ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும் தோழிகளே!
- என்னுடைய தோழியின் தாயார் எப்போதும் சோர்ந்துபோய் காணப்பட்டார். என்ன காரணம் என்று கேட்டபோது தலைவலி இருந்துகொண்டே இருக்கிறது என்று சொன்னார். மழை நேரமாக இருக்கலாம் அல்லது தலைக்குக் குளித்துவிட்டுச் சரியாகத் துவட்டாமல் இருப்பதால் இருக்கலாம் என்று அவருக்குச் சொல்வதற்கு ஆயிரம்காரணங்கள் இருந்தன. ஆனால், ஒரு நாள் அவர் மயங்கி விழுந்தபோதுதான் அவருக்கு என்ன பிரச்சினை இருந்தது என்பது வெட்ட வெளிச்சமாகிற்று. பொதுவாகவே பெண்கள் தங்களுடைய உடல் நலத்தில் பெரிதும் அக்கறை செலுத்துவதில்லை.
நாம் இயந்திரம் அல்ல
- மீந்துவிடக் கூடாது என்பதில் தொடங்கி ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டுப் பசியைப் போக்குவது வரை பெண்கள் பெரும்பாலும் தங்களது உடல்நலத்தைப் பற்றி அலட்சியமாகவே இருக்கிறார்கள். இந்த அலட்சியம் அவர்களது எதிர்காலத்தைப் பாதிப்பதோடு மிகப்பெரிய நஷ்டங்களைப் பொருளாதார ரீதியாகவும் ஒரு வீட்டின் உணர்வுப் பின்னல்களைச் சிதைக்கும் விதமாகவும் அமைந்துவிடுகிறது. பெண் என்பவள் கடைசி வரை ஓடும் இயந்திரம் அல்ல. இயந்திரம் பழுதாகும் வரை அதை அதிகமான அளவுக்கு நாம் பயன்படுத்திவிடுகிறோம். பின் ஒரு நேரத்தில் வயதான பிறகு இயந்திரத்தின் பல்வேறு பாகங்கள் பாதிக்கப்படும்போது எல்லாமே கடந்து விட்டிருக்கும்.
- ஒரு பெண் சமையல் அறையில் நின்றபடி காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு எனச் சமைத்தபடி இருக்கக்கூடிய காட்சி எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு பிம்பமாகவே இருந்துவருகிறது. அம்மா, அக்கா, பாட்டி, ஆயா, அப்பத்தா, அம்மாச்சி, மனைவி, மகள் என்று யாராவது ஒரு பெண் இந்தக் கோலத்தில் ஒரு வீட்டில் இருப்பார்கள். அவர்கள் மீது வீசும் எண்ணெய் வாடையும் அவர்கள் ஆடையில் படிந்திருக்கும் பிசுபிசுப்பும் அவர்கள் வாழ்க்கையிலும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை நாம் தாமதமாகவே உணர்கிறோம். இன்றைய நவீன ஆண் உலகில் வேறு ஒரு பொருளாதாரச் சிக்கலுக்குள் அவர்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் சொல்வோம். ஆனால், இன்னொரு பக்கம் இன்னொரு திசையில் நவீன காலப் பெண்ணுலகில் பெயர் குறிப்பிடப்படாத உடல்நலக் கோளாறுகள் அவளைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டிருக்கின்றன.
உணவில் அக்கறை வேண்டும்
- முதலில் கருப்பையில் ஆரம்பிக்கும் அவளுடைய பிரச்சினைகள் மெல்ல மெல்ல உடலெங்கும் படர்கிறது. இப்போதெல்லாம் பிசிஓடி என்று சொல்லப்படும் கருப்பைக் கட்டிகள் அளவில்லாமல் பெருகிவருகின்றன. சரிவிகித – சத்தான உணவுமுறைக்குப் பெண்கள் முக்கி யத்துவம் கொடுக்காமல் கிடைத்ததையும் மீந்ததையும் சாப்பிட்டு வாழும் வாழ்க்கை முறையும் இதுபோன்ற பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கக்கூடும். அதேபோலச் சரியான - முறையான உடற்பயிற்சிகள் இல்லாததும் ஒரு முக்கியக் காரணம். ‘நான்தான் வீட்ல வேலை செஞ்சுட்டு இருக்கேனே” என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்கிற சால்ஜாப்புகள்தான் நமக்கு நாமே உருவாக்கிக்கொள்கிற சுகாதாரக் கேடு என்பதைக் காலம் பின்னாளில் காட்டிக்கொடுக்கிறது.
‘நமக்கு நாமே’ வேண்டாமே
- இன்னொரு பக்கம் இணையதளங்களில், சமூக ஊடகங்களில் யார் யாரோ, ‘இந்த உணவைச் சாப்பிட்டால் இந்த நன்மை’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் தவறான உடற்பயிற்சி முறைகளைச் சரி என்று பரிந்துரைக்கும் காணொளிகள் இடம்பெறுகின்றன. இவற்றில் எதையுமே சரிபார்த்துப் பின்பற்றாமல் ஒவ்வொரு நாள் ஒவ்வொன்றைப் பின்பற்றும் என்னுடைய தோழி ஒருத்தி சென்ற மாதம் மாரடைப்பில் இறந்துபோனாள். மருத்துவர் அவரிடம் கடைசி வாரத்தில் சொன்ன விஷயம் மிக முக்கியமான ஒன்று - எல்லாருக்கும் பொதுவான ஒன்று: “என்றைக்குமே நம் உடலுக்குப் பழக்கப்பட்ட உணவைத்தான் நாம் சாப்பிட வேண்டும். அவைதான் நமக்கு ஒத்துக்கொள்ளும். நம் நிலத்தில் கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்து, நம் தட்பவெப்ப நிலையைக் கணக்கிட்டு, நம்முடைய ஜீரண சக்தியை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட உணவு வகைகள்தான் நமக்கு ஏற்றவை. குறிப்பிட்ட வயதுக்கு மேல் நம் உடல் என்னென்ன உடற்பயிற்சிகளைத் தாங்கிக்கொள்ளுமோ அவற்றை மட்டுமே செய்ய வேண்டும். மருத்துவ ஆலோசனையும் பயிற்சியாளர்களின் கண்காணிப்பும் இல்லாமல் நாம் செய்யும் உடற்பயிற்சிகள் அத்தனையும் நமக்கு எதிரிகளாகத்தான் படையெடுக்கும்”.
அரசுத் திட்டம் தேவை
- காலம் எவ்வளவு பெரிய மாயக்கண்ணாடி இல்லையா? வயோதிகத்தின் சுருக்கக் கோடுகளுக்குள் வாழ்க்கை ஒரு வரைபடத்தை வரைந்து போகிறது. நினைவுகள், சந்தோஷம், துக்கம், கண்ணீர் எல்லாமே கலந்து கரைந்த கோடுகள் அவை. பெண்களுக்கான சமுதாயம் இது என்று அரசியல் ரீதியாகச் சொல்லப்படும் நிலையில்கூடப் பெண்களுக்கென்று இலவச உடல்நலப் பரிசோதனைகள் இல்லை. அப்படி அல்லாமல் 40 வயதைத் தாண்டிய பெண்களுக்கு வருடம்தோறும் கட்டாய உடல் பரிசோதனைத் திட்டத்தை அரசு முன்னெடுக்க வேண்டும். இது மிக முக்கியமான செயல்பாடாக அமைவதோடு, காலம்காலமாகப் பெண்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்றுத்தரும். ஒவ்வொரு பகுதியிலும் பெண்களுக்குமான உடற்பயிற்சிக் கூடங்களைஅமைப்பதோடு, பெண்களுக்கான இலவசப் பரிசோ தனைத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தினால் அதைவிட மிகுந்த மகிழ்ச்சியான விஷயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் வருங்காலச் சந்ததிகளுக்கும் வேறு எதுவுமே இருக்காது.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 11 – 2024)