ஆம்னி பேருந்து கட்டணம் ரூ.3000, ரூ.4000 - எச்சரிக்கை என்னாச்சு?
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஒருநாள் விடுமுறை எடுத்தால், சனி, ஞாயிறு சேர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பிருப்பதால், இந்த முறை விடுமுறையைக் கழிக்க சொந்த ஊர்களுக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
- சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கும் அதே அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரைக்கு இருக்கைக்கு ரூ.3000, படுக்கை வசதிக்கு ரூ.4000 அளவுக்கு டிக்கெட் விற்பனையாகிறது. திருச்சிக்கு ரூ.2500 கட்டணம் வசூலிக்கின்றனர். கோவை, பெங்களூரு போன்ற நகரங்களுக் கும் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொங்கலைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் இளைஞர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
- இதுபோன்ற இரட்டிப்பு கட்டண வசூல் புதிதல்ல. ஒவ்வொரு முறை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை வரும்போதெல்லாம் ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை உயர்த்தி விற்பனை செய்கின்றன. இந்த முறை போக்குவரத்து ஆணையரகம் சார்பில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- ‘‘ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்க தலா 3 அதிகாரிகள் அடங்கிய 30 குழுக்கள் அமைக்கப்படும். அவர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் ஆம்னி பேருந்துகளை சோதனை செய்து விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்று எச்சரித்திருந்தனர். அதிக கட்டணம் வசூலித்தல், விதிமீறல் இருந்தால் ‘பெர்மிட்’ இடைநீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கட்டணம் குறைந்தபாடில்லை. எச்சரிக்கைக்கு எந்தப் பலனும் இருப்பதாக தெரியவில்லை.
- ஒவ்வொரு விடுமுறையின்போதும் தொடர்கதையாக உள்ள இப்பிரச்சினைக்கு போக்குவரத்து துறை நிரந்தர தீர்வு காண வேண்டும். டிக்கெட்களை முன்பதிவு செய்யும் இணையதளங்களுக்குச் சென்று பார்த்தாலே, அவர்கள் எவ்வளவு கட்டணம் நிர்ணயித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகும். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் சோதனை என்ற பெயரில் ஒப்புக்கு ஒருசில பேருந்துகளை நிறுத்தி அபராதம் விதித்து கணக்கு காண்பிப்பதால் இப்பிரச்சினை முடிந்து விடப் போவதில்லை.
- விடுமுறை நாட்களை குறிவைத்து ஆம்னி பேருந்துகளில் உள்ள இடங்களை சில இடைத்தரகர்கள் முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக் கொண்டு, தேவை அதிகமுள்ள நாட்களில் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
- இதுபோன்ற இடைத்தரகர்கள் மீதும் போக்குவரத்து துறை கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கூடுதல் கட்டண விவகாரத்தில் தீர்வை எட்ட முடியும். அரசு சார்பில் கி.மீட்டருக்கு இவ்வளவு அல்லது பெருநகரங்களைக் கணக்கிட்டு அந்த நகரங்களுக்கு இவ்வளவு கட்டணத்திற்கு மேல் வசூலிக்கக் கூடாது என்பது போன்ற வரைமுறைகளை வகுக்க வேண்டும். அப்போது தான் இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 01 – 2025)