TNPSC Thervupettagam

இந்தியாவின் மகள்

February 1 , 2025 6 hrs 0 min 15 0

இந்தியாவின் மகள்

  • ‘அருணா, உனக்கேன் இந்த வீண் வேலை? வீட்டில் நிம்மதியாகக் கிடப்பதற்குப் பதில் போராடுவேன், கொடி பிடிப்பேன், கோஷம் போடுவேன் என்று எதற்காக ஆண்களுக்குச் சமமாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறாய்? நீ சின்ன பெண். வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும். பிரிட்டிஷ்காரர்கள் பொல்லாதவர்கள். ஒரு நாள்போல் ஒரு நாள் இருக்காது.
  • கொத்தாகப் பிடித்துச் சென்று சிறையில் தள்ளினால் என்ன செய்வாயாம்? லத்தியால் நாலு போடு போட்டால் தாங்குவாயா? இன்னொரு வீட்டுக்குப் போய் வாழ வேண்டிய பெண். பொறுப்போடு, பத்திரமாக நடந்துகொள்ள வேண்டாமா?’ இப்படி ஆண்கள் சொன்னால் பரவாயில்லை, உன் நல்லதுக்குத்தான் சொல்கிறேன் என்று அழைத்து அமர வைத்து, பெண்களும் அல்லவா இதே அறிவுரையை வழங்குகிறார்கள்? காந்தி போகலாம். நேரு போகலாம். தாகூரும் கான் அப்துல் கானும் போகலாம். இவர்கள் ஒவ்வொருவரையும் ஆண்களின் படை பின்தொடர்ந்து செல்லலாம். ஆனால், அருணா ஆசஃப் அலி செல்லக் கூடாது.
  • ஆண்கள் கொடி பிடித்து முழக்கமிடலாம். ஆண்கள் அடி, உதை வாங்கலாம். ஆண்கள் சிறை செல்லலாம். பெண்கள் கதவை அடைத்துக்கொண்டு வீட்டுக்குள் காத்திருக்க வேண்டுமாம். ‘உனக்கு என்ன வேண்டும் சொல். வரும்போது நான் வாங்கி வருகிறேன்.
  • அதுவரை கதவை அடைத்துக்கொண்டு உள்ளே இரு. யார் வந்தாலும் திறக்காதே’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் செல்கிறார்கள் அப்பாக்களும் கணவர்களும் பிள்ளைகளும். அரிசியும் கோதுமையும் எண்ணெயும் உருளைக்கிழங்கும் வாங்கி வந்து வீட்டில் கொட்டுவதுபோல் விடுதலையையும் வாங்கிவந்து கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ!
  • எனக்கும்தானே வேண்டும் விடுதலை? எனக்கும்தானே வேண்டும் ஜனநாயகம்? இந்தியா என்னுடைய நாடும்தான் இல்லையா என்று கேட்டால், ‘அருணா, அரசியல் எல்லாம் உனக்கு எதற்கு’ என்கிறார்கள். நானும் வருகிறேன், காந்தி பேசுகிறார் என்றால், ‘நீ என்ன செய்வாய் அங்கே வந்து?’ நேருவைப் பார்க்க வேண்டும் என்றால், ‘பார்த்து என்ன செய்யப் போகிறாய்?’ மூவர்ணக் கொடியை நானும் ஏந்துவேன் என்றால், ‘கூடாது, அபாயம். என்ன இருந்தாலும் நாளை இன்னொரு வீட்டில்...’
  • ஐயா, இன்று நாம் வாழும் வீடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நாம் முதலில் வெளியில் வந்தாக வேண்டும். நாளை நானும் என்னைப் போன்ற பெண்களும் எந்த வீட்டுக்குப் போய் எப்படி வாழப் போகிறோம் என்பதை நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம். நாம் தயவுசெய்து இன்றைய தேதியைப் பற்றி மட்டும் சிந்திப்போமா? பிரிட்டிஷார் இந்திய ஆண்களை ஆக்கிரமித்திருக்கிறார்களா அல்லது ஒட்டுமொத்த இந்தியாவையுமா? காந்தி ஒரு மகாத்மா, சந்தேகமில்லை.
  • ஆனால் அவர் ஆண்களின் மீட்சிக்காகப் போராடுகிறாரா அல்லது இந்தியாவின் மீட்சிக்காகவா என்று தயவுசெய்து கூர்ந்து கேளுங்கள். நேருவும் தாகூரும் ஆண்கள் குறித்துச் சிந்திப்பவர்களா, அல்லது இந்தியர்கள் குறித்தா என்பதையும் கவனியுங்கள். நீங்கள் ஏந்தியிருப்பது ஆண்களின் கொடி அல்ல, இந்தியாவின் கொடி. இதை ஒரு கணமும் மறக்காதீர்கள்.
  • உனக்கு எதற்கு அரசியல் என்று இன்னொருமுறை எந்தப் பெண்ணையும் பார்த்துக் கேட்காதீர்கள். நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளும் அரசியலை நாங்கள் வீட்டிலும் வீதியிலும் கண்டும் உணர்ந்தும் கற்றுக்கொள்பவர்கள். ஆக்கிரமிப்பு என்றால் என்ன, அடிமைத்தனம் என்றால் என்ன என்பதை உங்கள் அனைவரையும் விட நாங்கள் நன்றாக அறிவோம். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் எனும் பெருங்கனவு உங்களுக்கு முன்பே எங்களுக்குத் தோன்றிவிட்டது. அந்தக் கனவைச் சுமந்துகொண்டு திரியாத ஒரேயொரு பெண்கூட இங்கு இல்லை. இந்தியப் பெண்களின் கனவுகூட இல்லை இது.
  • உலகப் பெண்களின் கனவு. இந்தக் கனவுதான் பெண்களின் இதயம், பெண்களின் உயிர். காந்தியும் நேருவும் கண்டும் கேட்டும் வாசித்தும் அரசியல் உணர்வு பெற்றனர். கஸ்தூரிபாவும் கமலாவும் அருணாவும் பிறந்த நொடியிலேயே அந்த உணர்வைப் பெற்றுவிட்டனர். இந்தியாவை விடுவிக்க உங்கள் உணர்வுகள் போதாது. உங்கள் அரசியல் போதாது. உங்கள் ஆற்றல் போதாது. எப்போது அருணாக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருகிறார்களோ அப்போதுதான் கிடைக்கும் விடுதலை.
  • ‘இது என் மண், என் தேசம், என் கொடி’ என்று எப்போது அவர்கள் உணர்கிறார்களோ அப்போதுதான் கிடைக்கும் விடுதலை. எங்கள் வியர்வைத்துளி கலக்காத நிலம், எங்கள் பாதங்கள் பதியாத பூமி செழிப்பதில்லை. எப்போது நாங்கள் சிறை செல்கிறோமோ அப்போதுதான் இந்தியாவின் விலங்குகள் உடையும். எங்கள் குரல் ஒலிக்கத் தொடங்கும்போது, எங்கள் எழுத்துகள் வாசிக்கப்படும்போது, எங்கள் தலைமையும் ஏற்கப்படும்போது புதிய இந்தியா தோன்றும்.
  • வீட்டைக் கவனித்துக்கொள்ளப் பிறந்தவர்கள் அல்லர் நாங்கள். நாட்டை ஆளப் பிறந்தவர்கள். உப்பு டப்பாவைக் கவனித்துக்கொள்வது அல்ல எங்கள் வேலை. காந்தியின் தோளோடு தோள் உரசி, உப்பு சத்தியாகிரகத்தை முன் வரிசையில் நின்று நாங்கள் நடத்த விரும்புகிறோம். வலியைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றல் உங்கள் எல்லாரையும்விட எங்கள் உடல்களுக்கே அதிகம்.
  • இது எங்கள் போராட்டம். எங்கள் வலி. எங்கள் ஏக்கம். எங்கள் கனவு. ஆண்களின் போராட்டமாக, ஆண்களின் வலியாக, ஆண்களின் ஏக்கமாக, ஆண்களின் கனவாக விடுதலையைச் சுருக்கிவிடாதீர்கள். இந்தியா என்னுடையதும்தான். ஏனென்றால் நான் இந்தியாவின் மகள்.

அருணா ஆசஃப் அலி:

  • இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர். கல்வியாளர், பதிப்பாளர். உப்பு சத்தியாகிரகத்தின்போது சிறை சென்றார். அரசியல் கைதிகளை விடுவித்தபோது இவரை ஆங்கிலேய அரசு விடுவிக்காததால், விடுவிக்கச் சொல்லி மக்கள் போராடினர். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது பல தலைவர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், துணிச்சலுடன் மும்பையில் காங்கிரஸ் கொடியை ஏற்றினார் அருணா. இவர் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories