ஆன்மிகத்தில் மன்னிப்பின் முக்கியத்துவம்
- ஆன்மிகக் கோட்பாடுகளில் அன்பு, நன்றி உணர்தல், சரணாகதி ஆகியவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்த அளவுக்கு மன்னிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. மன்னிப்பு ஒரு மனிதனுக்கு அவனது ஆன்மிக வளர்ச்சியில் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து பார்ப்பது அவசியமாகிறது.
- மன்னிப்பு என்பது வெறும் சொல் அல்ல, அது ஓர் ஆழமான உணர்வு. அது ஒரு பயணம், வாழ்க்கையின் பாதையில் ஏற்படும் ஒரு பெரிய மாற்றம். அது காற்றின் சுவாசம் போல் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் இடைவிடாமல் வரவேண்டிய ஒரு நுண்ணிய விஷயம். ஆன்மிகப் பாதையில் பயணிப்பவர்களுக்கு மன்னிப்பு ஒரு பெரிய மைல் கல்.
- மற்றவர்களால் நமக்கு ஏற்படும் வேதனை, வலி, ஏமாற்றங்கள், துரோகங்கள், நம்முடைய சொந்த தவறுகள், குற்ற உணர்வுகள் என பல்வேறு காரணங்களால் நாம் பாதிக்கப்படுகிறோம். இந்த பாதிப்புகள் நம் மனதில் கோபம், பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகளை விதைக்கின்றன. நம் வாழ்வின் அமைதியை கெடுக்கின்றன.
- இத்தகைய சூழ்நிலையில் மனிதனுக்கு இருக்கும் ஒரே சக்திவாய்ந்த உபாயம் ‘மன்னிப்பு’ ஒன்றுதான். ஒரு நதியைப் போல், அது நமது மனதில் மண்டிக் கிடக்கும் குற்ற உணர்வு என்கிற அழுக்கைக் களைந்து நம் ஆன்மாவை தூய்மைப்படுத்தும். அன்பு மற்றும் மன்னிப்பு என்பது ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
- மன்னித்தல் நம்மை தெய்வீகத்துக்கு அருகில் அழைத்துச் செல்லும். மனித னுக்கும் கடவுளுக்கும் இடையே எந்த எல்லையும் இல்லை. "கடவுள் உங்களிடமிருந்து தனித்திருக்கவில்லை. அவர் உங்களுக்குள் இருக்கும் உண்மையான சாரம். எனவே நீங்கள் மன்னிக்கும் தருணத்தில், நீங்கள் உங்கள் ஒரு பகுதியை மன்னிக்கிறீர்கள், அதைச் செய்வதன் மூலம், நீங்கள் கடவுளுடன் ஒற்றுமையை அனுபவிக்கிறீர்கள்" என்று ரமண மஹரிஷி கூறுகிறார்.
- "மன்னிப்பு மற்றவர்களுக்காக அல்ல; அது உங்களுக்காகவே. நீங்கள் மன்னிக்கும் போது, கோபத்தின் சுமையையும் பிரிவினையின் மாயையையும் விட்டுவிடுகிறீர்கள். அதேபோல், யாராவது உங்களிடம் மன்னிப்பு கேட்கும்போது, அதை உயர்ந்த நிலைக்கு உயரும் வாய்ப்பாகக் கருதுங்கள்.
- மன்னிப்பு ஆத்மாவை விரிவுபடுத்துகிறது. இது ஒரு தெய்வீக அனுபவம், எல்லையற்ற தன்மையை தொடும் வாய்ப்பு" என்று புத்தர் கூறுகிறார். டாவோ தே ஜிங் கூறுவது போல மன்னிப்பதன் மூலம் நாம் எதையும் இழப்பதில்லை. மாறாக வற்றா இருப்பான இந்த பிரபஞ்சத்தில் இருந்து வேண்டிய அளவு பெற்றுக் கொள்கிறோம்.
- மன்னித்தலால் ஒருவரின் கர்மா கரைந்து போகிறது. வெறுப்பின் தடைகள் விலகி, தெய்வீகம் அனைத்திலும், ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு செயலிலும் தெரியும். “மன்னிப்பு என்பது வெறும் வார்த்தைகளால் சொல்லப்படும் செயல் அல்ல, மாறாக அது ஒரு மனநிலை. ஒருவர் தனது தவறுகளுக்காக மனம் வருந்தி உணர்ந்து, அதற்காக உண்மையாக மன்னிப்பு கேட்கும்போது, அவரது ஆன்மா சுத்திகரிக்கப்படுகிறது.
- இது மட்டுமல்லாமல், மன்னிப்பை வழங்குவதும் ஒரு புனிதமான செயல்" என்று ஆதிசங்கரர் கூறுகிறார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றே என்பது ஆதிசங்கரரின் அத்வைத சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கையின்படி, நாம் மற்றவர்களுக்கு தீங்கு செய்கிறோம் என்றால், உண்மையில் நமக்கு நாமே தீங்கு செய்து கொள்கிறோம் என்பது பொருள்.
- எனவே, மற்றவர்களை மன்னிப்பது என்பது நம்மை நாமே மன்னிப்பதற்கு சமம். நாம் செய்யும் செயல்களின் விளைவாகவே நம் வாழ்க்கை அமைகிறது. தவறுகள் செய்தாலும், அவற்றை உணர்ந்து, அவற்றில் இருந்து பாடம் கற்று மீண்டும் தவறு செய்யாமல் இருப்பதே உண்மையான மன்னிப்பு என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.
- மன்னிப்பின் வழியாகவே உண்மையான ஆன்மிக உயர்வு சாத்தியம். மன்னிப்பு என்பது தன்னையே வெல்வதற்கான போர். ஆன்மிகம் என்பது தன்னை வென்றவனின் வெற்றி. ஆன்மிகம் நமக்கு மன்னிப்பின் பாதையை காட்டுகிறது. மன்னிப்பு நம்மை ஆன்மிகத்தின் உச்சிக்கு கொண்டு செல்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 01 – 2025)