TNPSC Thervupettagam

இந்தியாவின் பன்முகத் தன்மை, மதச் சுதந்திர உரிமையை ‘பொது சிவில் சட்டம்’ அழித்து விடும்

August 17 , 2023 512 days 339 0
  • "பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தேசத்தின் பன்முகத்தன்மையையும் மதச் சுதந்திரதுக்கான உரிமையையும் அழித்துவிடும். பொது சிவில் சட்டத்தை சிறுபான்மையினர் மட்டுமே எதிர்க்கின்றனர் என்பது தவறான கருத்து. இந்து மதத்துக்குள் கூட, பழங்குடியினர் போன்ற சில குழுக்கள் பொது சிவில் சட்டத்தை விரும்பவில்லை" என்கிறார் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினரும், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினருமான பி.வில்சன்.
  • பொது சிவில் சட்டம் தொடர்பான விஷயங்களை ஆராயுமாறு ஒன்றிய சட்ட அமைச்சகம் 17.06.2016 அன்று சட்ட ஆணையத்திடம் முறைப்படி கோரியது. இந்த வேண்டுகோளுக்கு இணங்க, 21-வது சட்ட ஆணையம் இரண்டு ஆண்டுகளாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணைகளை நடத்தி, ஆலோசனைகளை மேற்கொண்டு, பொது சிவில் சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் முன்வைத்து 31.08.2018 தேதியிட்ட ஆலோசனை அறிக்கையை மிகுந்த சிரமத்துக்குப் பிறகு வெளியிட்டது. அப்படி இருக்கும்போது, 22-வது சட்ட ஆணையம் இது குறித்து மீண்டும் பொது ஆலோசனையை தொடங்குவது ஏன்? ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 21-வது சட்ட ஆணையத்தின் அறிக்கைக்கு அளிக்கப் படும் மதிப்பு இதுதானா? ஓர் ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டன, சமூகமும் சட்டங்களும் மாறிவிட்டன, அதனால் மறுபரிசீலனை தேவை என்பதாக இருந்தால், அதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், ஏறக்குறைய இரண்டு ஆண்டு காலமாக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் முந்தைய சட்ட ஆணையத்தால் 31.08.2018 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது.
  • தற்போது சட்ட ஆணையம் செய்யவிருக்கும் ஆலோசனைகள் என்பது, பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக இல்லாத 21-வது இந்திய சட்ட ஆணையத்தின் 31.08.2018 தேதியிட்ட ஆலோசனை அறிக்கையில் உள்ள கருத்துகளை நீர்த்துப்போகச் செய்ய தற்போதைய ஆணையம் முயற்சிக்கிறது என்றே பொருள்படும். 31.08.2018 தேதியிட்ட ஆலோசனை அறிக்கையில், 21-வது சட்ட ஆணையமானது பொது சிவில் சட்டம் என்பது விரும்பத்தக்கது அல்ல என்ற கருத்தைத் தெரிவித்துள்ளது. மேலும், கலாசார பன்முகத்தன்மை சமரசம் செய்யப்படக்கூடாது என்றும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பல தனிநபர்கள் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடும் என்றும் அடையாளம் காணப்பட்டது.

அடிப்படை எதிர் கருத்துருக்கள்

  • பொது சிவில் சட்டமானது மாநிலக் கொள்கையின் வழிகாட்டும் கோட்பாடுகளின் கீழ் வரும் பிரிவு 44-ன் கீழ் கொண்டு வரப்பட்டு, அரசியல் நிர்ணய சபைக்குள்ளேயே ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாகவே, அடிப்படை உரிமைகள் என்ற சட்டப் பிரிவுகளின் ஒரு பகுதியாக இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் நாட்டின் பன்முகத்தன்மைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய சட்டமானது செயல்படுத்தக்கூடிய விதியாக இருக்கக்கூடாது என்பதை அரசியலமைப்பு சபை அங்கீகரித்தது.
  • இந்திய அரசியல் நிர்ணய சபை, இந்தப் பிரிவு 44 குறித்த விவாதத்தை மேற்கொண்டபோது, சென்னை மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் போக்கர் பகதூர், “இந்தியாவில் பல்வேறு மக்கள் குழுக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கடைபிடித்து வரும் பல்வேறு பழக்க வழக்கங்களை ஒரே அடியில் வீழ்த்திவிட முயற்சிக்கிறீர்கள். இதனால் நீங்கள் அடையவிருக்கும் நன்மை என்ன? அவர்கள் காலங் காலமாகப் பின்பற்றி வரும் பழக்க வழக்கங்களைக் கொன்று அவர்களது மனசாட்சியையும் கொல்வதைத் தவிர வேறு என்ன பயன் ஏற்படும்? இத்தகைய கொடுங்கோன்மை மிக்க ஒரு பிரிவு அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறக் கூடாது.
  • இந்து மதத்திலேயே உள்ள பல்வேறு குழுவினர், இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் நிலையில், நான் பேசுவதை காட்டிலும் கடுமையாக அவர்கள் பேசும் நிலையில் இந்தப் பிரிவு அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறக் கூடாது. பெரும்பான்மை மக்கள் இச்சட்டப் பிரிவை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னாலும், அதுவும் தவறான வாதம்தான். பெரும்பான்மை மக்களின் கடமை, சிறுபான்மை மக்களின் புனிதப் பழக்க வழக்கங்களைப் பாதுகாப்பதுதான். சிறுபான்மை மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவது ஜனநாயகம் என்று கூற முடியாது. அது மிகப் பெரிய கொடுங்கோன்மை” எனக் குறிப்பிட்டார். இதை எதிர்த்து பலரும் அரசியல் நிர்ணய சபையில் பேசினர். அதனால் டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் இது சம்பந்தமாக பேசும்போது, "இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்பவர்கள், இதனைப் பின்பற்றலாம்" என்றுதான் குறிப்பிட்டார். ஆனால், இந்த அரசு இச்சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மீதும் திணிக்கும் முயற்சியை மேற்கொள்கிறது.
  • மாநிலக் கொள்கை விதிகளின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் வலுக்கட்டாயமாக அமல்படுத்தக் கோருவது பேரழிவிற்கு வழிவகுக்கும் ஒரு செயலாகும். இந்தியா என்பது ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடாகும், வேறு எங்கும் இல்லாத வகையில் சமயம், கலாச்சாரம் மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை உள்ளடக்கியது. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு-29 சொல்வது என்னவென்றால், இந்திய நிலப்பரப்பில் வாழும் ஒவ்வொரு குழுவினருக்கும், அவர்களுடைய மொழி, எழுத்து, பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் உரிமை உண்டு.
  • ஓர் அறிக்கையின்படி, இந்தியாவில் 398 மொழிகள் உள்ளன; அவற்றில் 387 மொழிகள் தீவிரமாக பேசப்படுகின்றன; 11 மொழிகள் வழக்கொழிந்து விட்டன. இந்து மதத்திற்குள் கூட, பல துணை கலாச்சாரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அடையாளம், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை பிரிவு 25-ன் படி, குடிமக்கள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள மத வழக்கங்களைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமை பெற்றவர்களாவர். இத்தகைய வேறுபாடுகள் நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை வலிமையாக்கி உள்ளது. தனிமனிதச் சட்டங்களின் ஒரு தொகுப்பை எடுத்து, அதை அசுர பலத்துடன் அனைத்து மதங்களுக்கும், உட்பிரிவுகளுக்கும் பயன்படுத்தினால், அது அவற்றின் தனித்துவத்தையும் பன்முகத்தன்மையையும் அழித்துவிடும்.
  • உதாரணமாக, கிறிஸ்தவத்தை எடுத்துக்கொண்டால், அதில் திருமணம் என்பது ஒரு புனிதச் சடங்கு. இது மதத்தின் ஓர் அம்சம். அதனால்தான் இது புனித திருமணத்தின் சடங்கு என்று அழைக்கப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபை குறிப்பிடும் வகையில் திருச்சபை உறுப்பினர்கள் முன்னிலையில் நியமிக்கப்பட்ட பாதிரியாரால் திருமணம் என்னும் புனிதமான சடங்கு நடைபெற வேண்டும். எனவே, பொது சிவில் சட்டம், பதிவாளர் போன்ற ஒரு அதிகாரியிடம் திருமணங்களை பதிவு செய்ய வழிவகை செய்கிறது என்றால், அது ஒரு புனித சடங்கை இழிவுபடுத்துகிறது என்று பொருள்படும். அதுமட்டுமல்லாமல், கிறிஸ்தவர்கள் திருமணத்திற்கு முன்பு திருச்சபையில் திருமண ஆலோசனை பெறும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். பொது சிவில் சட்டம் என்பது இந்த நடைமுறையின் முடிவாக இருக்கும். பொது சிவில் சட்டமானது மத நடைமுறைகளை குறிவைப்பதோடு ஒருவருடைய மதத்தின் சுதந்திரமான நடைமுறையில் தலையிடுகிறது.
  • பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பவர்கள் அதை 'இந்து சார்பு சட்டம்' என்று பார்க்கிறார்கள், ஆனால் உண்மையில் அது இந்துக்களின் உரிமைகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கும் தீங்கு விளைவிக்கும். இந்த பொது சிவில் சட்டம் வந்தால் மாமன் மகள், அக்கா மகள் போன்ற உறவு முறையில் திருமணம் செய்ய இயலாது. இப்போது உள்ள இந்து திருமணச் சட்டத்தின்படி மனைவி வழியில் 3 தலைமுறைக்கும், கணவர் வழியில் 5 தலைமுறைக்கும் சொந்தத்தில் திருமணம் செய்யத் தடை உள்ளது. ஆனால் பழக்கம் வழக்கம், கலாசாரம் போன்றவற்றின் அடிப்படையில் சொந்தங்களுக்குள் இத்திருமணங்கள் நடைபெற அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இந்த சட்டம் வந்தால் இனி அது போன்ற சொந்தங்களுக்குள் திருமணம் செய்திட தடைவரும்.
  • தற்போது தமிழகத்தை தவிர இந்து திருமணத்திற்கு பதிவு செய்ய வேண்டும் என்பது தேவையில்லை. தாலி கட்டுவது (தமிழ்ப் பண்பாட்டில்) அல்லது அக்னியை ஏழு முறை சுற்றி வருவது என வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி நடைபெறும் சம்பிரதாய சடங்குகளே திருமணத்திற்குப் போதுமான சான்றாகும். திருமணமுறைகள் பல உள்ளன. 1955 இன் பிரிவு 7, திருமணத்தின் போது சில ஆன்மிகச் சடங்குகள் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. சட்டத்தின் பார்வையில் ஒரு திருமணத்திற்குக் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தை வழங்குவதற்கு இத்தகைய செயல்திறனை இந்தப்பிரிவு கட்டாயமாக்குகிறது.
  • ஒவ்வொரு மரபுக்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி சம்பிரதாய முறைகள், மந்திரங்கள் உள்ளன. இவ்வாறு பலவகை திருமணங்களும், அதற்கான சாஸ்திர மரபுகளும் உள்ளபோது, இனி புரோகிதர்கள் மந்திரம் ஓதி நடத்தி வைக்கும் சீர்மிகு திருமணம் அல்லது வழக்கமான வகையில் நடைபெறும் திருமணங்கள் போன்றவை பொது சிவில் சட்டத்தால் அங்கீகரிக்கப் படாது. அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, மந்திரங்கள் ஓதி திருமணம் செய்யும் முறைக்கு மாற்றாக மக்களின் வாழ்த்துக்களுடன் திருமணம் செய்து கொள்ளும் சுயமரியாதைத் திருமணங்களுக்கென சட்டம் கொண்டு வந்து அத்திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தார். பொது சிவில் சட்டம் வந்தால் சுயமரியாதை சீர்திருத்த திருமணங்கள் அங்கீகரிக்கப்படப் போவதில்லை. அதேநேரத்தில், இந்திய மக்கள் பல்வேறு மத, மொழி, இனக் குடும்பமாக, “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடிப்படையில் அவரவர் பழக்கவழக்கங்களை பின்பற்றுவதை சட்டம் ஆதரித்து வந்த நிலையில், பிரச்சினையையும் பிரிவினையையும் விளைவிக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
  • இனி ஒரு அதிகாரியிடம் பதிவு செய்யப்படும் திருமணங்களை மட்டுமே பொது சிவில் சட்டமானது அங்கீகரிக்கும். இஸ்லாமியர்களுக்கு உள்ள திருமண பழக்கவழக்கம் பற்றி பார்க்கும் போது, ஷரியத் சட்டத்தைப் பின்பற்றுவது முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் ஒன்று. இந்தியாவில் இது ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்’ என்கிற பெயரில் 1937-ல் இயற்றப்பட்டது. முஸ்லிம் தனிநபர்கள், அவர்கள் குடும்பம் பற்றிய அக்கறை, முஸ்லிம் சமூகம் சார்ந்த திருமணம், மணமுறிவு, வாரிசு, வக்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களை கையாள்வது ஆகிய நான்கு விவகாரங்களுக்கு உள்ள இச்சட்டம் இனி பொது சிவில் சட்டம் வந்தால் செல்லாது! எனவே, இத்தகைய பொது சிவில் சட்டம் இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு 25 உத்தரவாதம் அளித்துள்ள மத சுதந்திரத்தை மீறும், இது சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மதத்திற்கும் பொருந்தும்.
  • இரண்டாவதாக, பிரிவு 29 சிறுபான்மையினர் தங்கள் தனித்துவமான கலாச்சாரத்தைப் பேணிக் காக்கும் உரிமையைப் பாதுகாக்கிறது. பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை அழித்துவிடும் என்ற நியாயமான அச்சம் உள்ளது. அந்த வகையில், சிறுபான்மையினரின் தனித்துவமான பாரம்பரியங்களையும் கலாச்சாரங்களையும் பொது சிவில் சட்டம் துடைத்தெறிந்துவிடும். இது இந்தியாவின் தனித்துவமான பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது. சிறுபான்மை சமூகங்கள் தங்கள் தனித்துவத்தை பாதுகாக்க விரும்புகின்றன. அவை வேறுபட்டு இருக்க அனுமதிப்பதே மதச்சார்பின்மையின் உண்மையான நோக்கம் ஆகும்.
  • நான் மதச்சார்பின்மைக்கு எதிரானவன் அல்ல. மதச் சாயம் இல்லாத ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் சேர விரும்புபவர்கள், தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில், சிறப்புத் திருமணச் சட்டம், 1954-ன் கீழ் அவ்வாறு செய்ய ஏற்கனவே சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று நாத்திகர்கள் மற்றும் கலப்புத் திருமண தம்பதிகள், சிறப்புத் திருமணச் சட்டத்தைப் பின்பற்றலாம். அதே போல் சுயமரியாதை சீர்திருத்த திருமணம் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம்.
  • இந்திய உச்ச நீதிமன்றமும் 'ஒன்றுபட்ட தேசம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை' என்று திரும்பத் திரும்பக் கூறியுள்ளது. டி.எம்.ஏ.பாய் அறக்கட்டளை vs கர்நாடக அரசு மற்றும் பலர் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம், 'இந்தியாவில் மதச்சார்பின்மையின் சாராம்சம் என்பது, பல்வேறு மொழிகள் மற்றும் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட, பல்வேறு வகையான மக்களை அங்கீகரித்து பாதுகாப்பதும், அவர்களை ஒன்றிணைத்து ஒரு முழு ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதுமே ஆகும்' என்று கூறியுள்ளது. பின்வரும் சொற்றொடரானது வேற்றுமையில் ஒற்றுமை எனும் உணர்விற்கு அடித்தளமாக இருக்கிறது.
  • 'ஒரு பில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவானது 6 முக்கிய இனக்குழுக்கள், 52 பெரிய பழங்குடிகள், 6 பெரிய மதங்கள் மற்றும் 6,400 சாதிகள் மற்றும் துணை சாதிகள், 18 பெரிய மொழிகள் மற்றும் 1,600 சிறிய மொழிகள் மற்றும் கிளைமொழிகள் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்தியாவின் வரைபடமானது சமூகங்களாக வரையப்பட்டால், மேற்கூறிய 100 பில்லியன் மக்களும் அதன் சிறு சிறு துகள்களாக இருப்பார்கள் என்பதன் மூலம் இந்தியாவில் மதச்சார்பின்மையின் சாராம்சத்தை சிறப்பாக வெளிக்கொணர முடியும். ஒவ்வொரு நபருக்கும், அவரது மொழி, சாதி, மதம் எதுவாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட அடையாளம் உள்ளது. அது பாதுகாக்கப்பட வேண்டும். இதனால் அது ஒன்றிணைக்கப்படும்போது அது இந்தியாவின் வெவ்வேறு புவியியல் அம்சங்களுடன் ஒரு சித்தரிப்பாக மாறும். தனித்தனியாக ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கக்கூடிய இந்த சிறிய பளிங்குத் துண்டுகள், மனிதர்களின் வடிவத்தில், முறையான முறையில் ஒன்றாக வைக்கப்படும்போது, இந்தியாவின் அழகான வரைபடத்தை உருவாக்குகின்றன.
  • ஒவ்வொரு துண்டுகளும், ஒரு இந்தியக் குடிமகனைப் போலவே, முழுமையான இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வரைபடத்தில் வண்ணங்களின் மாறுபாடுகளும், ஒரே நிறத்தில் உள்ள பல்வேறு நிறத்தன்மைகளும், பளிங்குக் கற்களின் வெவ்வேறு நிறத்தன்மைகள் மற்றும் வண்ணங்களின் விளைவாகும். ஒரு சிறிய பளிங்குத் துண்டு அகற்றப்பட்டால் கூட, இந்தியாவின் முழு வரைபடமும் சிதைந்து, அழகு இழக்கப்படும்' ஆகவே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தேசத்தின் பன்முகத்தன்மையை அழித்துவிடும்.
  • மற்றொரு தவறான கருத்து என்னவென்றால், பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரால் எதிர்க்கப்படுகிறது என்பதாகும். பொது சிவில் சட்டத்தை கிறிஸ்துவ பிரச்சினையாக முன்னிறுத்தும் தவறான வழிநடத்தலுக்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு. இந்து மதத்திற்குள் கூட, பழங்குடியினர் போன்ற சில குழுக்கள் பொது சிவில் சட்டத்தை விரும்பவில்லை. உதாரணமாக, ராஷ்ட்டிரிய ஆதிவாசி ஏக்த பரிஷத் எனும் பழங்குடியின குழுவானது 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தினை அணுகி பொது சிவில் சட்டத்தின் சாத்தியமான விளைவுகளில் இருந்து தங்கள் மரபுகள் மற்றும் கடுமையான நடைமுறைகளுக்கு பாதுகாப்பை நாடினர். பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் தனித்துவமானவை மற்றும் அவை மற்ற இந்து பழக்கவழக்கங்களுடன் இணைக்க முடியாதவை.

மாநிலத்தின் சட்டமியற்றும் அதிகாரம் பற்றிய கவலைகள்

  • சட்டம் இயற்றும் மாநிலத்தின் அதிகாரமும் ஒரு முக்கியமான விஷயம். திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் சொத்துரிமைகள் போன்ற விஷயங்கள் அரசியலமைப்பின் பொதுப்பட்டியலின் கீழ் வருகின்றன. இது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை இந்த விஷயங்களில் சட்டங்களை இயற்ற அனுமதிக்கிறது. இருப்பினும், அரசியலமைப்பின் பிரிவு-44 பொது சிவில் சட்டமானது "இந்திய பிராந்தியம் முழுவதும் உள்ள குடிமக்களுக்கு" பொருந்தும் என்று வரையறுக்கிறது, எனவே, மாநிலங்களுக்கு அதை திருத்த அதிகாரம் இல்லை என்றும் கூறுகிறது.
  • இவை தவிர, பொதுப்பட்டியலில் உள்ள விஷயங்களுக்குக் கூட, ஒன்றிய அரசானது ஒரு சட்டத்தை இயற்றியவுடன், இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறாமல் மாநில அரசானது அத்தகைய சட்டத்தை மாற்ற முடியாது. எனவே, ஒன்றிய அரசின் கைதான் மேலோங்கியிருக்கும், அது இயற்றும் பொது சிவில் சட்டமானது இந்தியா முழுமைக்குமான சட்டமானதாகவே இருக்கும். மாநில அரசு சட்டம் இயற்றும் அதிகாரத்தை இழந்துவிடும்.

பொது சிவில் சட்டம் சம உரிமைகளைப் பாதுகாக்கிறது என்ற தவறான வழிகாட்டுதல்

  • பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் வாதம், பொது சிவில் சட்டம் பலதார மணம் போன்ற விரும்பத்தகாத நடைமுறைகளை அகற்றும் அல்லது பெண்களுக்கு சமமான சொத்துரிமை வழங்கிட வழிவகுக்கும் என்பதாகும். இதுவும் ஒரு அர்த்தமற்ற விவாதம் ஆகும். சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் என்று வரும்போது, தனிநபர் சட்டங்களிலேயே திருத்தங்களைச் செய்யலாம். அதாவது தந்தை மற்றும் கணவரின் சொத்துக்களில் பெண்களுக்கு சம பங்கு வழங்குவதற்காக இந்து வாரிசுரிமைச் சட்டம் எவ்வாறு திருத்தப்பட்டதோ அதைப் போன்று. திருமணம் போன்ற புனித நிகழ்வுகளில் இருந்து மதப் புனிதத்தை முற்றிலுமாக நீக்கி, அதை சொத்துப் பதிவு போல நடத்துவதையே நான் எதிர்க்கிறேன்.
