TNPSC Thervupettagam

ஆய்வுலகின் பார்வையில் பெரியார்!

September 17 , 2019 1896 days 1233 0
  • தமிழகத்தில் பெரியாரைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள், வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இரண்டு தரப்புகளிலுமே அவர் தவிர்க்கவியலாத ஆளுமையாகவே இருக்கிறார். தமிழகத்துக்கு வெளியே குறிப்பாக ஆய்வுப் புலத்தில் பெரியாரை எப்படிப் பார்க்கிறார்கள்?
  • வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா, நவீன இந்தியாவை வடிவமைத்த 21 சிற்பிகளில் ஒருவராக பெரியாரைக் கருதுகிறார். தனது ‘மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா’ நூலில் காந்தி, தாகூர், அம்பேத்கர் வரிசையில் பெரியாரையும் சேர்க்கிறார். ‘புரட்சிகர சீர்திருத்தவாதி’ என்பது பெரியாரைப் பற்றிய அவரது கட்டுரையின் தலைப்பு.
  • குஹாவின் நூலில் பெரியாரின் வாழ்க்கைச் சுருக்கத்தோடு அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தும் பேச்சும் மொழிபெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.
  • 1927-ல் ஆகஸ்ட்டில் குற்றாலத்திலும் அதே ஆண்டு அக்டோபரில் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பெரியார் பேசிய இரண்டு உரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி மொழிபெயர்த்திருக்கிறார்.
  • தமிழில் முறையே மதப்புரட்டு, சமய சீர்திருத்தம். விதவா விவாக விளக்கம் என்ற நூலுக்கு 1926 ஆகஸ்ட்டில் ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த மதிப்புரை, 1930-ல் ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த கர்ப்பத்தடை என்ற தலையங்கம், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பகோணம் திருவிசலூரில் ‘கல்யாண விடுதலை’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை ஆகியவற்றின் மொழிபெயர்ப்பும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

புனிதங்களைக் கட்டுடைத்தவர்

  • அரசியல் துறைப் பேராசிரியரான சுனில் கில்னானி, ‘ பிபிசி ரேடியோ 4’ வானொலியில் ‘இன்கார்னேஷன்ஸ்: இந்தியா இன் 50 லைவ்ஸ்’ என்றொரு வரலாற்றுத் தொடரைத் தொகுத்து வழங்கினார்.
  • இந்திய வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 ஆளுமைகளில் ஒருவராக பெரியாரை சுனில் பட்டியலிட்டிருக்கிறார். அத்தொடர் பின்பு அதே தலைப்பில் கட்டுரைத் தொகுப்பாகவும் வெளிவந்திருக்கிறது. பெரியாரைப் பற்றிய கட்டுரையின் தலைப்பு ‘புனிதப் பசுக்களைச் சுட்டுத் தள்ளிய வீரர்’.
  • பிராமண ஆதிக்கத்தை எதிர்ப்பவராகவும் கடவுள் சிலையை உடைப்பவராகவும் அடையாளப்படுத்தப்படும் பெரியாரின் அரசியல் வாரிசுகளே அறுபதுகளின் இறுதியிலிருந்து தமிழகத்தை ஆட்சிசெய்கிறார்கள், இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளாத அவரின் மொழிக்கொள்கை இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தைப் பாதுகாத்திருக்கிறது என்கிறார் சுனில்.
  • காசி பயணம், வைக்கம் போராட்டம், சோவியத் பயணம் என்று பெரியாரின் வாழ்க்கைச் சுருக்கத்தை வழங்கும் சுனிலின் கட்டுரை பெண்ணுரிமைக்கான பெரியாரின் போராட்டங்களை வியக்கிறது.
  • இதிகாசப் பெண் பாத்திரங்களைக் கடுமையாக விமர்சித்த பெரியார் பெண் கல்வியையும், பெண்களுக்கான சொத்துரிமையையும், குடும்பக் கட்டுப்பாட்டையும் வலியுறுத்தியவர் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
  • பெண்களின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு இன்று முன்னிலை வகிப்பதற்கு பெரியாரின் தொடர் பிரச்சாரம் முக்கிய காரணம் என்ற முடிவுக்கு வருகிறார் சுனில்.

காந்தி- பெரியார் ஒப்பீடு

  • கேரளத்தைச் சேர்ந்த இளம் வரலாற்றாய்வாளர் மனு எஸ்.பிள்ளையின் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பான ‘தி கோர்ட்டிசன், தி மகாத்மா அண்ட் தி இத்தாலியன் பிராமின்’ இந்திய வரலாற்றை அறுபதுக்கும் மேற்பட்ட ஆளுமைகளின் வழியே வெவ்வேறு கோணங்களிலிருந்து விவாதிக்கிறது. இத்தொகுப்பில் பெரியாரைப் பற்றிய கட்டுரையின் தலைப்பு ‘தேசவிரோதிகளின் காலகட்டத்தில் பெரியார்’.
  • ‘40 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்ட பெரியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் ‘தேசவிரோதிகளின்’ பட்டியலில் எந்த இடத்தில் இருப்பார் என்பதைக் கற்பனை செய்யத் தேவையில்லை.
  • நல்லவேளையாக, அவர் வாழ்ந்த காலத்தில் ‘தேசவிரோதிகள்’ என்பது போன்ற அடைமொழிகள் உருவாக்கப்படவில்லை, காந்தியின் எதிரி என்ற அளவிலேயே அவர் அறியப்பட்டார்’ என்கிறார் மனு.
  • காந்தியையும் பெரியாரையும் ஒப்பிட்டு மனு எழுதியிருக்கும் குறிப்புகள் சுவாரஸ்யமானவை. ‘துறவியின் பக்தியே உருவானவர் காந்தி என்றால், பெரியார் கலகத்தின் உதாரணம்.
  • கிராமக் குடியிருப்புகளை விதந்தோதியவர் காந்தி, பெரியாரோ ஆகாய விமானங்களையும் இயந்திரங்களின் வளர்ச்சியையும் வரவேற்றவர்.
  • காந்தியின் சீடர்கள் வெள்ளாடை உடுத்தி, பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தார்கள் என்றால், பெரியாரின் தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்து சாதியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார்கள்.
  • காந்தி வாழ்நாள் முழுவதும் உடலைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கப் போராடிக்கொண்டிருந்தார், பெரியாரோ தனது ஆடையைத் துறந்து நிர்வாணச் சங்கத்தில் சேரவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் தயங்கவில்லை.
  • ஒரு வைதீக இந்துவாக எரியூட்டப்பட்டார் காந்தி, பெரியாரோ புதைக்கப்பட்டார்’ என்று தொடர்கிறது அந்த ஒப்பீட்டுப் பட்டியல்.
  • காந்தியையும் பெரியாரையும் எதிரெதிராக சித்தரிப்பது அவரின் நோக்கம் அல்ல, இருவரது அணுகுமுறைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை விவாதிப்பதே. ராமாயண நாயகியான சீதையை இந்தியப் பெண்களின் தூய்மைக்கும் சுயதியாகத்துக்கும் உதாரணமாக காந்தி வர்ணிக்கும்போது, அந்த இதிகாசத்தையே அபத்தம் என்று சாடியவர் பெரியார்.
  • லட்சியப் பெண்ணை உருவாக்குவதற்காக காந்தி முயன்றுகொண்டிருந்தபோது, பெரியாரோ சாதாரணப் பெண்களை தெய்வங்களாக மாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் என்கிறார் மனு.
  • பெண்ணுரிமைப் போராட்டத்தில் ஆண்களிடமிருந்து நியாயம் கிடைக்குமென்று எதிர்பார்ப்பது பூனைகளால் எலிகளுக்கு எப்படி விடுதலை கிடைக்குமென்று நம்புவதைப் போன்றது என்று பெரியார் எச்சரித்ததும் கற்பு என்பதை இருபாலருக்கும் பொதுவில் வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதும் அக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
  • புனிதங்களை மறுகட்டமைக்க காந்தி முயற்சித்துக்கொண்டிருந்தபோது பெரியார் அவற்றைக் கட்டுடைத்தார் என்பதே ஒப்பீட்டின் முடிவு. பெரியார் இப்போது நம்மோடு இருந்தால், பின்பற்றுவதைக் காட்டிலும் சிந்திக்கவே சொல்வார் என்று முடிகிறது அந்தக் கட்டுரை.

தமிழகத்தின் அம்பேத்கர்

  • மகாராஷ்டிராவில் பிராமணியத்துக்கு எதிராகப் போராடிய ஜோதிராவ் பூலே - அம்பேத்கருக்கு இணையாகப் பெரியாரை ஒப்பிட்டு ராமச்சந்திர குஹா தனது கட்டுரையைத் தொடங்கியிருந்தாலும் அவரது கட்டுரை பெரிதும் பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகளையே விவாதிக்கிறது. மனு, சுனில், குஹா ஆகியோரின் பெரியாரைப் பற்றிய கட்டுரைகளில் கருத்தடையை வலியுறுத்தும் பெரியாரின் பிரச்சாரமே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகிறது. கடவுள் மறுப்பு வாசகங்கள் கட்டுரையாளர்களைக் கவர்ந்திருக்கின்றன.
  • தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் மூவரும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறார்கள். இந்தியச் சூழலில், அம்பேத்கரின் அளவுக்கு பெரியார் இன்னமும் விவாதிக்கப்படவில்லை.
  • அம்பேத்கரைப் போல பெரியார் தனது கருத்துகளை அனைத்திந்திய அளவில் முன்வைக்கவில்லை, தென்னகத்தின் திராவிட கலாச்சாரத்துக்குள்ளேயே அவர் வேரோடிவிட்டார் என்கிறார் சுனில். பெரியாரை காலதேச வர்த்தமானங்களுக்குள் அடக்கிவிட முடியாது.
  • பெரியாரின் எழுத்தும் பேச்சும் இன்னும் குறைந்தபட்ச அளவில்கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. இந்தக் குறை தொடர்வதே பெரியார் தமிழுக்கு வெளியே விவாதிக்கப்படாததற்கான முக்கியக் காரணம்.
  • பெரியாரின் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் தேசியம், பண்பாடு, வாழ்க்கை முறை, தொழிலாளர் உறவு குறித்த அவருடைய குறிப்பிட்டத்தக்க மற்ற கருத்துகளும் தமிழுக்கு வெளியே விவாதிக்கப்படும் சூழல் நிச்சயம் உருவாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories