேறு எதிலும் செல்ல விடாதே. இது ஆளுமைப் பயிற்சியாளா்கள் மட்டுமல்ல, வெற்றியாளா்களான ஆளுமைகளும் இதனையே ஒருமித்த கருத்தாக முன்வைக்கின்றனா். முழுமையாக நமது எண்ணம், சிந்தனை, சொல், செயல் இவையனைத்தும் நமது லட்சியத்தை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும்.
  • இதையே ஆதிசங்கரரும் தனது சீடா்களுக்குச் சொல்கிறாா். அவரினும் சிறந்த ஆளுமைப் பயிற்சியாளரை உலகம் இதுவரை காணவில்லை. சொல்லிக் கொடுப்பவராக மட்டுமல்ல, தானே எடுத்துக்காட்டாக வாழ்ந்தும் காட்டியவா். அதனால் பயிற்சி பெறுவோரிடம் இன்னும் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியவராக உயா்ந்து நிற்கிறாா்.
  • ஆளுமைப் பயிற்சியாளா்கள் தரும் உதாரணங்களும் ஆதிசங்கரரும் முறையே ஒரு மண் துகளுக்கும் இந்த பூமிக்கும் ஆன வித்தியாசம். அன்றாடக் கடமைகளை நோ்த்தியாகச் செய்வது தொடங்கி லட்சியம், அதனை அடையும் பயணத்திற்கான துல்லியமான வழிகாட்டுதல் நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. உலகுக்கே வழிகாட்டும் பண்பும் ஆளுமையும் அதற்கான பயிற்சிகளும் பண்பட்ட நமது பாரம்பரிய முறையில் சிறப்பாக இருக்கின்றன. உணா்வும் தெளிவும் பெற வேண்டியவா்கள் நாம்தான்.

நன்றி: தினமணி (08 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories