இதயக் காவலர் கே.எம்.செரியன்
- “சிறுவனாக இருந்தபோதே துடிக்கிற இதயத்தின் மீது எனக்கு இனம்புரியாத ஈர்ப்பு இருந்தது. அதுவே, பின்னாளில் இறந்த பல்லிகள், தவளைகளின் உடலைப் பகுத்துப் பார்க்கும் ஆர்வத்தை என்னுள் அதிகரித்தது என நினைக்கிறேன். உடற்கூறியலைத் தேர்வு செய்ததற்கான காரணமும் இதுதான்.” - இந்தியாவின் முன்னணி இதய அறுவைசிகிச்சை நிபுணர், மருத்துவர் கே.எம்.செரியன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த செய்தி இது.
- இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகப் புகழ்மிக்க மருத்துவரான கே.எம்.செரியன் பெங்களூருவில் கடந்த ஜனவரி 25 அன்று காலமானார். அவருக்கு வயது 82. மருத்துவர் செரியனின் இறப்பு மருத்துவ உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பைபாஸ் அறுவை சிகிச்சை:
- கேரளத்தில் 1942 மார்ச் 8இல் பிறந்த செரியன் 50 வருடங்களுக்கும் மேலாக இதயம் தொடர்பான அறுவை சிகிச்சையில் ஈடுபட்டுவந்தவர். தன் வாழ்நாளில் உலகின் தலைசிறந்த மருத்துவர்களின் கீழ் பணிபுரிந்த செரியன், மணிப்பாலில் உள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். கல்லூரிக் காலம் மகிழ்ச்சியாகவே சென்றதாகவும், வேலை என்று வந்து விட்டால் முழு உழைப்பையும் அளிக்கும் மாணவனாகவே தான் அறியப்பட்டதாகவும் செரியன் பேசி இருக்கிறார்.
- கல்லூரிப் படிப்பு முடித்தவுடன், வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை விரிவுரை யாளராகச் செரியன் தனது பயணத் தைத் தொடங்கினார். 1973இல், ஆஸ்திரேலியாவில் இருந்தபோது கார்டியோதொராசிக் அறுவை சிகிச்சையில் பட்டம்பெற்ற செரியன் ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந் திலும் பிரபல மருத்துவர்களின்கீழ் பணியாற்றிவர்.
- அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குச் சென்ற செரியன், பர்மிங்காமில் உள்ள குழந்தைகளுக்கான இதய அறுவைசிகிச்சை துறையில் டாக்டர் ஜான் டபிள்யூ.கிர்க்ளினின் கீழும் ஓரிகான் பல்கலைக்கழகத்தில் டாக்டர். ஆல்பர்ட் ஸ்டாரின் கீழும் பணியாற்றினார். சீனாவின் யாங்சோ பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராகச் செரியன் இருந்தார்.
- வெளிநாடுகளில் மருத்துவர் செரியனுக்குச் சலுகைகள், அதிக ஊதியம் வழங்கப்பட்டாலும், இந்திய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என விருப்பம் கொண்டு இந்தியா திரும்பினார். 1975இல் இந்தியாவின் முதல் வெற்றிகரமான கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சையைச் சென்னையிலுள்ள பெரம்பூர் தெற்கு ரயில்வே தலைமையக மருத்துவமனையில் நடத்திக் காட்டி மருத்துவத் துறையின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்தார். நவீன கருவிகள், ஜெனரேட்டர் என எந்த வசதியும் இல்லாமல் பைபாஸ் அறுவைசிகிச்சையை செரியன் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
சிக்கலான அறுவைசிகிச்சைகள்:
- இந்தியாவின் முதல் இதய - நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை முன்னின்று நடத்தியவர் என்கிற பெருமைக்குரியவர் மருத்துவர் செரியன். முதல் லேசர் இதய அறுவைசிகிச்சையும் செரியனால் நடத்தப்பட்டது. குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சையிலும் முன்னோடி யாக இருந்தார். குறிப்பாக எடை குறைவான குழந்தைகளுக்கு இதய அறுவைசிகிச்சை செய்வது சவாலான ஒன்று.
- இருப்பினும் செரியன் அதை வெற்றிகரமாக நடத்தி, பலகுழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி னார். செரியனின் மகத்தான பணிக்கு நன்றியுணர்வாக அவரது பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு வைத்து மகிழ்ந்த தாய்மார்களும் உண்டு. சிக்கலான இதய நோயால் பாதிக்கப்பட்ட இராக்கைச் சேர்ந்த 20 குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்து, இராக்கில் சிறை வைக்கப் பட்டிருந்த இந்தியர்களின் விடுதலைக்குச் செரியன் உதவினார். இவ்வாறாக மருத்துவராக மட்டு மல்லாமல் நல்லெண்ணத் தூதராகவும் செரியன் செயல்பட்டிருக்கிறார்.
முதன் முதலாக…
- மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் கிரேக்கத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிபோகிரட்டஸ் ஸின் பிறப்பிடமான தற்போதைய கிரீஸின் கோஸ் தீவில், உலக இதய தொராசிக் அறுவைசிகிச்சை நிபுணர்கள் சங்கம் (World Society of Cardio Thoracic Surgeons) வைத்த நினைவுக்கல்லில் இடம்பெற்ற முதல் இந்தியர் செரியன். அமெரிக்காவின் இதயம் - தொராசிக் அறுவைசிகிச்சை சங்கத்தின் ஒரே இந்திய உறுப்பின ராகவும் 2010 - 2011 காலக்கட்டத்தில் உலக சங்கத்தின் (world society) தலைவராகவும் செரியன் இருந்தார்.
தொலைநோக்குப் பார்வை:
- இதய அறிவியல் துறைத் தலைவரும், எம்ஜிஎம் ஹெல்த்கேரின் இதயம் - நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிறுவன இயக்குநருமான கே.ஆர்.பாலகிருஷ்ணன், “செரியன் பிரபலமடைவதற்கு முன்னரே அவருடன் பணிபுரிந்த முதல் அறுவை சிகிச்சை நிபுணர் நான்தான். பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் பணி புரியும்போது மருத்துவமனை வேலை நேரத்தைத் தாண்டியும் பரிசோதனைகளைச் செய்துகொண்டிருப்போம்.
- தன்னுடன் பணிபுரிந்த இளைய மருத்துவர்களிடம் செரியன் எளிமை யாக நடந்துகொண்டார். இந்தியாவில் இதய அறுவைசிகிச்சைத் துறையில் மருத்துவர் செரியனின் பங்களிப்புகள் என்றென்றும் பேசப்படும்” எனத் தெரிவித்தார். மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் இதயவியல் பிரிவு இயக்குநர் அஜித் முல்லசாரி மருத்துவர் செரியன் பற்றிப் பேசுகையில், “மருத்துவத் துறையின் எதிர்காலம் பற்றிய தொலைநோக்குப் பார்வை செரியனிடம் இருந்தது. ஆராய்ச்சிகளில் அதிகக் கவனம் செலுத்தக்கூடியவராக செரியன் இருந்தார். பிற மருத்து வர்களையும் ஆராய்ச்சிகளில் ஈடுபட உற்சாகப் படுத்துவார்” என்றார்.
விருதுகள்:
- மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தததால் விருதுகளும், உயர் பதவிகளும் மருத்துவர் செரியனைத் தேடி வந்தன. ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனை, ‘செரியன் இருதய அறக் கட்டளை’ ஆகியவற்றை நிறுவிய மருத்துவர் செரியனுக்கு மத்திய அரசு 1991இல் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.
- 1990 முதல் 1993 வரை இந்தியக் குடியரசுத் தலைவரின் கௌரவ அறுவைசிகிச்சை நிபுணராக இருந்தார். 2005இல் ஹார்வர்ட்டின் சிறப்பு மருத்துவ விருதைப் பெற்றார். செரியனின் இதய அறக்கட்டளை மூலம், இந்தியர்களுக்கு மட்டுமல்லாது வெளிநாட்டினர் பலருக்கும் இதயம் தொடர்பான அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
சுயசரிதை நூல்:
- மருத்துவர் செரியனின் சுயசரிதை நூலான ‘Just an Instrument’, அவர் இறப்பதற்குச் சில நாள்களுக்கு முன்னர்தான் கேரள இலக்கிய விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்நூலில், குழந்தைப் பருவத்தை நினைவுகூரும் செரியன், பள்ளிக்கு வெறுங்காலுடன் நடந்து சென்றது, நண்பர்களுடன் விளையாடியது, ஓணம் பண்டிகையில் புலி நடனத்தில் பங்கேற்க உடலில் வண்ணங்கள் தீட்டிக்கொண்டது என பசுமையான நினைவுகளை வாசகர்கள் கண் முன் நிறுத்தியிருக்கிறார். சிறுவயதில் கணிதப் பாடத்தில் பூஜ்ய மதிப்பெண் பெற்றதையும் பள்ளி நிர்வாகம் கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கியதையும் நகைச்சுவையாகத் தனது சுயசரிதையில் செரியன் பதிவுசெய்திருக்கிறார்.
- மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவதற்கு உந்துசக்தியாகச் செரியன் இருந்தார் என இளம் மருத்துவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். ‘இளைஞர்களே… உங்கள் இதயம் எதை விரும்புகிறதோ அதைப் பின் தொடருங்கள்’ எனக் கூறிய மருத்துவர் கே.எம்.செரியன் தன் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியதற்காக எப்போதும் நினைவுகூரப்படுவார்.
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 02 – 2025)