- கடந்த ஏழு ஆண்டுகளாகவே ஏறுமுகத்தில் இருந்த ஆயுத விநியோகம் உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக மேலும் அதிகரித்திருக்கிறது. 2022இல் மட்டும் உலகம் முழுவதும் ராணுவத்துக்காகச் சுமார் ரூ.175 லட்சம் கோடி செலவிடப்பட்டிருக்கிறது. ஆம். பாதுகாப்புக்காக ஆயுதங்கள் விநியோகம் செய்யப்பட்ட காலம் கடந்துவிட்டது; அது சர்வதேச அளவில் லாபம் கொழிக்கும் வணிகமாகிவிட்டது. எதிரி நாடுகளை அச்சுறுத்தவும், உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதற்குமான மையப் புள்ளியாக மாறிவிட்டது.
தொடங்கிவைத்த உலகப் போர்கள்
- முதல் உலகப் போரில் ஆயுதங்களுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக துப்பாக்கிகளை வாங்குவதில் நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அதுவரை ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தனியார் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. ஆஸ்திரியா-ஹங்கேரி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களே ஆயுதங்களைத் தேவையான நாடுகளுக்கு விநியோகம் செய்துவந்தன.
- முதல் உலகப் போருக்குப் பின்னர் நிலைமை மாறியது. இரண்டாம் உலகப் போரில் பங்கு கொண்ட நேச நாடுகளும், அச்சு நாடுகளும் நேரடியாகவே ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டன. பனிப்போர் (1947-1991) காலத்தில் ஆயுத விற்பனை பரவலானது.
- ஆயுத உற்பத்தி உலகளாவிய வணிகமாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் உருவானது அப்போதுதான்.
பனிப்போரும் - ஆயுத விநியோகமும்
- பனிப்போர் காலத்தில் அமெரிக்கா - சோவியத் ஒன்றியம் என்ற இரு வல்லரசுகளுக்கு இடையே நேரடியான யுத்தம் இல்லாவிட்டாலும், ராணுவம், தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் சார்ந்து கடும் போட்டி நிலவியது. இப்போட்டியின் ஒரு பகுதியாக ராணுவ பலத்தை நிரூபிக்கும் கட்டாயத்தில் இரு நாடுகளும் இருந்தன.
- ஆயுதப் பரிமாற்றத்தை வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கைகளில் ஓர் அங்கமாக அந்நாடுகள் பயன்படுத்தின. நேட்டோ, வார்சா போன்ற ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டு, நட்பு நாடுகளில் ராணுவத் தளவாடங்கள் விரிவுபடுத்தப்பட்டன. இதன் விளைவாகப் பனிப்போர் காலத்தில் ஆயுத விநியோகத்தில் முக்கிய ஏற்றுமதியாளர்களாக இரு நாடுகளும் இருந்தன. சீனா, எகிப்து, ஈரான், ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் இறக்குமதியாளர்களாக இருந்தன.
- பனிப்போருக்குப் பின்னர், பதற்றம் தணிந்ததால் ஆயுத விற்பனை சரிவைச் சந்தித்தது. எனினும், 2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகளவில் பயங்கரவாதம் தலைதூக்கத் தொடங்கியதால் மீண்டும் மெல்ல மெல்ல ஆயுத விற்பனை ஏற்றம் கண்டது.2017 – 2021 ஆண்டுகளில் ஆயுத விநியோகத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன; சர்வதேச ஆயுத விற்பனையில் அமெரிக்கா (38.6%) உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக உள்ளது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உலகளவில் ஆயுத விநியோகத்தில் முதல் 100 இடங்களில் உள்ள நிறுவனங்களில் 35க்கும் மேற்பட்டவை அமெரிக்காவைச் சேர்ந்தவை என்றும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இரண்டாம் இடத்தில் ரஷ்யா இருக்கிறது. எனினும், ரஷ்யாவின் ஆயுத விநியோகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 6% குறைந்திருக்கிறது.
ஆயுத வர்த்தகத்தில் இந்தியா
- 2018–2022 காலகட்டத்தில் உலகில் அதிக அளவு ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடு இந்தியா. உலக ஆயுத வர்த்தகத்தில் 11% இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த ஐந்தாண்டுகளில் சுமார் ரூ.41 ஆயிரத்து 112 கோடிக்கு ஆயுதங்களை இந்தியா வாங்கிக் குவித்திருக்கிறது. இந்தியா இறக்குமதி செய்யும் ஆயுதங்களில் 48% ரஷ்யாவிடமும், 29% பிரான்ஸிடமும், 11% அமெரிக்காவிடமிருந்தும் வாங்கப்படுகின்றன. இவ்விஷயத்தில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் சவுதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகள் உள்ளன.
விநியோகத்தில்
- உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுத உற்பத்தியை அதிகரித்ததன் விளைவாகக் கடந்த ஓர் ஆண்டில் இந்தியாவின் ஆயுத விநியோகம் கணிசமான அளவில் கூடியிருக்கிறது. 2021இல் மயன்மாரின் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அப்போது ரஷ்யா, சீனா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகள் ஆயுத ஆதரவை மயன்மார் ராணுவத் துக்கு வழங்கின. இந்தியா மட்டும் ரூ.422 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்கியது.
- பிரம்மோஸ் ஏவுகணைகள், டோர்னியர் 228, துப்பாக்கிகள், பீரங்கிகள், ரேடார்கள் போன்றவை இந்தியாவால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை, சவுதி அரேபியா, ரஷ்யா, மாலத்தீவுகள், நேபாளம், இத்தாலி, பிரான்ஸ், பூட்டான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்தியாவிடமிருந்து அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்கின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (25 - 10 – 2023)