TNPSC Thervupettagam

ஆதியில் ஒன்றாகத்தான் இருந்தோம்

June 5 , 2023 588 days 410 0
  • ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகளைக் கற்பித்து, பெண்ணைவிட ஆண் பலசாலி என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். அது உண்மையா? பல்லாயிரம் ஜீவராசிகளைக் கொண்ட நம் உலகில், வெகு சில வகைகளைத் தவிர மற்ற எல்லா வகையான ஜீவராசிகளுக்கும் இனப் பெருக்கத்துக்கான வழியாக உடற்கூறு அடிப்படையில் ஆண், பெண் என்கிற இரு வகைகளை இயற்கை உருவாக்கி இருக்கிறது.
  • இந்த இரண்டு பிரிவுகளைக் கடந்து நூற்றுக்கணக்கான பாலினப் பிரிவுகள் இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. அவற்றைப் பற்றிப் பிறகு பேசுவோம்.
  • பெண் - ஆண் ஆகிய இரண்டுக்கும் இருக்கும் வேறுபாடுகளே இவற்றின் ஒற்றுமைக்கும் வழிவகுத்திருக்க வேண்டும். ஆண் உடலில் இல்லாத சில பாகங்களை, தன்மைகளைப் பெண் உடலிலும் பெண் உடலில் இல்லாத சில அம்சங்களை ஆண் உடலிலும் வைத்ததற்குக் காரணம் ஒருவருக்கொருவர் சுவாரசியமாகவும் தேவையாகவும் இருக்க வேண்டித்தான் இருக்கும்.
  • இல்லையெனில் மனிதனுக்கும்கூட இனப்பெருக்கத்துக்கு இதுதான் வழி என்று எப்படித் தெரிந்திருக்கும்? இயற்கை உந்துதலில்தானே முதன்முதலாக ஆணும் பெண்ணும் இணைந்திருப்பார்கள்? அப்படிக் கலந்த பிறகுதானே இதன்வழிதான் பிள்ளை பிறக்கும் என்பது மனிதருக்குப் புலப்பட்டிருக்கும்? நம்மளவு சிந்திக்கத் தெரியாத மற்ற உயிரினங்களும் இனப்பெருக்கம் செய்வது அந்த இயற்கை உந்துதலால்தான் இல்லையா?

உரிமையும் உடைமையும்

  • ஆக இந்த உலகம் சுழல, இனப்பெருக்கம் இன்றியமையாததாகிறது. நம் இனம் பெருக ஆண், பெண் இருபாலரும் தேவைப்படு கிறார்கள். அடிப்படையில் பெண்கள் இன்றியோ ஆண்கள் இன்றியோ இந்த உலகம் சுழலாது. இருபாலரும் மனித இனம். இருபாலருக்குமான மனம், அறிவு எல்லாம் ஒன்றுதான். அப்படியிருக்க, ஏன் இந்த இருபாலருக்குள்ளும் ஆண்டாண்டு காலமாக இவ்வளவு பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள்?
  • ஆண், பெண் என்கிற இரு பாலர்கள் ஒருவரை ஒருவர் முழுமைப்படுத்த வந்தவர்கள் என்பதை மறந்து பல நூற்றாண்டுகளாகப் பெண்களை இரண்டாம்தரக் குடிமக்களாகத்தான் இந்த உலகம் நடத்தி வருகிறது. சிலரைத் தவிர்த்துப் பெண்களும் இந்த நிலையை ஏற்றுக்கொண்டே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
  • அன்றன்றைக்கான உணவை அன்றன்று கண்டறிந்து வாழ்ந்திருந்த வாழ்க்கையில், விவசாயம் செய்து நாளைக்கான உணவுப் பண்டங்களை என்றைக்குச் சேமித்துவைக்க மனிதர் கற்றாரோ, அன்றுதான் சேமித்த பொருள் தன் வாரிசுதான் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை மனிதருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
  • ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தன் பிள்ளைகள்தான் என்பதற்கான ஊர்ஜிதம் ஓர் ஆணுக்குத் தேவைப்பட்டிருக்க வேண்டும். அதற்காக, அந்தப் பெண் தன்னுடன் மட்டுமே வாழ வேண்டும் என்பதை அடிப்படையாகக்கொண்டு அமைத்த வியூகம்தான் கற்பெனும் கற்பனை இலக்கணம். கற்பிலக்கணம் வகுத்தால் மட்டும் போதுமா? அதைப் பெண்கள் அப்படியே கடைபிடிப்பார்கள் என்பது என்ன நிச்சயம்? அங்கு தொடங்கியவைதான் பெண்ணுக்கான கட்டுப்பாடுகள்.

அடிமை வலை

  • கட்டுப்பாடுகள் விதித்தால் மட்டும் போதுமா, அவற்றை அவள் மனதார ஏற்று நடந்தால்தானே அவர்களுக்குள் பிரச்சினை இல்லாத வாழ்வு அமையும்?
  • அவளைப் பீடத்தில் ஏற்றிவைத்து, இலகுவானவளாக நம்பவைத்து, ‘நீங்கள் எங்கள் ராணிகள், உங்களைப் பாதுகாப்பது எங்கள் கடமை. நீங்கள் இல்லத்தை விட்டு வெளியில் வரவேண்டியதேயில்லை. உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றத்தான் நாங்கள் இருக்கிறோம்’ என்று சாம்பிராணி கொளுத்தி மூட்டம் போட்டாகிவிட்டது. இருக்கும் இடத்தில் எல்லாமே கிடைக்கையில் நாம் ஏன் வெளியில் செல்ல வேண்டும்? மேலும், வெளியே சென்றால் நம் கற்புக்கும் பங்கம் ஏற்படக்கூடுமல்லவா? அதனால், ஆண்கள் தயாரித்த வலையில் இப்படியாக விழுந்தாகிவிட்டது.
  • இப்போது ஒரு பெண்ணின் உலகம் தானிருக்கும் வீடு, தன் மக்கள் என சுருங்கியாகி விட்டது. இனி வெளியில் அவளுக்கென்ன வேலை? வெளியுலக ஞானம் எதற்கு? அடுப்படியில் கிடந்து உழைத்து, வெளியே உழைத்துக் களைத்து வரும் இணையரின் உணவு, உடை, காமத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தாலே போதுமே! அவள் வாழ்வு சாபல்யம் அடைந்துவிடாதா என்ன? இப்படித்தான் ஆண்டாண்டு காலமாக வீட்டுக்குள் முடங்கி விட்ட பெண்கள் தங்களுக்கென அறிவையும் அந்த இயற்கை அளித்திருக்கிறது என்பதை மறந்து, சுயம் தொலைத்துப் பொம்மலாட்ட பொம்மைகளாகத் தங்களைத் தாங்களே உருவகப்படுத்திக்கொண்டனர். இன்று வரை மேலும் மேலும் உயிருள்ள பெண் பொம்மைகளையும், பிறப்பிலேயே சாதனை புரிந்துதான் ஆணாக பிறந்திருப்பதாக இறுமாப்பு கொண்டு அலையும் ஆண்களையும் உருவாக்கியிருக்கிறோம் நம் சமூகத்தில்.

இலக்கணப் பிழைகள்

  • அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு என்றும் ஆண் வல்லவனாக வளரவேண்டி (ஏனெனில் அவன் தன்னையும் காத்து, வீட்டுப் பெண் பிள்ளைகளையும் காக்க வேண்டும் அல்லவா?) அவனுக்கான அத்தனை சலுகைகளையும் அளித்து வளர்க்கப்படும் உலகில் பெண்ணுக்கு மட்டுமல்ல, அவளைப் பாதுகாக்கிறேன் என்கிற பெயரில் ஆணுக்குமே நாம் இழைக்கும் தீமைகள் ஏராளம்.
  • தனி மனிதர்கள் அவர்களுக்கான வாழ்வை வாழவிடாமல் செய்வதற்கான அத்தனை விதைகளையும் ஆண்களுக்கான இலக்கணம், பெண்களுக்கான இலக்கணம் என்கிற பெயரில் விதைத்து வைத்திருக்கிறோம். ‘இனி பொறுக்க முடியாது, போதும்’ என்று பொங்கி எழும் பெண்கள், தங்கள் முதுகில் ஏற்றிவைத்திருக்கும் சுமைகளான தங்கள் மூதாதையர்களின் அத்தனை அடிமைத்தனங்களையும் ஒவ்வொன் றாக இறக்கிவைக்க படாதபாடு படுகிறார்கள்.
  • பாலின வேறுபாடுகளாக இயற்கை அளித்திருக்கும் அத்தனையையும் ஒரு சாரார் சுயநலத்திற்காகப் பாகுபாடுகளாக ஆக்கிவிட்ட சமூகத்தில், ஆணும் பெண்ணும் மற்ற பாலினத்தவரும் சுயத்துடன் போராடும் போராட்டங்கள் எத்தனை எத்தனை? இதில் யார் சுகித்திருக்கிறார்கள்? மனித சக்தியில் 50% சக்தியான பெண்ணை முடக்கிவிட்டு இந்த உலகம் 100% சக்தியில் செயல்பட இயலுமா?
  • மனிதர் அனைவரும் எந்தப் பாலினத்தவராக இருந்தாலும், அவரும் சக மனிதரே என்றில்லா மல் போவதற்கு யார், எது காரணம்? மாற்றங்கள் எங்கிருந்து தொடங்கப்பட வேண்டும்? யார் இவற்றை முன்னெடுக்க வேண்டும்? மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனம் எப்படி, எவ்வாறு வரும்? உயர்வு தாழ்வென இல்லாமல் அனைவரும் சமநிலை அடைவோமா?

நன்றி: தி இந்து (05 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories