TNPSC Thervupettagam

இடைநுழைப்பு முறை: ஒரு தவறான அணுகுமுறை

September 15 , 2024 124 days 144 0

இடைநுழைப்பு முறை: ஒரு தவறான அணுகுமுறை

  • அது 1972ஆம் ஆண்டு. பாகிஸ்தானின் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ, மத்திய தலைமைச் செயலகத்தின் துணைச் செயலர் முதல் செயலர் வரையிலான மூத்த பதவிகளுக்கும் பாகிஸ்தானின் வெளியுறவுச் சேவையில் ஒப்பிடக்கூடிய பதவிகளுக்கும் இடைநுழைப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இது நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்திய குடிமைப் பணியின் (ICS) வாரிசான பாகிஸ்தானின் பொது குடிமைப் பணிதான் (‘சிஎஸ்பி’ - CSP) நாட்டில் நிலவிய இன்னல்களுக்குக் காரணம் என்று பூட்டோ குற்றஞ்சாட்டினார். இடைநுழைப்பு முறை, புதிய திறமையையும் சிறப்பு அறிவையும் கொண்டுவரும் என்று அவர் கூறினார். உண்மையில் அது, கட்சி விசுவாசிகளை அதிகாரிகளாக நியமிப்பதன் மூலம் பாகிஸ்தானின் உயர் அடுக்கு சிஎஸ்பியை வலிமையற்றதாக்கும் ஒரு தந்திரமாக இருந்தது.
  • பாரம்பரிய போட்டித் தேர்வைத் தவிர்த்து, நேர்காணல் மூலம் மட்டுமே இடைநுழைப்பு முறையால் நியமிக்கப்பட்டனர். தனது முன்னாள் பணியில் அல்லது நிறுவனத்தில் பதவி உயர்வுக்கான குறைந்த வாய்ப்புகளைக் கொண்ட மற்றும் அரசியல்ரீதியாக செல்வாக்கு மிக்க ஒருநபர், மத்திய அரசில் இடைநுழைப்பு முறை வழியாக் நுழைந்து வேகமாக உயர முடிந்தது. இந்த இடைநுழைப்பு முறை மூலமாக நுழைபவரின் முந்தைய பணி அனுபவத்திற்கும் அவரது புதிய பாத்திரத்திற்கும் இடையே ஒரு தளர்வான தொடர்பு மட்டுமே இருந்தது.
  • இடைநுழைப்பு, ஒருமுறை அறிமுகப்படுத்தப்பட்டால், பல்வேறு வடிவங்களில் நிலைத்துக்கொண்டே இருக்கும். ஜெனரல் ஜியா-உல்-ஹக் பூட்டோவின் முறையை ஒழித்தார், ஆனால் அவர் 10% குடிமைப் பதவிகளை ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கினார், அவர்கள் சிவில் அதிகாரத்துவத்தில் இடைநுழைவை அமைப்புமுறைக்கு உள்படுத்தினார். பெனாசிர் பூட்டோ பிரதமர் அலுவலகத்தில் ‘வேலைவாய்ப்பு பணியக’த்தைத் திறந்து, முக்கிய சிவிலியன் பதவிகளில் தனது கட்சி விசுவாசிகளை நியமித்தார். ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ராணுவ அதிகாரிகளின் சிவில் அதிகாரத்துவத்தில் இடைநுழைவை அதிகரித்தார்.

இந்தியாவுக்கான எச்சரிக்கை!

  • இடைநுழைவை அடிக்கடி தவறாகப் பயன்படுத்துவதால், பாகிஸ்தானின் குடிமைப் பணிகளின் நடுநிலைமை, திறமை மற்றும் குழு உணர்வு (எஸ்பிரிட் டி கார்ப்ஸ்) ஆகியவை சிதைந்து, சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பது மற்றும் தக்கவைத்துக்கொள்வது கடினமாகிவிட்டது. ‘த டான்’ நாளிதழில் ‘அண்டை நாடுகளை நகலெடுப்பது’ (2018 ஜூன் 14) என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில், பாகிஸ்தான் அறிஞர் எஃப்.எஸ்.அய்ஜாசுதீன், இடைநுழைப்பு முறையின் ஆபத்துகளுக்கு எதிராக இந்தியாவை எச்சரித்தார். அதில், “பாகிஸ்தானின் வரலாற்றை மறந்த இந்தியர்கள் அதை மீண்டும் வாழும் கட்டாயம் ஏற்படும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
  • 166 ஆண்டுகள் பழமையான இந்தியாவின் தகுதி அடைப்படையிலான முறை பாகிஸ்தானின் இடைநுழைப்பு முறையானது, வெற்றிபெற்ற ஒரு அரசியல் கட்சி தன்னுடைய ஆதரவாளர்களை அரசாங்கத்தில் பல்வேறு சிவில் பதவிகளுக்கு தகுதியைப் பொருட்படுத்தாமல் நியமிக்கும் நடைமுறையின் மற்றொரு பெயராகும். ஆங்கிலத்தில் இதை ‘ஸ்பாயில்ஸ் சிஸ்டம்’ (Spoils system) என்று சொல்வார்கள். இது, நியமனம்செய்யப்படுபவர்களின் அரசியல் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல் ஒரு சுயாதீன அமைப்பினால் நடத்தப்படும் போட்டித் தேர்வின் மூலம் நிரந்தரக் குடிமைப் பணிகளுக்கு நியமனம்செய்யும் தகுதி முறைக்கு (Merit system) எதிரானதாகும்.
  • 1832ஆம் ஆண்டு அமெரிக்க ஆட்சிப் பேரவையில், இந்த நடைமுறையை ஆதரித்துப் பேசிய வில்லியம் எல்.மார்சி என்பவரின், ‘டூ த விகடர் பிலாங் த ஸ்பாயில்ஸ் ஆஃப் தி எனிமி’ (To the victor belong the spoils of the enemy) என்ற உரைக் குறிப்பிலிருந்து ‘ஸ்பாயில்ஸ் முறை’ என்ற பெயர் வழங்கலாயிற்று. அதிபர் பதவியேற்பு நாட்களிலும் அதற்குப் பிறகும் பல மாதங்கள் வரை, வேலை தேடுபவர்களின் கும்பல் வெள்ளை மாளிகையைத் தாக்குவது வழக்கம், இது 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்க அரசியலின் வழக்கமான அம்சமாகும்.
  • 1881ஆம் ஆண்டு வேலை தேடி அலைந்த நபர் ஒருவர், அதிபர் ஜேம்ஸ் ஏ.கார்ஃபீல்டை அவரது நன்றியின்மைக்காக படுகொலை செய்தபோதுதான் அமெரிக்கா இம்முறையின் ஆபத்தைப் புரிந்துகொண்டது. இந்தப் படுகொலை, 1883ஆம் ஆண்டு பென்டில்டன் பொதுப் பணிச் சட்டமியற்ற வழிவகுத்தது. இது ஸ்பாயில்ஸ் முறைக்கு (spoils system) பதிலாக தகுதி அமைப்பு மற்றும் தொழில் அதிகாரத்துவத்தால் மாற்றம் பெற்றது.

இந்திய குடிமைப் பணி

  • தகுதி முறையை இங்கிலாந்து ஏற்றுக்கொள்வதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, அமெரிக்கா ஏற்றுக்கொள்வதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே 1858ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் தகுதி முறை (Merit System) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய குடிமைப் பணி (ICS) என்பது உலகின் மிகச் சிறந்த பொதுப் பணிகளில் ஒன்றாகவும் பிரிட்டிஷ் இந்தியாவின் ‘எஃகுக் கட்டமைப்’பாகவும் கருதப்பட்டது.
  • சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா தகுதி முறையைத் தொடர்ந்தது. மேலும், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் - யுபிஎஸ்சி (UPSC) பல ஆண்டுகளாக அரசியல் அழுத்தங்களைத் தடுப்பதன் மூலமும், நாட்டிலுள்ள சிறந்த மற்றும் திறன்மிக்கவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் பாராட்டத்தக்க வேலையைச் செய்துள்ளது. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய வெளியுறவுப் பணி (IFS), இந்திய காவல் பணி (IPS) மற்றும் ஏனைய 20 இதர பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்திவருகிறது - இது உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்ற 13 லட்சம் விண்ணப்பதாரர்களிலிருந்து, இறுதியாக 1,016 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 2010இல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லான்ட் பிரிட்செட்டை இந்த அழகான பாராட்டுகளை வழங்கினார்: “ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு மிகக் கடினமான நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளனர். இதை ஒப்பிடும்போது ஹார்வர்டில் சேர்க்கை பெறுவது பூங்காவில் நடப்பதுபோல் தெரிகிறது. நான் உலக வங்கியில் பணிபுரிந்தேன், அது உண்மையிலேயே புத்திசாலித்தனமானவர்களை வேலைக்கு அமர்த்துகிறது. உலக வங்கியின் அலுவலர்களைவிட பல இந்திய அரசு அதிகாரிகள், குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பாக உள்ளனர்” என்றார். இந்தப் பாராட்டு யுபிஎஸ்சி மூலம் பிற பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
  • அப்படியானால், இந்திய அரசு நடைமுறையில் திறமையற்றதாகவும், பொறுப்பற்றதாகவும், பொதுநலனில் அக்கறையற்றதாகவும் கருதப்படுவது ஏன்? அரசு திட்டங்கள் வாக்குறுதி அளிக்கப்பட்ட முடிவுகளை வழங்கத் தவறுவது ஏன்? மேலும் அரசின் திட்டங்களுக்கு ஏன் பெரும் செலவும், அதிக காலவிரயமும் ஏற்படுகிறது?
  • இந்தியாவின் குடிமைப் பணியிலுள்ள சிக்கல்கள் தேர்வுசெய்யும் நடைமுறையில் இல்லை, ஓர் அதிகாரி இந்தப் பணியில் சேர்ந்த பின்னர் என்ன நடக்கிறது என்பதில்தான் உள்ளது. அரசியலின் குற்றமயமானத்தன்மை, அதிகப்படியான அரசியல் தலையீடு, பரவலான ஊழல், மற்றும் அடிக்கடி நிகழ்கிற, தன்னிச்சையான மற்றும் தண்டனைக்குரிய இடமாற்றங்கள் ஆகியவையே இயல்பாக மாறிவிட்ட ஒரு அமைப்பில் பணிபுரியும் சிறந்தவர்களும், மிக பொறுப்பானவர்களும்கூட தங்கள் பொறுப்புகளை இழக்க காரணங்களாக இருக்கலாம்; மேலும் அதில் “ஊழல் அதிகாரிகள் வெறுக்கப்படுகிறார்கள், ஆனால் வளர்கிறார்கள்; நேர்மையானவர்கள் மதிக்கப்படுகிறார்கள். ஆனால் உயர மாட்டார்கள்; லட்சியவாதிகள் முற்றிலும் தோல்வியடைகிறார்கள்” என்று ஒரு அமெரிக்க சிந்தனைக் குழு ஒருமுறை கூறியது.
  • நாட்டிலுள்ள சிறந்தவர்களும், பொறுப்பானவர்களும் இத்தகைய அரசியல் சூழலில் திறம்படச் செயல்பட முடியாவிட்டால், தனியார் துறையிலோ பிற இடங்களிலோ இடைநுழைபவர்கள் சிறப்பாகச் செய்வார்கள் என்று நம்புவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை.

அரசு, தனியார் துறைகளை ஒப்பிடுவது சரியா?

  • தனியார் துறையில் இல்லாத அளவுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அரசுத் துறை செயல்பட்டுவருகிறது. அரசு மிகப் பெரிய அமைப்பாக இருப்பதால், அதன் அலுவல்களை மேற்கொள்வதற்கு விரிவான விதிகளை அது கொண்டிருக்க வேண்டும். அரசு, பொதுமக்களின் பணத்தை நிர்வகிப்பதால், ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காட்டப்பட வேண்டும். அரசு, மகத்தான அதிகாரத்தைப் பெற்றுள்ளதால், அது பல கட்டுப்பாடுகளையும் சமநிலைகளையும் கொண்டிருக்க வேண்டும். அரசு, குடிமக்களின் இறுதிப் புகலிடமாக இருப்பதால், தனியார் துறையால் செய்ய முடியாத அல்லது தனியார் துறை செய்யாத பல பணிகளை அரசு செய்ய வேண்டும்.
  • அரசின் நோக்கங்கள் பெரும்பாலும் கண்ணுக்குத் புலப்படாதவையாக இருப்பதால், செயல்திறனை மதிப்பீடு செய்வது மிகவும் கடினமான பணி என்பதுடன், எதிர்பார்த்த பலன்களை எய்துவதைவிட அவற்றை அடைவதற்கான செயல்முறை இணக்கம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அரசு, அனைத்து வகை குடிமக்களையும் திருப்திப்படுத்த வேண்டியிருப்பதால், அலுவல் பணிகளைப் போன்று குறைந்த அளவிலான முன்னுரிமைகள் குறித்த ஆதாரங்களில், அரசால் கவனம் செலுத்த இயலாது.
  • அரசியல் தலைவர்கள் எவ்வாறேனும் தேர்தல்களில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என விரும்புவதால், அவர்கள் பெரும்பாலும் சாதகமற்ற அல்லது மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். இப்படி எந்தவொரு தளைகளிலும் சிக்குறாத தனியார் துறையின் அதீத செயல்திறனை அரசு ஒருபோதும் கொண்டிருக்க முடியாது என்பதையே இது சுட்டுகிறது.
  • ‘உயர் அதிகார அமைப்பிற்குள், தனியார் துறை அதிகாரிகளின் இடைநுழைப்பு’க்கு ஆகச் சிறந்த உதாரணமாக அமெரிக்கா அடிக்கடி கோடிட்டுக் காட்டப்படுகிறது. ஆனால், இது ஒரு தவறான கருத்தாகும். ‘பொதுப் பணி நிறுவனங்களை நிர்வகித்தல்’ (1973) என்ற சிறப்பான ஒரு கட்டுரையில் பீட்டர் எஃப். ட்ரக்கர் குறிப்பிடுவது: “பொதுப் பணி நிறுவனங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வணிக மேலாளர்கள், அதிகார வர்க்கத்தினரைவிடச் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. உண்மையில், அவர்கள் உடனடியாக தாமாகவே அதிகார வர்க்கத்தினராக மாறுகிறார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.”
  • இரண்டாம் உலகப் போரின்போது தங்கள் சொந்த நிறுவனங்களில் சிறப்பாகச் செயல்பட்டு அரசுப் பதவிகளுக்குச் சென்ற பெருமளவிலான வணிக நிர்வாகிகளின் உதாரணங்களை ட்ரக்கர் மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால், அரசுப் பணியின் சிக்கலான நடைமுறைகள், கோப்புகளின் தேக்கம் போன்ற மோசமான அனுபவங்கள் அவர்களை முன்னேற விடாமல் சோர்வடையச் செய்தன.
  • மிகச் சமீபத்திய உதாரணமாக ரெக்ஸ் டில்லர்சன் ‘எக்ஸான்மொபில்’ (Exxonmobil) நிறுவனத்தின் வெற்றிகரமான தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் 11 ஆண்டுகள் பணியாற்றினார். ஆனால், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளராக மோசமான தோல்வியை அவர் சந்தித்துடன் பதவியேற்ற 13 மாதங்களிலேயே 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
  • ஒரு சில வணிக நிர்வாகிகள் வர்த்தகத்திலிருந்து அரசுப் பணிக்கு வெற்றிகரமாக மாறிப் பணிபுரிந்தாலும், தனியார் துறையில் அவர்கள் காட்டிய வியத்தகு வெற்றியை ஒருவரும் எய்தவில்லை. கல்வித் துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து இடைநுழைப்பு பெற்றோருக்கும் இதே நிலைதான்.

நம்பிக்கையளிக்காத ஆள்சேர்ப்பு நடைமுறை

  • இந்தியா, கடந்த கால வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல், 2018 - 2019ஆம் ஆண்டு முதல், ஒன்றிய செயலகத்தில் இணைச் செயலாளர், இயக்குநர் மற்றும் துணைச் செயலாளர் பதவிகளுக்கு இடைநுழைப்பு மூலம் நியமனம்செய்யும் பரிசோதனையை மேற்கொண்டுவருகிறது. ‘நிர்வாக அமைப்பில் நிபுணத்துவம் மற்றும் குறிப்பிட்ட துறை சார்ந்த திறன் பெற்றவர்களைக் கொண்டுவருவது’, ‘வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு நிர்வாகக் கட்டுப்பாடுகளை அமைப்பது’ போன்றவை அதற்கான நோக்கங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
  • பட்டியலினத்தவர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இடஒதுக்கீட்டு நடைமுறையைச் செயல்படுத்தாமல், விண்ணப்பதாரர்களின் தன் விவரக்குறிப்பு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்றிய அரசுப் பணியாளர்களைத் தவிர, நிர்ணயிக்கப்பட்ட வயது, கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத் தகுதிகளைப் பெற்றிருக்கும் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாகக் கருதப்பட்டனர்.
  • ஒப்பந்தக் காலத்தை / மாற்றுப்பணிக் காலத்தை மூன்றாண்டுகள் முதல் அதிகபட்சம் ஐந்தாண்டுகள் வரை நீட்டித்துக்கொள்ளலாம். இதுவரை அறுபத்து மூன்று நியமனங்கள் இடைநுழைப்பு முறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில், 57 அதிகாரிகள் இதுநாள் வரையில் ஒன்றிய அமைச்சகங்களில் பணிபுரிந்துவருகிறார்கள். மேலும், 35 அதிகாரிகள் தனியார் துறையைச் சேர்ந்தவர்களாவர்.
  • உயர்நிலை அரசுப் பணியாளர்களிலிருந்து அல்லாது வெளியிலிருந்து நியமனம்செய்யப்பட்டவர்கள் துறை சார்ந்த நிபுணத்துவத்தை மேற்கொண்டுவருகிறார்கள் என்ற கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும்.

குறைந்தபட்ச தேர்வு அவசியம்

  • முதலாவதாக, தேவையான தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏற்கெனவே இந்திய அரசில் (GOI) – துறைத் தலைமை அலுவலகங்களில், ஆராய்ச்சி நிறுவனங்களில், பல்கலைக்கழகங்களில், வல்லுநர் குழுக்களில் மற்றும் ஆணையரகங்களில் இன்னபிற அலுவலகங்களில் போதிய அளவில் இடம்பெற்றுள்ளனர். பெரும்பாலும் ஆலோசகர்கள் மற்றும் வல்லுநர்கள் தேவைப்படும்போதெல்லாம் பணியமர்த்திக்கொள்ளப்படுகிறார்கள். புகழ்பெற்ற தேசிய மற்றும் பன்னாட்டு முகமைகள் மேற்கொண்ட எண்ணற்ற ஆய்வுகளும் அறிக்கைகளும் கிடைக்கப்பெறுகின்றன.
  • ஒன்றிய அமைச்சகத்தில் இடைநிலை அதிகாரியாக இடைநுழைபவர் எத்தகைய ‘கூடுதல் நிபுணத்துவ’த்தைத் தன் பணிகளில் பயன்படுத்துவார் என்பதைக் கற்பனை செய்வது மிகக் கடினமாகும். இரண்டாவதாக, மிகமிக நுணுக்கமான விஷயங்களில் நுட்பமான அறிவைப் பெற்றவரே வல்லுநர் என அறியப்படுகிறார். எந்தவொரு சிறப்புத் துறையிலும் பல கிளைகள் உள்ளன; ஒவ்வொரு கிளையிலும் பல துணைக் கிளைகளும் உள்ளன. எடுத்துக்காட்டுக்குச் சொல்வதானால், குறைக்கடத்திகள் (செமிகண்டக்டர்கள்) மற்றும் மின்னணுவியல் போன்ற ஒரு சிறப்புத் துறையின் முழுமையான தகவல்களைப் பெறுவதற்கு, வல்லுநர் ஒருவர் எத்தகைய நிபுணத்துவம் பெற்றிருப்பினும், அந்த ஒருவரை மட்டுமே கலந்தாலோசித்தால் போதாது; அவரைப் போன்ற பலரைக் கலந்தாலோசிப்பது அவசியமாகும்.
  • நிபுணத்துவம் வாய்ந்தவர்களைக் கொணர்வதே குறிக்கோளாக இருக்குமெனில், குறிப்பிட்ட புலத்தில் மிகக் கடினமான தேர்வு ஒன்றையும் (குறைந்தபட்சம் பன்முகத் தேர்வு வினாக்களைக் கொண்ட தேர்வு மற்றும் ஒரு கட்டுரை) அதனைத் தொடர்ந்து ஒரு நேர்காணலையும் நடத்துவது கட்டாயமாகும். கடுமையான ஆள்சேர்ப்புத் தேர்வு இல்லாமல், நேர்காணலுக்கு ஒரு சில விண்ணப்பதாரர்களைத் தேர்வுசெய்வது எளிதல்ல; உகந்ததுமல்ல.
  • தன்விவரக் குறிப்பு மற்றும் நேர்காணல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஆள்சேர்ப்புகள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செய்யப்பட்டாலும்கூட, பாகிஸ்தானில் நடந்ததைப் போன்றே, காலப்போக்கில், அரசியல் சூழ்ச்சி, உறவினர்களுக்குத் தனிச் சலுகை மற்றும் குரோனிசம் (நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களை அவர்களின் தகுதிகளைக் கருத்தில்கொள்ளாமல், அதிகாரப் பதவிகளுக்கு நியமனம்செய்தல்) ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

எப்படி இருக்க வேண்டும் இடைநுழைப்பு முறை?

  • இந்திய ஆட்சிப் பணி மற்றும் ஏனைய பணிகளைச் சேர்ந்த அதிகாரிகள், உலகின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றில் தேர்ச்சி பெற்று, ஒன்றிய செயலகத்தில் துணைச் செயலாளர், இயக்குநர் அல்லது இணைச் செயலாளர் பதவியில் பணியமர்த்தப்படுவதற்கு முன்னர், அவர்களின் செயல்திறன், திறமை மற்றும் நேர்மை ஆகியவை முறையே குறைந்தபட்சம் 9 ஆண்டுகள், 12 ஆண்டுகள் மற்றும் 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக மதிப்பீடுசெய்யப்படுகின்றன. ஆனால், இடைநுழைப்பு முறை மூலமாக வருபவர்களின் செயல்திறன், ஆற்றல் மற்றும் நேர்மை குறித்து மதிப்பீடு செய்யப்படாமல் அவர்களின் தன்விவரக் குறிப்பு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே அவர்கள் பணியில் நுழைய முடியும்.
  • துணைச் செயலாளர், இயக்குநர் மற்றும் இணைச் செயலாளர் நிலையிலான பதவிகளுக்குக் குறைந்தபட்ச பணி அனுபவமாக முறையே 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் மட்டும் போதுமானது என வரையறுக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றது என்பதுடன், சிவில் பணியாளர்களை மன உளைச்சலுக்கும் ஆளாக்கியுள்ளது.
  • கடந்த காலத்தில், வி.கிருஷ்ணமூர்த்தி, மந்தோஷ்சோந்தி, டி.வி.கபூர், எம்.ஏ.வதூத் கான், ஆர்.வி.ஷாஹி போன்ற பல புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள்; நன்கு அறியப்பட்ட தாவரவியல் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்; மற்றும் மன்மோகன் சிங், ஐ.ஜி.படேல், மாண்டேக் சிங் அலுவாலியா, ராகேஷ் மோகன் மற்றும் விஜய் கேல்கர் போன்ற புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் இடைநுழைப்பு முறையில் ஒன்றிய அரசுப் பணிகளில் செயலாளர்களாகப் பணியாற்றினர். செயலாளர் நிலையிலான பதவிகளுக்கு மட்டுமே ஆள்சேர்ப்புத் தேர்வை விட்டுவிட்டு, இடைநுழைப்பை அனுமதிக்கலாம். ஏனெனில், 30 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டிருக்கும் அவர்களின் துறை நிபுணத்துவத்தையும் தகுதியையும் எளிதில் மதிப்பிடலாம். அவர்களின் பதிவேடுகளை மட்டுமே பார்த்து அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இணைச் செயலாளர் அல்லது அதற்குக் கீழ்நிலையில், பெரும்பாலானோர் இன்றளவும் ‘பணி முன்னேற்ற நிலை’யிலேயே இருப்பதுடன் சிறப்பான செயல்திறன் கொண்டவர்கள் இருக்க வாய்ப்பில்லை.
  • செயலாளர் நிலையில் இடைநுழைந்தவர், கொள்கை வகுப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால், இணைச் செயலாளர் அல்லது அதற்குக் கீழ் நிலையில், அவரது அதிகாரம் குறைவாகவே இருக்கும்; கோப்புகளை அடுத்த நிலைக்கு அனுப்பும் ஒருவராக மட்டுமே செயல்படுகிற அளவுக்கு, அவருடைய நிலைமை மிக மோசமானதாகவே இருக்கும். மேலும், செயலாளர் நிலையில், இடைநுழைப்பு மூலமாக வரும் நபர் திறமையற்றவராகவோ அல்லது போதிய ஆழ்ந்த அனுபவ ஆற்றல் இல்லாதவராக இருப்பின், அவரைத் தெளிவாக அடையாளம் காணலாம். இது, தனக்கு நெருங்கிய நண்பரை அல்லது கட்சி விசுவாசிகளைச் செயலாளராக நியமனம் செய்வதற்குத் தடை அரணாக அமைந்துள்ளது. ஆனால் இணைச் செயலாளர் அல்லது அதற்குக் கீழ்நிலையில், இடைநுழைகிற, நெருங்கிய நண்பர் அல்லது கட்சி விசுவாசியானவர் ஒரு சகபயணியாகவே செயல்படுவார்.
  • எனவே, முதுநிலை அதிகார வர்க்கத்தில் ஏற்கத்தக்க நியாயமான காரணத்தின் அடிப்படையில் மட்டுமே அரசு செயலாளர் நிலையில் இடைநுழைப்பு முறை பின்பற்றப்பட வேண்டுமே அன்றி, இணைச் செயலாளர் நிலையில் அல்லது அதற்குக் கீழ்நிலையில் கூடாது. இடைநுழைப்பு முறை அரிதான விதிவிலக்காக இருக்க வேண்டுமே அன்றி சட்டமாக இருக்கக் கூடாது.

இடஒதுக்கீடுகள் குறித்த வினா

  • இதில் 17.08.2024ஆம் நாளன்று, 24 ஒன்றிய அமைச்சகங்களில் 10 இணைச் செயலாளர் மற்றும் 35 இயக்குநர் / துணைச் செயலாளர் பணியிடங்களை இடைநுழைப்பு முறை மூலம் நிரப்புவதற்கான புதிய விளம்பரத்தை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. முந்தைய நிகழ்வுகளைப் போலவே, இந்த விளம்பரமும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்காக யாதொரு பணியிட ஒதுக்கீட்டையும் கொண்டிருக்கவில்லை.
  • இது எதிர்க்கட்சிகளாலும் பாஜகவின் இரண்டு கூட்டணி கட்சிகளாலும் அரசியல்ரீதியாக கடுமையாகச் சாடுவதற்கு வழிவகுத்தது. 20.08.2024 அன்று, பணியாளர் துறையின் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மேற்சொன்ன விளம்பரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவருக்குக் கடிதம் அனுப்பினார்.
  • “சமூக நீதியை உறுதிசெய்வதில் மாண்புமிகு பிரதமர் கவனம் செலுத்தும் சூழலில், இடைநுழைப்பு முறை மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடுகளின் பொருந்தக்கூடிய தன்மை மறுஆய்வுசெய்யப்படவும் திருத்தப்படவும் வேண்டும்” என்று அவர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
  • பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DOPT) “இடஒதுக்கீடுகள் குறித்த சிற்றேடு 45 நாட்களுக்கும் மேலான தற்காலிக பணி நியமனங்களுக்குக்கூட இடஒதுக்கீடுகளைக் கட்டாயமாக்குகிறது. ஆனால், தனிநிலைப் பணியிடங்கள் அல்லது ஒற்றைப் பணியிட பணிநிலைப் பிரிவுகள்” என அழைக்கப்படும் பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது.
  • 2018 - 2019ஆம் ஆண்டில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் முதன்முதலில் - ஒவ்வொரு துறைக்கும் தலா ஒன்று என்ற வீதத்தில் – 10 இணைச் செயலாளர் பணியிடங்களுக்கான இடைநுழைப்பு குறித்து விளம்பரப்படுத்தியபோது – அப்பணியிடங்களைக் குறிப்பிட்ட பொருண்மை சார்ந்த, ஒற்றைப் பணியிடப் பணிநிலைப் பிரிவுகளாக தேர்வாணையம் கருதியதுடன் இடஒதுக்கீட்டைச் செயற்படுத்தவில்லை. ஆனால், இம்முறை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கு மட்டுமே எட்டு துணைச் செயலாளர் / இயக்குநர் பணியிடங்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டபோதிலும், இதுகாறும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
  • ‘பொருண்மை’ என்ற சொல் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதே இங்கு முக்கியமானதாகும். இது மிகவும் பரந்த அளவில், ஒரு அமைச்சகத்தைக் குறிப்பதாகவோ, சிறிய அளவில் அமைச்சகத்தின் துறை ஒன்றைக் குறிப்பதாகவோ அல்லது மிகவும் குறுகிய அளவில், துறையின் குறிப்பிட்ட பணியிடத்தைக் குறிப்பதாகவோ இருக்கலாம். ‘பொருள்’ என்பதன் மிகக் குறுகிய வரையறையைக் கொண்டு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனிநிலை அல்லாத பணியிடங்களை தனிநிலைப் பணியிடங்களாக மாற்றி, ஏற்கெனவே இடைநுழைப்பு முறை மூலம் நிரப்பப்பட்ட 63 பணியிடங்கள் ஒவ்வொன்றையும், தற்போது விளம்பரப்படுத்தப்பட்டுள்ள 45 பணியிடங்களையும் குறிப்பிட்ட பொருண்மை சார்ந்த, ஒற்றைப் பணிப் பிரிவாகக் கருதி இடஒதுக்கீட்டு நடைமுறையைப் புறந்தள்ளியுள்ளது. இது ‘பணிநிலைப் பிரிவு’ (Cadre) என்ற சொல்லை ஏளனம் செய்வதாக அமைந்துள்ளது.
  • அரசில் உள்ள ஒவ்வொரு பதவிக்கும் ஒரு குறிப்பிட்ட பணி விளக்கம் இருப்பதால், கோட்பாட்டளவில் அனைத்து அரசுப் பதவிகளையும் ‘ஒற்றைப் பணியிட பணிநிலைப் பிரிவு’ எனக் கருதி இடஒதுக்கீட்டைத் தவிர்க்கலாம். ஒரு துறையைப் ‘பிரிவு’ என்று கருதி, இடைநுழைப்பு நியமனத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து பணியிடங்களுக்கும் இடஒதுக்கீட்டைச் செயற்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்பதே எனது கருத்தாகும்.

முடிவுரை

  • மொத்தத்தில், மத்திய அரசின் நோக்கங்களுக்கும் இடைநுழைப்பு முறை மூலம் பணியமர்த்தும் செயல்முறை குறித்த நடைமுறைக்கும் இடையே ஒரு முரண்பாடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
  • தன்விவரக் குறிப்புகள் மற்றும் நேர்காணல்களை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு பணியமர்த்தும் செயல்முறைகள், காலப்போக்கில் ‘ஸ்பாயில்ஸ்’ (spoils) முறையாகச் சீர்குலைய வாய்ப்புள்ளது. அரசியல் விமர்சகர்கள் கருதுவதுபோல் இடஒதுக்கீடுகளை நடைமுறைப்படுத்துவது மட்டுமே இடைநுழைப்பு முறையின் குறைபாடுகளைக் களைந்திடாது.
  • இடஒதுக்கீட்டுடன் அல்லது இடஒதுக்கீடு இல்லாமல் என எதுவாக இருந்தாலும், இடைநுழைப்பு முறை என்பது (ஏற்கெனவே விவாதிக்கப்பட்ட அரிதான நிகழ்வுகள் நீங்கலாக) ஒரு சரியான திட்டமன்று. எனவே, அதனைத் தவிர்க்க வேண்டும். 166 ஆண்டுகளாக இந்தியாவில் நன்முறையில் செயல்பட்டுவருகிற தகுதி முறையை (Merit System) முறையான பயிற்சித் திறன் இன்றி செம்மைப்படுத்த முயற்சிப்பதை அரசு கைவிட வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (15 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories