TNPSC Thervupettagam

இந்தியப் பொருளாதாரத்தின் திசைவழி

February 7 , 2024 340 days 256 0
  • 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பொதுவாக, இடைக்கால பட்ஜெட்டில் கொள்கை அளவிலான மாற்றங்களோ பெரிய அறிவிப்புகளோ இருக்காது என்றாலும், மக்களவைத் தேர்தல் நெருங்கிவருவதால், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. அப்படியான அறிவிப்புகள் ஏதும் இல்லையென்றாலும், நீண்ட கால நோக்கிலான திட்டங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
  • பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, நிதி அமைச்சகம் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது வழக்கம். பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதார நிலை, வளர்ச்சி, பணவீக்கம் உள்ளிட்டவை சார்ந்த பல்வேறு குறிப்புகள் இடம்பெறும். அடுத்துவரும் நிதி ஆண்டில் பொருளாதாரம் பயணிக்கவிருக்கும் திசையைத் துலக்கப்படுத்தும் ஆவணமாகப் பொருளாதார ஆய்வறிக்கை விளங்குகிறது.
  • ஆனால், இடைக்கால பட்ஜெட்டின்போது பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப் படுவதில்லை. மாறாக, இந்த இடைக்கால பட்ஜெட்டின்போது ‘இந்தியப் பொருளாதாரத்தின் 10 ஆண்டுக் கால மதிப்பீடு’ என்கிற அறிக்கையை நிதி அமைச்சகம் வெளியிட்டது.
  • பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டு தொடங்கி, பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டை இந்த அறிக்கை அளிக்கிறது; இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றிய கணிப்புகளையும் வழங்குகிறது. 2024-25 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7%ஐ நெருங்கும் எனக் கணிக்கும் அறிக்கை, 2030இல் 7%க்கும் ‘மிக அதிகமாகவே’ உயரும் என நம்பிக்கை தெரிவிக்கிறது.
  • 3.7 டிரில்லியன் டாலர் அளவுடன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா தற்போது உள்ள நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் அளவை எட்டி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் என்று அறிக்கை கணிக்கிறது.
  • அதேவேளையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரம் சார்ந்து அமைப்புரீதியிலான பெரிய சீர்திருத்தம் எதுவும் செய்திருக்கவில்லை என விமர்சித்துள்ளார். சில மாற்றங்கள் நடந்துள்ளன என்றாலும், பெரிய அளவிலான சீர்திருத்தம் எனச் சொல்வதற்கு ஒன்றுகூட இல்லை என அவர் கூறியுள்ளார்.
  • மேலும், அடுத்த 20, 30 ஆண்டுகளுக்குப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை வகுக்கக்கூடிய – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இணையான – பொருளாதார அறிஞர் ஒருவர்கூட இன்றைய அரசாங்கத்தில் இல்லை என்றும் வெளியிலிருந்தும் இந்த அரசாங்கம் ஆலோசனைகளைப் பெற விரும்புவதில்லை என்றும் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
  • மற்றொருபுறம், காங்கிரஸின் 10 ஆண்டுக் கால ஆட்சியையும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 10 ஆண்டுக் கால ஆட்சியையும் ஒப்பிட்டு, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • அரசு என்பது ஆளும்கட்சி மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய ஓர் ஒருங்கிணைந்த இயந்திரம். அந்த இயந்திரத்தை இயக்கும் எரிபொருளாகப் பொருளாதாரம் உள்ளது. 140 கோடி இந்தியர்களின் எதிர்காலம் என்பது அரசாங்கம் என்னும் இயந்திரத்தை நிர்வகிக்கும் சில ஆயிரம் பேரின் கைகளில்தான் உள்ளது.
  • அரசு இயந்திரம் பழுதின்றி இயங்க, கொள்கை வகுப்பு தாண்டி எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்கும் திறந்த மனத்துடன் காதுகொடுக்க வேண்டியது ஆட்சியில் இருப்பவர்களின் கடமையாகும்!

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories