TNPSC Thervupettagam

ஆவினில் என்ன நடக்கிறது

November 26 , 2023 412 days 298 0
  • கால் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழகத்தின் அரசுப் பேருந்துகள் தொடர்பாக எனக்குப் பெருமை உண்டு.
  • குஜராத் மாநிலத்தின் ஆனந்த் நகருக்கு 1988இல் நான் படிக்கச் சென்றபோது, அங்கே நான் பார்த்த பேருந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது. அப்படி ஒரு ஓட்டை உடைசலான பொதுப் பேருந்தை நான் நம்மூரில் எங்குமே பார்த்ததில்லை.
  • படிப்பு முடித்து வேலைக்காக கர்நாடகம் சென்றேன். பெங்களூருவில் நான் பார்த்த பேருந்துகள் ஆனந்தில் பார்த்த பேருந்துகளைவிட மேம்பட்டவை என்றாலும், தமிழகத்தோடு ஒப்பிடத்தக்கதாக அப்போது இல்லை. பல ஆண்டுகள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்துவிட்டு, ஆண்டுக்கு சில நாட்கள் ஊருக்கு வரும் நான் சமீபத்தில் நம்முடைய பேருந்துகளைப் பார்த்தபோது, மனம் குமைந்தது.
  • தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இன்று மழை பெய்தால், ஒழுகும் பேருந்துகளை எல்லாம் பார்க்க முடிகிறது. அதேசமயத்தில், அண்டை மாநிலமான கர்நாடகாவில், ‘ஐராவதம்’ என்னும் அதி நவீன பொதுப் போக்குவரத்து வாகனங்கள் ஓடிக்கொண்டிருப்பதையும் பார்த்தேன். தமிழகத்தில் வீழ்ச்சி. கர்நாடகத்தில் எழுச்சி.
  • விலைவாசிக்குத் தகுந்தாற்போல உயர்த்தப்படாத பேருந்துக் கட்டணம், உயர்த்தவிடாத அரசியல் சூழல், வெளித்தலையீடுகள் மிகுந்த நிர்வாகம், ஊடுபாவும் முறைகேடுகள் என அனைத்தும் இணைந்தால் என்ன ஆகும்? தொழில் நாசமாகத்தான் போகும். தமிழ்நாட்டின் பொதுப் போக்குவரத்தை நாம் சீரழித்த வரலாறு இதுதான். அடுத்து, விவசாயிகள் – பொதுமக்கள் இரு தரப்புக்கும் அட்சயப் பாத்திரமான ஆவின் நிறுவனத்தையும் இப்படிச் சீரழிக்க ஆரம்பித்திருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

ஆவினில் என்ன நடக்கிறது

  • தமிழ்நாட்டில் பால் பொருட்கள் என்றால், மக்களுடைய முதன்மைத் தேர்வு ஆவின்தான். ஆனால், எப்போதும் கடைகளில் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடுதான். சமீப வாரங்களில் ‘பச்சைப் பால் கிடைப்பதே இல்லை’ என்று மக்கள் அங்கலாய்த்தார்கள். சென்னையில் கொஞ்சம்போல் கிடைக்கிறது என்றும் சென்னைக்கு வெளியே கடும் தட்டுப்பாடு என்றும் செய்திகள் வெளியாயின.
  • எல்லோருக்குமே கவலை மிகுந்த அந்தக் கேள்வி இருக்கிறது: ஆவினில் என்ன நடக்கிறது?
  • வேறு என்ன நடக்கும்? அரசியல்தான் நடக்கிறது!