  • பழங்குடியினரின் அரசியல் அமைப்பு பாதுகாப்பு சட்டம் மற்றும் ஆறாவது அட்டவணைக்கு குந்தகம் விளைவிக்கும் பொது சிவில் சட்டம்!
  • அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையானது அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினப் பகுதிகளின் நிர்வாகம் தொடர்பான விதிகளைக் கையாள்கிறது. குடும்பச் சட்டத்தின் விவகாரங்களில் முழு சுயாட்சியை அனுமதிக்கும் விதிகள் உள்ளன. அவை தங்கள் சொந்த நடைமுறையைப் பின்பற்றி உள்ளூர் பஞ்சாயத்தால் தீர்மானிக்கப்படலாம். இவை அனைத்தும் பழங்குடியின மாநிலங்களில் உள்ள மக்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் ஆகும்.
  • இந்திய அரசியலமைப்பின் 371 (A) முதல் (J) வரை மற்றும் ஆறாவது அட்டவணையானது அசாம், நாகாலாந்து, மிசோரம் ஆந்திரா / தெலுங்கானா, அருணாச்சல பிரதேசம், கோவா மற்றும் கர்நாடகா ஆகிய சில மாநிலங்களுக்கு சில பாதுகாப்புகள் தொடர்பான சில பாதுகாப்புகளை வழங்குகிறது. எனவே, பொது சிவில் சட்ட ஆலோசனைகள் என்பது இந்த மாநிலங்களுக்கு குறிப்பாக தங்களுக்கென்று ஒரு வழக்கமான சட்டம் மற்றும் தீர்ப்பாயங்களைக் கொண்டுள்ள பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பாதுகாப்புக்கு எதிரானது.
  • முடிவாக, பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதற்குக் காரணம், அது திருமணம் போன்ற புனித சடங்குகளை இழிவுபடுத்துகிறது. மதநம்பிக்கை கொண்டவர்களுக்கிடையே திருமணம் என்று வரும்போது மத நிறுவனங்களின் அதிகார வரம்பிற்குள் இது இருக்க வேண்டும். ஏற்கனவே, சிறப்புத் திருமணச் சட்டம், 1954-ல் உள்ளதைப் போல நாத்திகர்கள் அல்லது மதங்களுக்கு இடையேயான திருமணங்களுக்கு சிவில் சட்டங்களைப் பயன்படுத்தலாம். பொது சிவில் சட்டம் என்கிற கருத்து மேலோட்டமாகத் தோன்றினாலும், அது நமது பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கத்தை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது. மத சுதந்திரத்தைப் பாதுகாத்தல், கலாச்சார பன்முகத்தன்மையை மதித்தல் மற்றும் எதிர்பாராத விளைவுகளைத் தவிர்த்தல் போன்றவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
  • பொது சிவில் சட்டத்தை திணிப்பதற்கு பதிலாக, விரும்பத்தகாத நடைமுறைகளைக் களைவதற்கு சமூகங்களுக்குள் உரையாடல், புரிதல் மற்றும் படிப்படியான சீர்திருத்தங்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த வழிமுறைகளின் மூலம் தனிமனித உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் மதநல்லிணக்கத்திற்கு இடையே சமநிலையை ஏற்படுத்த முடியும். அதேபோல், சட்டங்களை விட உரிமைகளில் சீரான தன்மையை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும். தனிநபர் சட்டங்களைத் திருத்துவதன் மூலம் பெண்களின் சமத்துவத்தைப் பாதுகாக்க நாம் எப்போதும் நடவடிக்கை எடுக்க முடியும். இவை ஏற்கெனவே இந்தியாவின் 21 வது சட்ட ஆணையத்தால் வழங்கப்பட்ட மிகவும் தீர்க்கமான பரிந்துரைகள் ஆகும்.
  • இப்படியிருக்கும் பொழுது, 22-வது சட்ட ஆணையமானது மக்களின் வரி பணத்தில் முழு நடவடிக்கைகளையும் மறுபரிசீலனை செய்வதற்கும், நேரத்தை வீணடிப்பதற்கும் உண்டான காரணம் ஏதும் தற்பொழுது இல்லை. ஆழமாக வேரூன்றிய மத நம்பிக்கையைக் கையாளும்போது, எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முடியாது. இரக்கம், புரிதல் மற்றும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்கிற அந்த அனுபவத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories