TNPSC Thervupettagam

ஆழ்துளைக் கிணறு: ஆபத்துக்கு முடிவுகட்டுவோம்

August 1 , 2023 343 days 219 0
  • பிஹாரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மூன்று வயதுச் சிறுவன், ஒன்பது மணி நேரக் கடும் போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறான். நல்வாய்ப்பாக இந்த முறை உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு முடிவுகட்ட வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. இந்தப் பின்னணியில், தமிழ்நாட்டில் இருக்கும் கைவிடப்பட்ட திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கைவிடப்பட்ட குவாரிக் குழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
  • தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ள திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், குவாரிக் குழிகள் போன்றவை மனிதர்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன; பல வேளைகளில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. 2019இல், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சுஜித், 83 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டது ஒரு துயரமான உதாரணம். கால்நடைகள் உள்ளிட்ட பிற உயிர்களுக்கும் ஆழ்துளைக் கிணறுகள் அச்சுறுத்தலாக உள்ளன.
  • இந்தியாவில் சுமார் 2 கோடியே 70 லட்சம் கிணறுகள்-ஆழ்துளைக் கிணறுகள் உள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் (CGWB) புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தப் பின்னணியில், ஆழ்துளைக் கிணறு விபத்துகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை (11.02.2010 & 06.08.2010 தேதியிட்ட ஆணைகள்) 2010ஆம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் வகுத்தளித்திருக்கிறது.
  • அதன்படி, ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு உள்ளாட்சி நிா்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெறுதல், தோண்டும்போதே சுற்றிலும் வேலி கட்டுதல், ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிறுவனத்தின் பெயா், நில உரிமையாளரின் பெயா், தோண்டும் கால அவகாசம் ஆகியவை குறித்த தகவல் பலகையை நிறுவுதல்; தோண்டிய கிணற்றில் தண்ணீா் இல்லாமல் போனாலோ தண்ணீா் வற்றிக் கைவிடப்பட்டாலோ உடனடியாக அதை மண்ணிட்டு மூடி, சிமென்ட் மூலம் வாய்ப் பகுதியை அடைத்தல் அல்லது குழாயின் மேற்பகுதியை மூடிபோட்டு அடைத்தல், கிணற்றை மூடிவிட்ட தகவலை உள்ளாட்சி நிா்வாகத்துக்குத் தெரியப்படுத்துதல் ஆகியவை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
  • தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிணறுகளின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகளின்போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும், இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்டத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள பசுமை நிதி (Green Fund), மாவட்டக் கனிம நிதி (District Mineral Fund) ஆகிய நிதி ஆதாரங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய செயல்திட்டத்தை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் அரசுக்கு அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்; அதனடிப்படையில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அரசின் வருமுன் காக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது; ஆனால், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய முன்னெடுப்புகள் முழுமை பெறாது. எனவே, ஆழ்துளைக் கிணறுகளால் இனி ஒரு உயிர்கூடப் பறிபோகாத வகையில் அரசும் மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories