TNPSC Thervupettagam

இந்தித் திணிப்பை நிறுத்திவிட்டு இந்தி பேசுபவர்களை முதலில் காப்பாற்றுங்கள்!

June 8 , 2020 1686 days 779 0
  • இந்தியாவில் இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் மரண அவஸ்தைகளுக்கான பெரும் பொறுப்பு ஒன்றிய அரசையும் உள்துறை அமைச்சகத்தையுமே சேரும்.
  • புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல இப்போது அனுமதிக்கும் அது, தொடக்க நாட்களில் அவர்களைத் தடுத்து, இரண்டு மாதங்கள் கடும் சித்திரவதைகளுக்கு அவர்கள் ஆளாக என்ன நியாயத்தை வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.
  • இக்கட்டான இந்நேரத்தில், தனது முக்கியப் பொறுப்பொன்றைத் தட்டிக்கழித்த உள்துறை அமைச்சகம், இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்திலும் இந்தியைத் திணிப்பதில் மட்டும் தீவிரம் காட்டியிருக்கிறது என்பது அதிர்ச்சியை மட்டுமல்ல, அருவருப்பையும்தான் ஏற்படுத்துகிறது.
  • மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஆட்சிமொழித் துறையானது, இந்தி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து வருடாந்திர அறிக்கை ஒன்றை வெளியிட்டுவருகிறது.
  • வழக்கமாக ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆவணம்தான் இது. ஏறக்குறைய மீண்டும் மீண்டும் அதே வாசகங்கள்தான் இடம்பெற்றிருக்கும். ஆனால், ஒட்டுமொத்த அரசு நிர்வாகப் பணிகளும் முடங்கிக்கிடக்கும் தற்போதைய நிலையில், இந்தத் திட்ட அறிக்கை அரசுத் துறைகளிலும் பொதுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களிலும் சுற்றறிக்கையாக வலம்வந்துகொண்டிருக்கிறது.
  • அநேகமாக, மே மாதத்தில் பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் அனுப்பிய முக்கியமான சுற்றறிக்கை இதுவாகத்தான் இருக்கும்.

கட்டாய இந்தி

  • அரசு உயர் அதிகாரிகளில் பெரும்பான்மையினர் ஆங்கிலத்திலேயே பணியாற்றிவருவதைப் பற்றி அதிருப்தியை வெளிப்படுத்துவதோடு, அவர்கள் இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இந்தத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • பயிற்சிக் காலத்தில் இந்தியில் பணியாற்றும் வகையில் போதிய பயிற்சி அளிக்கப்பட்டாலும் அதிகாரிகள் ஆங்கிலத்தில்தான் அலுவலகப் பணிகளைச் செய்துவருகின்றனர் என்றும், உயரதிகாரிகள் இந்தியில் பணிபுரியாதவரை அவரின் கீழ் பணியாற்றும் மற்ற ஊழியர்கள் எப்படி இந்தியில் பணிபுரிவார்கள் என்றும் கவலைப்படுகிறது.
  • இந்திய ஆட்சிப் பணித் துறை அதிகாரிகளும், அவர்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களும் தங்களது அலுவலகப் பணிகளில் இந்தியைப் பயன்படுத்துவது அவர்களது அரசமைப்புச் சட்ட கடமை என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் ‘ஏ’ என்றும், இந்தி பேசப்படும் ஆனால் அதைத் தாய்மொழியாகக் கொண்டிராத மாநிலங்கள் ‘பி’ என்றும், இந்த இரண்டு வகைக்குள்ளும் அடங்காத மற்ற மாநிலங்கள் ‘சி’ என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • இவற்றில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் தங்களுக்குள் 100%, இந்தி பேசும் மாநிலங்கள் தங்களுக்குள் 90%, இந்தி பேசாத மாநிலங்கள் தங்களுக்குள் 55% தொடர்புகளை இந்தியில் மேற்கொள்ள வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து மாநிலங்களுமே இந்தியில் வருகிற கடிதங்களுக்கு இந்தியிலேயே பதிலளிக்க வேண்டும் என்றும், அலுவலகப் பணிகள் யாவும் இந்தியில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
  • அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் இணையதளங்கள் இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட இரண்டு மொழிகளில் வடிவமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடத்தை விதிமுறைகள் 100% இந்தியில் இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சிமொழித் தீர்மானம்

  • 1968-ல் இயற்றப்பட்ட நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஆட்சிமொழித் தீர்மானத்தின்படியே இந்த வருடாந்திர அறிக்கை வெளியிடப்பட்டுவருகிறது.
  • இந்தி வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, நாடாளுமன்ற அவைகளிலும் சட்டமன்றங்களிலும் ஆண்டுதோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்கிறது இந்தத் தீர்மானம்.
  • கூடவே, அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்கிறது.
  • மாநிலங்களில் மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறது. அகில இந்திய ஆட்சிப் பணித் துறை தேர்வுகளை அட்டவணை மொழிகளில் எழுதவும் அனுமதிக்கிறது.
  • தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகளுக்குச் சில சலுகைகளை அளிப்பதாகக் கூறிக்கொண்டாலும் அலுவல் மொழியாக இந்தியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதுதான் இந்தத் தீர்மானத்தின் நோக்கம்.
  • அதனால்தான், இந்தி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் திட்ட அறிக்கை வெளியிடும் உள் துறை அமைச்சகம், அட்டவணை மொழிகளின் வளர்ச்சியைப் பற்றி எந்த அக்கறையும் காட்டுவதில்லை.
  • ஆட்சிமொழித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1968 ஜனவரி 18-ல். அதற்குச் சரியாகப் பத்து நாட்களுக்கு முன்புதான் ஆட்சிமொழி சட்டத் திருத்தத்தில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டார்.
  • ஆங்கிலம், துணை ஆட்சிமொழியாகத் தொடர்வதற்கான திருத்தம் அது. 1967 நவம்பர் 27 அன்று ஒன்றிய அரசு ஆட்சிமொழி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வரைவை மக்களவையில் முன்மொழிந்தபோது, ஜனசங்கத்தின் தலைவர் வாஜ்பாய் எதிர்ப்புத் தெரிவித்தார்.
  • இந்தி பேசும் மாநிலங்களில் போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டன. ஒன்றிய அரசும் தனது முடிவில் பின்வாங்கி, சில சட்டப் பிரிவுகளை நீர்த்துப்போகச் செய்தது.

தமிழகத்தின் எதிர்ப்புக் குரல்

  • அண்ணா சுழன்று செயலாற்றிய காலகட்டம் அது.
  • டிசம்பர் 7 அன்று மக்களவையில் ஆட்சிமொழி சட்டத் திருத்தம் குறித்த விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் க.அன்பழகன், “ஆட்சிமொழிகள் சட்டத்தில் நீங்கள் கொண்டுவந்திருக்கும் சட்ட முன்வரைவு, இந்தி பேசாத மக்களைத் திருப்திசெய்வதாக இருக்க வேண்டும். ஆனால், உண்மையில் இந்த நாட்டில் இந்தி மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்புகிற. இந்தி பேசுபவர்களைத் திருப்திசெய்யும் வகையில் சில பிரிவுகளை இந்தச் சட்ட முன்வரைவில் சேர்த்துவிட்டீர்கள்” என்று குற்றம் சுமத்தினார்.
  • ஆட்சிமொழிச் சட்டத்தில் திருத்தம் செய்துவிட்டதாகச் சொல்லிவிட்டு, அடுத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதைச் சமன்செய்துவிட்டது அன்றைய ஒன்றிய அரசு.
  • அந்தத் தீர்மானமே இப்போது கொள்ளைநோய்க் காலம் என்றும் பாராமல் இந்தியைத் திணிப்பதற்கு அடிப்படையாக இருக்கிறது.
  • இன்று புலம்பெயர் தொழிலாளர்களாக சாலைகளில் நடந்துகொண்டிருப்பவர்களில் பலரும் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே; இன்றைய பாஜக ஆட்சியில் அமர பெரும் பங்களித்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களும்கூட.
  • இந்தி மீதான அக்கறையை இந்தி மொழி பேசும் அவர்கள் மீது முதலில் இந்த அரசு காட்டட்டும். ஆங்கிலத்தைப் போலவே இந்தியும் வளர்ச்சிக்கான மொழியாக மாறும் என்றால், எல்லா மக்களும் தானாகவே இந்தியைக் கற்பார்கள்; மாறாக, இந்தி பேசுபவர்களை இப்படி வீதியில் அலைக்கழிய விட்டுவிட்டு இந்தியை வளர்க்க, திணிப்பை ஒரு ஆயுதமாகக் கைக்கொள்வது அதன் மீதான வெறுப்புக்கே வழிவகுக்கும்!

நன்றி: தி இந்து (08-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories