- நாகரிக வளர்ச்சிக்கும் கால மாற்றத்துக்கும் ஏற்ப மக்களின் நடை, உடை, பாவனை என அனைத்தும் மாறி வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட சில பழக்க வழக் கங்கள் நகரம், கிராமம் என்கிற பாகுபாடின்றி இன்றளவும் கடைப்பிடிக்கப் பட்டு வருவது ஆச்சரியமானது.
- நம் மக்களிடையே அதிகப்படியானோர் வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது கால்நடைகள் வளர்ப்பு என்பது வேளாண்மைக்கு இணையானதாகவே இருந்தது. காலப்போக்கில் வேளாண் தொழிலிலிருந்து வெளியேறு வோர் எண்ணிக்கை அதிகமாகவும், புதிதாக அந்தத் தொழிலில் ஈடுபடுவோர் சொற்ப அளவிலும்தான் உள்ளது.
- ஆனாலும், கால்நடை வளர்ப்பில் புதிதாக ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. ஏனெனில் கிராமங்களில் கால்நடைகளைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் இன்றும் இருக்கின்றன. குறிப்பாக, கிராமங்களில் கால்நடைகளை மேய்ப்பது என்பது சற்றே வயதானவர்களின் கடமையாக இருக்கிறது. ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கால்நடைகளை, குறிப்பாகக் கறவை மாடுகளின் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் கிராமங்களில் உண்டு.
- அதனால், பண்டிகை மற்றும் இதர நாள்களில் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் மரியாதையும் கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கங்களும் தொடர்கின்றன. பசு மாடு கன்று ஈன்ற உடனேயோ அல்லது சில மணி நேரத்திற்குள்ளாகவோ இளங்கொடியை ஈனும். அந்த இளங்கொடியை ஈன்ற பின்னரே அதன் உரிமையாளர் நிம்மதி அடைவார். அதுவரை அதன் அருகிலேயே காத்திருப்பார்.
- இளங்கொடியை ஈன்ற பின்னர், இதமான வெந்நீரைக் கொண்டு அதைச் சுத்தம் செய்து, மஞ்சள் பூசி, கஞ்சி போன்ற திரவ உணவை உண்ணச் செய்வர். இளங்கொடியைக் கன்று ஈன்ற மாடு அல்லது நாய் தின்றுவிடாமல் அங்கேயே காத்திருந்து அதைச் சாக்குப்பையில் வைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஆலமரக் கிளையில் தொங்கும் வகையில் கட்டிவிடுவர்.
- பொதுவாகப் புதுமணத் தம்பதியை வாழ்த்தும்போது, ‘ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி’ என வாழ்த்துவது வழக்கம். அதுபோல ஆலமரக் கிளைகளில் இளங்கொடியைக் கட்டி தொங்கவிடுவதால் கன்று ஈன்ற மாடு அதிகப்படியான கன்றுகளை ஈனுவதுடன், அதிகளவில் பால் தரும் என்பது மக்களின் நம்பிக்கை.
- அத்துடன் நாய் போன்ற உயிரினங்கள் இளங்கொடியைத் தின்றுவிட்டால் இனவிருத்தி குறைந்துவிடும் என்றும், பாலின் அளவும் தரமும் குறைந்துவிடும் என்றும் நம்பிக்கை. ஆலமரம் இல்லை என்றால், வேலியோரத்தில் உயர்ந்து வளர்ந்திருக்கும் கள்ளி மரத்தின் மேல் இளங்கொடியை வீசுவர்.
- ஆனால், அதைப் பறவைகள் கொத்தித் தின்னும் என்பதால் நீண்ட தொலைவு சென்றாவது சாலையோரத்தில் இருக்கும் ஆலமரத்தின் விழுதுகளிலேயே இளங்கொடியைக் கட்டுகின்றனர். அதனால்தான் கிராமங்களில் இருக்கும் அத்தனை ஆலமரங்களிலும் இளங்கொடிப் பைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 02 – 2025)