- சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கிக்கொண்ட மூவாயிரத்துக்கும் அதிகமான இந்தியர்களை மீட்கும் பணி வெற்றியடைந்திருப்பது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மரியாதையை மேலும் உயர்ந்திருக்கிறது. கடந்த 15 நாள்களில் "ஆபரேஷன் காவேரி'யை வெற்றிகரமாக நடத்தியதில் இந்திய விமானப் படையும், கடற்படையும் பெரும்பங்கு வகிக்கின்றன.
- சூடானில் மோதலில் ஈடுபட்டிருக்கும் படைகளுக்கு இடையே, ஏப்ரல் 24-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை முழுமையாகப் பயன்படுத்தி இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வந்திருக்கிறது மத்திய அரசு. மே 1-ஆம் தேதிக்குள் ஏறத்தாழ 3,400 இந்தியர்கள் நாடு திரும்பியிருக்கின்றனர் அல்லது பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். இந்தியர்களில் பலர் தங்களது பயண ஆவணங்களை வீட்டில் வைத்துவிட்டு வெளியேறியதால், அவர்களை அழைத்து வருவதில் பல பிரச்னைகள் இருந்தன. தலைநகர் கார்ட்டூமிலிருந்து துறைமுக நகரமான போர்ட் ஆஃப் சூடான் 850 கி.மீ. தொலைவு என்பதாலும் காலதாமதம் ஏற்பட்டது.
- சூடானில் இருந்த 3,400 இந்தியர்களில் ஏறத்தாழ 1,000 பேர் இந்திய வம்சாவளியினர். 100 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி சூடான் குடிமக்களாகிவிட்ட அந்த இந்தியர்கள் தாய்நாடு திரும்பியபோது அவர்களையும் தாயுள்ளத்துடன் அழைத்து வந்திருப்பது வரவேற்புக்குரியது.
- கடந்த இரண்டு வாரங்களாக ஏறத்தாழ 55 லட்சம் மக்கள் வாழும் சூடானின் தலைநகரான கார்ட்டூம், சொல்லொணா அழிவை எதிர்கொள்கிறது. வான்வழித் தாக்குதல்களாலும் தெருவில் நடக்கும் மோதல்களாலும் வெடிகுண்டு வீச்சுகளாலும் கலவர பூமியாக மாறியிருக்கிறது. ஐ.நா.வின் அதிகாரபூர்வ தகவலின்படி, 528 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 4,500-க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள்.
- ஆப்பிரிக்காவின் 3-ஆவது பெரிய நாடான சூடானில் இதுபோன்ற வன்முறையும், குழப்பமும் ஏற்படுவது புதிதல்ல. ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் செங்கடலை ஒட்டிய நாடு சூடான். சுமார் நான்கரை கோடி மக்கள்தொகையுள்ள சூடானில் பெட்ரோலியம், தங்கம் உள்ளிட்ட கனிம வளங்கள் ஏராளம். ஆனால், மக்கள்தொகையில் 65% பேர் வறுமையின் கோரப்பிடியில் இருப்பவர்கள். 18.86 லட்சம் சதுர கி.மீ. நிலப்பரப்புள்ள மக்கள்தொகை குறைவாக இருக்கும் பாலைவன நாடு சூடான்.
- 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனிகளில் ஒன்றாக இருந்த சூடான், 1956-இல் பிரிட்டனிலிருந்து விடுதலை பெற்றது. அதைத் தொடர்ந்து ஆறு ராணுவப் புரட்சிகளை - 1958, 1969, 1985, 1989, 2019, 2021 ஆண்டுகளில் - சூடான் பார்த்துவிட்டது. அவையல்லாமல் 10 ராணுவப் புரட்சிகள் தோல்வியும் அடைந்திருக்கின்றன. 1964-இலும், 1985-இலும் ஜனநாயக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன என்றாலும், அவற்றை ராணுவம் தடம்புரளச் செய்தது.
- 1989-இல் நடைபெற்ற ராணுவப் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றி 30 ஆண்டுகள் சூடானில் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் கர்னல் ஒமர் அல் -பஷீர். அவரது பிரித்தாளும் தந்திரத்துக்காக உருவாக்கப்பட்டவர்கள்தான் இப்போது மோதலில் ஈடுபட்டிருக்கும் ஜெனரல் அப்தெல் ஃபட்டா அல்-புர்ஹானும், ஜெனரல் முகமது ஹம்தான் டகாலோவும்.
- 2018-இல் கர்னல் பஷீருக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கிப் போராடியபோது, அவரை அகற்றிவிட்டு புர்ஹானும், டகாலோவும் ஓர் ஒப்பந்தத்தின் கீழ் 2019 ஏப்ரலில் ஆட்சியைக் கைப்பற்றினர். போராட்டத் தலைவர்களும் ராணுவமும் இணைந்து "சாவரின் கவுன்சில்' என்கிற கூட்டமைப்பின் கீழ் ஆட்சி நடத்துவது என்று முடிவானது. ஜெனரல் புர்ஹான் கவுன்சிலின் தலைவர். டகாலோ அவருக்கு அடுத்தபடியான இடத்தில் பிரதமர். இந்த ஆண்டு ஜூலையில் தேர்தல் நடத்தப்படுவது வரை இந்த ஆட்சி தொடரும் என்பதுதான் ஒப்பந்தம்.
- டகாலோவின் தலைமையில் இயங்கும் துணை ராணுவம், சூடான் ராணுவத்தில் உடனடியாக இணைய வேண்டும் என்பது புர்ஹானின் வற்புறுத்தல். ஆனால், அதற்கு டகாலோ தயாராக இல்லை. இதற்கு பின்னால் அந்நிய சக்திகளின் கரங்கள் காணப்படுகின்றன.
- டகாலோவை ஐக்கிய அரபு அமீரகமும், ரஷியாவின் வாக்னர் எனப்படும் பெட்ரோலிய நிறுவனமும் ஆதரிக்கின்றன. சூடான் ராணுவத்துக்கு ரஷியாவின் மறைமுக ஆதரவு காணப்படுகிறது. ஜனநாயகம், சமாதானம், சூடானில் இயல்புநிலை என்றெல்லாம் வெளிநாடுகள் பேசுவதற்கு அந்த நாட்டில் உள்ள கனிம வளங்கள்தான் காரணம்.
- பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதிகளை அனுப்ப இரு தளபதிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. பிரதிநிதி தெரிவித்திருக்கிறார். பேச்சுவார்த்தை என்பது தங்களை வளப்படுத்திக் கொள்வதற்காகத்தானே தவிர, அமைதியை நிலைநாட்ட அல்ல என்பதை வரலாறு பலமுறை உணர்த்திவிட்டது. இதுபோன்ற பிரச்னைகளில் சர்வதேச அமைதிப் படையுடன் களமிறங்கி, உள்நாட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டுவரும் துணிவும் அதிகாரமும் ஐ.நா.வுக்கு ஏற்படும் வரை இவற்றுக்கெல்லாம் தீர்வு கிடையாது.
- ஏறத்தாழ 1.4 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். ஆண்டுதோறும் ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்குச் செல்கிறார்கள். உக்ரைன் போல, படிப்பதற்காகச் செல்லும் மாணவர்களும் ஏராளம்.
- வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைப்படி, வெளிநாடுகளில் பிரச்னைகள் ஏற்படும்போது இந்தியர்களைக் காப்பாற்றி அழைத்து வருவதற்கான சிறப்புப் படையையும், செயல்பாட்டு நடைமுறையையும் உருவாக்க வேண்டியது அவசியம் என்பதை உக்ரைன், சூடான் அனுபவங்கள் உணர்த்துகின்றன.
நன்றி: தினமணி (03 – 05 – 2023)