TNPSC Thervupettagam

ஆளுநர் எதிர்கொள்ளும் சவால்

December 11 , 2024 2 hrs 0 min 12 0

ஆளுநர் எதிர்கொள்ளும் சவால்

  • தேசத்தின் வளர்ச்சிக்கு மத்திய நிதி அமைச்சகம் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு முக்கியமானது நிதி நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் மத்திய ரிசர்வ் வங்கி. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றிருக்கிறார். மத்திய வருவாய்த்துறை செயலராக 2022 முதல் இருந்த 56 வயது சஞ்சய் மல்ஹோத்ரா, இந்திய ரிசர்வ் வங்கியின் 26 -ஆவது ஆளுநராக இன்று பதவி ஏற்கிறார்.
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சஞ்சய் மல்ஹோத்ரா, இன்றுமுதல் தனது மூன்று ஆண்டு பதவிக்காலத்தைத் தொடங்குகிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இன்னும் மூன்று ஆண்டு பணிக்காலம் இருக்கும்நிலையில் அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு தேசத்தின் மிகவும் சக்திவாய்ந்த, பொறுப்பான பதவி ஒன்றை இன்றுமுதல் ஏற்றுக் கொள்கிறார்.
  • ரகுராம் ராஜன், டி.சுப்பாராவ் ஆகியோரைத் தொடர்ந்து மும்பையின் ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தின் பதினெட்டாவது தளத்தில் இருக்கும் ஆளுநர் நாற்காலியில் அமரப் போகும் மூன்றாவது ஐ.ஐ.டி. பட்டதாரி சஞ்சய் மல்ஹோத்ரா. தொடர்ந்து மீண்டும் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் நியமித்திருக்கிறது பிரதமர் நரேந்திர மோடி அரசு. அதன்மூலம் ரிசர்வ் வங்கிக்கும் நிதி அமைச்சகத்துக்கும் இடையே சுமுகமான உறவைப் பேண முடியும் என்று கருதுகிறது.
  • 2018-இல் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் பதவி விலகியதைத் தொடர்ந்து சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். நிதி அமைச்சகம் கூடுதல் அதிகாரம் செலுத்துவதையும், கட்டுப்படுத்த விரும்புவதையும் எதிர்த்தவர் உர்ஜித் படேல். வருவாய் செயலராக இருந்தபோது அரசின் உயர் மதிப்பு செலாவணி செல்லாததாக்கப்பட்டதை மேற்பார்வையிட்ட சக்திகாந்த தாûஸ ரிசர்வ் வங்கி ஆளுநராக்குவதன் மூலம் அரசின் கருத்துக்கேற்ப ரிசர்வ் வங்கியைச் செயல்பட வைக்கலாம் என மத்திய அரசு கருதியது.
  • சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். 2018 டிசம்பரில் 10.4 சதவீதமாக இருந்த வங்கித் துறையின் வாராக்கடன், செப்டம்பர் 2024-இல் 3.9 சதவீதமாகக் குறைந்தது. எண்மப் பணப் பரிவர்த்தனை (யுபிஐ) 2019 நிதியாண்டில் 504 கோடி என்றால் இப்போது 2024 நிதி ஆண்டில் 13,100 கோடி.
  • யெஸ் வங்கி, பிஎம்சி வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி உள்ளிட்டவற்றை தனியார் முதலீட்டின் மூலம் திவால் நிலையில் இருந்து காப்பாற்றிய புதுமையை சக்திகாந்த தாஸ் முன்னெடுத்தார். தொடர்ந்து 2 ஆண்டுகள் சர்வதேச அளவில் சிறந்த மத்திய வங்கி ஆளுநர் என்கிற தனிச் சிறப்பை அவர் பெற்றார். சக்திகாந்த தாஸ் தலைமையில் 2018 டிசம்பரில் 39,300 கோடி டாலராக இருந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 70,500 கோடி டாலராக அவரது பதவிக்காலத்தில் அதிகரித்தது மற்றொரு சாதனை.
  • பொருளாதார வளர்ச்சி , விலைவாசி உயர்வு , நாணய மதிப்பின் ஸ்திரத்தன்மை ஆகிய மூன்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராட்டத்தை கடந்த 6 ஆண்டுகளாக சக்திகாந்த தாஸ் எதிர்கொண்டார். புதிய ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்றிருக்கும் சஞ்சய் மல்ஹோத்ரா இனிமேல் அந்த போராட்டத்தைத் தொடர வேண்டும். போதாக்குறைக்கு எண்ம மோசடிகள் மிகப் பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளன.
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டின் 2 -ஆவது காலாண்டில், முந்தைய 7 காலாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்து 5.4 சதவீதமாகியிருக்கிறது. முந்தைய காலாண்டில் 6.7 சதவீதமாகவும், கடந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 8.3 சதவீதமாகவும் இருந்தது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி.
  • 2024-25 நிதியாண்டின் 2 -ஆவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக கணித்திருந்த ரிசர்வ் வங்கியின் அரையாண்டு அறிக்கை எச்சரிக்கை மணியை எழுப்பியிருக்கிறது. இதற்கு உற்பத்திக் குறைவும், கனிமச்சுரங்கத்துறை மந்தமாகியிருப்பதும், அரசின் செலவினங்கள் தேக்கமடைந்திருப்பதும், தனியார் நுகர்வு பலவீனம் அடைந்திருப்பதும் காரணங்கள். 7.2 சதவீத வளர்ச்சி கண்ட கனிமச் சுரங்கத்துறை 2 -ஆவது காலாண்டில் 0.1 சதவீதமாகக் குறைந்ததற்கு, தொடர் பருவமழை காரணமாக இருக்கலாம்.
  • செப்டம்பர் மாதம் வரை முதலீட்டு ஒதுக்கீட்டில் மத்திய அரசு 37% மட்டுமே செலவழித்திருந்தது. 15 முக்கியமான மாநிலங்கள் 30% மட்டுமே முதலீட்டுச் செலவை மேற்கொண்டிருந்தன. அதற்கு, மக்களவைத்தேர்தலில் தொடங்கி அண்மையில் முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரை நீண்டிருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக இருக்கக்கூடும்.
  • இந்த சூழ்நிலையில்தான் இன்று முன்னாள் மத்திய வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்கிறார். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் துறைகளின் செயலராக இருந்த அனுபவம் அவருக்கு உண்டு. இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகக்குழுவில் அரசின் பிரதிநிதியாக இருந்த அனுபவமும் சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு இருக்கிறது.
  • மத்திய பட்ஜெட்டை உருவாக்குவதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உறுதுணையாக இருந்தவர் என்பதால் அரசுடன் மோதல் போக்கு ஏற்படாமல், அதே நேரத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி சுமுகமாக பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி: தினமணி (11 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories