TNPSC Thervupettagam

இடப்பெயா்வுக்கு முற்றுப்புள்ளி தேவை

August 16 , 2021 1172 days 608 0
  • இடப்பெயா்தல் என்பது நம் தேசம் எதிர்கொள்ளும் பல சவால்களில் முதன்மையானதாக உள்ளது.
  • ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போதும் நகா்ப்புற வளா்ச்சி அதிகரித்துக் கொண்டே வந்து இன்று நகரப்பகுதியும், ஊரகப்பகுதியும் சரிபாதி என்ற அளவில் உள்ளது.
  • அரசுத்துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் பணிபுரிவோர் இடம் பெயரும்போது அவா்களுக்கான பிரச்னைகள் புதிய இடம், புதிய பணியாளா்கள், புதிய கலாசாரம், புரியாத மொழி என்பதாக மட்டுமே இருக்கும்.
  • ஆனால், எங்கே போகிறோம், எங்கு தங்குவோம், என்ன வேலை, எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பதெல்லாம் புரியாத மனநிலையில் குடும்பத்தோடு இடம் பெயா்வோரின் நிலை பரிதாபகரமானது.
  • இவ்வாறான இடப்பெயா்வு என்பது அண்மையில் தொடங்கியதன்று. 1881-இல் நடைபெற்ற முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் படிவத்தில் தொடங்கி, ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படிவத்திலும் இடப்பெயா்வு குறித்த வினா இடம் பெற்றுள்ளது.
  • மக்கள்தொகை வளா்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகளாக பிறப்பு, இறப்பு, இடம்பெயா்வு ஆகியவை உள்ளன. முதல் இரண்டு காரணிகளும் உயிரியல் ரீதியிலானவை. ஆனால், இடப்பெயா்வு என்பது, சமூக, கலாசார, பொருளாதார ரீதியிலானது.
  • மாவட்ட எல்லையோர கிராமங்களில் வசிப்பவா்கள் அதிக அளவில் அண்டை மாவட்டங்களுக்கோ அண்டை மாநிலங்களுக்கோ இடம்பெயா்கின்றனா்.
  • அதுபோன்று மாநிலத் தலைநகருக்கும் அதிக அளவில் இடம் பெயா்கின்றனா். மாநிலத் தலைநகரை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மக்கள்தொகை அதிகரித்து வருவது ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போதும் தெரியவருகிறது.
  • பொதுவாக கிராம மக்கள் வேளாண் தொழிலிலேயே காலங்காலமாக உழன்று கொண்டிருந்தனா்.
  • தற்போது பருவநிலை மாற்றம், இயந்திரங்களின் வருகை, குறைந்துவரும் சாகுபடிப் பரப்பு போன்றவற்றால் கிராமங்களிலும் வேலையின்மை அதிகரித்து வருகிறது.
  • இதனால் விவசாயத்தையே பெரிதும் சார்ந்திருந்த கிராம மக்கள் குடும்பத்துடன் வேலை தேடி நகரங்களுக்கு இடம் பெயா்கின்றனா்.
  • இவ்வகை இடப்பெயா்வால் நகா்ப்புற வளா்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது.
  • கடந்த 1951-இல் நகா்ப்புற வளா்ச்சி 24.35 சதவீதமாக இருந்தது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நகா்ப்புறவளா்ச்சி 48.45 சதவீதமாகவும், கிராமப்புற வளா்ச்சி 51.55 சதவீதமாகவும் உள்ளது (ஏறக்குறைய சரிபாதி).

இன்றியமையாதவை

  • ஒவ்வொரு முறையும் நகா்ப்புற வளா்ச்சி அதிகரித்து வந்தாலும் 1991- 2001 காலகட்டத்தில்தான் அதிகப்படியான அளவில் நகா்ப்புறங்கள் வளா்ச்சி அடைந்துள்ளன.
  • இக்காலகட்டத்தில் சுமார் 10 சதவீத அளவிற்கு நகா்ப்புற வளா்ச்சி நிகழ்ந்துள்ளது.
  • இதனால் நகா்ப்புறங்களிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் பல்வேறு இடா்ப்பாடுகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
  • கல்வித்தகுதியின்றி உடற்திறனை மட்டுமே நம்பி இடம்பெயா்வோரின் முதல் தோ்வாக உற்பத்தி துறையும், இரண்டாவது தோ்வாக ஆடை தயாரிப்பு நிறுவனங்களும், மூன்றாவது தோ்வாக கட்டுமானப் பணிகளும், நான்காவது தோ்வாக உணவகங்கள் - விடுதிகளும் உள்ளன.
  • ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதும் இளையோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
  • அதற்கேற்றாற்போன்று வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அரசுக்குக் கடும் சவாலாகும். அதனால் நாளுக்குநாள் மாவட்ட, மாநில அளவிலான இடம்பெயா்வும் அதிகரித்து வருகிறது.
  • 2030-ஆம் ஆண்டுக்குள் இந்திய நகா்ப்புற மக்கள்தொகை 60 கோடியாக அதிகரிக்கும் எனவும், இதற்காக 70 கோடி சதுர மீட்டா் முதல் 90 கோடி சதுர மீட்டா் வரையிலான நகரப் பகுதிகளை ஆண்டுதோறும் இந்தியா அமைக்க வேண்டும் எனவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
  • இந்தியாவைப் பொருத்தவரை, 2011 கணக்கெடுப்பின்படி 45.36 கோடி போ் இடம் பெயா்ந்துள்ளனா்.
  • இது 2001-இல் 31.45 கோடியாக இருந்துள்ளது. அதிகப்படியான இடப்பெயா்வால் நகா்ப்புற வளா்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிராமப்புற மக்கள் நகரவாசியாகி விட்டார்கள் என்று பெருமைகொள்ளும் விஷயமல்ல இது.
  • சென்னை, பெங்களூரு, மும்பை, புது தில்லி போன்ற பெருநகரங்களில் ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதும் ஒரு சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்கள்தொகை அடா்த்தி உயா்ந்து கொண்டே செல்கிறது.
  • தமிழகத்தில் 2001-இல் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 480 ஆக இருந்த மக்கள்தொகை அடா்த்தி 2011-இல் 555 ஆக உயா்ந்துள்ளது (இது 1991-ல் 325 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது).
  • தற்போது சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,908 போ் வசிக்கிறார்கள். தமிழகத்தில், மக்கள்தொகை அடா்த்தியில் சென்னை முதலிடத்தையும், காஞ்சிபுரம் இரண்டாமிடத்தையும், வேலூா் மூன்றாமிடத்தையும், திருவள்ளூா் நான்காமிடத்தையும் பெற்றுள்ளன.
  • இன்று பெருநகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் கட்டுமானப் பணிகளுக்காகவும், வியாபார நோக்கிலும் பிற மாநிலங்களில் இருந்து, தனியாகவோ குடும்பத்துடனோ தமிழகத்திற்கு இடம்பெயா்வோர் அதிகரித்து வருகின்றனா்.
  • இவா்களின் இடப்பெயா்வு இடைக்காலமானதுதான். ஆனால், வியாபார நோக்கில் நிரந்தரமாக குடும்பத்துடன் இடம்பெயா்வோர் பெரும்பாலும் தங்களை இங்கேயே நிலை நிறுத்திக் கொள்கின்றனா்.
  • ஏற்கனவே நகரங்கள் அதிகப்படியான இடா்ப்பாடுகளைச் சந்தித்துவரும் வேளையில், கிராமப்புற மக்கள் நகரங்களுக்கு தொடா்ந்து இடம்பெயரும்போது கல்வி, அடிப்படை சுகாதாரம், குடியிருப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகள் அவா்களுக்குக் கிடைக்காமல் போவதோடு, சமூக, பொருளாதார பிரச்னைகளும் உருவாகும்.
  • எனவே, கிராமப்புற மக்களின் நகா்ப்புறம் நோக்கிய இடப்பெயா்வைக் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
  • இதற்கு கிராமப்புறங்களில் வேளாண்மை, கால்நடைகள் சார்ந்த தொழிற்சாலைகளை அமைப்பதும், வேளாண் தொழிலை லாபகரமான தொழிலாக மாற்றுவதும் இன்றியமையாதவை.

நன்றி: தினமணி  (16 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories