- தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் 2017-க்கான இந்திய குற்றங்களின் அறிக்கை யின் வழியாக நம் நாட்டின் இருண்ட பக்கங்களில் நாம் எவ்வளவு அக்கறை காட்டிவருகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
- ஒருசில மாதங்களுக்கு முன்பு வங்கமும் பிஹாரும் தரவுகளை அனுப்புவதில் சுணக்கம் காட்டின என்று அதிகாரிகள் விமர்சித்தனர்.
- அம்மாநிலங்கள் அனுப்பும் தரவுகளுடன் நிறைய துணைத் தலைப்புகள் சேர்க்கப்பட வேண்டும், பிழைதிருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். கும்பல் படுகொலை, காப் பஞ்சாயத்துகளின் உத்தரவின்பேரில் நிகழ்த்தப்படும் கொலைகள், செல்வாக்கு மிகுந்தவர்களால் நிகழ்த்தப்படும் கொலைகள் போன்றவற்றைப் புதிய துணைத் தலைப்புகள் உள்ளடக்கும் என்று கூறப்பட்டது.
- இந்தக் கடைசி வகையைத் தவிர மற்றவை இந்த அறிக்கையில் இல்லை என்பது அவற்றை உள்ளடக்குவதில் ஆவணக் காப்பகம் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரிகிறது.
கும்பல் படுகொலை
- கும்பல் படுகொலைக்குத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆகவே, அதுபோன்ற வெறுப்புக் குற்றங்கள் குறித்த தரவுகள் அமலாக்கத்துக்கும் சட்டவியலுக்கும் பயன்படும். கும்பல் படுகொலைக்குத் தனிச் சட்டம் வேண்டாம் என்றும், அமலாக்கமே போதும் என்றும் மத்திய அரசு தொடர்ந்து வாதிட்டுவருகிறது.
- வெறுப்புக் குற்றங்களுக்கான முறையான பதிவுகள் அரசிடம் இல்லை. பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வெளியிடப்பட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, சில தனிப்பட்ட அமைப்புகள் மட்டுமே தகவல்களைத் திரட்டிவைத்திருக்கின்றன. அரசிடம் முறையான பதிவுகள் இல்லாமல் வெறுப்புக் குற்றங்களுக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
- இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றங்களைப் பதிவுசெய்யும் மாநகரங்களில் டெல்லியின் பங்கு 40.4%. இணையவழியில் பதிவுசெய்வது டெல்லியைப் பொறுத்தவரை அதிகம் என்பது இதற்குக் காரணம். மற்ற நகரங்களும் இதைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
- குற்ற விகிதங்களைக் கணக்கிடுவதில் மாநிலங்களுக்கு 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும், பெருநகரங்களுக்கு 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பையும் அடிப்படையாக இந்த அறிக்கை கொண்டிருப்பது இதன் குறைகளுள் ஒன்று.
- இது சீரற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. இதைத் தாண்டி இந்த அறிக்கையானது இந்தியாவில் நிகழும் குற்றங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நமக்கு அளிக்கிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் – தரவு
- தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவில் பெண்களுக்கு எதிராக நாடெங்கும் நடைபெறும் குற்றம் 2016-லிருந்து 6% அதிகரித்திருக்கிறது. இது மிகத் தீவிரமாக கவனிக்க வேண்டிய விஷயம். இந்த அறிக்கை தெரிவிக்கும் இன்னொரு அதிர்ச்சியான விஷயம் பட்டியலினத்தோர் மீதான வன்முறை 13% அதிகரித்திருக்கிறது என்பதாகும்.
- ஒருபுறம், பொருளாதாரரீதியாக நாம் மேம்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்கிற புள்ளிவிவரங்களை வைத்து நம்மை நாம் மெச்சிக்கொண்டாலும், சமூகரீதியாக நாளுக்குநாள் கீழே போய்க்கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வி எழுகிறது.
- நாம் எவ்வளவுக்கு மேம்பட்டிருக்கிறோம் என்பது பெண்கள், விளிம்பு நிலையினர் எல்லோருக்குமான சமநிலையை அடைவதன் வாயிலாகவே வெளிப்படும்.
நன்றி: இந்து தமிழ் திசை (01-11-2019)