- ஒரு நாட்டின் வளர்ச்சியும் வளமையும் அது பயன்படுத்தும் ஆற்றலின் அளவைப் பொறுத்தே அமைகின்றது. ஒரு நாடு இயங்கவும் வளரவும் தேவையான ஆற்றல் என்பது தொழிற்சாலைகளிலும் போக்குவரத்திலும் விவசாயத்திலும் வீடுகளிலும் நாள்தோறும் பயன்படுத்தப்படும் எரிசக்தியும் மின்சக்தியும்தான். ஒரு நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கான ‘ஆற்றல் பயன்பாடு’, அந்த ஆற்றல் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கக்கூடியதாகவும், சூழலியலுக்குக் கேடு விளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். அத்துடன், அது மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்றவாறு இருப்பதும் மிகஅவசியம். இந்த அளவீட்டைக் கொண்டு பார்க்கும்போது,இந்தியாவில் ஆற்றல் பயன்பாடு சரியாக இருக்கிறதா?
ஆற்றலும் சவால்களும்
- உலக அளவில் ஒரு மனிதர் பயன்படுத்தும் ஆற்றலின் அளவுடன் ஒப்பிடும்போது ஓர் இந்தியர் பயன்படுத்தும் ஆற்றலின் அளவு, மூன்றில் ஒரு பங்குதான்; மின்னாற்றலின் நிலையும் அதேதான். இது வளர்ச்சிக்கான சவாலாக இருக்கிறது. சமூகம், தொழில், பொருளாதாரம் ஆகிய அம்சங்களில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக நாம் முன்னேற, புதுப்பிக்கத்தக்க ஆற்றலான சூரிய மின்சக்தியின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.
- மின்னாற்றலானது, ‘கிலோவாட் நேரம்’ (KiloWatt Hour) என்ற அலகால் அளவிடப்படுகின்றது. 1,000 வாட் மின்சாரத்தை ஒரு மணி நேரம் பயன்படுத்தினால் அது ஒரு கிலோவாட் நேரம் எனப்படும். வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்காவில், மின்னாற்றலின் சராசரி தனிமனிதப் பயன்பாடு, 17,000 கிலோவாட் நேரம்; இந்தியாவில் இது 1,700 கிலோவாட் நேரம்.
- ஒரு நாட்டின் சராசரி தனிமனிதப் பயன்பாடு என்பது, ஓர் ஆண்டில் அந்த நாட்டின் மொத்தப் பயன்பாட்டை மக்கள்தொகையால் வகுத்தால் கிடைப்பது. வளர்ந்துவரும் நாடான இந்தியாவின் சராசரி ஆற்றல் பயன்பாடு, வளர்ச்சியடைந்த நாடுகளின் அளவுக்கு அதிகரிக்கும்போது, நாட்டின் தேவை இன்றைய அளவைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும்.
- அப்படி வளரும் நிலையில் நமது நாடு இரண்டு பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். முதலாவதாக, ஆற்றல் பாதுகாப்பு (Energy security).நமக்குக் கிடைக்கும் ஆற்றல் நீடித்த தன்மையுள்ளதாகவும், தூய்மையானதாகவும், எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய தாகவும் இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவின் ஆற்றலுக்கு ஆதாரமாக இருக்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய்ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தி இன்றைய தேவைக்கேபோதுமானதாக இல்லை.
- வெளிநாடுகளில் இருந்து பெரும் செலவில் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. மேலும்,சமையலுக்கான எரிவாயு 79% மக்களுக்குத்தான் கிடைக்கிறது. மீதமுள்ள 21% மக்கள், திட எரிபொருள்களான மரம், சாண வரட்டி போன்றவற்றையே நம்பியிருக்கிறார்கள். இரண்டாவதாக, பயன்பாடு அதிகரிக்கும்போது காலநிலை மாற்றத்தினால் வரக்கூடிய பெருந்தீங்குகள் நாட்டைச் சீரழிக்கும். இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் செய்துகொண்ட பாரிஸ் உடன்படிக்கையின்படி உலக சராசரி வெப்ப அளவு தொழில்மயமாக்க காலமான பொ.ஆ. (கி.பி.) 1750க்கு முன்பிருந்த அளவிலிருந்து 2 டிகிரி செல்சியஸ் மட்டுமே அதிகரிக்கலாம். இதுவும் தொடர் முயற்சிகள் மூலம் 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதற்கு, குறிப்பாகப் பசுங்குடில் வாயுக்களில் ஒன்றான கரியமில வாயுவின் அளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
காற்றின் தரம்
- பொ.ஆ. 1750இல், காற்றில் கரியமில வாயுவின் அளவு 280 பிபிம் (ஒரு பிபிம் என்பது பத்து லட்சத்தில் ஒரு பங்கு -Parts per million). 1999இல் அது 367 பிபிஎம் அளவை எட்டியது; 2023இல் வளிமண்டலத்தில் 417 பிபிஎம் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இதைக் கட்டுக்குள் கொண்டுவர 2050க்குள் கரியமில வாயு உமிழ்வு நிகர பூஜ்யம் (Net zero) எனும் நிலையை அடைய வேண்டும். அதாவது, தொழிற்சாலைகளாலும் ஊர்திகளாலும் பிற மனித நடவடிக்கைகளாலும் காற்றில் உமிழப்படும் கரியமில வாயுவின் அளவானது, மரங்களாலும் மற்ற முறைகளாலும் உறிஞ்சப்படும் அளவுக்குச் சமமாக இருக்க வேண்டும்.
- இதற்கு அதிக கார்பன் சேர்மங்கள் உடைய கச்சா எண்ணெய், நிலக்கரி போன்றவற்றின் பயன்பாடு குறைக்கப்பட்டு, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் முறைகளான சூரிய மின்சக்தி, காற்று மின்சக்தி, உயிரி எரிபொருள் முதலானவற்றின் உற்பத்தியும் பயன்பாடும் அதிகரிக்கப்பட வேண்டும். இது, முதல் சவாலாகக் குறிப்பிடப்பட்ட - ஆற்றல் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
- இந்தியா 2030க்குள் 500 ஜிகாவாட் (1,000 கிலோவாட் ஒரு மெகாவாட், 1,000 மெகாவாட் ஒரு ஜிகாவாட்) மின்னுற்பத்தியை இலக்காகக் கொண்டிருக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இந்தியாவின் இன்றைய உற்பத்தித் திறன் 167 ஜிகாவாட். இதில் சூரிய மின்சக்தியின் பங்கு அதிகம் - அதாவது 63 ஜிகாவாட். இந்த அம்சத்தில் நாம் கவனம் செலுத்தினால், அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய ஒளியிலிருந்து இந்தியாவின் மின்சக்தித் தேவையை நிறைவேற்றிக்கொள்ள இயலும்.
- தேசிய சூரிய மின்சக்தி நிறுவனம், இந்தியாவில் 748 ஜிகாவாட் அளவுக்கு ஆற்றல்வளம் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறது. ஆனால், இதற்குத் தேவையான கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறதா?
இந்தியா ஒளிர
- சூரிய மின்சக்தியின் மதிப்புச் சங்கிலியைப் பகுப்பாய்வு செய்தால், கட்டமைப்பில் நாம் எங்கு இருக்கிறோம் என்பது புரியும். சூரிய ஒளி மின் தகடு (சோலார் பேனல்) என்பது ஒளி மின்னழுத்த செல்களைப் பயன்படுத்தி சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் சாதனம். இந்தச் செல்களை உற்பத்தி செய்ய பாலி சிலிக்கானிலிருந்து தயாரிக்கப்படும் மிக மெல்லிய இங்காட் வேபர் என்கிற செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பாலி சிலிக்கான் எனும் மூலப்பொருள் சிலிக்கான் என்கிற மணலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இன்று உலகம் பயன்படுத்தும் பாலி சிலிக்கானில், 95% சீனாவில் தயாராகிறது. இந்தியா உள்பட அனைத்து உலக நாடுகளும் சீனாவிலிருந்து இதை இறக்குமதி செய்கின்றன. இந்தியாவின் சோலார் பேனல் உற்பத்தித் திறன் 38 ஜிகாவாட் இருந்தும், அதில் பாதி அளவான 19 ஜிகாவாட்டுக்குத் தேவையான பேனல்கள்தான் தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றன.
- உயர் தொழில்நுட்பமும் மிகப்பெரிய முதலீடும் தேவைப்படும் பாலி சிலிக்கான் உற்பத்திக்கான கட்டமைப்பு உள்நாட்டில் இல்லாததுதான் இதற்குக் காரணம். இதற்கிடையில் 38 ஜிகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யக்கூடிய பாலி சிலிக்கான் உற்பத்தித் தொழிற்சாலைகளை 2026இல் நிறுவுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இது ஓர் ஆறுதலான செய்தி.
- சிலிக்கான் மண்ணிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாலி சிலிக்கான் என்ற மிகவும் தூய்மையான மண் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டால், அது நமது ஆற்றல் தேவையை ஈடுகட்டும். அதற்கேற்ற வகையில் பாலி சிலிக்கானின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து செதில்கள், செல்கள், பேனல்கள் ஆகியவற்றின் உற்பத்தித் திறன் பெருகி சூரிய மின்சக்தியால் இந்தியா ஒளிரவும் நிலைத்தன்மையான முன்னேற்றத்தை நோக்கி உயரவும் முடியும்.
நன்றி: தி இந்து (07 – 12 – 2023)