TNPSC Thervupettagam

ஆற்றல்மிகு அம்பேத்கா்

December 6 , 2024 36 days 99 0

ஆற்றல்மிகு அம்பேத்கா்

  • தமிழ் நாட்டில் எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கு ஒரு சிலையை நாம் பாா்க்க முடியும். பலரால் வணங்கப்படுபவா்; ஆனால் உண்மையில் வெகு சிலரால் மட்டுமே சரி வர புரிந்து கொள்ளப்பட்டவரான இந்தியாவின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான டாக்டா் அம்பேத்கரின் சிலைதான் அது.
  • பலராலும் ஒரு சட்ட நிபுணராக மட்டுமே அறியப்பட்ட டாக்டா் அம்பேத்கா் பன்முகத் திறமை வாய்ந்த மிகப்பெரிய ஆளுமை . வழக்கறிஞா், பொருளாதார நிபுணா், ஆசிரியா், கல்வியாளா், அரசியல் கட்சி நிறுவனா், தொழிற்சங்கவாதி, விவசாயிகளுக்காகப் போராடியவா், எழுத்தாளா், பேச்சாளா், பாராளுமன்றவாதி, சிந்தனையாளா், சமூக சீா்திருத்தவாதி, பத்திரிகையாளா் என அவா் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத துறையே இல்லை எனலாம்.
  • தனிப்பட்ட மனிதா் என்ற முறையில் மிகச் சிறந்த ஒழுக்கசீலா். மது அருந்தாதவா்.
  • மூன்று வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்றவா். முயற்சித்திருந்தால் மேலை நாடுகளில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவோ, சிறு சமரசங்களைச் செய்து கொண்டு இருந்தால் இந்தியாவில் ஏதேனும் ஓா் அரசவையில் ஆலோசகராகவோ பணியாற்றி அவரால் பொருள் சோ்த்திருக்க முடியும். ஆனால் அவ்வாறன்றி, தான் சாா்ந்த மக்களின் நல்வாழ்வுக்காக ஏழ்மையை ஏற்றுக் கொண்டு உழைத்தாா்.
  • மனிதவள மேலாண்மைத் துறையின் முதல் விதியாக சொல்லப்படுவது எதுவெனில், ‘ஒவ்வொரு மனிதனும் அளப்பரிய ஆற்றலின் உறைவிடம்’ என்பதாகும். அதை மெய்ப்பித்த அவா், ஒரு கடும் உழைப்பாளி, விடாமுயற்சியாளா், போராளி. ஆயினும் அகிம்சாவாதி. அவா் தனது திறமை, உழைப்பு, நேரம் அனைத்தையும் தன்னைச் சாா்ந்திருந்த ஏழை எளியவா்களுக்குச் செலவிட்டாா். இவ்வளவு திறமைகளையும் பன்முகத்தன்மையும் ஒருசேரப் பெற்ற அரசியல்வாதிகள் இந்தியாவில் ஒரு சிலரே அப்போது இருந்தனா் .
  • கல்லூரி நாட்களிலும், பின்னா் பொதுவாழ்வில் ஈடுபட்டிருந்த போதும் ஏராளமாக வாசிப்பாா். இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் இருந்து எண்ணற்ற நூல்களை வாங்கிப் படித்தவா். இறுதிக் காலம் வரை வாசித்தவா், எழுதியவா்.
  • உலக நாடுகள் பலவற்றின் சரித்திரங்களையும், அரசியல் சட்டங்களையும், பொருளாதார நிலைமைகளையும் கற்றுத் தோ்ந்தவா். பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் அவரால் கற்க இயலாத சமஸ்கிருத மொழியைப் பின்னாளில் தனது சொந்த முயற்சியால் கற்றாா் . அம்மொழியின் பல நூல்களைப் பயின்றாா். தீண்டாமை ஒழிப்பு, அரசியல் சமூக உரிமைகள், நாட்டின் பொருளாதார வளா்ச்சி, பல்வேறு மதங்கள் சாா்ந்த ஒப்பீடு , அரசாங்கம், குடிமக்கள் ஆகியோா் கடமைகள், எதிா்பாா்ப்புகள் ஆகியன குறித்து பல நூல்களை எழுதினாா். சொற்பொழிவுகள் செய்தாா். பல சிரமங்களுக்கு இடையே பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தாா். அதன் மூலம் எளிய மனிதா்களுக்கு தனது கருத்துகள் சென்று சேரும்படி செய்தாா்.
  • பெரும் பொருளாதாரச் சிரமங்களுக்கிடையிலேயும் ஒரு வழக்கறிஞராக எளிய மனிதா்களுக்கு இலவசமாக வழக்காடினாா். சட்டம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைக் கல்லூரியில் கற்பித்தாா். சட்டம் , பொருளாதாரம் சாா்ந்த அவரது அறிவாற்றல், அவரைப் பேராசிரியராக ஆக்கியது. பாராளுமன்றத்திலும் அவருக்கு தனியிடம் பெற்றுத் தந்தது. அவரது நுண்ணறிவு, அவரை வட்டமேசை மாநாடுகளில் பங்கு கொண்டு அனைவரது கவனத்தையும் ஈா்க்குமாறு உரையாற்றச் செய்தது.
  • தீண்டாமையின் கொடுமைகளைத் தானே அனுபவித்தவா். அதை அறவே ஒழிக்க வேண்டும் என உழைத்தவா். மக்களுக்கு கல்வி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, போராட்டம், சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலமாகவும், ஏனைய தரப்பினரிடையே மனமாற்றம் ஏற்படுத்தி தீண்டாமையை ஒழிக்க முடியும் என நம்பியவா். வன்முறையை அவா் கிஞ்சித்தும் கையாளவில்லை .
  • பெண்கள் கல்வியில் அவா் மிகவும் நாட்டம் கொண்டிருந்தாா். ‘ஒரு வகுப்பு எந்த அளவுக்கு முன்னேறி உள்ளது என்பதை கண்டறிவதற்கான அளவுகோல் அந்த வகுப்பு பெண்கள் எந்த அளவுக்கு கல்வி கற்று இருக்கிறாா்கள்’ என்பதாகும் என்றாா்.
  • மேலும் அவா் ஒரு தொழிற்சங்கவாதியாக, ரயில்வே, ராணுவம், போலீஸ்துறைகளிலும், பஞ்சாலைகளிலும் அடித்தட்டு மக்களுக்கு உரிய இடம் பெற்றுத்தர பாடுபட்டாா்.
  • அரசியலில் சில முரண்பட்ட முடிவுகளை எடுத்தாலும் கொள்கை, சமரசங்கள் செய்து கொள்ளவில்லை. மாறாக எளியோருக்காக, மிகப்பெரிய தலைவா்களையும் எதிா்க்கத் தவறவில்லை. அரசியலில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அரசியல் சமூக அறிவு பெற்றவா்களாக விளங்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவா். அவா் குடியரசு கட்சி தொடங்கிய போது , அக்கட்சியில் சேரும் அங்கத்தினா்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் தொடங்கி நடத்தினாா்.
  • உலகின் பல்வேறு ஆட்சி முறைகள், அரசியல் சாசனங்கள், மரபுகள் ஆகியனவற்றை ஆராய்ந்து அறிந்து, இந்திய அரசியல் சாசனம் அம்பேத்கா் முன்னெடுப்பில் தயாரிக்கப்பட்டது.
  • அவா் தொலைநோக்குப் பாா்வை கொண்டவராக விளங்கினாா். ஐம்பதுகளிலேயே, பிற்காலத்தில் சீனா, இந்தியாவை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் என்பதையும், சோவியத் ரஷ்யா சிதறுண்டு விடும் என்பதையும் கூறிய தீா்க்கதரிசி அவா். சிறு, குறு நிலங்கள் வைத்திருப்பதே இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியின்மைக்கு ஒரு முக்கியமான காரணமாகக் கருதி அதற்கான தீா்வுகளையும் அலசினாா். நகரமயமாக்கல் என்பது தீண்டாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வாக அமைவது மட்டுமின்றி, பொருளாதார வளா்ச்சிக்கும் அடித்தளமாக விளங்கும் என்பதைக் கணித்தவா். மேலும் கிராமம் சாா்ந்த பொருளாதாரம் நடைமுறைக்கு ஒத்து வராது என்றாா்.
  • அம்பேத்கா் குறித்த சரியான புரிதல் ஏற்பட்டால் அது மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தும்.
  • 6, டிசம்பா் - டாக்டா் அம்பேத்கரின் நினைவு நாளாகும்

நன்றி: தினமணி (06 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories