TNPSC Thervupettagam

ஆளுநரின் அதிகாரம் தெளிவைத் தரும் தீர்ப்பு

November 28 , 2023 412 days 320 0
  • நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கான ஒப்புதலைக் காலவரையறை யின்றி நிறுத்திவைப்பதன் மூலம் மசோதாக்களைத் தன்னிச்சையாகத் தடுத்து வைக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தெளிவான தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அம்மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்திருப்பதற்கு எதிராக, பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
  • மாநிலத்தின் சட்டமன்றத்துக்குப் பொறுப்பு வகிக்கின்ற - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட - அரசுதான் மாநில விவகாரங்களை நடத்த வேண்டும் என்பதே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை விதி. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் ஆளுநரின் அதிகாரம் தொடர்பான அரசமைப்புக் கூறு 200 குறித்த உச்ச நீதிமன்றத்தின் விளக்கம், அதற்கு இசைவானதாகவே இந்தத் தீர்ப்பில் வெளிப்பட்டுள்ளது. தன்னுடைய ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களை நிறுத்திவைப்பதற்கும் குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்புவதற்கும் ஆளுநருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • இவற்றை முன்வைத்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன. சட்டக்கூறு 200இல் ‘கூடிய விரைவில்’ என்னும் சொற்களும் இடம்பெற்றுள்ளன. இந்தச் சொற்கள் மிகவும் முக்கியமானவை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தன்னிடம் அனுப்பப்படும் மசோதா, பண மசோதாவாக இல்லாதபட்சத்தில் ஆளுநர் அதனைச் சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்கு அனுப்பலாம். ஆனால், அப்படி அனுப்பப்பட்ட மசோதா மாற்றங்களுடனோ மாற்றங்கள் எதுவும் இல்லாமலோ மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு இரண்டாவது முறையாக அனுப்பப்பட்டால், அதற்கான ஒப்புதலை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது. ஒப்புதலை நிறுத்திவைப்பதற்கான ஆளுநரின் அதிகாரம் என்பது, அவ்வாறு நிறுத்திவைக்கப்படும் மசோதாக்களைச் சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்கு அவர் அனுப்பிவைப்பதுதான் என்று இந்தத் தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இதன் நடைமுறைப் பொருள், ஆளுநர் தன்னிடம் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு முதல் முறை ஒப்புதல் அளிக்காவிட்டால், இரண்டாவது முறை ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்பதே. மாநில முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனைப்படி இயங்க வேண்டிய ஆளுநர்கள், மசோதாக்கள் மீது விரைவான முடிவெடுக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது; மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்குக் காலவரையறை எதுவும் அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதை வைத்து, ஆளுநர்கள் காலம் தாழ்த்திக்கொண்டே போவதற்குத் தனது எதிர்ப்பையும் பதிவுசெய்துள்ளது.
  • ‘பஞ்சாப் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அவைத் தலைவரால் தன்னிச்சையாக மீண்டும் கூட்டப்பட்டு, இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே, அவை சட்டத்துக்குப் புறம்பான முறையில் கூட்டப்பட்ட அவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் என்பதால், அவற்றுக்கான ஒப்புதலை நிறுத்திவைத்திருப்பதாக’க் கூறிய ஆளுநர் புரோகித்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தே தவிர, ஆளுநரால் முடித்துவைக்கப்படவில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மசோதாக்களைத் தன்னிச்சையாக நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை என்று கூறப்பட்டிருப்பது, ஆளுநர்கள் தமக்கு ஏற்பு இல்லாத மசோதாக்கள் அனைத்தையும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கு வழிவகுத்துவிடக் கூடாது. நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கும் இடையிலான மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories