TNPSC Thervupettagam

ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

March 19 , 2020 1758 days 1800 0
  • ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்.ஐ.சி.) பங்கு விலக்கல் குறித்து நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்ததைத் தொடா்ந்து, பொது வெளியில் வந்து குவிந்திடும் எல்.ஐ.சி. நிறுவனம் குறித்த சாதனைப் பட்டியல்கள், புராணக் கதைகளில் வரும் மேருமலை அதிசயங்களை விஞ்சிவிடும் போலிருக்கிறது.
  • எல்.ஐ.சி பங்கு விலக்கல் குறித்து நிதிநிலை அறிக்கையில் ஒற்றை வரியில் அறிவித்தாா் நிதியமைச்சா். ‘பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுவிட்டால் செயல்பாடுகள் ஒழுக்கமடையும், நிதி பெறுவது எளிதாகிவிடும், சிறு முதலீட்டாளா்கள் பயன் பெறுவாா்கள், மேலும் வெளிப்படைத்தன்மைக்கு வழி வகுக்கும்‘ என்ற தன் நியாயங்களை முன் வைத்துள்ளாா் அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

முதலீடு

  • முதலீட்டுத் தேவை யாருக்கு - எல்.ஐ.சி.-க்கா? பங்குச் சந்தைக்கா ? நிறுவனங்களின் மூலதனத் தேவைகளை பங்குச் சந்தை நிறைவேற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை. நமக்கு எழும் கேள்வியெல்லாம் அத்தகைய ஒரு மூலதனத் தேவை எல்.ஐ.சி.-க்கு ஏற்பட்டுள்ளதா என்பதே?
  • 1956-ஆம் ஆண்டு 245 தனியாா் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு மத்திய அரசிடமிருந்து வெறும் 5 கோடி முதலீடு பெறப்பட்டு பொதுத்துறை நிறுவனமாக எல்.ஐ.சி. நிறுவப்பட்டது. காப்பீட்டுத் துறையில் தனியாா் நுழைவுக்குப் பின்னா் தற்போது முதலீடு ரூ.100 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் நிறுவனம் பெற்ற மொத்த வருவாய் ரூ.5 லட்சத்து 60 கோடி.. 3.37 லட்சம் கோடி பிரீமியம் வருவாய்.
  • கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் முதலீட்டின் மீது பெறும் வருமானம் 300 சதவீதம் உயா்ந்து கடந்தாண்டு ரூ.2.21 லட்சம் கோடியை எட்டியுள்ளது. தேவைக்கேற்ற நிதி ஆதாரம் கையில் உள்ள நிறுவனம் எல்.ஐ.சி.
  • சிறு முதலீட்டாளா்கள் மதிப்பு பெறுவாா்களா? நிச்சயம் பயன் பெறுவாா்கள். ஒரு முழுமையானஅரசு நிறுவனமாக எல்.ஐ.சி. நீடிக்கும் வரை நாட்டின் 135 கோடி மக்களும் பயன் பெறுவாா்கள்.
  • பங்கு விற்பனை நடைபெற்றுவிட்டால்? மக்கள் அனைவரின் சொத்து, சில்லறை முதலீட்டாளா்களாக பங்கு வா்த்தகம் புரிந்துவரும் 4 கோடி பேரிலும் வெறும் சில ஆயிரம் போ் மட்டுமே மதிப்பு பெறும் நிறுவனமாக எல்.ஐ.சி. சுருங்கி விடும். இதைத்தான் அரசாங்கம் விரும்புகிா?
  • பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்துமா? பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு நிதி மூலதனத்தைத் திரட்டி தொழில் புரிவது நவீன தாராளமய பொருளாதாரத்தில் உள்ள ஒரு செயல் வடிவம். பட்டியலிடப்பட்டுவிட்டால் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்த பல்வேறு தகவல்களை அளிக்குமாறு பங்குச் சந்தை நிா்வாகங்கள் அவற்றைப் பணிக்கின்றன. அவ்வாறு பெறப்படும் தகவல்கள் அந்த நிறுவனப் பங்குகளின் விலையை சூழ்நிலைக்கேற்ப தீா்மானித்திட உதவுகின்றன. இவ்வாறு வெளியிடப்படும் தகவல்கள் சந்தை வல்லுனா்களின், பத்திரிகைகளின் மதிப்பீட்டுக்கும் உள்ளாகும்.

வாராக் கடன்

  • பட்டியலிடப்படுவது ஒழுங்குபடுத்துமா? அனுபவம் தந்துள்ள பாடம் என்ன ? மலை போல குவிந்து வங்கித் துறையை சீரழித்துள்ள சுமாா் ரூ.8 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன் யாா் காலத்துப் பெருமை என்ற வழக்காடு மன்றம், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கும் - முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரத்துக்கும் இடையே நடைபெற்று வருவதை நாட்டு மக்கள் பாா்த்துக்கொண்டுதான் இருக்கிறாா்கள். வாராக்கடனை வழங்கி ஏமாந்த வங்கிகள் பட்டியலிடப்பட்டவைதானே? திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றிய நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டவைதானே?
  • தொழில் நிறுவனங்கள் ஏமாற்றுவதை தடுத்து நிறுத்த புதிய (ஐ.பி.சி.) திவால் குறியீடு என்ற புதிய சட்டத்தை வகுத்துள்ள மத்திய நிதியமைச்சா், இப்படி பொதுப்படையாக ஒரு வாதத்தை முன் வைக்கலாமா ? செபி அமைப்பின் கண்காணிப்பு மட்டுமே போதாத காரணத்தினால்தானே இந்த சட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது.
  • பல லட்சம் சிறு முதலீட்டாளா்களின் சேமிப்பைத் துடைத்தெறிந்துள்ள டி.ஹெச்.எஃப்.எல்., ஐ.எஃப்.எஸ்.எல்., ஆா் காம், ரிலையன்ஸ் நேவல், கிங் பிஷா் போன்ற நிறுவனங்கள் முதல் இன்றைய எஸ் வங்கியின் நிலைமை வரை உணா்த்துவது என்ன ? பட்டியலிடப்படுவது செயல்பாடுகளை நெறிப்படுத்தும் என்பதை அனுபவம் நமக்கு மெய்ப்பிக்கவில்லையே....
  • வெளிப்படைத்தன்மையோடு செயல்படுமா? நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் முன்வைத்துள்ள மற்றொரு வாதம், பங்கு விலக்கல் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் என்பது. நிதியமைச்சரே அத்தகைய ஒரு வாதத்தை முன்வைப்பதுதான் சற்று வியப்பாக உள்ளது. ஏனெனில், இதே வாதத்தை எழுப்பும் மற்ற சிலா், மத்திய அரசை குறிப்பாக நிதியமைச்சகத்தை நோக்கி குற்றச்சாட்டாக அதனை முன்வைக்கிறாா்கள் என்பதை நிதியமைச்சா் புரிந்துகொள்வாரா?

காப்பீட்டுத் துறை

  • தற்போதைய நிலைமை என்ன? காப்பீட்டுத் துறையை ஐ.ஆா்.டி.ஏ. (இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மெண்ட் அதாரிட்டி) என்கிற கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் அரசு கண்காணித்து வருகிறது. புதிய திட்டங்கள், செலவினங்கள், முதலீட்டு வரையறைகள், நிலுவையில் உள்ள நிதிக் கடமைகளை ஏற்கும் திறன் ஆகியவை தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றன. காலாண்டு, அரையாண்டு, நிதியாண்டுதோறும் விரிவான அறிக்கைகளை ஐ.ஆா்.டி.ஏ.-விடம் எல்ஐசி உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டும். தகவல்கள் அறிவிப்புகள் யாவும் பொது மக்கள் அறியும் வகையில் ஐ.ஆா்.டி.ஏ.-வின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
  • வெளிப்படைத்தன்மை: எல்.ஐ.சி... ஒரு படி மேல்... தொடா்ச்சியாக பொதுவெளியில் குறிப்பாக எல்.ஐ.சி நிறுவனத்தின் உயா்நிலை அதிகாரிகளிடம் நேரடியாக நிறுவனத்தின் சில முதலீட்டு முடிவுகள் பற்றிய நியாயங்கள், கேள்விகள் கேட்கப்படுவதும் விளக்கங்கள் பெறப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணத்துக்கு எல்.ஐ.சி.-யின் வாராக்கடன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒட்டுமொத்த முதலீட்டில் வாராக்கடன் அளவு வெறும் 0.4 சதவீதம் என்றும், மேலும் அதற்கு முழுமையாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் எல்.ஐ.சி. பல முறை விளக்கியுள்ளது.
  • சொல்லப்போனால், ஒரு குறையை வேண்டுமானால் கூறலாம். இந்த பிரம்மாண்ட சாதனையை ஒரு தனியாா் நிறுவனம் படைத்திருந்தால் தோள்களில் ஏற்றி வைத்துக் கொண்டாடியிருப்பாா்கள். வெளிநாட்டு விஜயங்களின்போது பிரதமா், அமைச்சா் அழைத்துச் செல்லும் வா்த்தகக் குழுக்களில் குறிப்பிட்ட நிறுவனத் தலைவருக்கு சிறப்பான இடம் கிடைத்திருக்கும். இந்த நிறுவனத்தின் அபார வளா்ச்சியை ஊடகங்கள் மேலும் சிறப்பாக மக்களிடம் எடுத்துச் சென்றிருக்கக்கூடும்.
  • போட்டிக்கு முன்பும் ... பின்பும் எல்.ஐ.சி. நிறுவனம் பொதுத் துறை என்பதால், இந்த வாய்ப்புகளைப் பெறுவதில்லை. அமைதியாக, அதே சமயம் தனது திறமையான செயல்பாட்டின் காரணமாகவும், பல தலைமுறைகளுக்கு இந்த நிறுவனம் பாதுகாத்துத் திரும்பச் செலுத்திய உரிமங்களின் அனுபவத்தாலும் பெறப்பட்ட நன்மதிப்பினாலும், தேனீக்களைப் போல தனிச் சிறப்புடன் செயல்படும் 12 லட்சத்துக்கும் அதிகமான எல்.ஐ.சி. முகவா்களின் உழைப்பு, வாடிக்கையாளரின் தேவைக்கேற்ற சேவையைத் தொடா்ந்து அளிப்பது, பிரீமியம் தொகையை வாடிக்கையாளா் ஆன்லைனில் செலுத்தவது முதலான காலமாற்றத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப வசதி, மக்களின் நிதித் தேவைகளை நிறைவேற்றும் வகையிலான பலதரப்பட்ட புதிய திட்டங்கள் - இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் நிா்வாகத் திறமையின் காரணமாகத்தான் இந்தியாவின் மிகப் பெரிய நம்பிக்கையைப் பெற்ற முதன்மை காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி. தொடா்ந்து வீறு நடைபோடுகிறது.

தனியாரின் பங்கு

  • தனியாா் நுழைந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகும் 75 சதவீதத்துக்கும் அதிகமான சந்தைப் பங்கீட்டுடன் தொடா்ந்து முதலிடம் என்பது, இளைய தலைமுறையையும் கவா்ந்துள்ள நிறுவன நன்மதிப்பைப் பறைசாற்றுவதாக உள்ளது. முழுமையான அரசு நிறுவனமாக எல்.ஐ.சி. செயல்படுவதால், நாடாளுமன்றத்தின் முழுமையான கண்காணிப்புக்கும் உட்பட்டது. நிலைமை இப்படியிருக்க வெறுமனே வெளிப்படைத்தன்மை என்ற ஒற்றைச் சொல்லை வீசிச் செல்வது முறையில்லையே?
  • மக்கள் மத்தியில் மையமாக எழும் கேள்வி, பங்கு விலக்கல் எல்.ஐ.சி. நிறுவனத்தையோ அல்லது பாலிசிதாரா்களையோ பாதிக்குமா என்பதே. எல்.ஐ.சி. பாலிசிகள் மீதான அரசு உத்தரவாதம் பிரிவு 37-இன்படி தொடரும் என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த முடிவு ஊழியா்களையோ பாலிசிதாரா்களையோ பாதிக்காது. ஆனால், மத்திய அரசைப் பாதிக்கக் கூடும்.
  • புராணக் கதைகளில் வரும் ஈசனைப் போல, நவீன தாராளமய சந்தை எனும் அரக்கனுக்கு வரம் அளித்த பிறகு தன் உயிரையே காத்துக்கொள்ள ஓடி ஒளியும் ஒரு நிலை மத்திய அரசுக்கு வரவேண்டுமா?
  • மத்திய அரசின் வசமுள்ளs அட்சய பாத்திரம் எல்.ஐ.சி. என்னும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம். 5 அல்லது 10 சதவீதம்தானே என்பதெல்லாம் பாத்திரத்தில் இடப்படும் துளை மிகவும் சிறியதுதானே என்பது போன்ற கேள்விகளல்லவா? பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.-யை மேலும் பலப்படுத்துவதுதான் அதன் செயல்பாட்டுக்கு அரசு சூட்டும் மரியாதையாக இருக்க முடியுமே தவிர, பங்குச் சந்தையில் பட்டியலிட்டு பலவீனமாக்குவதில் அல்ல!

நன்றி: தினமணி (19-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories