TNPSC Thervupettagam

ஆம் ஆத்மி தோல்வி: மக்களுக்கு பதில் சொல்வதே முக்கியம்!

February 10 , 2025 7 hrs 0 min 15 0

ஆம் ஆத்மி தோல்வி: மக்களுக்கு பதில் சொல்வதே முக்கியம்!

  • தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. பாஜக அளித்த பல்வேறு வாக்குறுதிகள் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதியை விட சிறப்பாக இருந்ததும் அக்கட்சியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. கடந்த லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட ஆம் ஆத்மியும், காங்கிரசும் இந்த முறை தனித்தனியாக போட்டியிட்டதும் அக்கட்சிகளின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
  • பொதுவாக இணைந்திருக்கும் கட்சிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துதனித்தனியே போட்டியிட்டால் இருதரப்பையும் தோற்கடிப்பது இந்திய அரசியலில் மக்கள் வழக்கமாக கொடுக்கும் தண்டனையாகவே இருந்து வருகிறது. ஆம் ஆத்மியும் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று அரசியல் விமர்சனங்கள் ஒருபுறம் வெளிவந்தாலும், ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை கொள்கை ஆட்டம்கண்டதே இந்த முறை அந்தக் கட்சி தோல்வியடைந்ததற்கான பிரதான காரணமாக கூறப்படுகிறது.
  • அன்னா ஹசாரே இயக்கத்தில் இருந்து கிளைவிட்டு, ஊழலை ஒழிப்போம், அரசியல் சாக்கடையை சுத்தம் செய்வோம் என்று துடைப்பத்துடன் கிளம்பிய கட்சி தான் ஆம் ஆத்மி. அந்த அடிப்படைக் கொள்கைக்கு மாறாக மதுபான ஊழல் குற்றச்சாட்டின் பேரில், அக்கட்சியின் தலைவர்அர்விந்த் கேஜ்ரிவால், முக்கிய தலைவர்களில் ஒருவரான மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் சிறை சென்றது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதுகுறித்த வழக்குகளில் வாத பிரதிவாதங்களின் முடிவாக குற்றவாளி என்றோ, குற்றமற்றவர் என்றோ நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு வெளிவருவது ஒருபுறம் இருந்தாலும், நடந்த சம்பவங்களின் உண்மையை விளக்கி, மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஆம் ஆத்மி கட்சியினர் ஈடுபடவில்லை. தாங்கள் ஊழல் செய்யவில்லை என்றோ, லஞ்சம் வாங்கவில்லை என்றோ மக்கள் நம்பும்படியாக ஆதாரங்களுடன் தெரிவிக்கவில்லை.
  • இதுதவிர, தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநில அரசின் வாகனம் ஒன்றில், ரூ.8 லட்சம் பணம், பஞ்சாப் அரசு முத்திரையுடன் கூடிய மதுபாட்டில்கள், ஆம்ஆத்மி தேர்தல் விளம்பரங்களுடன் பிடிபட்டது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம் ஆத்மி ஆட்சி நடத்தும் பஞ்சாப் அரசு மறுத்ததை வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், உண்மையில் அந்தப் பணம் யாருடையது என்பதை மக்கள் முன் நிரூபித்திருக்க வேண்டிய பொறுப்பு ஆம் ஆத்மிதலைவர்களுக்கு உண்டு. அதை அவர்கள் செய்யவில்லை.
  • அதையடுத்து ரூ.5 லட்சம் பணத்துடன் பிடிபட்ட டெல்லிஅரசு ஊழியர், முதல்வர் பொறுப்பில் இருந்த அதிஷியின் உதவியாளருடன் மொபைல் போனில் பேசிய தகவலும் வெளிவந்தது. இதையெல்லாம் ஆம் ஆத்மி தலைவர்களால் ஆதாரங்களுடன் மறுக்க முடியவில்லை. ஆம் ஆத்மியின் அடிப்படைக் கொள்கையையே ஆட்டம் காணச் செய்தஇத்தகைய சம்பவங்களுக்கு மக்களிடம் பதில் சொல்லியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதன் பலனை மக்கள் தேர்தல் முடிவாக வெளிப்படுத்தியுள்ளனர். மக்கள் தீர்ப்பே இறுதியானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories