- செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறைக்கும் நவம்பர் மாதத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது போலும். அதிகம் அறியப்பட்டிருக்காத ஓபன் ஏஐ எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம், ‘சாட்ஜிபிடி’ எனும் ஏஐ அரட்டைப்பெட்டியை (Chatbot) 2022 நவம்பரில் அறிமுகப்படுத்தியது. அடுத்துவந்த மாதங்களில் சாட்ஜிபிடி ஏற்படுத்திய பரபரப்பாலும், பெற்ற வரவேற்பாலும் சாட்பாட்களும், அவற்றை இயக்கும் ஏஐ நுட்பமும் வெகுமக்களைக் கவரும் பேசுபொருளாகின.
- இதோ, இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்ட செய்தி வெளியானது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அவரை உடனடியாக இருகரம் நீட்டி வரவேற்றது, ஓபன் ஏஐ ஊழியர்களின் ஆதரவுடன் அவர் மீண்டும் தாய் நிறுவனத்துக்கே திரும்பியது, அதேவேகத்தில் - தன்னை வெளியேற்றக் காரணமான - இயக்குநர் குழுமத்தைக் கூண்டோடு வெளியேற்றியது என அடுத்தடுத்து நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கின்ற அனைத்துமே ஏஐ உலகைப் பரபரப்பின் உச்சிக்குத் தள்ளியிருக்கின்றன.
ஆல்ட்மேன் நீக்கம்
- ஓபன் ஏஐ இயக்குநர் குழுமம், ஆல்ட்மேனை நீக்குவதாக அறிவித்தபோது, ‘நிறுவனத்தை உருவாக்கியவருக்கே இந்தக் கதியா?’ எனும் எண்ணம்தான் பலருக்கும் முதலில் உண்டானது. ஸ்டீவ் ஜாப்ஸ் அவர் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டதோடு ஆல்ட்மேன் நீக்கம் ஒப்பிடப்பட்டு, இதற்கான பின்னணிக் காரணங்கள் அலசப்பட்டன. இன்னொரு பக்கம் ஆல்ட்மேனின் சரிவு, வீழ்ச்சி என்றெல்லாம் பேசப்பட்டாலும், அவருக்கான ஆதரவும் அதிகரித்துவந்தது. சிலிக்கான் பள்ளத்தாக்கின் பெரும்புள்ளிகள் பலர் ஆல்ட்மேனுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்த நிலையில், மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா, தனது நிறுவனத்தின் ஏஐ பிரிவுக்குப் பொறுப்பேற்குமாறு அழைப்புவிடுத்தார்.
- இதனிடையே, ஓபன் ஏஐ நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும் பகுதியினர், ஆல்ட்மேன் நீக்கத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால் தாங்கள் வெளியேறுவதாகக் கடிதம் எழுதினர். இயக்குநர் குழுமம் விலக வேண்டும் என்றும் எச்சரித்தனர். அது நடந்தேறியும்விட்டது. ஏஐ உலகில் ஆல்ட்மேனின் செல்வாக்கு குறையவில்லை என்பதற்கான அத்தாட்சி அது. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சாட்ஜிபிடியின் அசுர வெற்றியை அடுத்து, இனி எல்லாமே ஏஐதான் எனக் கருதப்படும் நிலையில், அதன் தலைமைச் செயல் அதிகாரியான ஆல்ட்மேன் செல்வாக்கு மிக்கவராகவே இருந்தார். நிறுவனத்தின் எதிர்காலப் பாதையை வகுப்பதோடு, உலகத் தலைவர்களை எல்லாம் அவரால் எளிதாகச் சந்தித்துப் பேசவும் முடிந்தது. அண்மையில் பிரிட்டனில் நடைபெற்ற ஏஐ பாதுகாப்பு மாநாட்டில் ஆல்ட்மேனுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- யார் இந்த ஆல்ட்மேன்
- 38 வயதே ஆன அமெரிக்கரான ஆல்ட்மேன், ஸ்டார்ட்-அப் உலகில் இளம் வெற்றி நாயகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கல்லூரிப் படிப்பை முடிக்காத ஆல்ட்மேன், லூப்ட் (Loopt) எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். அதன் பிறகு, ஸ்டார்ட் - அப் பள்ளி என அழைக்கப்படும் ஓய் காம்பினேட்டர் (Y Combinator) நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் செயல்பட்டார். பல வெற்றிகரமான ஸ்டார்ட்-அப்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். வெற்றிகரமான ஸ்டார்ட் - அப்களில் முதலீடும் செய்திருக்கிறார். ஆல்ட்மேன் செல்வ வளம் பெற இந்த முதலீடுகள் வழிவகுத்ததோடு, தொழில்நுட்ப உலகின் எதிர்காலப் போக்குகளைக் கணித்து புதிய நிறுவனங்களை வழிநடத்தக்கூடிய நிர்வாகத் திறன் கொண்டவராக அவரை அறியவைத்தது.
சாட்ஜிபிடி பூதம்
- இந்த நிலையில்தான், 2015இல் மனிதகுலத்துக்கு நன்மை தரும் வகையில் ஏஐ ஆய்வில் ஈடுபடும் நோக்கத்தோடு, முன்னணி ஏஐ ஆய்வாளர்கள், தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் துணையோடு ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்தை ஆல்ட்மேன் உருவாக்கினார். இந்நிறுவன ஆய்வில் உருவான ஜிபிடி மொழி மாதிரியின் பலனாகத்தான் கடந்த ஆண்டு சாட்ஜிபிடியாக அறிமுகமானது. பல ஏஐ மென்பொருள்களும் அறிமுகமாகின. ஏஐ ஆய்வில் மைக்ரோசாஃப்ட், கூகுள், மெட்டா உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும், பலவிதமான அரட்டைப்பெட்டிகள் பயன்பாட்டில் இருந்தாலும், சாட்ஜிபிடியின் செயல்திறன் அதிசயிக்க வைப்பதாக அமைந்திருந்தது.
- மனிதர்களோடு உரையாடும் திறனோடு, இதன் ஆக்கத்திறனும் வியக்கவே வைத்தது. ஏஐ உலகிலும், குறிப்பாக அரட்டைப்பெட்டிப் பிரிவிலும் பெரும் போட்டியை உண்டாக்கியது. ஏஐ நுட்பத்தின் கட்டுப்பாடில்லாத வளர்ச்சி தொடர்பான கவலையும் அதிகரித்தது. சாட்ஜிபிடி போன்ற அரட்டைப்பெட்டிகள் வேலைவாய்ப்பைப் பறிக்கும் என்பது தொடர்பான அச்சம் ஒரு பக்கம் தீவிரமடைய, இன்னொரு பக்கம் அடுத்தகட்ட ஏஐ சேவைகள் எதிர்காலத்தில் மனிதகுலத்துக்கே ஆபத்தாக முடியலாம் எனும் அச்சமும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது. எனவே, ஏஐ ஆய்வுக்குக் கடிவாளம் போட வேண்டும் என்கிற கருத்தும் வலுப்பெற்றிருக்கிறது. ஏஐ சட்டம், ஏஐ அறம் பற்றி எல்லாம் வலியுறுத்தப்படுகிறது.
ஏஐ எதிர்காலம்
- இந்தப் பின்னணியில், ஆல்ட்மேன் நீக்க விவகாரம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். முதல் விஷயம், ஓபன் ஏஐ நிறுவன இயக்குநர் குழுமத்துக்கும், ஆல்ட்மேனுக்கும் இடையே மோதல் வர என்ன காரணம் எனும் கேள்வி. இது தொடர்பாக வெளிப்படையான தகவல்கள் குறைவு என்றாலும், இயக்குநர் குழுமம் ஏஐ வளர்ச்சியில் பாதுகாப்பான அணுகுமுறையை நாடிய நிலையில், ஆல்ட்மேனின் அணுகுமுறையோ அடுத்தகட்ட ஏஐ நுட்பங்களை உருவாக்கும் திசையில் அமைந்திருந்தது முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
- ஆல்ட்மேன் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்றும், சொந்த நிறுவன உருவாக்கத்தில் கவனம் செலுத்துவதாகவும் ஓபன் ஏஐ இயக்குநர் குழுமம் குற்றம்சாட்டியது. ஆல்ட்மேனுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிவப்புக் கம்பளம் விரித்தது பல விஷயங்களை உணர்த்தியிருக்கிறது. ஏஐ போட்டியில் முன்னிலை பெறும் விழைவு இதன் பின்னே இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஓபன் ஏஐ முதலீட்டாளர்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது. ஓபன் ஏஐ நிறுவன ஊழியர்கள் ஆல்ட்மேனின் பின்னர் அணி திரண்டிருப்பதும், முதலீட்டாளர் சமூகமும் அவருக்கு ஆதரவாக நிற்பதும் முக்கியமானதாக அமைகிறது. இவ்வளவுக்கும் ஆல்ட்மேன் ஏஐநுட்பங்களை அறிந்த ஆய்வாளர் இல்லை என்றாலும்,நிர்வாகத் திறனும், தொழில்நுட்பத் தொலைநோக்குமே அவரின் செல்வாக்குக்கான காரணங்கள்.
பிக் டெக் தாக்கம்
- இதனிடையே, ஆல்ட்மேன் தன் மீதான அதிகப்படியான நம்பிக்கையால் வழிநடத்தப்படுவதாகவும் உளவியல் நோக்கில் வல்லுநர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, ஆல்ட்மேன் நீக்க விவகாரம் இன்னும் திருப்பங்களைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அதோடு இதன் பின்னணியில் மறைந்திருக்கும் விஷயங்கள் என்ன எனும் கேள்வியும் தீவிரமடைகிறது. ஓபன் ஏஐ எனும் நிறுவனத்தின் உள்விவகாரமாக மட்டும் அல்லாமல், ஏஐ உலகின் எதிர்கால திசைவழி தொடர்பான முக்கிய நிகழ்வாகவும் இந்த விவகாரம் அமைகிறது.
- ஏற்கெனவே, தொழில்நுட்ப உலகில் பிக் டெக் என சொல்லப்படும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கம் பற்றி விவாதிக்கப்படும் நிலையில், ஏஐ உலகிலும் பெரும் நிறுவனங்களின் லட்சியமும், திட்டங்களும், போட்டியும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. வர்த்தக லாபம் சார்ந்த அரசியலும் கலந்திருக்கும் இந்தச் சிக்கலான நிகழ்வுகளின் மையப் புள்ளிகளில் ஒன்றாக சாம் ஆல்ட்மேன் இருக்கிறார். அவரது எதிர்காலம், ஏஐ எதிர்காலத்துடன் தொடர்புடையதாகவும் அமைந்திருப்பது அவரது முக்கியத்துவத்தை மேலும் அதிகமாக்குகிறது. எல்லாவற்றையும் தாண்டி, ஏஐ ஆய்வு செல்லும் திசையைத் தீர்மானிக்கும் நிகழ்வுகளையும் இன்னும் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 11 – 2023)