TNPSC Thervupettagam

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதுமை

November 2 , 2023 437 days 414 0
  • நவீன மருத்துவத்தில், சாதாரண அறுவைசிகிச்சைகளுக்கே பயனாளிக்கு ரத்தம் தேவைப்படுகிற நிலையில், ரத்தம் சிறிதும் வழங்கப்படாமல் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இதய மாற்று அறுவை சிகிச்சை மருத்துவத் துறையில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆசியா விலேயே முதல் முறையாக அகமதாபாத்தில் உள்ள மேரிங்கோ சிம்ஸ் மருத்துவமனையைச் (Marengo CIMS Hospital) சேர்ந்த மருத்துவர்கள், இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
  • அடுத்தவரின் ரத்தம் பரிமாற்றம் செய்யப்படும்போது சில ஆபத்துகளும் சிக்கல்களும் ஏற்படுகின்றன. அவற்றைத் தவிர்க்க இந்தப் புதுமையான ரத்தம் இல்லா இதய மாற்று அறுவைசிகிச்சை உதவுகிறது என்பதால், அறுவை மருத்துவத் துறையில் இந்த முன்னேற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதய அறுவைசிகிச்சை

  • ஜோத்பூரைச் சேர்ந்த 52 வயதான சந்திர பிரகாஷ் கார்க் என்பவருக்கு இதயத் தசைகளுக்கு முறையாக ரத்தம் செல்ல வழியில்லாமல், இதயம் வீங்கிவிட்டது. இந்தப் பிரச்சினைக்கு ‘இஸ்கிமிக் டைலேட்டட் கார்டியோ மையோபதி’ (Ischemic Dilated Cardio myopathy) என்பது மருத்துவ மொழி. இந்த நோய்க்கு சந்திர பிரகாஷ் கார்க் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மருந்துகள் எடுத்துவந்தும் அவருக்குப் பிரச்சினை தீரவில்லை; இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்.
  • கடந்த மாதம் இதயச் செயலிழப்பின் (End-Stage Heart Failure) இறுதிக் கட்டத்தில் அவர் இருந்திருக்கிறார். அதற்காக அகமதாபாத்தில் மருத்துவர்களை அவர் சந்தித்தபோது, அவருக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை ஒன்றுதான் தீர்வு என்பது முடிவானது. அதேவேளையில், அவருக்கு ரத்தம் வழங்கப்படாமல் அந்தச் சிகிச்சையை மேற்கொள்ளவும் மருத்துவர்கள் துணிந்ததுதான் ஆசிய அளவில் மருத்துவச் சாதனை புரிய உதவியது.

தேவை நிபுணத்துவம்

  • பொதுவாகவே, இதய மாற்றுச் சிகிச்சை என்பது ஒரு சிக்கலான அறுவைசிகிச்சை. அடுத்தவரிடமிருந்து பெறப்படும் இதயம் பயனா ளிக்குச் சரியாகப் பொருந்த வேண்டும்; எந்த வகையிலும் நிராகரிக்கப்பட்டுவிடக் கூடாது. இந்தச் சிகிச்சையின்போது பயனாளி ரத்தம் இழப்பது வழக்கம்.
  • அதை ஈடுகட்டச் சில பாட்டில்கள் ரத்தமும் அவருக்குச் செலுத்தப்பட வேண்டும். அப்படி அவருக்குச் செலுத்தப்படுகிற அடுத்தவரின் ரத்தமும் சரியாகப் பொருந்த வேண்டும்; ஒவ்வாமை ஏற்பட்டுப் பிரச்சினை ஆகிவிடக் கூடாது. நிபுணத்துவம் மிக்க மருத்துவக் குழுவினரால் மட்டுமே இம்மாதிரியான சிக்கல்களைச் சமாளித்து, இதய மாற்றுச் சிகிச்சையைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும்.
  • இந்தச் சூழலில், பயனாளிக்கு ரத்தம் வழங்காமல் இதய மாற்று சிகிச்சையை மேற்கொள்ள இன்னும் கூடுதலான கவனமும் நிபுணத்துவமும் தேவைப்படும். பயனாளியை மிகவும் நுணுக்கமாகக் கவனித்து, நோயை மிகச் சரியாக மதிப்பீடு செய்து, சிகிச்சையின்போது சரியான அளவில் மயக்கம் ஏற்படுத்தி, ரத்தம் இழப்பதைத் தடுக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு ரத்தப் பரிமாற்றம் தேவைப்படாது.
  • இதுவரை, உலக அளவில் பத்து பிரபல இதய சிகிச்சை மருத்துவமனைகள் மட்டுமே ரத்தம் இல்லா அறுவைசிகிச்சையில் வெற்றி பெற்றுள்ளன. பதினொன்றாவதாக சந்திர பிரகாஷ் கார்க்கிடம் இந்தப் புதுமையை மேற்கொள்ள அகமதாபாத் மருத்துவமனை மருத்துவர்கள் அவரிடம் சம்மதமும் பெற்றனர். சாலை விபத்தில் உயிரிழந்த 33 வயதான இளைஞரின் இதயத்தை அவருக்குப் பொருத்தினர். இந்தச் சாதனை எப்படிச் சாத்தியமானது?
  • உதவிக்கு வந்த செயற்கை நுண்ணறிவு: இந்தச் சிகிச்சைக்கு தலைமை வகித்த டாக்டர் தீரன் ஷா கூறுகையில், “வளர்ந்து வரும் மருத்துவ நுட்பங்கள் - தொழில்நுட்ப உதவிகளால் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு இந்த வகை அறிவியல் முன்னேற்றத் துக்கு உதவியுள்ளது.
  • சந்திர பிரகாஷ் கார்க்கின் உடல்நிலையை அவருக்கு இதய அறுவைசிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பும், சிகிச்சையின்போதும், சிகிச்சைக்குப் பிறகும் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு இணைக்கப்பட்ட கணினி மூலம் கவனித்தோம். பயனாளியின் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதும் ரத்தம் உறைதல் தொடர்பாகக் கண்காணிப்பதும் இந்தச் செயல்முறையில் முக்கியமான பகுதி.
  • ரத்தம் உறைதலில் ‘ஃபைப்ரினோஜன்’ (Fibrinogen), ‘திராம்போபிளாஸ்டின்’ (Thromboplastin) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ‘ரத்த உறை காரணிகள்’ (Blood clotting factors) சங்கிலிவினைச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. ரத்த ஓட்டத்தின்போது ரத்தம் உறைந்துவிடாமல் இருக்கவும், அறுவைசிகிச்சையின்போது ரத்த இழப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்தக் காரணிகளின் செயல்பாடு தடையில்லா மின்னோட்டம்போல் சரியாக இருக்க வேண்டும்.
  • ஒன்று பிரச்சினை செய்தாலும் மொத்த இயக்கமும் செயலிழந்துவிடும். இவை ஒவ்வொன்றின் செயல்பாட்டையும் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை கணினியில் காட்டுகிறது செயற்கை நுண்ணறிவு. பழைய பரிசோதனை முறைகளில் இந்த மாதிரியான தொடர் பரிசோதனை சாத்தியமில்லை. ரத்தம் உறை காரணிகளில் சிறிய குறைபாடு இருந்தாலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உடனடியாக எங்களுக்குத் தெரிவித்துவிடும்.
  • ரத்தம் இழக்க வாய்ப்புண்டா என்பதையும் காட்டிவிடும். அதற்கேற்ப நாங்கள் செயல்பட்டு, ரத்த உறை காரணிகளைச் சரிசெய்து, அறுவைசிகிச்சையின்போது பயனாளி ரத்தம் இழப்பதைத் தடுத்துவிட எங்களால் முடிந்தது. மாற்று இதயம் எங்கள் கைக்குக் கிடைத்த ஒரு மணி நேரத்தில் சிகிச்சையை முடித்துவிட்டோம்” என்றார்.

மயக்க மருத்துவரின் பணி

  • இந்தச் சிகிச்சையில் மயக்க மருத்துவரின் பங்கும் முக்கியமானது என்கிறார் டாக்டர் தீரன் ஷா. “அதாவது, பயனாளியின் ஊட்டச்சத்து அளவு, ரத்தசோகை போன்றவற்றை முதலிலேயே அவதானித்து சிகிச்சை வழங்க வேண்டும். அறுவைசிகிச்சையின்போது ரத்தம் இழக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக மயக்க மருந்தைத் தேர்வுசெய்வதும், தேவையான அளவுக்கு அந்த மருந்தைச் செலுத்துவதும் மயக்க மருத்துவரின் முக்கியமான பணி” என்கிறார்.
  • மேலும், “வழக்கத்தில் இதய மாற்று அறுவைசிகிச்சையை மேற்கொள்ளும் பயனாளிகள் 21 நாள்கள் முதல் 24 நாள்கள் வரை மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. ரத்தப் பரிமாற்றத்தின் தேவையைப் போக்கும் இந்தச் செயல்முறை, பயனாளிக்குப் பொதுவாக ஏற்படும் ஒவ்வாமை, அழற்சி போன்ற குறுகிய கால - நீண்ட காலச் சிக்கல்களைத் தவிர்ப்பதோடு, பயனாளிகள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் நாள்களையும் செலவையும் குறைக்க உதவுகிறது. எங்கள் மருத்துவமனையில் சந்திர பிரகாஷ் கார்க் ரத்தம் இல்லா இதய மாற்று சிகிச்சையை மேற்கொண்ட பிறகு 9ஆம் நாளில் வீட்டுக்குச் சென்றுவிட்டார்’’ என்றார்.

என்ன நன்மை

  • இந்தியாவில் மட்டும் அறுவைசிகிச்சை, விபத்து, பிரசவம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் ஒன்றைரைக் கோடி பாட்டில் ரத்தம் தேவைப்படுகிறது. நாட்டில் ரத்த தானம் செய்வதற்குத் தகுதி படைத்தவர்கள் நான்கு கோடிப் பேர். ஆனால், ஆண்டுக்குப் பத்து லட்சம் பாட்டில் ரத்தம் தேவைக்குக் குறைவாகவே கிடைக்கிறது.
  • போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் ரத்த தானம் செய்யத் தயங்குவதே இதற்குக் காரணம். இந்தச் சூழலில், இத்தகைய அறிவியல் முன்னேற்றம் எதிர்காலத்தில் மற்ற சிகிச்சைகளுக்கும் கைகொடுக்கக்கூடும். அப்போது பயனாளிக்கு அடுத்தவரிடமிருந்து பெறப்படும் ரத்தத்தின் தேவையும் குறையக்கூடும்.
  • அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில் அறுவைசிகிச்சையின்போது 90% வரை ரத்தம் இல்லா சிகிச்சை அளிப்பதற்கு ‘Goal-directed Bleeding Management – GDBM’ எனும் முறையில் மருத்துவத் துறையினருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இனி, இந்தியாவிலும் இது தொடங்கப்படலாம். ஆகவே, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அகமதாபாத் மருத்துவர்கள் செய்துள்ள புதுமையான இதய அறுவைசிகிச்சை நவீன மருத்துவத்தில் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகமில்லை!

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories