TNPSC Thervupettagam

இந்தியத் தேர்தல் ஆணையம்

November 13 , 2019 1893 days 10578 0
  • இந்தியா 1950-இல் குடியரசானபோது தேர்தல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே தேர்தல் ஆணைய உருவாக்கமும் இடம்பெற்றது.
     இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டது முதலே அதற்கு இரண்டு சிறப்பு அம்சங்கள் உண்டு.
  • உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான அந்தஸ்து, அதிகாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டது.
  • இந்தியா முழுவதும் அல்லது இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தேர்தல் நடைபெறும்போது உச்சநீதிமன்றம் உள்பட எந்த நீதிமன்றமும் அதன் செயல்பாடுகளிலோ அல்லது உத்தரவுகளிலோ தலையிட முடியாது. ஆனால், தேர்தல் நடந்து முடிந்த பிறகு நீதிமன்றங்கள் தலையிட முடியும். இது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பிரத்தியேகத் தன்மையாகும்; வேறு எந்த நாட்டிலும் இத்தகைய நடைமுறை கிடையாது.

முதல் தலைமைத் தேர்தல் ஆணையர்

  • இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக சுகுமார் சென் 1950-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 10-ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக குடிமைப் பணியின் (ஐஏஎஸ்) பல்வேறு பதவிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்ற டி.என்.சேஷன் 1990-இல் பொறுப்பேற்றார்.
  • 1996-ஆம் ஆண்டு வரை அவர் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றினார்.
     தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியை ஏற்பதற்கு முன்பு, மத்திய அமைச்சரவைச் செயலராக டி.என்.சேஷன் இருந்தார்.
  • ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவரது பாதுகாப்புச் செயலராகவும் பணியாற்றினார். சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது சட்டத் துறை அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் சுவாமியின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
  • பிரதமராக பி.வி.நரசிம்ம ராவ் பொறுப்பேற்ற பிறகு, 1993-இல் அவருக்கும் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தேர்தல் ஆணையம் ஏற்பட்டது முதலே மத்திய சட்டத் துறையின் கீழ் செயல்படத் தொடங்கியது.

தன்னாட்சியான அமைப்பு

  • ஆனால், தேர்தல் ஆணையம் என்பது மத்திய அரசின் அங்கம் அல்ல. அது தன்னாட்சியான அமைப்பு. தேர்தல் ஆணையர்கள் தங்களது "விசிட்டிங் கார்டில்' இந்தியத் தேர்தல் ஆணையம் என்று குறிப்பிட வேண்டுமேயொழிய, "இந்திய அரசு' என்று குறிப்பிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மட்டுமே தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகிப்போர் கட்டுப்பட்டவர்கள் என்ற நிலைப்பாட்டையும் டி.என்.சேஷன் கொண்டிருந்தார்.
  • பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் வெளிநாடு சென்றிருந்தபோது தன்னிச்சையாக தேர்தல் தேதியை அறிவித்தார்.
  • அப்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன், உடனடியாக தொலைக்காட்சியில் தோன்றி, "தேர்தல் தேதியை அறிவிக்கும் அதிகாரம் பிரதமர் நரசிம்ம ராவுக்குக் கிடையாது' என்று கூறினார். "அரசியல் சாசன சட்டப் பிரிவு 324-இன்படி தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உண்டு என்றும், கள நிலைமைகளை ஆய்வு செய்து தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்' என்றும் சேஷன் தெரிவித்தார்.
  • அப்போது முதலே பிரதமராக இருந்த நரசிம்ம ராவுக்கும் டி.என்.சேஷனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமடையத் தொடங்கின.
  • ஒரு சமயம் பிரதமராக இருந்த நரசிம்ம ராவை தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன் சந்தித்து இவ்வாறு கூறினார்: "உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை. எனினும் நான்தான் தலைமைத் தேர்தல் ஆணையர். என்னை (டி.என்.சேஷன்) தாங்கள் (பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ்) தவிர்க்க 3 வழிகள்தான் உள்ளன. 1. நான் ராஜிநாமா செய்ய வேண்டும். 2. நான் இறக்க வேண்டும். 3. நாடாளுமன்றத்தில் பதவி நீக்க (இம்பீச்மென்ட்) தீர்மானம் கொண்டு வந்து பதவியிலிருந்து என்னை அகற்ற வேண்டும். ஆனால், நான் ராஜிநாமா செய்யப் போவதில்லை; நான் இறக்கத் திட்டமிடவில்லை; என்னை நாடாளுமன்றம் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து தாங்கள் அகற்ற முடியாது.

சேஷனின் கருத்து

  • ஏனெனில் தங்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை கிடையாது' என்றார்.
  • நான் தேர்தல் ஆணையராக 2000-இல் இருந்தபோது மேலே குறிப்பிட்டவற்றை என்னிடம் (டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி) டி.என்.சேஷன் கூறினார். எனினும், டி.என்.சேஷனின் அதிகாரத்தைக் குறைக்க நாலாவது வழியை அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் உருவாக்கினார். அதாவது, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி (டி.என்.சேஷன்) தவிர கூடுதலாக இரண்டு தேர்தல் ஆணையர் பதவிகளை அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் ஏற்படுத்தினார்.
  • அதற்கு முன்பு தேர்தல் ஆணையர் பதவிகள் இருந்தபோதிலும், அவர்களுக்குச் சட்டப்பூர்வ அதிகாரம் அளிக்கப்படவில்லை.

சட்டத் திருத்தம்

  • டி.என்.சேஷனின் சுய முடிவில் தலையிடும் வகையில் எம்.எஸ்.கில், ஜி.வி.ஜி கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் தேர்தல் ஆணையர்களாக அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அரசு நியமித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் உள்பட மூன்று ஆணையர்களும் சேர்ந்துதான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
  • இதற்கான சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி நரசிம்ம ராவுடன் கல்வி பயின்றவர் என்பதுடன், சட்ட அமைச்சகத்திலும் பணியாற்றியவர்.
  • ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.கில் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டதை தொடக்கத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ஏற்க மறுத்து தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அறைகள்கூட ஒதுக்கவில்லை.

தேர்தல் விவகாரங்கள்

  • "இருவரும் (ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.கில்) தன்னைவிட இளநிலை அதிகாரிகள் என்பதால் தேர்தல் தொடர்பாக அவர்கள் எடுக்கும் முடிவை ஆய்வு செய்து தாம் எடுக்கும் முடிவே இறுதியானது' என்றார் டி.என்.சேஷன்.
  • தேர்தல் விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு இரண்டு தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 1995-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார் டி.என்.சேஷன். தேர்தல் பிரச்னைகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் உள்பட மூன்று பேரும் இணைந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பெரும்பான்மையினரின் (மூன்றில் இருவர்) எடுக்கும் முடிவைச் செயல்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இவையெல்லாம் ஒருபுறமிருக்க தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் செய்த சாதனைகள் ஏராளம். அரசியல் சாசனப்படி தேர்தல் ஆணையத்துக்கு அதிக அதிகாரங்கள் உள்ளதையும், உத்தரவுகள் பிறப்பித்துச் செயல்படுத்த முடியும் என்பதையும் நிரூபித்தவர்.

சீர்திருத்தங்கள்

  • சட்டமாக இல்லையென்றாலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்தினார். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்வதற்குத் தடை விதித்தது, சுவர்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்வதற்குத் தடை விதித்தது, வாகனங்களில் வாக்காளர்களை அழைத்துச் செல்ல தடை விதித்தது, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை நாடு முழுவதும் கட்டாயமாக்கியது எனப் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தியவர் டி.என்.சேஷன்.
  • புகைப்பட அடையாள அட்டை இல்லாவிட்டால் மாற்று ஆவணங்களைப் பயன்படுத்தும் நடைமுறையையும் அமல்படுத்தினார்.
  • தேர்தல் ஆணையத்தின் சட்ட வரம்புக்குட்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (1950, 1951) பிரிவுகளை முனைப்புடன் அவர் செயல்படுத்தினார். குறிப்பாக, வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்களை நியமித்தார். அதாவது, ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இரண்டு பொதுப் பார்வையாளர்கள், செலவைக் கண்காணிக்க ஒரு பார்வையாளர் என மூன்று பேரை நியமித்தார். தேர்தல் செலவினங்களை ஒப்படைக்கத் தவறியதால் 1,488 வேட்பாளர்களை 3 ஆண்டுகள் தகுதியிழக்கச் செய்தார் சேஷன்.
  • இவற்றையெல்லாம் அரசியல் கட்சியினர் எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். "அரசியலமைப்புச் சட்டப்படியும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படியும் தலைமைத் தேர்தல் ஆணையர் (டி.என்.சேஷன்) செயல்படுகிறார்' எனக் கூறி அரசியல் கட்சியினரின் வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.
  • எனவே, இந்தியத் தேர்தல் வரலாற்றை ஒருவர் எழுதினால் "சேஷனுக்கு முன், சேஷனுக்குப் பின்' என்றுதான் எழுத முடியும். 1990-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி, தனது நேர்மையான நடவடிக்கைகள் மூலம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அடையாளச் சின்னமாக வரலாற்றில் இடம்பெற்று விட்டார் மறைந்த "திருநெல்லாயி நாராயண ஐயர் சேஷன்'!

நன்றி: தினமணி (13-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories