இந்தியச் சுற்றுச்சூழல் அக்கறையின் தோற்றம்
- பிரபல வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹா, சுற்றுச்சூழல் வரலாறு குறித்தும் நிறைய எழுதிவருபவர். 'Speaking with Nature: The Origins of Indian Environmentalism' என்கிற புதிய நூலை அவர் எழுதியிருக்கிறார், ஃபோர்த் எஸ்டேட் இந்தியா வெளியிட்டிருக்கிறது.
- இந்தியாவில் சுற்றுச்சூழல் அக்கறை கிடையாது என்கிற நம்பிக்கை மேற்கத்திய பார்வையின்படி முன்வைக்கப்படுகிறது. ரேச்சல் கார்சன் எழுதிய மௌன வசந்தத்தால் உலக அளவில் உருவான நவீன சுற்றுச்சூழல் இயக்கம், பின்னால் காலநிலை மாற்றம் குறித்து உருவான அக்கறை போன்றவை பிரபலமாவதற்கு முன்பே இந்தியாவில் சுற்றுச்சூழல் அக்கறை இருந்தது என்கிறார் ராமச்சந்திர குஹா.
- சுற்றுச்சூழல் சீரழிக்கப் படுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இந்தியப் பின்னணியில் ஆழமான பார்வையை முன்வைத்த 10 குறிப்பிடத்தக்க ஆளுமை களைப் பற்றி இந்த நூலில் அவர் விவரித்துள்ளார். ரவீந்திரநாத் தாகூர், ராதாகமல் முகர்ஜி, ஜே.சி.குமரப்பா, பாட்ரிக் கெடிஸ், ஆல்பர்ட்-கேப்ரியேல் ஹோவார்ட், மிரா, வெரியர் எல்வின், கே.எம்.முன்ஷி, எம்.கிருஷ்ணன் ஆகியோரே அந்தப் பத்து பேர். காடுகள், காட்டுயிர், மண், நீர், நகர்மயமாக்கம், தொழில்மயமாக்கம் ஆகியவற்றைக் குறித்து இவர்கள் விரிவாக எழுதியிருக்கிறார்கள்.
- இவர்களுடைய பார்வையை, ‘வாழ்க்கைமுறைச் சுற்றுச்சூழலியம்’ என குஹா முன்வைக்கிறார். இயற்கையுடனான மனிதர்களின் உறவை வடிவமைக்கும் உலக அளவிலான சொல்லாடல் களை உருவாக்குவதில் முன்னோடிப் பங்கை இந்த எழுத்தாளர்கள், போராளிகள், அறிவியலாளர்கள் அளித்திருக்கிறார்கள்.
- காலநிலை மாற்றம் குறித்தான விவாதங்கள் அதிகரித்துவரும் நிலையில் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட இந்திய வரலாற்றில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் உதாரணங்களைக் காட்டி விளக்கி எழுதப்பட்டுள்ள இந்த நூல் தீவிர ஆய்வின் அடிப்படையில் உருவாகியுள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 11 – 2024)