TNPSC Thervupettagam

இது இயற்கை நடத்தும் பாடம்!

August 2 , 2024 161 days 129 0
  • வங்​கியிலிருந்து இடைவிடாமல் வரும் ஏல நோட்டீஸ் விழி பிதுங்க வைக்க, வானத்தை வெறித்​துப்​பார்த்து நின்ற தமிழக உழவர்களின் முகத்தில் இப்போது மட்டற்ற மகிழ்ச்சி.
  • இந்த ஆண்டும் நிலம் தரிசாகிவிடுமோ என்கிற கவலை ஒருபுறம்; பிள்ளைகளின் திருமணக் கனவுகள், கல்விச் செலவுகள், பெற்றோரின் மருத்​துவச் செலவுகள் உள்ளிட்ட கவலைகள் மறுபுறம் என உழன்று கொண்​டிருந்த உழவர்கள் நெஞ்சில் உவகை பூத்திருக்​கிறது.
  • ஆம்! இயற்கை கொட்டித் தீர்த்​து​விட்டது. விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர்கூடத் தர முடியாது என்று அடம்பிடித்த கர்நாடக அரசியல்​வாதி​களையும் வாரி அணைத்​தபடி, விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வெள்ளம் காவிரியில் சீறிப்​பாய்​கிறது. கடந்த ஆண்டு தமிழ்​நாட்டில் ஆயிரக்​கணக்கான ஏக்கர் வயல்கள் வறட்சி​யினால் தரிசாகின.
  • ஜூன் 12இல் மேட்டூர் அணை திறக்​கப்​பட்டு, அக்டோபரில் பாதியிலேயே மூடப்​பட்டது. இந்நிலை​யில், கனமழை மூலம் இயற்கை நமக்கு அருள்​பாலித்​து​விட்டது. அதேநேரம், தமிழகத்தின் முன் உள்ள முக்கியமான கேள்வி, வெள்ளமாக வரும் தண்ணீரை எப்படிப் பயன்படுத்​துவது என்பதுதான்.

மாற்றப்பட்ட மரபு:

  • தமிழ்​நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 259 டி.எம்.சி. நீர் கடலில் கலக்கிறது. 2022இல் ஒரே மாதத்தில் 450 டி.எம்.சி. கடலுக்குள் புகுந்தது. கடலுக்கு நன்னீர் தேவைதான். தேவையைவிட தமிழகம் அவ்வப்போது நன்னீரைக் கடலுக்கு ஈந்து​விடு​கிறது. மறுபுறமோ தமிழகத்தின் பாரம்பரியப் பாசனப் பெருமையுள்ள நீர்நிலைகள் பொட்டுத் தண்ணீரின்றி வாடிக் கிடக்​கின்றன.
  • நீர் மேலாண்மை என்பதில் பழந்தமிழகத்தின் வரலாறு பெருமிதம் மிக்கது. கணக்கதி​காரத்தில் நீர்வழிச் சூத்திரம் என்கிற பாடலே மன்னர்கள் ஆட்சியில் வகுக்​கப்​பட்டிருந்தது. குளங்கள் சங்கிலித் தொடராக அமைக்​கப்​பட்டிருந்தன. பெரும்​பாலும் கடைசிக் குளங்கள் கோயில் குளங்களாக நிர்மாணிக்​கப்​பட்டன.
  • நீர்ப்​பாசனம் என்பது கடைமடையில் தொடங்​கியது. கடைசிக் குளத்துக்குத் தண்ணீரைக் கொண்டுசேர்த்து, அங்கிருந்து தொடங்கி அதற்கு முன்புறம் உள்ள குளங்​களில் தண்ணீர் வரிசையாக நிரப்​பப்​பட்டது.
  • அதாவது, பந்தியில் கடைசியில் உட்கார்ந்​தவருக்கு முதலில் பறிமாறப்​பட்டது. எல்லோருக்கும் உணவும் கிடைத்தது. இடைக்கா​லத்தில் இந்த மரபு மாற்றப்​பட்டது. பந்தியின் கடைசியில் உட்கார்ந்தவர் கொலைப் பட்டினியோடு திரும்​பினார். கடைமடை வயல்களின் உதடுகள் வறண்டு தண்ணீருக்காக ஏங்கின.
  • காவிரிப் பாசனத்தில் பழைய டெல்டா என்பது காவிரி, வெண்ணாறு, அவற்றின் கிளை ஆறுகளும், துணை ஆறுகளும் ஆகும். புதிய டெல்டா என்பது கல்லணைக் கால்வாய்ப் பகுதி​களைக் குறிக்​கும். இவற்றின் நீர்வழித்​தடங்கள் பாழடைந்து சுருங்கின. நதியோரம் நாணல் இல்லாமல் ஆகாயத் தாமரை, நெய்வேலி காட்டா​மணக்கு என நீர் உறிஞ்சும் தாவரங்கள் அடர்ந்துள்ளன.
  • காவிரி கழிமுகப்​பகுதியின்கிளை வாய்க்கால்கள் ஏ, பி, சி, டி, ஈ, எஃப், ஜி எனப் பகுக்​கப்​பட்டு 29,881 என்ற எண்ணிக்​கையில் கல்முகத்தோடு கிடக்​கின்றன. இவையன்றி பாசனத்துக்குப் பயன்படும் இதர ஏரிகளும், குளங்​களும், வாய்க்கால்​களும் முறையாகத் தூர்வாரப்​படாமல் மண் மூடிக் கிடக்​கின்றன. இதேபோல் ஊராட்சி ஒன்றியங்கள், பொதுப்​பணித் துறை, முந்தைய ஜமீன்​காலத்து நீர்நிலைகள் போன்றவையும் போதிய மராமத்துப் பணியின்றி புறக்​கணிக்​கப்​பட்டன. இவற்றின் எண்ணிக்கை ஏறத்தாழ 39,202.

மறைந்து போன பெருமை:

  • ஒரு காலத்தில் இவற்றின் பராமரிப்பைப் பார்த்​துதான் ஆங்கிலேயர்கள் மிரண்​டனர். 1883 வரையிலான ஒருங்​கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் வரலாற்றை எழுதிய ஆங்கிலேயர்கள், இப்பகுதி எப்போதும் உணவுப் பஞ்சத்தைச் சந்தித்​ததில்லை என்று வியந்​தனர்.
  • மணற்பாங்கான பகுதியில் அணைகளை உருவாக்கும் தொழில்​நுட்​பத்தைப் பழங்காலத் தமிழர்​களின் பாசன முறையிலிருந்து கற்றுக்​கொண்டோம் என்றும், இவற்றுக்காகத் தமிழர்​களுக்கு நன்றிக்​கடன்​பட்டிருக்​கிறோம் என்றும் சர்.ஆர்தர் காட்டன் கூறினார்.
  • பழந்தமிழகத்தில் நீர் சேமிப்பு எவ்வாறு இருந்தது என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகளும் உண்டு. திருச்சி மாவட்டம், திருவெறும்​பூரில் கண்டசதுர்​வேதி​மங்கலம் என்கிற பகுதி இருந்தது. திருவெறும்பூர் மலையில் சிவன் கோயிலை நிறுவிய செம்பியன் வடிவேலன் என்பவர், அந்தக் கிராமத்து ஏரியை ஆழப்படுத்த 45 களஞ்சி தங்கம் அளிக்க முன்வந்​தார். அதற்கு ஈடாக அந்தக் கிராமத்துப் பேரவை கீழ்நடை என்ற உள்ளூர் நலத்தீர்வையை அவருக்கு விற்க ஒப்புக்​கொண்டது.

கிராமப் பேரவையின் முதல் தீர்மானம்

  • சூரியன், சந்திரன் இருக்கும் காலம் வரை இந்த ஏரி வருடந்​தோறும் ஆழப்படுத்​தப்பட வேண்டும் என்பதுதான். ராஜராஜசோழனின் மற்றொரு பெயர் உய்யக்​கொண்டான் என்பதாகும்.
  • உய்யக்​கொண்டான் வாய்க்கால், புதிய கட்டளைமேட்டு வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், அக்னியாறு ஆகியவற்றைச் சேர்ந்த பாசன ஏரிகளை இப்போது யார் போய்ப் பார்த்​தா​லும், அவை தூர்வாரப்​படாமல் செத்துக் கிடப்பதை உணர முடியும். மதகுகளும், கதவணைகளும் பழுதாகிக் கரைகள் நிர்மூலமாகி அவற்றின் தோற்றம் பரிதாபமாக உள்ளது.
  • கர்நாடகத்தின் ஹாசன், மாண்டியா, மைசூரு உள்ளிட்ட காவிரிப் பாசனப் பகுதி​களில் 15 கிலோமீட்டருக்கு ஒரு கதவணை அமைத்தும் பிற்காலத்தில் உபரி நீரைக்கூட அபகரிக்க மேகேதாட்டு என்கிற மாமலையை உருவாக்கச் சூழ்ச்சி செய்யும் கர்நாடகத்தின் திட்டத்தை முறியடிக்க, தமிழகம் நீர் மேலாண்​மையிலும் மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டிய நேரம் இது.

உரிமை நீர் அல்ல...

  • குடியரசுத் தலைவர் ஆட்சியில் தமிழகம் இருந்​த​போதுகூட காவிரியில் சட்டபூர்​வ​மாகக் கூடுதல் உரிமை பெற்றிருந்தது. 1976 ஆகஸ்ட் 26 இல் அப்போதைய மத்திய வேளாண் அமைச்சர் ஜெகஜீவன்ராம் தலைமையில் பேச்சு​வார்த்தை நடைபெற்றது. கர்நாடகத்தின் முதல்வராக தேவராஜ் அர்ஸும், தமிழகத்தின் ஆளுநராக மோகன்லால் சுகாடி​யாவும் இருந்​தனர்.
  • நீர்ப்​பங்கீடு தமிழகத்துக்கு 489 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 177 டிஎம்சி, கேரளத்துக்கு 5 டிஎம்சி என்கிற அளவில்தான் இருந்தது. அரபிக் கடலுக்கு ஆண்டுக்கு 2,000 டிஎம்​சியைக் கொடையாகத் தரும் கர்நாடகம் தமிழகத்தை வஞ்சிக்கப் பார்க்​கிறது. கர்நாடகத்​திட​மிருந்து தமிழகம் இப்போது பெறுவது உபரி நீர்தான், உரிமை நீர் அல்ல.

தமிழகம் செய்ய வேண்டிய​வை...

  • உரிமை நீரைக் காவிரிப் பாசனத்துக்கும் உபரி நீரை வானம்​பார்த்த பூமிக்கும் திருப்ப உரிய திட்டங்​களைத் தமிழகம் வகுக்க வேண்டும். முதல் கட்டமாகக் காவிரியின் கடைமடை வரையிலும் அதன் துணை நதிகளி​லும், கிளை நதிகளி​லும், கொள்ளிடத்தின் குறுக்​கேயும், 50 முதல் 100 கதவணைகளுக்குக் குறையாமல் 20 அடி முதல் 30 அடி உயரமும், இருவழிப் போக்கு​வரத்துக்கு வாய்ப்பாக நல்ல அகலமான பாலங்​களும் வடிவமைத்து நீரைத் தேக்கிச் சேமிக்க வேண்டும். பவானி, அமராவதி, வெண்ணாறு உள்ளிட்ட பகுதி​களி​லும், இவற்றின் கிளை, உப நதிகளிலும் கதவணைகளைக் கட்டி நீரைச் சேமிக்க வேண்டும்.
  • பாசனத்துக்கான நீர்ப் பகிர்வில் தமிழகம் கடந்த கால அனுபவங்​களிலிருந்து பாடம் கற்க வேண்டும். உதாரணமாக, 1938 ஏப்ரல் 30இல் திருச்​சிராப்​பள்ளி மாவட்ட ஆட்சியர் ஜே.பி.பிரௌன் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெறும் உரிமை பெற்ற வாய்க்கால்​களின் பட்டியலைத் தந்தார். அதில் உய்யக்​கொண்டான் பெயர் முதலிடம் பெற்றது.
  • இப்போது 2024 ஜூலை 30இல் தமிழக அரசின் நீர்வளத் துறை வெளியிட்டுள்ள நீர் விநியோகப் பட்டியலில் உய்யக்​கொண்டான் வாய்க்கால் பெயர் இடம்பெறவில்லை. ஜூன் 12இல் மேட்டூரில் தண்ணீர் திறந்து ஜனவரி 28இல் மூடும் கால நிர்ணயம்கூட இன்றைய காலநிலை மாற்றச் சூழலில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.
  • இயற்கையும் தென்மேற்குப் பருவமழையும் சீதனமாக அவ்வப்போது அள்ளிக்​கொடுக்​கும் மழை நீரைப் பயன்​படுத்தி நிலத்தடி நீர் வளத்​தையும், பாசனத்​தையும், குடிநீரை​யும் மேம்​படுத்த தமிழ்நாடு நீர்​வளத் துறை திட்டமிட வேண்​டும். கூட்டாட்சி அமைப்​பில் தமிழகம் கா​விரியில் கர்​நாடகத்​தின் காலனி நாடு அல்ல என உணர்த்த வேண்​டியது மத்​தி​ய அரசின்​ பொறுப்​பும்​ ஆகும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories