TNPSC Thervupettagam

இதயத்தைக் காக்கும் ரொசெட்டோ விளைவு

November 18 , 2023 419 days 317 0
  • முன்பெல்லாம் இதய அடைப்பால் மரணம் அடைப வர்கள் அறுபது, எழுபது வயதுள்ளவர்களாக இருப்பார்கள். சில வருடங்களுக்குப் பின்னர், நாற்பது வயது நபர்கள் இதய நோயால் இறப்பதைப் பார்த்தோம். தற்போது வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் இறப்பது தலைப்புச் செய்தியாகிறது. சமீப நாள்களாகக் கல்லூரி படிக்கும் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் இறப்பதை அடிக்கடி பார்க்க நேர்கிறது. இதய நோயால் ஏற்படும் இழப்புகள் பெரும் கலக்கத்தைத் தருகின்றன. நமது நாட்டில் மட்டும் இளவயது, குறிப்பாகப் பதின்பருவ வயது இதய நோய் மரணங்கள் முன்பிருந்ததைவிடச் சமீப காலத்தில் 15-20% வரை அதிகரித்துள்ளதாக இதய நோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிக பாதிப்பு

  • உலக அளவில் ஆசியாவைச் சேர்ந்த வர்கள், அதிலும் குறிப்பாக இந்தியர்கள் மேற்கத்தியர்களைக் காட்டிலும் இதய நோயால் இரண்டு மடங்கு பாதிக்கப்படுகின்றனர். இவை அனைத்துக்கும் சமீபத்திய கோவிட் நோய், கோவிட் தடுப்பூசியைக் கைகாட்டும் போக்கும் அதிகரித்திருக்கிறது. என்றாலும், உண்மையில் இந்த இளவயது மரணங்களுக்குக் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன் - குறிப்பாக இடுப்பைச் சுற்றியுள்ள அதிகக் கொழுப்பு, மன அழுத்தம், உடல் உழைப்பு சிறிதும் இல்லாத பணிச்சூழல், இவற்றுடன் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியன மாரடைப்பு, பக்கவாதம் மட்டுமன்றி உடலின் எல்லாவித வாழ்க்கை முறை நோய்களுக்கும் தனித்தனியாகவோ கூட்டாகவோ காரணங்களாக இருக்கின்றன.

புதுமைக் காரணம்

  • இருப்பினும் இத்தகைய மரணங் களுக்குப் புதிய காரணத்தை வரலாற்றுச் சான்றுடன் மருத்துவர்கள் முன்வைக்கிறார்கள் இத்தாலி நாட்டின் ரோம் நகருக்குப் பல நூறு மைல்கள் தெற்கே ரொசெட்டோ வல்ஃபோர்டோரே என்றொரு சிறிய கிராமம். சுற்றியிருக்கும் மலைச் சுரங்கங்களிலிருந்து பளிங்குக் கற்களைப் பிரித்தெடுப்பதும் தேவைக்குக் கொஞ்சம் விவசாயம் செய்வதும்தான் இவர்கள் தொழில். ரொசெட்டோவிலிருந்து தங்கள் ஏழ்மையை வெல்லத் துணிந்து, 1882 ஆம் ஆண்டு 11 பேர் அமெரிக்காவின் கிழக்கு பென்சில்வேனியாவைச் சென்றடைந்தார்கள். ஏற்கெனவே பரிச்சயம் உள்ள தொழில் என்பதால் பென்சில்வேனியாவின் மலைப்பாறைகளில் இருந்து சிலேட் தனிமத்தை வெட்டும் பணியில் அவர்கள் சேர்ந்தார்கள். மலையில் பாறை வெட்டும் பணி அதிகமாகவும் அதற்கான ஊதியம் தங்கள் நாட்டைவிட அதிகமாகவும் இருப்பதைப் பார்த்த அவர்கள், அடுத்துத் தங்கள் உறவினர்களையும் அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அவர்களும் செல்ல இத்தாலியின் ரொசெட்டோ போலவே இங்கேயும் ஓர் அமெரிக்க ரொசெட்டோ கிராமம் உருவானது.

கூட்டாக வாழ்வோம்

  • கிராமத்தையே அங்கே உருவாக்கிக்கொண்டாலும் அமெரிக்காவின் புலம்பெயர் வாழ்க்கை, அவர்கள் எதிர்பார்த்தது போல அவ்வளவு எளிதாக அம்மக்களுக்கு அமையவில்லை. ஊதியம் அதிகம்தான் என்றாலும் நாள் முழுவதும் மிகக் கடினமான சுரங்கப்பணி காரணமாக, பசிக்கேற்ற உணவும் நல்ல உறக்கமும் கிடைப்பதே அவர்களுக்குப் பெரும்பாடாக இருந்தது. இதில் குடும்பத்தையும் குழந்தைகளையும் பராமரிப்பது என்பது இன்னும் பெரிய சவாலாக மாற, அதை எதிர்கொள்ள வேறொரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தனித்தனியாக வாழ்வதைவிட எல்லாரும் சேர்ந்து கூட்டாக மொத்த கிராமத்தையும் ஒற்றைக் குடும்பமாக மாற்றி சமுதாயக் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்கள். அதாவது, ஆண்கள் பகல் முழுவதும் சுரங்கப்பணியில் ஈடுபட்ட அதேவேளையில் பெண்கள் சமையல், விவசாயம், காய்கனி உற்பத்தி, கால்நடைகள் மேய்த்தல் என வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் தாங்களே கவனித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். இரவு உணவுடன் எல்லாரும் சேர்ந்து கதை சொல்லுதல், ஆடல் பாடல்களில் ஈடுபட்டனர். இரவுகள் அழகாகின, உறவுகள் வலுப்பெற்றன.

ரொசெட்டோ விளைவு

  • ரொசெட்டோ கிராமத்தில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை என்றாலும், 1950ஆம் ஆண்டு நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கம் ஒன்றில் அக்கிராமத்தைப் பற்றிய செய்தியைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார் அமெரிக்க மருத்துவர் ஸ்வார்ட் உல்ஃப். அமெரிக்காவில் எல்லா ஊர்களிலும் மாரடைப்பும் மரணங்களும் பொதுவாக இருந்தாலும், ரொசெட்டோ கிராமத்தில் மட்டும் 65 வயதுக்குக் கீழே உள்ளவர்கள் இதய நோய் அறிகுறிகள்கூட இல்லாமல் வாழ்கிறார்கள் என்பதே ஸ்வார்ட் உல்ஃப்புக்குப் பகிரப்பட்ட செய்தி. இந்தத் தகவலால் ஈர்க்கப்பட்ட டாக்டர் உல்ஃப், ரொசெட்டோ, அதன் சுற்றுப்புற கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
  • மற்ற எந்த இடத்தைக் காட்டிலும் ரொசெட்டோவில் மாரடைப்பு காரணமான மரணங்கள் மிகக்குறைவாகவும், வயோதிகத்தில் மட்டுமே மிக அரிதாக மாரடைப்பு மரணங்கள் நிகழ்வதும் அவரது ஆய்வில் நிரூபணமானது. எனினும் அவருடைய குழப்பம் தீரவில்லை. ஏனென்றால், அங்கிருந்த எல்லாருக்கும் மாரடைப்புக்குக் காரணமான கொழுப்பு உணவு, மது, புகை என அத்தனை பழக்கங்களும் இருந்தன. உடற்பயிற்சி பழக்கமில்லாத அவர்களிடம் உடற்பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற எல்லா நோய்களும் அதிகமாக இருந்தன என்றாலும், ‘ஒரே கூரையின் கீழ் மூன்று தலைமுறையினர் - ஒரே ஊரின் கீழ் அனைத்து ரொசெட்டோவினர்என்று வாழ்வதுதான், அவ்வளவு ஆரோக்கியத்துக்கும் காரணம் என்றார் டாக்டர் உல்ஃப். ஒருவரை இன்னொருவர் மதித்து வாழும் அவர்களுக்குள் பேதங்கள் இல்லை, பிரிவினைகள் இல்லை, ஒற்றுமை மட்டுமே ஓங்கி இருந்தது.
  • இன்னும் முக்கியமாக அங்கே குற்றங்கள், கொலை, கொள்ளைகள், தற்கொலைகள் என்பது இல்லவே இல்லை. தனி மனிதன், தன் முன்னேற்றம் என்பதையெல்லாம் தாண்டி, கூட்டுக் குடும்பமாக, ஒரே சமுதாயமாக அவர்கள் வாழ்வதுதான் அவர்களை மாரடைப்பில் இருந்து காக்கிறது என்பதைக் கண்டறிந்த அவர், அவர்களது கதைகளும் ஆடல் பாடல்களும் கேளிக்கைகள் அல்ல. உண்மையில் அவர்களது நோயெதிர்ப்புக் கேடயங்கள் எனச் சுட்டிக்காட்டினார்.

தீர்வு என்ன

  • டாக்டர் உல்ஃப் மேற்கொண்ட இந்த முக்கியமான ஆய்வைப் புத்தகமாக எழுதிய பிரபல அமெரிக்க எழுத்தாளர் மால்கம் கிளாட்வெல் தனது தி அவுட்லியர்ஸ்’ (The Outliers) எனும் புத்தகத்தில் நமது இயந்திர வாழ்க்கையைச் சற்றே நிறுத்திக்கொண்டு, கொஞ்சம் இந்த உறவெனும் ரோஜாக்களின் பள்ளத்தாக்கில் வாழ்ந்து பார்த்தால் என்ன?” என்று குறிப்பிடுகிறார். உண்மையில் சில தலைமுறைகளுக்கு முன்னால், நாமும் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருந்தோம். அப்போது நம்மிடையேயும் இதேபோல உடற்பருமனும், சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் இருந்துகொண்டுதான் இருந்தன. ஆனால், இப்போது இருப்பதுபோல இளவயது, பதின்பருவ மாரடைப்புகளும் மரணங்களும் அப்போது இல்லை. நோய்கள் எத்தனை இருந்தாலும் அத்தனையையும் எதிர்கொள்ள ஒரு கூட்டுக்குடும்ப அமைப்பு, அது தந்த மன வலிமை அப்போது நம்மிடம் இருந்தது. தனிக் குடும்பங்களால் தற்போது நம் இதயம் பலமிழந்து போய்விட்டது.
  • காலங்கள் மாறி, வாழ்க்கை முறையும் மாறி, பிற்காலத்தில் கூட்டுக் குடும்ப வாழக்கையில் இருந்து தனிக்குடும்ப வாழ்க்கைக்கு மாறிய ரொசெட்டோவினருக்கும் இப்போது மாரடைப்பு விகிதங்கள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மை. கதைகள், ஆடல் பாடல், பங்கிட்டு உண்ணுதல், பகிர்ந்தளித்தல் என எல்லாவற்றையும் மறந்துபோன ரொசெட்டோ இளைய தலைமுறை யினரும் மற்ற அமெரிக்கர்களைப் போலவே இப்போது இளவயது மாரடைப்புகளைச் சந்தித்து வருகிறார்கள் என்பது வருத்தமான செய்தி. கூடி வாழ்ந்தால் கோடி நன்மைஎன்பது சமுதாயத்துக்கு மட்டுமல்ல, தனி மனித ஆரோக்கி யத்திற்கும் தேவை என்கிறது ரொசெட்டோவின் அன்றைக்கும் இன்றைக்குமான கதை!

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories