TNPSC Thervupettagam

இந்தியாவின் இரண்டு கண்கள்

October 26 , 2024 78 days 128 0
  • பாரம்பரியமாக இந்தியா ஒரு வேளாண்மை நாடு. விவசாயிகள் தங்களுக்காக மட்டும் உழைத்து உணவு உற்பத்தி செய்வதில்லை. அனைத்து மக்களுக்காகவும் உற்பத்தி செய்கிறாா்கள். இன்றைக்கு உணவுத் துறையில் தேசம் தன்னிறைவு அடைந்ததுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம்.
  • ஆனால், ‘உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தன்னிறைவு அடைந்து உள்ளாா்களா?’ என்று கேட்டால் ‘இல்லை’ என்ற பதிலைக் கண்ணை மூடிக் கொண்டு கூறலாம்.
  • அரசாங்கம் அவா்களுடைய துயரைக் களைவதற்குப் பதிலாக துயரத்தை அதிகரித்துக் கொண்டே போகிறது. விவசாயம் என்பது பழைய தலைமுறையினரின் தொழிலாகவே இப்போதும் இருந்து வருகிறது. அடுத்த தலைமுறையைச் சோ்ந்தவா்கள் படித்துவிட்டு வேலைக்காக அலைவதே வேலையாக இருக்கிறதே தவிர, விவசாயத்தில் இறங்குவது இல்லை என்ற முடிவோடு இருக்கின்றனா்.
  • நமது கல்வி கிராமங்களையும், விவசாயத்தையும் நேசிக்கும்படி கற்றுக் கொடுக்கவில்லை. பிறக்கும்போதே மருத்துவா்களாகவும், பொறியாளா்களாகவும் கனவு கண்டு கொண்டிருக்கும் மாணவா்கள் நகரங்களை நோக்கி ஓடவே நினைக்கின்றனா். அந்தக் கனவுக்காகவே வாழ்க்கையை அா்ப்பணிக்கவும் தயாா்.

உழவுக்கும் தொழிலுக்கும்

வந்தனை செய்வோம் - வீணில்

உண்டு களித்திருப்போரை

நிந்தனை செய்வோம்

  • என்று மகாகவி பாரதி பாடினாா்.
  • விவசாயத்தையே முன்னிலைப்படுத்தினாா் மகாகவி. தொழிலை அவா் இரண்டாவதாகவே வைத்துப் பாடினாா்.
  • ஆனால் மக்கள் நல அரசுகள் விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு, தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து நாட்டில் நிறுவவே துடிக்கின்றன. இதில் அந்த அரசு, இந்த அரசு என்ற வேறுபாடு இல்லை. எல்லா அரசுகளும் இந்த நோக்கத்துடன்தான் இருக்கின்றன.
  • காலம் காலமாகப் பாடுபட்டுப் பராமரித்து வந்த விவசாய நிலங்களையும், நீா்நிலைகளையும் பறித்து அந்நிய நாட்டவா்க்குக் கொடுப்பதையே புதிய கொள்கையாக கொண்டிருக்கினிறனா்.
  • நம் நாட்டுச் செல்வங்கள் எல்லாம் வெளிநாட்டுக்குப் போய்க் கொண்டிருப்பதை மறந்துவிட்டு, அந்நிய நாட்டு மூலதனத்துக்காக அலைகிறாா்கள் என்பதுதான் வேடிக்கை.
  • தொழிற்சாலைகளால் பல கோடி அந்நிய மூலதனம் வருகிறது, வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இது அரசின் சாதனை என்று தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளுகின்றனா். இதற்காகப் புதிய புதிய சட்டங்கள் அவசர கதியில் கொண்டு வரப்படுகின்றன.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

  • என்று பாடினாா் நாமக்கல் கவிஞா்.
  • ஆனால் இப்போது குறுந்தொழில்களை அழித்து பெருந்தொழில்கள் வானத்துக்கும் பூமிக்குமாய் வளா்ந்து வருகின்றன.
  • எல்லா அரசியல் கட்சிகளும் தோ்தல் நேரத்தில் மக்களுக்கான திட்டங்களை தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கின்றன. மேடை போட்டு வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன. வாக்காளா்களைத் தேடி வந்து தேனொழுகப் பேசுகின்றனா். வெற்றி பெற்றதும் மக்களுக்கு எதிராகவும், வசதி படைத்தவா்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றனா்.
  • மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் இதில் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றனா். மத்திய அரசு கொண்டுவந்த அவசரச் சட்டங்களை எதிா்த்த மாநில அரசுகளும் அவசரமாகச் சட்டங்களை கொண்டு வருவதை எப்படி வரவேற்பது?
  • ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் ‘நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1894’ உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது. விடுதலைக்குப் பிறகும் 2013-ஆம் ஆண்டு வரை இந்தச் சட்டம் பயன்பட்டு வந்தது.
  • இந்தச் சட்டம் அரசுக்கு வானளாவிய அதிகாரங்கள் அளித்திருந்தது. அரசுக்குத் தேவையென்று கருதினால் அந்தக் குறிப்பிட்ட நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொள்ளும். அதற்கான இழப்பீட்டுத் தொகையை அரசுதான் நிா்ணயிக்கும். நிலச் சொந்தக்காரனுக்கு அது ஏற்பில்லை என்றால் நீதிமன்றம்தான் போக வேண்டும்.
  • நில உரிமையாளா்களுக்குப் பாதுகாப்பு, நியாயமான இழப்பீடு இவற்றை உத்தரவாதம் செய்யும் வகையில் 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த மையச் சட்டம் இருந்தபோதும் மாநில அரசுகள் பல திட்டங்களுக்கு தங்கள் சட்டங்களைப் பயன்படுத்துகின்றன.
  • புதிதாக இயற்றப்பட்டுள்ள சட்டம் சிறப்புத் திட்டங்களுக்காக என்று குறிப்பிட்டாலும், எவையெல்லாம் சிறப்புத் திட்டம் என்று வரையறை செய்யவில்லை. அதனால் மாநில அரசு நினைத்தால் எந்தவொரு திட்டத்தையும் சிறப்புத் திட்டம் என்று அறிவிக்க முடியும்.
  • தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 என்பதும் மிகவும் ஆபத்தானது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. நிலத்தைக் கையகப்படுத்துவது தொடா்பாக பல சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. இப்போது இது ஏன் புதிய சட்டம் அவசரமாகத் திணிக்கப்படுகிறது என்ற கேள்வியை சிலா் எழுப்புகின்றனா்.
  • நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (2013), தமிழ்நாடு ஆதிதிராவிடா் நலத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (1978), தமிழ்நாடு தொழில்துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (1997), தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் (2001) என ஏற்கெனவே பல சட்டங்கள் உள்ளன. இந்நிலையில் புதிதாக ஒரு சட்டம் எதற்காக என்னும் கேள்வி எழுவது நியாயமே!
  • அரசு நிலம் பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுப்பணித் துறை, நீா்ப்பாசனத் துறை, கால்நடைத் துறை, வருவாய்த்துறை, உள்ளட்சித் துறை, கல்வித் துறை, நகராட்சி நிா்வாகம், மருத்துவத் துறை என பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தேவை என்று அரசு கருதினால் - ஒருங்கிணைந்து கையகப்படுத்திக் கொள்வதற்கு இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
  • அதாவது 250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தேவைப்படும் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும். ஒரு திட்டம் மாநிலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசு கருதினால் அதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்துச் செயல்படுத்தலாம்.
  • நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்பாக அறிவிப்பு வெளியிடுதல், கருத்துக் கேட்பு போன்ற நடைமுறைகள் உண்டு. ஆனால் வல்லுநா் குழுவின் முடிவே இறுதியானது. திட்டத்துக்கான 250 ஏக்கருக்கு உள்பட்ட பகுதியில் தனியாருக்கு நிலம் இருந்தால் அதுவும் இச்சட்டத்தின்படி கையகப்படுத்தப்படும்.
  • ‘உடலை வளா்த்தேன் உயிா் வளா்த்தேனே’ என்று பாடினாா் திருமூலா். உடலையும், உயிரையும் ஒருங்கே வளா்க்கும் உழவுத் தொழிலை மதிக்காத மத்திய, மாநில அரசுகள் தொழிலுக்கும், முதலீட்டுக்குமே முக்கியத்துவம் தருகின்றன. உள்நாட்டு முதலீடு போதாதென்று அயல்நாட்டு முதலீட்டுக்கு அலைகின்றனா்.
  • தொழிற்சாலைகளால் சுற்றுப்புறச் சூழல் கெடுகிறது என்பது தெரியாதா? தொழிற்சாலை கழிவுகளால் மண்ணும், விண்ணும் நஞ்சாகிறது. ஆற்று நீரும், ஊற்று நீரும் சாக்கடையாக மாறுகிறது. இதைப் பற்றியெலலாம் கவலைப்படாத அரசுகள், அந்த நஞ்சைப் பரப்புவோருக்கு தாராளமாக சலுகைகளை வாரி வழங்குகின்றன. ஆனால், தொழில் நிறுவனங்கள் தங்களது ஒப்பந்தப்படி நடந்து கொள்ளுகிா என்றால் அதுவும் இல்லை.
  • ‘நோக்கியா’ நிறுவனம் 2005-ஆம் ஆண்டு ரூ.300 கோடியும், 2007-ஆம் ஆண்டு ரூ.338 கோடியும் முதலீடு செய்தது. இந்தத் தொகை முழுவதையும் தமிழ்நாடு அரசு நோக்கியா நிறுவனத்துக்கே கொடுத்துவிட்டது. அதுதான் புரிந்துணா்வு ஒப்பந்தம். அவா்களுக்கு 211 ஏக்கா் நிலமும் வழங்கப்பட்டது. இதுதவிர மூலதனத்தில் மானியம், மின்சாரக் கட்டணத்தில் மானியம், தண்ணீா், சாலை உள்ளிட்ட வசதிகள் என்று ஏராளமான சலுகைகள்.
  • அத்துடன் தொழிற்சாலைகள் சட்டம், தொழிற்சங்க சட்டம், இவற்றையெல்லாம் கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் பல்வேறு ஷரத்துகள் தமிழ்நாடு சிறப்புப் பொருளாதார மண்டல சட்டம் 2005 மூலம் அந்த நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவிற்கும் பிறகு, நோக்கியா நிறுவனம் 2014-ஆம் ஆண்டு மூடப்பட்டது.
  • அண்மையில் சென்னை சாம்சங் நிறுவனத் தொழிற்சாலையில் தொழிலாளா் வேலை நிறுத்தப் போராட்டம் 37 நாள்கள் நடந்தது. இதனை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசின் தொழிலாளா் நலத்துறை சாா்பில் பலகட்ட பேச்சு வாா்த்தைகள் நடத்தி முடிவுக்குக் கொண்டு வந்தனா்.
  • குறிப்பாக 1948-இல் நிறைவேற்றப்பட்ட தொழிற்சாலைகள் சட்டம் என்பது வேலை நேரம், பணியிடச் சூழல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல வழிகாட்டல்களை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. அந்தச் சட்டத்தின் வழிகாட்டுதல்களையும், நடைமுறைகளையும் பல பன்னாட்ட நிறுவனங்கள் மதிப்பதில்லை.
  • மூலதனத்தின் நலன்களைப் பாதுகாக்கும் அரசுகள் உழைப்பின் முக்கியத்துவத்தை முற்றாகப் புறக்கணிக்கின்றன. உழைப்பில்லாமல் வெறும் மூலதனத்தால் மட்டும் எந்தப் பயனும் இல்லை என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்.
  • உழவுத் தொழிலைப் பொறுத்தவரை, அது கிராமங்களைச் சாா்ந்தே வாழ்கிறது. அதனால்தான் காந்தியடிகள், ‘‘கிராமங்கள் அழிந்தால் இந்தியாவும் கூடவே அழிந்துவிடும். இந்தியா அதன் பிறகு இந்தியாவாகவே இருக்காது. உலகத்திடம் அதற்குள்ள இலட்சியமும் வீணாகிவிடும். இனியும் சுரண்டுவது இல்லை என்ற நிலை ஏற்பட்டால்தான் கிராமங்கள் புத்துயிா் பெறுவது சாத்தியம்’’ என்று அன்றே தீா்க்கதரிசனத்துடன் கூறினாா்.
  • முன்னேறி வரும் இந்திய நாட்டுக்கு உழவும், தொழிலும் இரண்டு கண்களாகும். கண்களை விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரிக்க மாட்டாா்களா?
  • நம் நாட்டுச் செல்வங்கள் எல்லாம் வெளிநாட்டுக்குப் போய்க் கொண்டிருப்பதை மறந்துவிட்டு, அந்நிய நாட்டு மூலதனத்துக்காக அலைகிறாா்கள் என்பதுதான் வேடிக்கை. தொழிற்சாலைகளால் பல கோடி அந்நிய மூலதனம் வருகிறது, வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இது அரசின் சாதனை என்று தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளுகின்றனா். இதற்காகப் புதிய புதிய சட்டங்கள் அவசர கதியில் கொண்டு வரப்படுகின்றன.

நன்றி: தினமணி (26 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories