- சுவாமி விவேகானந்தர், "உலக வரலாறு முழுவதிலும் நாம் காண்பது ஒன்றே. மாமனிதர்கள் பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள்; மனித குலம் அதன் பலனை அனுபவிக்கிறது' என்று கூறுகிறார் .
- உண்மைதான், வரலாறு நெடுகிலும் மாபெரும் செயல்களைச் செய்தவர்கள் அமைதியாக வாழ்வை அர்பணித்துத் தவவாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள். அதன் பலனைப் பற்றி அவர்கள் சிந்தித்ததுமில்லை; அனுபவித்ததும் இல்லை. என்றாலும் பன்னெடுங்காலம் மனிதகுலம் அதன் பயனை அனுபவித்து சுகப்படுகிறது.
- பாரத தேசத்தின் கோலாகலமான கொண்டாட்டமாக அமைந்தது புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா. எதிர்க்கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக அதனைப் புறக்கணித்தன. ஆனாலும், மக்களின் உற்சாகத்திற்குக் குறைவில்லை. தமிழகத்திலும் அந்த அரசியல் எதிரொலித்தது என்றாலும், தமிழரின் மனதில் பெருமிதம் பெருகியது என்பதை மறுக்க முடியாது.
- நாடாளுமன்றக் கட்டடத்தின் நடுநாயகமாக தமிழரின் செங்கோல் இடம்பெற்றது. அதோடு, இறை நம்பிக்கை கொண்ட அனைவரின் நெஞ்சத்திலும் நிறைவை தந்தது ஓதுவாமூர்த்திகளின் தேவாரப் பண்ணிசை. புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாளின் முதல் நிகழ்ச்சியாகவும் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாகவும் அமைந்தது செங்கோலுக்கான பிரதமரின் மரியாதை.
- தமிழகத்து சைவ மடாதிபதிகளை பிரதமர் கௌரவித்த விதமும், செங்கோலை அவர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கிப் பெற்றுக்கொண்ட முறையும் குருமார்கள் வழிநடத்த, தமிழ்மறை ஒலிக்க, தமிழரின் இசை அந்த அரங்கை நிறைக்க செங்கோலுடன் நாடாளுமன்றம் புகுந்து அதனை நிறுவிய பான்மையும் தமிழுக்கும் தமிழருக்கும் நமது மரபுக்கும் பக்தித்தமிழ் இலக்கியத்திற்கும் கிடைத்த மரியாதை.
- இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அரசியல் உலகில் ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் எதிர்த்தரப்பினர் விமர்சனத்திற்கு உட்படுத்துவதிலும் குறை வைக்கவில்லை. அவற்றில் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு பல, காட்டமானவை சில, அர்த்தமற்றவை சில.
- மே 28, வீர சாவர்க்கரின் பிறந்த நாள். அந்த நாளில் புதிய நாடாளுமன்றம் திறப்பு என்பது திட்டமிடப்பட்ட குற்றச்செயல் என்பதாகப் பேசுகிறார்கள் எதிர்க்கட்சியினர். திட்டமிட்டே, வீர சாவர்க்கரின் பிறந்த நாளில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தாலும் அதிலே தவறு என்ன?
- வீர சாவர்க்கர் யார்? சுதந்திரப் போராட்டத் தியாகி. இந்த மண்ணின் விடுதலைக்காக எண்ணற்றோர் தங்கள் வாழ்வை தியாகம் செய்திருக்கிறார்கள். அத்தகைய தியாகிகளுள் ஒருவர்தான் வீர சாவர்க்கர். தனது சொத்துகளை, இளமையை தேசத்தின் விடுதலைக்காக இழந்தவர் அவர். சமூகத்தின் மேன்மைக்காக செயல்பட்ட வீரர். இந்திய விடுதலைக்காக வெள்ளையனை எதிர்க்க அவனது மண்ணிலேயே நின்று இயக்கம் கண்ட தேசபக்தர்.
- இந்திய சுதந்திர வரலாற்றின் ஒப்பற்ற தலைவர் வீர சாவர்க்கர். அவர் ஆயுதப் போர் முறையே இந்திய விடுதலைக்கு சரியான வழி என்று சிந்தித்தார். தனது குருவாக பால கங்காதர திலகரைக் கருதினார். ஆங்கிலேயரை எதிர்க்க "அபினவ் பாரத்' என்று இந்தியாவிலும், "இந்தியா ஹவுஸ்' (ஃபிரீ இந்தியா சொசைட்டி) என்று லண்டனிலும் இயக்கங்களை தலைமை ஏற்று நடத்தியவர்.
- உலகம் முழுவதும் தங்கள் இயக்கக் கிளைகளை ஏற்படுத்த உழைத்தவர். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட இந்திய இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்த சுதந்திரப்போராட்ட வீரர் சாவர்க்கர்.
- ஆங்கிலேயரின் உளவுப்பிரிவு அவரையும் அவரது இயக்கத்தினரின் ரகசிய செயல்பாட்டையும் கண்காணிக்க முடியாமல் திணறியது. அவரது தலைமையில், தமிழகத்தின் வ.வே.சு. ஐயர், டி.எஸ்.எஸ். ராஜன், பி.எம். பபட், வீரேந்திர சட்டோபாத்தியாய, லாலா ஹர்தயாள், பாய் பரமானந்த், மதன்லால் திங்க்ரா, மேடம் காமா, எஸ்.ஆர். ராணா போன்றோர் செயல்பட்டனர்.
- 172 பேர் இந்தியா ஹவுஸ் நிர்வாகத்திற்கு மட்டும் லண்டனில் இருந்து செயல்பட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தின் வெப்பம் தணிந்து விடாமல் அனலை மூட்டிக் கொண்டிருந்தவர் சாவர்க்கர்.
- இந்திய இளைஞர்களுக்குப் பயிற்சியும் ஆயுதமும் வழங்கிய குற்றத்திற்காகவே சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ய ஆங்கிலேய அரசு பட்ட பாடு தனி புத்தகமாக எழுதத்தக்கது. சாவர்க்கரை இந்தியாவுக்குக் கொண்டு வந்து 1911-ஆம் ஆண்டு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அந்தமான் சிறைக்கு அனுப்பியது ஆங்கிலேய அரசு.
- அந்தமான் சிறையில் சாவர்க்கருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, சிறைச்சாலை சரித்திரத்தில் இதுவரை யாரும் அனுபவித்திராத கொடுமை. கை கால்களைக் கட்டி நிற்க வைக்கப்பட்டார். காலைக்கடன் கழிப்பதற்குக்கூட வாய்ப்பற்ற முறையில் ஏறத்தாழ பதினான்கு நாள் அப்படி நின்றிருக்கிறார்.
- நான்கு மாதம் யாரும் பார்க்க முடியாதபடி தனிமைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து ஆறு மாதம் இருட்டு அறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிலுவைக் கட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தொடர்ந்து பத்து நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்.
- கனத்த சங்கிலியால் கால்கள் கட்டப்பட்ட நிலையில் நான்கு மாதம் தண்டனை அனுபவித்திருக்கிறார். செக்கிழுத்தார். கயிறு திரித்தல் முதலான கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டன. தண்ணீரும் உணவும் இல்லாத சூழலில் பலநாள், அவமானப் படுத்துவதற்காகவே நடந்த மனிதாபிமானமற்ற கொடுமைகள், பக்கத்து அறையிலேயே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட உளவியல் கொடுமைகள் என எல்லாவற்றையும் ஒற்றை மனிதர் எதன் பொருட்டு அனுபவித்தார்? இந்த தேசம் விடுதலை பெற வேண்டுமென செயல் பட்ட ஒரே காரணத்துக்காகத்தானே?
- அத்தகைய கொடுமையான நிலையிலும் தனது சிந்தனைகளை சிறை சுவரில் செதுக்கி வைத்து அதனை மனனம் செய்து கொண்டிருந்தார் என்பதிலிருந்தே அவரது மனதின் ஆழத்தையும் அழுத்தத்தையும் நம்மால் புரிந்து கொள்ளமுடியும். பதினான்கு ஆண்டுகள் அந்தமானில் அடைபட்டுக் கிடந்து நோயினால் அவதிப்பட ஆரம்பித்த காலத்தில் ஆங்கிலேய அரசு, அவர் அந்தமான் சிறையில் இறந்தால் இந்தியாவில் கலவரம் வரும் என்று கருதி மஹாராஷ்டிர சிறைக்கு மாற்றியது.
- இருபது ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு உடல்நிலை நலிவுற்றதால் விடுதலை செய்யப் பட்டார். சிறையிலிருந்து விடுபட்ட பின்பும் பல புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். வீர சாவர்க்கர் சொத்துகளையும் அவரது குடும்பத்தினரின் சொத்துகளையும் பறிமுதல் செய்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.
- வாழ்வின் பெரும்பகுதியை இந்த மண்ணின் விடுதலைக்காக தியாகம் செய்த சாவர்க்கர், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட இயலாத சூழ்நிலையிலும் சமூகத்தின் சீர்திருத்தத்திற்காக உழைக்கத் தொடங்கினார். தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார். அனைத்து சமூகத்தவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி அதற்கென "பதிதபாவன்' ஆலயத்தை ரத்தினகிரியில் 1931 பிப்ரவரி 22 அன்று நிறுவினார்.
- அங்கே ஜாதி பேதமற்று அனைவரும் வழிபாடு செய்வதை உறுதி செய்தார். அவரின் ஜீவனமே கடின ஜீவனமாக இருந்த நிலையில் ஆதரவற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்து சிறுமியை வீட்டில் தன்னோடு வைத்து வளர்த்தார்.
- வரலாற்று ஆராய்ச்சி மேற்கொண்டு பாரத தேச வரலாற்றின் பெருமைகளை நிறுவினார். அதற்கென புத்தகங்கள் எழுதினார். 1857}ஆம் ஆண்டு நிகழ்ந்த பாரதத்தின் முதல் விடுதலை வேள்வியை, பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களும் பாரதத்தின் அன்றைய வரலாற்றறிஞர்கள் பலரும் "சிப்பாய் கலகம்' என்றே எழுதினர். அதனை "விடுதலை எழுச்சி' எனக் குறிப்பிட்டு விரிவான ஆதாரங்களுடன் எழுதி 1907- ஆம் ஆண்டு வெளியிட்டார்.
- விடுதலைப் போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில் இந்திய ராணுவத்தில் விடுதலை உணர்ச்சி பெரும் அலையாக உருவானது, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விடுவிக்க முக்கியக் காரணமாக இருந்தது என்பது வரலாறு. அதற்கு மிகப்பெரும் காரணமாக சாவர்க்கர் இருந்தார் என்று நேதாஜி பதிவு செய்திருக்கிறார். இதே கருத்தை ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் அன்றைய உறுப்பினர்கள் பதிவு செய்ததும் சான்றாக இருக்கிறது.
- மகாத்மா காந்தி கொலை வழக்கில் சாவர்க்கர் கைது செய்யப்பட்டாலும் பின்னர் அதிலே அவருக்குத் தொடர்பு இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார். சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்று சிலர் தூற்றுகிறார்கள். ஆனால், அதற்கான ஆவணம் ஏதும் இல்லை என்று அரசே தெரிவித்திருக்கிறது.
- சுதந்திர இந்தியாவிலும் அவர் எந்தவொரு பதவியையும் பெறவில்லை. அவர் இறந்த பின்னரும் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நிகழவில்லை. ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் சிலர் அவரை அணுகுவது அறியாமையின் வெளிப்பாடு.
- தேசத்தைப் பற்றிய அவரது கனவு பிரம்மாண்டமானது. அத்தகைய மாவீரரின் நினைவைப் போற்றுவதிலும் மரியாதை செய்வதிலும் என்ன தவறு? மரியாதை செய்யத் தவறுவதே பெரும் தவறு. சுதந்திரப் போராட்டத்தில் அகிம்சை வழியில் போராடியவர்களோ ஆயுதமேந்தியவர்களோ இருவரின் நோக்கமும் ஒன்றே. அது சுதந்திரக் காற்றை சுவாசிப்பது.
- "இறந்த காலத்தின் நினைவுகளைக் கொண்டு நிகழ்காலத்தில் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தற்கொலைப் போக்குடைய மடத்தனமாகும்' என்று கூறியவர் சாவர்க்கர். அத்தகையவரை, சித்தாந்தத்தில் மாறுபாடு கொண்டவர் என்பதற்காக சில தலைமுறைகளாக அவமதித்து வருவது முறையற்ற செயல்.
- வீர சாவர்க்கரின் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டதும் முதல் நிகழ்ச்சியாக அதன் மைய மண்டபத்தில் வீர சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதும் காலம் தாழ்த்தியேனும் நாம் செலுத்திய நன்றியாக அமைந்தது சிறப்பே.
நன்றி: தினமணி (09 – 06 – 2023)