இந்தியத் தத்துவம் மாக்ஸ் முல்லரும் அம்பேத்கரும்
- இந்தியத் தத்துவத்தின் நீண்ட பரப்பில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆகப்பெரும் தாக்கத்தைச் செலுத்தியவர்கள் இருவர். ஒருவர் மாக்ஸ் முல்லர் (Max Müller), மற்றொருவர் அம்பேத்கர். இருவரும் இந்தியத் தத்துவத்தை முன்வைத்து எழுதியவை இந்தியாவின் சிந்தனை மரபை இருவேறு கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. மாக்ஸ் முல்லர் இந்தியாவின் வேதம், மதம், தத்துவம் ஆகியன குறித்து ஆராய்ந்தவர்.
- கீழைத் தேயங்களின் தத்துவங்கள் மீது ஈர்ப்புக் கொண்ட அவர் மரிக்கும்போது ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்த அம்பேத்கர், பின்னாளில் மாக்ஸ் முல்லர் தம் ஆய்வுக்குத் தேர்ந்துகொண்ட அதே வேதம், சமயம், தத்துவம் ஆகியவற்றையும் ஆய்வுக்குத் தேர்ந்துகொண்டார்.
- பொதுவாக, மாக்ஸ் முல்லர் மீது ‘ஒருபக்கச் சார்புடையவர்’ என்கிற விமர்சனம் அம்பேத்கர் காலத்திலேயே உருவாகிவிட்டிருந்தது. அந்தக் கண்ணோட்டத்துடன் மாக்ஸ் முல்லரை அம்பேத்கர் அணுகவில்லை. மாறாக, இந்தியாவுக்கு வெளியில் இருந்துகொண்டு ஐரோப்பியர்களால் இந்தியாவின் வேதங்களும் மதங்களும் எப்படிப் பார்க்கப்பட்டன; பார்க்கப்படுகின்றன என்பதைப் புலப்படுத்துவதற்கு அம்பேத்கர் சான்றாகத் தேர்ந்துகொண்டவற்றில் மாக்ஸ் முல்லரின் ஆய்வும் ஒன்று.
மதத் தத்துவம்:
- அம்பேத்கர் ‘மதத் தத்துவம்’ என்பதை விளக்கவோ, விளங்கிக்கொள்ளவோ, அறுதியாக வரையறுக்கவோ முடியாத சிக்கலான பொருண்மையைக் கொண்ட சொல்லாகக் கருதினார். ‘மதத் தத்துவம் என்பது என்ன என்கிற தெளிவான நோக்கை நான் பெற முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்’ என்றார். ஆனால் அவரது வாசிப்பு, அறிதலின் அடிப்படையில் ‘மதத் தத்துவம்’ என்பதற்குப் புதியதொரு வரையறையை உருவாக்க விரும்பினார். அதற்கு நேர்/எதிர்மறை என்னும் இரண்டு நிலைகளிலும் மாக்ஸ் முல்லரின் மதத் தத்துவம் பற்றிய கருத்தை எடுத்துக்கொண்டார்.
- மதம் பற்றிச் சொல்லும்போது மதம் வரையறைக்கு உட்பட்டது. தத்துவம் வரையறைக்கு உட்படாதது. மதமும் தத்துவமும் எதிரெதிரானவை. பகையாளிகள் என்றுகூடச் சொல்லலாம். அனுபவத்தைப் பகுப்பாய்வு செய்து விளக்கியுரைப்பதே தத்துவம் என்றெல்லாம் விளக்கும் அம்பேத்கர், இதற்கு மேலும் விரிக்க வேண்டாம் என்று கருதியதைப் போல மிகச் சுருக்கமாக அதே நேரத்தில் தெளிவாக, ‘அனுபவத்தைப் பகுப்பாய்வு செய்து விளக்கியுரைப்பதே தத்துவமாகும்.
- மனிதர்களின் தார்மிக ஒழுக்கமுறையில் வாழும் சமுதாய அமைப்பினைக் கொண்டுவருவதை நோக்கமாகவும், குறிக்கோளாகவும் கொண்ட தெய்விக ஆட்சியின் லட்சிய அமைப்பை விவரிப்பதே மதமாகும்’ என்று தத்துவத்துக்கும் மதத்துக்கும் விளக்கம் தந்துவிட்டு, ‘மதத் தத்துவம் என்பது ஒரு தனிப்பட்ட தரமான அறிவியல் ஆகிறது’ என்றார்.
- அம்பேத்கரைப் பொறுத்தமட்டில் பொதுவான ‘மதத் தத்துவம்’ என்கிற ஒன்று இருப்பதாக அவர் கருதவில்லை. மதங்கள் ஒவ்வொன்றுக்கும் அதற்கேயுரிய தனித்தன்மையுடன் தத்துவங்கள் இருப்பதாக நம்பினார். அதனாலேயே ‘மதத் தத்துவம்’ என்கிற கருத்தியலின் இருப்பை மறுத்து, ஒரு மதத்தைப் பற்றிய தத்துவம்தான் உள்ளது என்பதாகக் குறிப்பிட்டார்.
அநுக்கிரமணிகைகள்:
- மிகப் பழைய வேத இலக்கியங்களுக்கு அதன் உள்ளடக்கம் பற்றித் தொகுத்தளிக்கப்பட்ட பொருள் அடைவுக்கு ‘அநுக்கிரமணிகைகள்’ என்று பெயர். மதத் தத்துவ விவரிப்பின் ஒரு பகுதியாக வேதத்தைப் பற்றி விளக்கும்போது மாக்ஸ் முல்லர் ‘அநுக்கிரமணிகைகள்’ பற்றிக் குறிப்பிடுவார். வேதத்தின் ஒவ்வொரு பகுதியையும் அதன் பூர்விகத் தன்மையினது இயல்பிலிருந்து அவர்காலத் திரிபு வரை நுட்பமாக விளக்கிவரும் முல்லர், ஓரிடத்தில் ரிக் வேதத்துக்குச் செய்யப்பட்டிருக்கும் பல அநுக்கிரமணிகைகளில் காத்தியாயனரால் செய்யப்பட்ட அநுக்கிரமணிகையைச் சிறப்புடையதாகச் சுட்டுவார்.
- இதன்வழி மாக்ஸ் முல்லர் ‘வேதங்கள் மனிதர்களால் செய்யப்பட்டவை’ என்னும் கருத்துடையவர் என்பதை அறியலாம். இந்தக் கருத்தை எடுத்துக்கொள்ளும் அம்பேத்கர், அதை வலுவாக நிறுவும் பொருட்டு, வேதங்களிலிருந்தே முப்பதுக்கும் மேற்பட்ட சான்றுகளை எடுத்துக்காட்டி தம்முடைய கருத்தை முன்வைக்கிறார் (‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்’, தொகுதி 8, பக்கம் 34-37). இது மாக்ஸ் முல்லரின் கருத்தோடு அம்பேத்கர் உடன்படும் இடம்.
- ஆனால் இது மோனியர் வில்லியம்ஸ், சார்லஸ் வில்கின்ஸ், சம்ஸ்கிருத அறிஞரும் வடமொழி இலக்கிய வரலாற்றை எழுதியவருமான கா.கைலாசநாதக் குருக்கள் உள்ளிட்டோரின் ‘வேதங்கள் மனிதர்களால் செய்யப்படாதது’ என்கிற கருத்தியலுக்கான மறுப்பாகும். மாக்ஸ் முல்லர், அம்பேத்கர் வரிசையில் ‘வேதங்கள் மனிதர்களால் செய்யப்பட்டவை’ என்கிற கருத்துடைய பலர் இருந்த போதிலும் அவர்களிலிருந்தும் அம்பேத்கர் வேறுபட்டார்.
- மாக்ஸ் முல்லர், தியோடர் பென்ஃபே, ஆல்பிரட் லுட்விக் உள்ளிட்ட அறிஞர்கள் ‘வேதங்கள் மனிதர்களால் செய்யப்பட்டவை’ என்று சொல்லிக்கொண்டே சமூகத்தில் வேதங்கள் செலுத்தும் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ தயங்கவில்லை. ஆனால், அம்பேத்கர் அதை நிராகரித்தார். இந்த நிராகரிப்பின் நுணுக்கம்தான் மாற்றுப் பார்வையிலான சமூகவியல் ஆய்வுகளுக்கு அம்பேத்கரை நெருக்கமாகக் கொண்டுவந்து சேர்த்தது.
- கடவுள் குறித்த பார்வை:
- வேதங்களில் ஏராளமான கடவுள்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கடவுளையும் அவர்களின் தொழில், இயக்கம் சார்ந்து வகைப்படுத்த முடியும். சதபத பிராமணத்தின்படி கடவுளர்கள் தோற்றம் பெற்ற மூலத்தை வைத்து ஒரு நேர்கோட்டு வரிசையை உருவாக்கிப் பார்க்கவும் செய்யலாம். இவை கடவுளின் இடம், தகுதி ஆகியவற்றை ஆய்வுசெய்வதற்கு உதவும். இதே பார்வையைத் தங்களுடைய ஆய்வில் வேறொரு கோணத்தில் மாக்ஸ் முல்லரும் அம்பேத்கரும் செலுத்தியிருக்கிறார்கள்.
- கடவுளர்களைத் தம்முடைய நூல்களின் பல இடங்களில் சிறிதும் பெரிதுமாக அம்பேத்கர் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தாலும், அதைவிட முக்கியமான இடம் மாக்ஸ் முல்லரின் கடவுள் குறித்த பார்வையை மறுக்கக்கூடிய பகுதியாகும். மாக்ஸ் முல்லர் ‘ஒவ்வொரு கடவுளும் பிற கடவுளர்களின் சக்தியினால் கட்டுப்படுத்தப்பட்டவர்களாகவோ உயர்ந்தவர்களாகவோ தாழ்ந்தவர்களாகவோ அவர்கள் கருதப்படவில்லை.
- எங்குமே எந்தக் கடவுளும் அடிமையாக்கப்படவில்லை’ என்றார். (Sacred Books of East. Part IV, Page.No.11). மாக்ஸ் முல்லர் தன்னுடைய ஆய்வுக்குப் பயன்கொண்ட முதன்மை ஆதாரம் எதுவோ அதைக்கொண்டே இந்தக் கூற்றை அம்பேத்கர் மறுத்தார். வேதங்களில் பல இடங்களில் சில கடவுளர்கள் பிற கடவுளரைவிட உயர்ந்தவர்களாகவும் முழு முதலானவர்களாகவும் கூறப்படுகிறார்கள். இரண்டாவது மண்டலத்தின் முதல் பாடலில் ‘அக்னி’ என்னும் கடவுள் பிரபஞ்சத்தை ஆள்கிறவர், மனிதர்களின் அரசர், தந்தை, சகோதரன், மகன், நண்பன் என எல்லாமுமாகக் கருதப்படுபவராகக் குறிப்பிடப்படுகிறார்.
- பின்னர் வேறொரு இடத்தில் அக்னியின் இடத்தில் இந்திரன் வைக்கப்படுகிறார். வேத மந்திரங்களிலும் பிராமணங்களிலும் இந்திரன் மிகவும் வலிமையான கடவுளாகச் சித்திரிக்கப்படுகிறார். பின்னர், இந்திரன் இடத்தில் சோமனும் வருணனும் வைக்கப்படுகிறார்கள். இந்நான்கு கடவுளுக்கும் நிரந்தரமான வைப்பிடம் இல்லை.
- அவர்களுக்குள் கீழ்மேல் நகர்வு இருந்தது. வேதங்களில் கூறப்பட்ட முப்பது மூன்று வேதக் கடவுள்களில் மேற்சொன்ன நான்கு கடவுளர்களுக்கு அளிக்கப்பட்டதைப் போன்ற உயர்வான இடம் பிற கடவுளருக்கு அளிக்கப்படவில்லை (‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்’, தொகுதி 8, பக்கம் 110) என மாக்ஸ் முல்லரை மறுக்கும் அம்பேத்கர், சதபத பிராமண காலத்தில் கடவுளர்களுக்கு இடையே தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்தது என்கிறார்.
- இந்த மறுப்பு முக்கியமானது. பல சமூகங்கள் தமக்கான வரலாற்றை எழுதியபோது ஏதேனும் ஒரு கடவுளைத் தம்முடைய தோற்றுநராக வரிந்துகொண்டன. அந்த வகையில் வரலாற்றில் கடவுளர்களின் ஏற்ற இறக்கங்களைச் சமூகங்களின் ஏற்ற இறக்கங்களோடு பொருத்திப் பார்க்க முடியும். ஒரு சமூகத்தின் ‘சமூக இடம்’ எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை.
- இருக்கவும் முடியாது என்பதை அம்பேத்கரின் மறுப்பிலிருந்து நாம் வருவித்துக்கொள்ளலாம். இந்தியத் தத்துவம் சார்ந்த எந்தவொரு ஆய்வுப்பொருளிலும் இந்தியாவுக்கு வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் பார்ப்பதால் உருவாகும் வேறுபாட்டு இடைவெளிகளை இனம் காண வேண்டுமென்றால் மாக்ஸ் முல்லரும் அம்பேத்கரும் அவசியத் துணையாவர்.
- டிசம்பர் 6 - மாக்ஸ் முல்லரின் பிறந்த நாள்
- (இரு நூற்றாண்டு நிறைவு);
- அம்பேத்கரின் நினைவு நாள்
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 12 – 2024)