தேவையற்ற அறிவிப்பு

  • 2021 தேர்தல் அறிக்கையில், இன்றைய ஆளும் கட்சியான திமுக, ‘ஆட்சிக்கு வந்தால், பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்; பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிக்கப்படும்’ என அறிவித்தது. பால் கொள்முதல் விலையை உயர்த்துவதில் நியாயம் உண்டு. விற்பனை விலையைக் குறைக்க என்ன தேவை இருக்கிறது? கொள்முதல் விலையைக் கூட்டி, விற்பனை விலையைக் குறைக்கும் ஒரு வியாபாரம் எப்படி உருப்படும்?
  • ஆவின் என்பது அரசு நிறுவனம் அல்ல. அமுல் போன்று ஆவின் பால் உற்பத்தியாளர்களின் நிறுவனம். பால் கொள்முதல் விலை மற்றும் பால் விற்பனையை முடிவு செய்ய வேண்டியது பால் உற்பத்தியாளர்கள். துரதிருஷ்டவசமாக, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனங்களை, அந்தந்த மாநில அரசை ஆளும் ஆளும் கட்சிகள் தங்கள் அரசியல் நலனுக்கேற்ப வளைக்கின்றன. இதில் தமிழ்நாடும் விலக்கல்ல.
  • நீண்ட கால நோக்கில் இந்த அரசியல் தலையீட்டினால் பாதிக்கப்படுவது பால் உற்பத்தியாளர்களே; அதாவது, விவசாயிகளே இங்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆவின் போன்ற பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனங்கள், தனியார் பால் நிறுவனங்கள் போன்று அதீத லாப நோக்கோடு செயல்படாமல், நியாயமான விலைக்குத் தங்கள் பொருட்களை விற்பவை. ஆனால், இன்றைய திமுக அரசு தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, ஏற்கெனவே உள்ள நியாயமான விலையை மேலும் குறைத்தது. விளைவு என்னவாகும்? ‘அரசு உதவி’ என்று பதில் சொல்ல முற்பட வேண்டாம். சுய பலத்தில் இயங்காத நிறுவனங்கள் முடங்கும் என்பதே வரலாறு.

அழுத்தத்தில் ஆவின்

  • இந்த விலை மாற்றமான சில காலத்தில் பால் உற்பத்தி இடுபொருட்கள் விலைகள் உயர்ந்தன. தனியார் பால் உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக, கொள்முதல் விலையை ரூ.6-8 வரை உயர்த்தின. ஆவினும் வேறு வழியின்றி கொள்முதல் விலையை ரூ.4 வரை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் தங்கள் கொள்முதல் விலை உயர்வுக்கு ஏற்ப பாலின் விற்பனை விலையையும் ஏற்றின. அரசால் அழுத்தப்பட்ட ஆவின்.  நஷ்டத்தை எதிர்கொள்ளலானது அது. பெரும் அழுத்தத்தை அது சந்திக்கிறது.  நஷ்டத்தைச் சமாளிக்கும் ஒருவழியாகத்தான் இன்று வேறு வழியில்லாமல் 4.5% கொழுப்பு சத்து கொண்ட பச்சை நிற பாலைச் சந்தைப்படுத்துவதை நிறுத்தப்போவதாக ஆவின் தெரிவித்திருக்கிறது. சில வாரங்களாகவே ஆவின் பால் கிடைப்பதில் உள்ள நெருக்கடி மக்களையும் பெரிதாகப் பாதித்துள்ளது.
  • மாட்டுப் பாலில் உள்ள சராசரி கொழுப்புச் சத்து, 3%-4% ஆகும். 4.5% கொழுப்பு இருக்க வேண்டுமெனில், பாலில் கூடுதல் கொழுப்பைச் சேர்க்க வேண்டியிருக்கும். இந்தச் செலவு மட்டுமே மாதம் ரூ.60-70 கோடி வரை கூடுதல் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது எனச் சொல்கிறார்கள்.
  • அரசு ஏழை மக்களுக்கு சகாய விலையில் 3.5% பாலை அளிக்கிறார்கள். அது ஒரு மக்கள் நலக் கொள்கை எனச் சொல்லலாம். ஆனால், கொள்முதல் விலை அதிகரிக்கையில், 4.5% கொழுப்புப் பாலையும் ஏன் சகாய விலையிலேயே விற்க வேண்டும் அல்லது நஷ்டத்தின் பெயரால் பால் விற்பனையைக் குறுக்க வேண்டும்?

அரசு என்ன செய்ய வேண்டும்

  • எல்லாப் பால் பொருட்களையும் சலுகை விலையில் விற்றால், ஆவின் பெருத்த நஷ்டத்துக்குள்ளாகி, போக்குவரத்துத் துறை போன்றுதான் சீரழிந்து போகும்.
  • இதை மக்கள் மன்றத்தில் நேர்மையாக, தைரியமாக எடுத்துச் சொல்ல முடியாமல், அதிகக் கொழுப்புப் பால் உடல் நலத்துக்குத் தீங்கானது என்றெல்லாம் தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார் பால் வளத் துறை அமைச்சர். ஏனெனில், 4.5% கொழுப்புப் பாலின் விலையை உயர்த்தினால், எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்துக் குரல் எழுப்புவார்கள். அது உருவாக்கும் சங்கடத்தைத் தவிர்க்கவே. 4.5% கொழுப்புப் பால் உற்பத்தியை நிறுத்தும் முடிவை ஆவின் சார்பாக அமைச்சர் எடுத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.
  • ஆனால், இந்த முடிவினால், சென்னையின் பால்ச் சந்தையில் 40%த்தை ஆவின் இழந்துவிடும். போட்டிகள் நிறைந்த உலகில், சந்தை ஒருமுறை போனால், திரும்ப வராது. சில ஆண்டுகளுக்குள் வசதியான நுகர்வோர் இல்லத்தில் ஆவின் இல்லாமல் போனால், அது உருவாக்கும் வெற்றிடத்தில் மற்ற தனியார் வணிகச் சின்னங்கள் நுழைந்துவிடும். சளி பிடிப்பதைத் தடுக்க மூக்கை வெட்டிக்கொள்வதைப் போன்ற முடிவு இது.
  • அமுல் போன்று நிர்வாகச் சுதந்திரம் பெற்ற பால் உற்பத்திக் கூட்டுறவு நிறுவனங்கள், பால் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, விலைவாசி ஏற்றத்துக்குத் தக்கவாறு, பால் விலைகளை உயர்த்திக்கொள்கிறார்கள். அப்படி உயர்த்துகையில், ஏழை மக்கள் அதிகம் உபயோகிக்கும் 3.5% கொழுப்புப் பாலின் விலையைக் குறைவாக உயர்த்தி, அதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க, அதிக கொழுப்பு சதவீதம் கொண்ட பால், வெண்ணெய், பால் பவுடர், நெய், ஐஸ்க்ரீம், இனிப்புகள் விலையை அதிகமாக உயர்த்தி நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆவினும், கடந்த பல ஆண்டுகளாக, ஐஸ்க்ரீம், மோர், இனிப்புகள், நெய்யினால் செய்யப்படும் கார வகைகள் முதலியவற்றை அதிகம் விற்பனை செய்து நஷ்டத்தைக் குறைக்க முயற்சி செய்கிறது. ஆனால், எதற்கும் ஓர் எல்லை உண்டு இல்லையா?
  • குஜராத் மாதிரிக்கு தமிழ்நாடு மாதிரி நல்ல மாற்று என்று பேசும் திமுக அரசு அமுலுக்குப் போட்டியாக ஆவினை வளர்த்தெடுக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் அமுலுக்கு இணையான தன்னாட்சி அதிகாரத்தை ஆவின் நிர்வாகத்துக்கு அளிக்க வேண்டும். ஆவின் நிறுவனம் இன்று 35 லட்சம் லிட்டர் பாலை அன்றாடம் ஓரளவு நல்ல விலையில் கொள்முதல் செய்து வருகிறது. இந்தக் கொள்முதலில் ஆவின் இல்லையெனில், தனியார் நிறுவனங்கள், கூட்டுச் சேர்ந்து பால் கொள்முதல் விலையைக் குறைத்துவிடுவார்கள். மஹாராஷ்டிரத்தில் இதுதான் நடந்தது. விவசாயிகளுக்கும் நஷ்டம், நுகர்வோருக்கும் நஷ்டம். ஆவின் நம்மிடமுள்ள பொன் முட்டையிடும் வாத்து. அதைக் குறுகிய அரசியல் லாபங்களுக்காகக் கொன்றுவிடக் கூடாது!

நன்றி: அருஞ்சொல் (26 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories