TNPSC Thervupettagam

ஆந்த்ரோபோசீன்: வரலாற்றைக் கட்டமைத்தல்

July 22 , 2023 411 days 264 0
  • அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசனைக் குழு (PSAC), ‘நமது சுற்றுச்சூழலின் தரத்தை மீட்டெடுத்தல்’ என்கிற தலைப்பில், சுற்றுச்சூழல் மாசு பற்றிய அறிக்கை ஒன்றை 1965 நவம்பர் மாதம் வெளியிட்டது. புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடு புவியை வெப்பமடையச் செய்து, காலநிலையில் மிக மோசமான விளைவுகளைக் (potentially disastrous consequences) கொண்டுவரும் என எச்சரித்த அந்த அறிக்கை, மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் பற்றிய முதல் அரசாங்க ஆவணமாக வரலாற்றில் இடம்பெறுகிறது.
  • ‘உலகளாவிய தொழில்துறை நாகரிகத்தின் மூலம், [தன்னை] அறியாமலேயே மனிதன் ஒரு பரந்த புவி இயற்பியல் பரிசோதனையை நடத்துகிறான்’ என அந்த அறிக்கையின் முடிவுரையில் அறிவியலாளர்கள் வருந்தியிருந்தனர். ஆனால், நிச்சயமற்ற விளைவுகள் மூலம், புவியில் உயிர் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுற்றுதலைக் கொண்டுவரவிருந்த அந்தப் பரிசோதனையை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி மனிதன் பரிசீலிக்கவே இல்லை.
  • இந்தப் பரிசோதனையின் திசைவழி மனிதகுலத்தைக் கொண்டுவந்து நிறுத்திய இடத்தை, ஜேம்ஸ் ஹான்ஸென் என்கிற அறிவியலாளர் 1988இல் உலகுக்கு அடையாளம் காட்டினார். புதைபடிவ எரிபொருள்களின் தீவிரப் பயன்பாடு பசுங்குடில் வாயுக்களை வளிமண்டலத்தில் சேர்த்து, புவியை வெப்பமடையைச் செய்துகொண்டிருக்கிறது என்கிற அறிவியல் உண்மையை, அமெரிக்கக் காங்கிரஸில் அவர் வாக்குமூலமாக அளித்தார்; உலகம் திடுக்கிட்டது, எனினும் பரிசோதனை நிறுத்தப்படவில்லை.
  • காலநிலை மாற்றம் ஓர் அறிவியல்பூர்வமான உண்மை என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட பிறகும், அதன் தீர்வை நோக்கி மனிதர்கள் அடி எடுத்து வைக்கவில்லை என்பதைக் காலநிலை மாற்றத்தால் உலகம் இன்று எதிர்கொண்டுவரும் இயற்கைப் பேரிடர்கள் உணர்த்துகின்றன [இங்கு ‘மனிதர்கள்’ என்பவர்கள் ஒட்டுமொத்த உலகக் குடிமக்கள் அல்லர்; பொதுநலன்களுக்கு முன்பாக தங்கள் சுயநலனைக் காப்பாற்ற யத்தனிக்கும், உலகின் இயக்கத்தை நிர்ணயித்த/ நிர்ணயித்துக் கொண்டிருக்கும் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்கள், பெருநிறுவன முதலாளிகள், கொழுத்த செல்வந்தர்கள் முதலான ‘சிறுபான் மையினர்’ என்பதை இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களில் நாம் பார்த்தோம்].
  • ‘இதற்கு முன் மனிதர்கள் வாழ்ந்திராத ஒரு காலநிலையில் நாம் ஏற்கெனவே வாழத் தொடங்கிவிட்டோம் என்றே தோன்றுகிறது. ஆனால், வேளாண்மை தோன்றிய காலத்துக்கு முன் எந்த மனிதரும் வாழ்திருக்காத காலநிலையில் நாம் வாழத் தொடங்கிவிட்டோம் என்பது உறுதி’ என்கிறார் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியலாளர் பாப் காப். அதாவது, ‘ஆந்த்ரோபோசீன்’ (Anthropocene) என்கிற புவியியல் காலகட்டத்துக்குள் மனிதகுலம் அடியெடுத்து வைத்திருக்கிறது என்று இதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.
  • மனிதச் செயல்பாடுகள் புவியில் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலகட்டத்துக்கு, புவியியல் அடிப்படையில் ‘ஆந்த்ரோபோசீன்’ என்கிற பெயரை அறிவியலாளர்கள் முன்மொழிந் துள்ளனர். சுமார் 12,000 ஆண்டுகளாக நிலவிவந்த ஹோலோசீன் என்கிற வெப்பநிலைக் காலகட்டத்தை, சமகாலத்தில் குறிப்பதற்கான சரியான பதம் இதுதான் என அவர்கள் வாதிடுகின்றனர்.
  • வளிமண்டல வேதியியலாளரான பால் க்ரூட்ஸென், 21ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் ‘ஆந்த்ரோபோசீன்’ என்கிற பதத்தைப் பரவலாக்கினார். இந்தப் பின்னணியில், 2009இல் தொடங்கப்பட்ட ‘ஆந்த்ரோ போசீன் செயல்திட்டக் குழு’ (Anthropocene Working Group - AWG), புவி, ‘ஆந்த்ரோபோசீன்’ யுகத்துக்குள் நுழைந்துவிட்டதை அறிவியல்பூர்வமாக நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது.
  • இந்நிலையில், இந்தக் குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராகச் செயல்பட்டுவந்த ஏர்ல் எல்லிஸ், இக்குழுவிலிருந்து விலகுவதாக ஜூலை 13 அன்று அறிவித்தார். இது அறிவியல் சமூகத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இரண்டு முக்கியக் காரணங்களை முன்னிட்டு அக்குழுவிலிருந்து விலகுவதாக, எல்லிஸ் தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்: ஒன்று, குழுவில் மாற்றுக் கருத்துகளுக்கான இடம் சுருங்கிப்போனது; இரண்டு, ஆந்த்ரோபோசீனுக்கான வரையறையை - 1950 காலகட்டத்துடன் - ஒற்றைப்படையாகக் குறுக்குவது.
  • புவியின் காலநிலையில் நீண்டகாலமாக நிலவிவரும் மனித ஆதிக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல், 1950 காலகட்டத்தை மட்டுமே ஆந்த்ரோபோசீனுக்கான தொடக்கமாகக் (வரையறையாக) கொள்வது ஒரு மோசமான அறிவியல் நிலைப்பாடு; அது காலநிலை மாற்றம் சார்ந்த செயல்பாடுகளில் மக்களின் புரிதலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எல்லிஸ் கவலைதெரிவிக்கிறார்.
  • ‘புவியில் மனித ஆதிக்கத்தை 1950-க்கு முன்/ பின் என இரண்டு பகுதிகளாகப் பகுப்பது, புவியின் சமூக-சுற்றுச்சூழல் நெருக்கடியின் ஆதாரமான காரணங்களையும் அதன் ஆழமான வரலாற்றையும் மறுதலிப்பது பெரும் சேதத்தை ஏற்படுத்தும்’ என்று கூறும் எல்லிஸ், ‘1950-க்கு முன்னர் தொழில்துறை, காலனியாதிக்க நாடுகளால் ஏற்பட்ட தாக்கங்கள் புவியின் தன்மையை மாற்றியமைக்கும் அளவுக்குக் குறிப்பிடத்தகுந்தவை இல்லையா?’ என்கிற கேள்வியை முன்வைக்கிறார்.
  • எல்லிஸின் ராஜினாமா ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். புவியியல் வரலாறு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூக-அரசியல் வரலாறும் எல்லிஸ் முன்வைக்கும் கேள்விக்கான பதிலில் அடங்கி யிருக்கிறது.
  • இந்தப் பின்னணியில், வரலாற்றாய்வாளர் திபேஷ் சக்ரவர்த்தியின் ‘The Climate of History: Four Theses’ (https://bit.ly/DipeshClimate) என்கிற ஆய்வுக் கட்டுரை, ஆந்த்ரோபோசீனின் வரலாற்றை அணுகுவதற்கு முக்கியமான திறப்புகளை வழங்குகிறது. வரலாற்றுச் சிந்தனையிலும், காலம் பற்றிய மனிதர்களின் புரிதலிலும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் சார்ந்து ஆராய்ந்திருக்கும் சக்ரவர்த்தி, ஆந்த்ரோபோசீன் காலகட்டத்தின் முக்கியத்துவத்தைப் பரிசீலிக்க வரலாற்றாய் வாளர்களை அழைக்கிறார். சக்ரவர்த்தியின் இந்த ஆய்வு, வழமையான வரலாற்று அணுகுமுறைக்குச் சவால்விடுகிறது.
  • காலநிலை மாற்றம் என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் பாதிக்கும் ஓர் உலகளாவிய நிகழ்வு. எனவே, புவி அரசியல் ரீதியிலான தேச எல்லைகளைக் கடந்த ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு நமக்குத் தேவை; கடல்மட்ட உயர்வு, அதிதீவிர வானிலை நிகழ்வுகள் போன்ற காலநிலை மாற்றத்தின் பரந்துபட்ட விளைவுகளால், வரலாற்றுச் சிந்தனையிலும் மாற்றம் தேவை என சக்ரவர்த்தி வாதிடுகிறார்.
  • மனிதச் செயல்பாடுகள் புவியில் தாக்கம் செலுத்தி அதன் தன்மையைத் திரித்துவிட்ட நிலையில், மனித வரலாறு, இயற்கை வரலாறு இரண்டுக்குமான உறவு சார்ந்து வரலாற்றை அணுகுவதிலும் மறுபரிசீலனை தேவை என்கிறார் சக்ரவர்த்தி. மனிதச் செயல்பாடுகள் புவி முழுவதும் விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் வாழ்வதன் தாக்கங்களை வரலாற்றாசிரியர்கள் கிரகித்துக்கொள்ள வேண்டும்; அவை வரலாற்றின் போக்கை எவ்வாறு வடிவமைக் கின்றன என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
  • இந்தப் புள்ளிக்கு நாம் எப்படி வந்தடைந்தோம் என்பதைப் புரிந்துகொள்ள கடந்த காலத்தையும் (காலனியம்) கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டியிக்கிறது. கடந்த காலத்தை அறிவோம். ஏனெனில், கடந்த காலம் தெரியாதவர்களுக்கு நிகழ்காலம் புரியாது; நிகழ்காலம் புரியாதவர்களுக்கு எதிர்காலம் இல்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (22  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories