TNPSC Thervupettagam

இணையதள மோசடிகள்

August 31 , 2023 500 days 327 0
  • உங்கள் முதலீட்டுக்கு அதிக வட்டி, குறைந்த வட்டியில் உடனடிக் கடன், குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டுப் படிப்பு - இப்படிப்பட்ட விளம்பரங்களைக் கண்டு ஒவ்வொரு நாளும் பலர் ஏமாறுகின்றார்கள்.
  • இவ்வளவு ஏன்? எங்கோ ஓர் ஆப்பிரிக்க தேசத்தில் தமக்குத் தங்கச் சுரங்கம் இருப்பதால் தம்மால் அதிக வட்டி தர இயலும் என்று கூறிய ஒருவரின் வார்த்தைகளை நம்பி, பலர் அவரிடம் லட்சக்கணக்கில் முதலீடு செய்த அவலமும் சமீபத்தில் நடந்தேறியுள்ளது.
  • நமது முதலீடுகளுக்கு வங்கிகளும் அஞ்சலகமும் தருகின்ற வட்டியைவிட அதிக வட்டி தருவதாக எவர் கூறினாலும் அது ஏமாற்று வேலை என்பது காலங்காலமாக நிரூபிக்கப்பட்டாலும், எங்கோ கண்காணாத இடத்தில் இருக்கும் தங்கச் சுரங்கத்தை நம்பி நம் மக்கள் முதலீடு செய்ததற்குக் காரணம் பேராசைதான்.
  • ஆசை காட்டி மோசம் செய்வது என்பது வட்டி விளம்பரங்களில் மட்டுமல்லாது வாழ்க்கைத் துணை தேடுவதற்கான விளம்பரங்களிலும் புகுந்து விட்டது என்பதே நிகழ்கால எதார்த்தமாக உள்ளது.
  • தற்காலத்தில் பலரும் தங்களுடைய வாழ்க்கைத் துணையை நவீன திருமணத் தகவல் மையங்களாக இயங்கி வரும் பல்வேறு இணையதளங்களில் தேடுவது வழக்கமாகி வருகிறது. முகம் தெரியாத யாரோ ஒருவர் அத்தகைய இணையதளங்களில் பதிவு செய்திருக்கும் உறுதி செய்யப்படாத தகவல்களை நம்பி அவருடைய பின்புலத்தை ஆராயாமல் அவரைத் தம்முடைய வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம்.
  • அதே சமயம், சரியான தகவல்களைத் திருமணத் தேடல் இணையதளங்களில் பதிவு செய்தவர்களில் சிலர் தங்களைத் தொடர்பு கொள்ளும் ஏமாற்றுப் பேர்வழிகளால் பலவிதங்களில் அலைக்கழிக்கப்படுவதும் உண்டு.
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்று இது போன்ற மோசடிகள் அன்றாடம் நடப்பதை உறுதிப்படுத்துகின்றது. வெளிநாடு ஒன்றில் மருத்துவராகப் பணிபுரியும் தமக்கு ஏற்ற மணமகள் தேவை என்று திருமணத் தகவல் இணைய தளம் ஒன்றில் விளம்பரம் செய்து, பெண்கள் பலரிடமும் மோசடி செய்த நபர் ஒருவர் முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளார்.
  • அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, இணையதளங்கள் மூலம் முடிவு செய்யப்படுகின்ற திருமணங்களில் நடைபெறுகின்ற தில்லுமுல்லுகளைப் பற்றி எடுத்துக் கூறியதுடன், இத்தகைய இணையதளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப் பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
  • இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரியிருந்த நபரிடம் படித்த பெண்கள் பலரும் ஏமாந்திருக்கின்றனர். அவர்களில் ஒவ்வொருவரையும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த நபர் பணம் வசூலித்துள்ளார்.
  • குறிப்பாக, பெண் மருத்துவர் ஒருவர் அந்த நபர் தன்னைத் திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் அவரிடம் எண்பது பவுன் நகைளுடன், பெருந்தொகையையும் கொடுத்து ஏமாந்திருக்கிறார். அந்த நபர் தன்னை ஏமாற்றியதை மிகவும் தாமதமாக உணர்ந்துகொண்ட அப்பெண்மணி கொடுத்த புகாரின் பேரில் இத்தகைய விவரங்களெல்லாம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
  • மேலும் பதினேழு பெண்கள் அவரால் ஏமாற்றப்பட்டுள்ளனராம். அவரிடம் ஏமாந்த பெண்கள் அனைவருமே திருமணத்தேடல் இணையதளத்தில் அந்நபர் அளித்திருந்த பொய்யான தகவல்களை உண்மை என்று நம்பியுள்ளனர்.
  • இவை போன்ற திருமண விளம்பரங்களால் பெண்கள் மட்டுமே ஏமாற்றப்படுவதில்லை.
  • தங்களுடைய உண்மையான வருமானம், சொத்து ஆகியவற்றைப் பற்றிய முழு விவரங்களையும் இத்தகைய இணையதளங்களில் பதிவிட்டு வரன் தேடும் வசதி படைத்த ஆண்களும் இது போன்ற மோசடிகளுக்கு உள்ளாகின்றார்கள்.
  • குறிப்பாக, மனைவியின் இறப்பு அல்லது விவாகரத்து காரணமாகத் தங்களின் முதுமைக் காலத்தில் மறுமணத்திற்கு வரன் தேடும் ஆண்களின் விவரங்களை அறிந்து கொள்ளும் சில மோசடியாளர்கள் தங்களுக்குத் தெரிந்த இளம் பெண்ணை திருமணம் செய்வதாகச் சொல்லி அம்முதியவர்களிடம் பணம் பறிப்பதுண்டு.
  • இவை போன்ற மோசடிகள் பலவற்றுக்கும் இணையதளங்களில் தங்களின் இணையைத் தேடும் போக்கு அதிகமாகியுள்ளதே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. சேவைக் கட்டணமாகப் பெருந்தொகையை வசூலிக்கும் இத்தகைய இணையதளங்கள் அவற்றில் பதியப்படும் விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்குப் பொறுப்பேற்பதில்லை.
  • நம்பிக்கைக்குரிய உற்றார், உறவினர், உள்ளூர்த் திருமணத் தரகர் ஆகியவர்களைத் தவிர்த்து விட்டு, இணையதளங்களில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே தங்களுடைய இணையரைத் தேடும் போக்கு அதிகரித்து விட்டது. இதுவே திருமண இணையதள மோசடிகளுக்கும் வித்திடுகின்றது.
  • நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பெல்லாம் குழந்தைத் திருமணம் ஏற்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. பதின்வயதுக் குழந்தைப்பேறு உள்ளிட்ட தீமைகளை மக்கள் உணரத் தொடங்கியதாலும், குழந்தைத் திருமணம் சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டதாலும் அத்தகைய திருமணங்கள் தவிர்க்கப்பட்டன.
  • கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி வரை பொதுவாக பெண்களுக்கு இருபத்தைந்து வயதுக்குள்ளும் ஆண்களுக்கு முப்பது வயதுக்கு முன்பும் திருமணம் நடைபெற்று வந்தது.
  • ஆனால், தாராளமயம், நவீனமயம் ஆகியவற்றில் சிக்குண்ட நமது தேசத்தின் குடிமக்களின் வாழ்வியலும் எண்ணற்ற மாற்றங்களை எதிர்கொண்டது.
  • தற்காலத்தில் முப்பது வயதுக்குள் திருமணம், குழந்தை பிறப்பு ஆகிய பேறுகளைப் பெறுகின்ற இளைஞர்களும், யுவதிகளும் அருகிவிட்டனர். சுமார் நாற்பது வயதை இவர்கள் நெருங்கும்போதுதான் திருமணப் பேச்சே தொடங்குகிறது.
  • இணையதளங்கள் தரும் தகவல்களின் உண்மைத்தன்மை எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே வேகத்தில் தங்களுக்குப் பணமோ, பொருளோ தரவேண்டும் என்று கேட்கும் எந்த ஒரு நபரும் நம்பத்தகுந்தவரல்லர் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தாலே போதும்.
  • திருமணம் தள்ளிப்போனால் கூடப் பரவாயில்லை. ஒருவர், தாம் கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தை மோசடிப் பேர்வழிகளிடம் இழக்காமல் இருப்பது மிகவும் முக்கியமல்லவா?

நன்றி: தினமணி (31– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories