TNPSC Thervupettagam

இந்தியத் தேர்தல்கள் ஒரு பார்வை

April 26 , 2019 2072 days 1265 0
  • சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் 1951-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி தொடங்கி, 1952-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. முதல் மக்களவைத் தேர்தலை இந்தியா சந்தித்தபோது, தேசப் பிரிவினையின் வடுக்கள்கூட ஆறவில்லை.
முதல் மக்களவைத் தேர்தல்
  • பல சவால்களைக் கடந்து, முதல் மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் பண்டித ஜவாஹர்லால் நேரு.
  • அந்தத் தேர்தலில், 489 தொகுதிகளுக்கு 1,849 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் 17 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். அவர்களில் 7சதவீதம் பேர் மட்டும்தான் வாக்களித்தனர். அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 36 கோடி பேர். அப்போது தேர்தல் ஆணையராக இருந்தவர் சுகுமார் சென். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் சுமார் 16 சதவீதம் பேர்தான். தேர்தல் நடந்த 489 தொகுதிகளில், அகில இந்திய காங்கிரஸ் 364 தொகுதிகளில் வெற்றி பெற்று, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பண்டித ஜவாஹர்லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1951 அக்டோபர் 25-இல் ஹிமாசலப் பிரதேசத்தில் தொடங்கிய முதல் கட்டத் தேர்தல், 1952 பிப்ரவரி 21-இல் உத்தரப் பிரதேசத்தில் இறுதிக் கட்டமாக நிறைவு பெற்றது.  முதலாவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், சோஷலிஸ்ட், ஜனசங்கம், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள், பல சுயேச்சைகள் போட்டியிட்டாலும் காங்கிரஸ் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்தது. (இந்தியா குடியரசாவதற்கு முன்னரே இந்தியாவின் பிரதமராக ஜவாஹர்லால் நேரு இருந்தார்).
இரண்டாவது தேர்தல்
  • இந்திய குடியரசின் 2-ஆவது மக்களவைத் தேர்தல் 1957-இல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 371 தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று, ஜவாஹர்லால் நேரு  மீண்டும் பிரதமரானார்.  ஜனசங்கத்தின் (தற்போது பாஜக) சார்பில் போட்டியிட்ட அடல் பிகாரி வாஜ்பாய் வெற்றி பெற்றார்.
  • 1962-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று பண்டித நேருவே மீண்டும் பிரதமரானார். இந்திய அரசியலில் 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சி புரிந்துவந்த இந்திய தேசிய காங்கிரஸூக்கு சவால் விடும் அளவுக்கு அந்தக் காலகட்டத்தில் வலுவான எதிர்க்கட்சி எதுவும் இல்லை.
  • 1964-இல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பிறகு, யாரை பிரதமராகத் தேர்ந்தெடுப்பது என்ற கோஷ்டிப் பூசலில், பெருந்தலைவர் காமராஜர் நிஜலிங்கப்பா தலைமையிலான குழு, லால்பகதூர்சாஸ்திரியை பிரதமராக்கியது. பதவியேற்ற 2 ஆண்டுகளுக்குள் லால்பகதூர் சாஸ்திரி மறைந்துவிட்டார்.
  • அதன் பிறகு, இந்திரா காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தியது. இந்திரா காந்தி எளிதில் வென்று  1966-இல் பிரதமரானார். அதைத் தொடர்ந்து 1967-இல் நடைபெற்ற 4-ஆவது மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் 283 இடங்களில் வெற்றி பெற்று இந்திரா காந்தி மீண்டும்  2-ஆவது முறையாகப் பிரதமரானார். இந்தியாவின் 5-ஆவது மக்களவைத் தேர்தல் 1971-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 352 தொகுதிகளில் வெற்றி பெற்று,  இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், பிற கட்சிகளும் மெல்ல எழுச்சி பெறத் தொடங்கின.
1975 இல்
  • 1975-இல் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதன் மூலம், 1977-இல் 6-ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜனதா கட்சி 345 தொகுதிகளில் வெற்றி பெற்று,  மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அவரது ஆட்சி 2 ஆண்டுகள்கூட நீடிக்காத நிலையில், லோக்தளம் கட்சியின் சரண் சிங் பிரதமரானார்.
  • ஜனதா கட்சியின் சில பிரிவுகளின் ஆதரவைப் பெற்றிருந்த சரண் சிங், வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி அளித்த வாக்குறுதியை நம்பி பிரதமரானார்.
  • ஆனால், இந்திரா காந்தி ஆதரவளிக்க மறுத்துவிட்டதால், ஆட்சியை சரண் சிங் அரசு முழுமை செய்ய முடியவில்லை.
  • பின்னர் 1980-இல் நடைபெற்ற 7-ஆவது மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் எளிதில் வெற்றி பெற்று இந்திரா காந்தி 4-ஆவது முறையாகப் பிரதமரானார்.
  • பின்னர் 1984-இல் இந்திரா காந்தியின் படுகொலை நடந்த துன்பமிகு சூழ்நிலையில் அனுதாப அலை ஏற்பட்டு, 8-ஆவது மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று இளம் பிரதமராக ராஜீவ் காந்தி பொறுப்பேற்றார். இந்தத் தேர்தலின்போது பஞ்சாப், அஸ்ஸாம் மாநிலங்களில் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய பிரிவினைப் போராட்டங்கள் நடந்ததால் தேர்தல் நடைபெறாமல், 1985-ஆம் ஆண்டு அந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது.
  • 1989-ஆம் ஆண்டு நடந்த 9-ஆவது மக்களவைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று ஜனதா தளத்தைச் சேர்ந்த வி.பி.சிங் பிரதமரானார். 1991-இல் ஜனதா தளம் இரண்டாகப் பிளவுபட்டு, சந்திரசேகர் தலைமையில் சமாஜவாதி ஜனதா கட்சி உருவானதை அடுத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வி.பி.சிங் தோல்வி அடைந்து சந்திரசேகர் பிரதமரானார். அவர் 55 எம்.பி.க்களைக் கொண்டு, காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் பிரதமரானார்.
1991 இல்
  • சந்திரசேகர் அரசுக்கு ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் கட்சி  தொடக்கத்தில் ஆதரவளித்தது. பின்னர் தனது ஆதரவை விலக்கிக் கொண்டதன் மூலம் சந்திரசேகர் ஆட்சி கவிழ்ந்தது. பிறகு 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் நாள் எதிர்பாராதவிதமாக ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். 1991 ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், மீண்டும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்று பி.வி.நரசிம்மராவ் பிரதமரானார்.
  • 1996-இல் நடைபெற்ற 11-ஆவது மக்களவைத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இந்தத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு நாடாளுமன்றம் உருவானது. அதிக இடங்களை பாஜக வென்று வாஜ்பாய் பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றார். பாஜகவுக்கு பிற கட்சிகள் ஆதரவு அளிக்காத நிலையில், 13 நாள்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
  • ஐக்கிய முன்னணியைச் சேர்ந்தவரும் கர்நாடக மாநில முதல்வராக இருந்தவருமான தேவெ கெளடா பிரதமரானார். பின்னர் ஐ.கே.குஜ்ரால் சிறிது காலம் பிரதமராக இருந்தார். ஐக்கிய முன்னணியின் ஒற்றுமையின்மையால், 1998-இல் 12-ஆவது மக்களவைத் தேர்தலை இந்தியா சந்தித்தது.
  • 1996-இல் பிற கட்சிகள் எதுவும் ஆதரவு அளிக்க முன்வராத நிலையில், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த பாஜக, இரண்டு ஆண்டுகளுக்குள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் வெற்றி கண்டது. 1998-இல் நடைபெற்ற 12-ஆவது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 254 இடங்களில் வெற்றி பெற்று, 286 உறுப்பினர்களின் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமரானார். ஆனால், பாஜக தலைமையிலான அந்தக் கூட்டணி, இரண்டு ஆண்டுகளே நீடித்தது.
  • மக்களவை கலைக்கப்பட்டு, 1999-இல் மீண்டும் 13-ஆவது மக்களவைத் தேர்தலை நாடு சந்தித்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 270 இடங்களில் வெற்றி பெற்று வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். இந்த முறை 5 ஆண்டுகளை பிரதமர் வாஜ்பாய் அரசு பூர்த்தி செய்தது. 2004-ஆம் ஆண்டு 14-ஆவது மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி, இன்னும் சில கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் உருவானது. அந்தக் கூட்டணி வெற்றி பெற்று மன்மோகன் சிங் பிரதமரானார்.
  • 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளைக் கொண்டு, 2009-இல் 15-ஆவது மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று 2-ஆவது முறையாக மன்மோகன் சிங் பிரதமரானார். 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்றது. இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே சராசரியாக 38 சதவீதம் வாக்குகள் பதிவாகி,  புதிய சாதனை படைத்தது. அந்தத் தேர்தலில் 282 இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார்.
17 வது 
  • இந்திய அரசியல் வரலாற்றில் 16 முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களும் அமைதியாக ஜனநாயக முறையில் நடைபெற்றன. தற்போது நாம் 17-ஆவது மக்களவைத் தேர்தலை சற்று புதிய தளத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை மூன்று கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் நான்கு கட்டத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. தேர்தல் முடிவுகளுக்காக நமது ஜனநாயகம் ஆவலோடு காத்திருக்கிறது.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories