TNPSC Thervupettagam

இதயம் காக்கும் தோழன்!

December 21 , 2024 28 days 52 0

இதயம் காக்கும் தோழன்!

  • இந்த வாரம், நல்ல கொலஸ்டிரால் (HDL) குறித்துப் பார்க்கலாம். இதை ‘அதிக அடர்த்திக் கொழுப்புப் புரதம்’ (High Density Lipoprotein – HDL) என்று அழைப்பதைவிட, ‘ஆரோக்கிய கொழுப்புப் புரதம்’ (Healthy Density Lipoprotein – HDL) என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

என்ன காரணம்?

  • நல்ல கொலஸ் டிராலில் புரதம் தான் அதிகம். கொலஸ்டிரால் பங்கு இதில் குறைவு. ரத்தக்குழாயை அடைக்கும் பொருள் கள் இதில் இல்லை என்பது இதன் தனித்தன்மை. பொதுவாக, ரத்தக்குழாய் செல்களில் உள்ள ஆக்ஸிஜனோடு கொலஸ்டிரால் இணையும்போதுதான் (Oxidation) செல்களில் உள்காயங்கள் (Intimal Injuries) ஏற்படும். இது மாரடைப்புக்குப் பாதை போடும். இம்மாதிரியான ‘எதிரணி வேலைகளை’ நல்ல கொலஸ்டிரால் செய்வதில்லை. இதனால், நல்ல கொலஸ்டிரால் இதயத்துக்குத் தோழனாகிவிடுகிறது.

துப்புரவுப் பணியாளர்:

  • நல்ல கொலஸ்டிராலுக்குத் ‘துப்புரவுப் பணியாளர்’ என்று ஒரு செல்லப் பெயரும் உண்டு. காரணம், திசுக்களில் கெட்ட கொலஸ் டிராலின் (LDL - Low Density Lipoprotein) அளவு கூடும்போது நல்ல கொலஸ்டிரால் அதைப் பொறுக்கி வந்து கல்லீரலுக்குக் கொடுத்து விடுகிறது. கல்லீரல் அதைப் பித்தநீர் மூலம் உடலிலிருந்து வெளி யேற்றிவிடுகிறது. இதனால் கெட்ட கொலஸ்டிரால் இதயத்துக்கு ஏற்படுத்தும் ஆபத்து குறைந்து விடுகிறது.

உள்காயத்துக்கு மருந்து:

  • மாரடைப்பு ஏற்படுவதற்கு ரத்தக் குழாய்களில் உள்காயங்கள் உண்டாவதுதான் அடிப்படைக் காரணம் என்று ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். ரத்தத்தில் சுற்றி வரும் நல்ல கொலஸ்டிரால் இந்த உள்காயங்களைப் பார்க்கிறது; அவற்றுக்கு மருந்து பூச நினைக்கிறது.
  • உடலில் ஏற்படும் வெளிக்காயத்தை நாம் சுத்தப்படுத்தி, மருந்துக்கட்டுப் போட்டுக் குணப்படுத்துகிறோ மல்லவா? அதுமாதிரிதான், நல்ல கொலஸ்டிரால் இந்த உள்காயங் களைச் சுத்தப்படுத்தி ஒரு மருந்துப் பூச்சாகச் செயல்பட்டு, குணப்படுத்திவிடுகிறது. இதனால் ரத்தக் குழாயில் ரத்த உறைகட்டி (Plaque) உருவாவது தடுக்கப்படுகிறது. இதன் பலனால், மாரடைப்புக்கும் பக்கவாதத்துக்கும் வழியில்லாமல் போகிறது.
  • பொதுவாக, நல்ல கொலஸ் டிரால் ஆண்களுக்கு 40 மி.கிராமுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு 50 மி.கிராமுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் ரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைக்கும் ஆபத்தை நல்ல கொலஸ்டிரால் தடுத்துவிடும். அப்போது, மாரடைப்பு ஏற்படுவதற் கான சாத்தியம் 50% குறைந்துவிடும்.
  • அதேவேளை, நல்ல கொலஸ்டிரால் 40 மி.கிராமுக்கும் குறைவாக இருந்தால் மாரடைப்புக் கான சாத்தியம் ஆரம்பித்து விடும். இன்னும் சொன்னால், நல்ல கொலஸ்டிராலும் குறைவாக இருந்து, கெட்ட கொலஸ் டிரால் அளவும் டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides) அளவும் அதிகமாக இருந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரி, நல்ல கொலஸ்டிரால் குறைவது, ஏன்?

ஏழு எதிரிகள்:

  • ரத்தத்தில் நல்ல கொலஸ் டிராலின் அளவு குறைவதற்கு ஏழு எதிரிகளை இனம் காட்டுகிறது நவீன மருத்துவம். முதல் எதிரி, மரபுத் தன்மை. நல்ல கொலஸ்டிராலை உற்பத்தி செய்ய வைக்கும் சில வகை மரபணுக்களில் பிறவியிலேயே பிழைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல கொலஸ்டிராலின் அளவு குறைவாக இருக்கும்.
  • அடுத்த எதிரி, உடல் பருமன். கொலஸ்டிரால் வகைகள் குறித்துப் பேசும்போது ‘டிரைகிளிசரைட்ஸ்’ பற்றியும் குறிப்பிட்டோம். இப்போது உடல் பருமனுக்கும் டிரைகிளிச ரைட்ஸ் கொலஸ்டிரா லுக்கும் உள்ள உறவைத் தெரிந்துகொள்வோம். நம் ரத்தத்தில் டிரைகிளிசரைட்ஸ் 150 மி.கிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்பது கொலஸ்டிரால் குறித்த விதிகளில் ஒன்று. இந்த அளவைத் தாண்டும்போது, டிரைகிளிசரைட்ஸ் வயிற்றில் சேமிக்கப்படுகிறது.
  • இதனால் உடல் பருமன் ஏற்படுகிறது. ஒரு கணக்குக்குச் சொன்னால், 70 கிலோ எடையுள்ள ஒருவருக்கு 11 கிலோ டிரைகிளிசரைட்ஸ் அவருடைய வயிற்றில் சேர்ந்தி ருக்கும். வயிற்றில் சேரும் டிரை கிளிசரைட்ஸ் ரத்தத்தில் சுற்றிவரும் நல்ல கொலஸ்டிராலைச் சிதைக்கும். இதனால், நல்ல கொலஸ் டிராலின் அளவு குறைந்துவிடும்.
  • மூன்றாவது எதிரி, ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம். நல்ல கொலஸ்டிராலின் ஊற்றுக்கண் குடல் செல்கள். குடலுக்கு ஆரோக்கிய உணவு வகைகள் வந்து சேர்ந்தால், நல்ல கொலஸ்டிரால் விழா எடுக்கும். ஆரோக்கியம் இல்லாத உணவு வகைகள் வந்தால் கெட்ட கொலஸ்டிரால் குஷியாகிவிடும்.
  • அடுத்து, வறுத்த, பொரித்த, எண்ணெய்களில் மிதக்கிற மாவுச் சத்து உணவு வகைகளையும் துரித உணவையும் அதிகமாகச் சாப்பிடும்போது, அவற்றை டிரை கிளிசரைட்ஸாக மாற்றுவதற்கே கல்லீரலுக்கு நேரம் சரியாகிவிடும்; கெட்ட கொலஸ்டிராலை வெளி யேற்றுவது குறைந்துவிடும். அப்படிக் கவனிக்காமல் விடப்பட்ட கெட்ட கொலஸ்டிரால் மாரடைப்புக்கு வழி அமைக்கும்.
  • நான்காவது எதிரி, உடற்பயிற்சி இல்லாதது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ‘ஐபிஎல்’ (IPL) பிடிக்கும். அதுபோல் நல்ல கொலஸ்டிராலுக்கு ‘எல்பிஎல்’ (Lipoprotein Lipase - LPL) பிடிக்கும். ‘எல்பிஎல்’ என்பது ஒரு நொதி. நல்ல கொலஸ்டிரால் குடலில் தயாராவதை ஊக்குவிக்கிற பிரதிநிதி இது. நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற ‘காற்றலை உடற்பயிற்சி’களின்போது (Aerobic exercises) எலும்புத் தசைகளில் இது உற்பத்தியாகிறது. போதுமான உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு இந்த நொதி குறைவாக இருப்பதால், நல்ல கொலஸ்டிராலின் அளவும் குறைந்துவிடுகிறது.
  • அடுத்த எதிரி, புகைபிடிப்பது. சிகரெட் புகையில் ‘அக்ரோலின்’ (Acrolein) என்னும் விஷம் இருக்கிறது. இது நல்ல கொலஸ்டிரால் உற்பத்திக் குத் தடைபோடுகிறது. ஆறாவது எதிரி, கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய். பொதுவாகவே, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்புத் தன்மை இருக்கும்.
  • இதுதான் சர்க்கரை நோய் வருவதற்கு வரவேற்பு வளையம் வைக்கும். அதோடு நிற்காமல், நல்ல கொலஸ்டிராலைக் கெடுத்து மாரடைப்புக்கும் அது பேனர் வைக்கும். கடைசி எதிரி, நாம் சாப்பிடும் சில மருந்துகள். உதாரணமாக, ஸ்டீராய்டு மாத்திரைகள்.

மாத்திரைகள் உதவுமா?

  • கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க மாத்திரைகள் உள்ளன. ஆனால், நல்ல கொலஸ்டிராலை அதிகப்படுத்த மாத்திரை இல்லை. இதுவரைப் பார்த்த ஏழு எதிரிகளை ஓரங்கட்டினாலே நல்ல கொலஸ்டிரால் கணிசமான அளவுக்குக் கூடிவிடும்; டிரைகிளிசரைட்ஸ், கெட்ட கொலஸ்டிரால் இந்த இரண்டின் அளவுகள் குறைந்துவிடும். இது கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கும் மூன்றாவது வழி.

தைராய்டும் கொலஸ்டிராலும்:

  • ரத்தத்தில் கொலஸ்டிரால் கூடுவதற்கு உணவு மட்டும்தான் காரணமா என்றால், ‘இல்லை’ என்பதுதான் பதில். சில நோய்களும் கொலஸ்டிராலைக் கூட்டும். முக்கியமாக, குறை தைராய்டு (Hypothyroidism) பிரச்சினையைச் சொல்லலாம். இந்த நோய் உள்ளவர்களுக்கு ‘தைராய்டைத் தூண்டும் ஹார்மோ’னின் (TSH) அளவு கூடுதலாக இருக்கும்.
  • இது தைராய்டுக்குத் தொல்லை கொடுப்பதோடு நிற்பதில்லை. கல்லீரலுக்குச் செல்லும். கல்லீரல் கெட்ட கொலஸ்டிராலை உடைத்துப் பித்தநீரில் வெளியேற்றும் தன்மையை இந்த ஹார்மோன் சிதைக்கும்.
  • இதனால் கெட்ட கொலஸ்டிரால் ரத்தத்தில் கூடும். தைராய்டு செயல்திறன் பரிசோதனையின்போது (Thyroid Profile) கொலஸ்டிரால் பரிசோதனையையும் சேர்த்து மேற்கொள்வது கொலஸ்டிரால் அளவும் கூடியிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான்.
  • இப்படிக் குறை தைராய்டும் இருந்து, ரத்தத்தில் கொலஸ்டிராலும் அதிகமாக இருப்பவர்களுக்கு கொலஸ்டிராலைக் குறைக்கும் மாத்திரைகள் மட்டும் உதவாது; குறை தைராய்டுக்கான மாத்திரைகளையும் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories