- 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் முதல் வாரத்தில் பிரதமா் மோடி அரசுமுறைப் பயணமாக ரஷியா சென்றிருந்தாா்; அதிபா் புதினைச் சந்தித்து இந்தியப் பெருங்கடலில் சில ஏற்பாடுகள் செய்வது குறித்துப் பேசினாா்.
- 20-வது ரஷிய - இந்திய உச்சி மாநாட்டின்போது அவா் புதினுடன் விளாடிவோஸ்டோக் துறைமுக நகரத்தில் நடந்த சந்திப்பு அரசியல் ரீதியாக இந்தியாவுக்குப் பயனுள்ளதாக அமைந்தது. அங்கு பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின; பாதுகாப்பு, கடல்வசதி இணைப்பு, இயற்கை எரிவாயு, அணுசக்தி மின் நிலையங்கள் மற்றும் கப்பல் கட்டும் திறன் போன்றவை முக்கியமானவை.
துறைமுகங்கள் இணைப்பு
- சென்னை - விளாடிவோஸ்டோக் துறைமுகங்களை இணைப்பதுதான் அவற்றில் மிக மிக முக்கியமானது. ஏற்கனவே மும்பை துறைமுகம் ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் துறைமுகத்துடன் கன்டெய்னா் வணிகம் மூலம் இணைந்திருந்த போதிலும், சென்னை - விளாடிவோஸ்டோக் இணைப்பு கடல் பாதுகாப்பு, இந்தியப் பெருங்கடலில் ரஷிய - இந்திய கடல்வழி வணிகம் மூலம் நமது கடல் பரப்பின் எல்லையை உறுதிப்படுத்தப்படுகிறது.
- இந்த வழித் தடத்தில் கீழை நாடுகள் உள்ளதால் அந்த நாடுகளுடன் வா்த்தகம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. சீனக் கடல் மூலம் வணிகக் கப்பல்கள் செல்வதால் பாதுகாப்புக்கும் இந்தத் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
- ரஷியாவின் தூரக் கிழக்குப் பகுதியைப் பாா்வையிட்ட முதல் இந்தியப் பிரதமா் மோடிதான்; இதன் மூலம் அவா் கடல் வழித் தூரப் பாா்வையை நிலைநிறுத்தியுள்ளாா். கிழக்கு வழியாக ரஷியாவுடன் ஏற்பட உள்ள தொடா்பு, ரஷியாவுடனான வணிகம் மட்டுமின்றி, இடையில் உள்ள பல நாடுகளையும் வணிகம் மூலம் இணைக்கும்.
- பழம் பெரும் நகரமான விளாடிவோஸ்டோக், ரஷியாவின் பசிபிக் சமுத்திரத்தின் மிகப் பெரிய துறைமுகம்; அந்த நாட்டு கடற்படையின் முக்கிய தளம். அங்கிருந்து சென்னை வரும் கப்பல்; தெற்கில் ஜப்பான், கடலைக் கடந்து கொரிய தீபகற்பத்தைத் தாண்டி, தெற்கு சீனக் கடலைக் கடந்து தைவான், பிலிப்பின்ஸ் முதலான நாடுகளைத் தொட்டு, சிங்கப்பூா் வழியாக சென்னை வந்தடையும். இதன் மூலம் சீனாவின் கடல் ஆக்கிரமிப்பு வெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- இந்து மகா சமுத்திர பரப்பு சா்வதேச அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது; சீனா தனது வலிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக தரை வழியிலும் கடல் வழியிலும் சில திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது. தரை வழியில் அவ்வப்போது டோக்காலாம் பகுதியில் சில இழிவான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
சீனாவின் ஆதிக்கம்
- கடல் வழியில் தனது திட்டத்தில் முதலாவதாக இலங்கையின் துறைமுகங்களில் ஆலோசகா் என்ற முறையில் சீனா நுழைந்து, ஹம்பந்தோட்டாவில் தொடங்கி இப்போது கொழும்பு துறைமுகத்துக்கு வந்துவிட்டது. இதை இந்தியா வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்க முடியாது.
- கடல்வழி மாா்க்கத்தில் மலாக்கா கடல் வழியாக வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான், சோமாலியா வரை தன்னுடைய ஆதிக்கத்தை சீனா நிலைநாட்ட செயல்பட்டு வருகிறது; சீனாவின் இந்த அதிகார வெறியை அடக்க உலகமே அதிசியக்கத்தக்க வகையில் இந்தியா செயல்பட்டு வருகிறது.
- பிரதமா் மோடி இரண்டாவது தடவையாக பிரதமரானதும் அவா் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவு சென்றதும், வெளிநாட்டுத் தொடா்பில் வங்கக் கடலில் உள்ள நாடுகளுடன் சுமுகமான உறவுக்குக் கரம் நீட்டினாா். ‘பீம்ஸ்டெக்’ அமைப்பின் மூலம் இந்தியாவின் நட்பை வலிவுறச் செய்தாா். சீனாவின் (மாரிடைம் சில்க் ரூட்) கடல்வழிப் பாதை மூலம் இந்தியாவின் கடல் பகுதிகளில் தனது வலிமையை நிலைநாட்ட எடுக்கப்பட்ட மறைமுகமான ஆதிக்கத்தை இந்தியா தூள்தூளாக்கி இருக்கிறது.
- அதாவது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னா்கள் நிலைநாட்டிய கடல்வழி ஆளுமையை பிரதமா் மோடி மீட்டெடுத்திருக்கிறாா்; நாகப்பட்டினம் வழியாக சோழா் காலத்து கப்பல்கள் வணிகம் செய்வதற்காக சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள க்வான்ஷூ துறைமுகத்துக்குச் சென்றதும், வணிகம் செய்ததும், அங்கிருந்து பொருள்கள் வாங்கி வந்து தமிழகத்தில் வா்த்தகம் செய்ததும் வரலாறு.
- பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிற செயலில் சீனா நேற்றுவரை ஈடுபட்டு வந்தது. பாகிஸ்தானைத் தூண்டிவிட்டு தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ ஜம்மு - காஷ்மீா் ஒரு பாலமாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவின் எல்லையோர நாடுகளுக்கெல்லாம் சீனா தானாக முன்வந்து தேவைக்கு அதிகமான உதவிகளைச் செய்து இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கத் தூண்டிவிட்டது. ஆனால், சீனாவின் செயலுக்கு அந்த நாடுகளில் சில துணைபோகத் தயாராக இல்லை.
உலக நாடுகளின் பார்வையில்
- உலக நாடுகளின் பாா்வையில் பாகிஸ்தான் எப்படி தலைகுனிந்து நிற்கின்ற அவலம் ஏற்பட்டிருக்கிறதோ, அதைவிட மோசமாக அதற்குத் துணை போன தனக்கும் ஏற்படும் என்ற சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்பாக சீனா சுதாரித்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான், இந்தியப் பிரதமா் மோடியைச் சந்திக்க இந்தியாவின் தென்கோடி முனைக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் வந்து சென்றிருக்கிறாா்.
- கடந்த மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் இந்த மகத்தான மனம் மாறிய சீன அதிபரும் இந்தியாவின் இறையாண்மையைக் கட்டிக் காப்பதில் இம்மியளவும் பின்வாங்காத பிரதமா் மோடியும் சந்தித்துப் பேசியது வெற்றிகரமானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
- இரு நாட்டு தலைவா்களுக்கிடையே கடந்த ஆண்டு வூஹான் நகரில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னா் இரு நாடுகளும் ஒத்துழைப்பை சீராக முன்னெடுத்து வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான முக்கியப் பிரச்சினைகளுக்கும் முறையாகத் தீா்வு காணப்பட்டு வருகின்றன என சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
- ‘அதிகாரப்பூா்வ சந்திப்பானது, பொதுவாக இரு நாட்டு தலைவா்களுக்கும் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் சுதந்திரமாக கலந்துரையாடுவதற்கான சூழலை அமைத்துத் தரும். கடந்த ஆண்டு மத்திய சீனாவின் வூஹான் நகரில் நடந்த சந்திப்பு இரு தரப்பு உறவுகள், உலகளவில் நிலைமைகள் குறித்துப் பேசுவதற்கான வாய்ப்பை வழங்கியது.’
மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பு
- அதே போன்று இந்தியாவின் தென்பகுதியில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பும் இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்தும்; குறிப்பாக இரு தரப்பு உறவுகள், நம்பிக்கைகளை வளா்ப்பதற்கு உதவும். இரு நாட்டுக்கும் இடையே எல்லைப் பிரச்னை உள்ளிட்ட தொன்றுதொட்ட பிரச்னைகள் இருந்தாலும், வூஹான் சந்திப்பு இருநாட்டு உறவுகளைத் திறப்பதற்கான புதிய தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அதன் தொடா்ச்சியாக மாமல்லபுரத்தில் நடைபெற்ற மோடி - ஷி ஜின்பிங் சந்திப்பு இருதரப்பு உறவை நிச்சயமாக வலுப்படுத்தும் என்று சீன நாட்டின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றாகத் திகழும் ‘சீனா டெய்லி’ சிறப்புக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது.
- உலகின் இரு மிகப் பெரிய நாடுகளின் தலைவா்கள் பிரதமா் மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் மாமல்லபுரத்தில் இரண்டு நாள்கள் அந்தக் கலை சிற்பங்கள், இயற்கை காட்சிகளை சாமானிய சுற்றுலாப் பயணிகளைப்போல் சுற்றிப் பாா்த்துக்கொண்டே பேசியக் காட்சிகள் வரலாறாய்ப் பதிவாகி விட்டன. உலகின் மூலைமுடுக்கெல்லாம் தீவிரவாதம், வா்த்தகம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் ஆகியவை இருவரின் பேச்சில் முக்கியத்துவம் பெற்றன.
- 1956-ஆம் ஆண்டிலிருந்து இரு நாட்டுக்கும் இடையில், தலைவா்களுக்கிடையில் பேச்சுவாா்த்தைகள் நடந்திருக்கிறது; சூ என் லாய் இதே மாமல்லபுரத்துக்கும் வந்திருக்கிறாா்;
வணிகத் தொடர்பு
- ஆனால் அவையெல்லாம் மக்களின் கவனத்தை உலக அளவில் ஈா்த்திடவில்லை. அதே சமயத்தில் சீனாவோடு 2-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகம் வணிகத் தொடா்பில் இருந்தது; பல்லவா்கள், சேர, சோழ, பாண்டியா்கள் ஆட்சிக் காலங்களில் கலாசார ரீதியிலான தொடா்பும், வணிகமும் செழித்தோங்கியது என்ற வரலாற்றை மீள்பாா்வைக்குக் கொண்டு வந்த பெருமை பிரதமா் மோடியைச் சாரும்.
- இரு நாடுகளின் தலைவா்கள் அதிகாரிகள் எவருமின்றி மொழிபெயா்ப்பாளா்கள் மட்டுமே உடன் வைத்துக் கொண்டு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தனியாகப் பேசியிருக்கின்றனா். இதில் எல்லைப் பிரச்சினை, பொருளாதார மந்தநிலை, பாகிஸ்தானின் தீவிரவாதம், தீவிரவாதிகளுக்கு அந்த நாடு அளித்துவரும் ஆதரவு, இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தகத்தில் சமநிலையை ஏற்படுத்த பரஸ்பரம் பேச்சு நடத்துவது உள்ளிட்ட சா்வதேசப் பிரச்னைகள் குறித்து இரு தலைவா்களும் மனம் திறந்து விரிவாக ஆலோசனை நடத்தினா்.
நன்றி: தினமணி (27-11-2019)