- தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த நிமல் ராகவன் ஒரு பொறியியல் பட்டதாரி. துபாயில் நல்ல ஊதியத்தில் வேலையில் இருந்தார். இரண்டு மாத விடுமுறையில் சொந்த ஊர் திரும்பிய அவருக்குப் புது வீடு கட்டி, பெற்றோரைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதுதான் கனவு.
- ஆனால், ஒரு கொடிய இரவு விடிந்தபோது அவர் கண்ட காட்சி சொந்தக் கனவைப் பின்னுக்குத் தள்ளியது. நிமல் தற்போது உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு, ‘நீர்ப் போராளி’. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேசத்தின் பிற மாநிலங்களிலும் கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கியாட்டு நகரிலும் அவரை ‘இந்தியாவின் ஏரி மனிதர்’ என்றே அழைக்கிறார்கள்!
- நிமல் ராகவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்தச் சம்பவம் கஜா புயல். அவர் ஊருக்குத் திரும்பிய இரண்டாவது வாரத்தில், நவம்பர் 15 அன்று நள்ளிரவு டெல்டா மாவட்டத்தின் கடை மடைப் பகுதியான வேதாரண்யத்தில் தரையிறங்கியது கஜா புயல். மணிக்கு 128 கிலோ மீட்டர் வேகம்.
- கோரப் பசியுடன் சீறிப்பாய்ந்தபடி அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு உள்ளிட்ட பல ஊர்களைச் சிதைத்துச் சின்னா பின்னம் செய்துவிட்டு, அதிகாலை அரபிக் கடலில் ஐக்கியமானது. 63 மனித உயிர்கள், 12.5 லட்சம் கால்நடைகள் மடிந்திருந்தன. 50 லட்சம் தென்னை மரங்களை வேறோடு சாய்த்துப் போட்டுவிட்டுப் போனது.
- நவம்பர் 16 காலை திகைத்து நின்ற விமல் உடனடியாக நண்பர்களுடன் களமிறங்கினார். நீரின்றி, உணவின்றி, மின்சாரமின்றித் தவித்த கிராமத்து மக்களுக்கு ஓடி ஓடி தண்ணீர், உணவுப் பொருள்கள் கொடுப்பது உள்ளிட்ட பலவித மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். இரண்டு வாரங்கள் நீடித்த மீட்புப் பணியில், இது ஒருபோதும் நிரந்தரத் தீர்வல்ல என்கிற உண்மை அவருக்குப் புலப்பட்டது.
- “டெல்டா மக்களுக்கு கஜா ஒரு பேரழிவு. அரசு தன் சக்திக்கு உள்பட்ட நிவாரணத்தை வழங்கியது. ஆனால், தங்கு தடையில்லாமல் நடைபெறும் விவசாயம் மட்டும்தான் எங்கள் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் என்பதை உணர்ந்தோம். கஜாவுக்கு முன்பும் அதன் பிறகும் நெல் சாகுபடி நடைபெற்றுவந்த பல ஆயிரம் ஏக்கர் நிலம், பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாததால் அப்படியே கட்டாந்தரையாக விடப்பட்டிருந்தது.
- நெல், கரும்பு விவசாயத்தைக் கைவிட்டு, தென்னை கைகொடுக்கும் என்று அவர்கள் நகர்ந்து சென்றதற்குத் தண்ணீர் இல்லாததுதான் காரணம். நெல், கரும்பை அவர்கள் மீண்டும் நாட வேண்டுமானால் நீர் மேலாண்மையைக் கையிலெடுக்க வேண்டும் என்று உணர்ந்தோம்.
- மழை நீரைத் தேக்கி வைத்து விவசாயம் செய்யப் பயன்பட்ட பெரிய பெரிய ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தினால் இது சாத்தியம் என்பதைப் புரிந்துகொண்டு, கடைமடைப் பகுதி விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தை (KAIFA - kadaiMadai Area Integrated Farmers Association) உருவாக்கினோம். அதில் சாதி, மதம், கட்சி, அரசியல் பேதமின்றி இணைந்தோம். அரசாங்கத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம், நமக்கான தேவையை நாமே செய்து முடிப்போம் என்று முடிவெடுத்தோம்.
- அதில் நாங்கள் செய்த முதல் பணி பேராவூரணி பெரிய குளத்தைத் தூர்வாரிச் சீரமைத்தது. பெரிய குளம் என்கிற பெயரைப் பார்த்து ஏதோ குளம் என்று நினைத்துவிடாதீர்கள். பெயர்தான் பெரிய குளமே தவிர, பேராவூரணி வட்டத்தில் பத்துக்கும் அதிகமான கிராமங்களை இணைக்கும் பரந்து விரிந்த ஏரி. 564 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடல் போன்ற இதைத் தூர்வார முடியுமா என்று எல்லாருக்கும் சந்தேகம் இருந்தது.
- ஆனால், எது நமது வாழ்வாதாரம், எது நமது உயிர்நிலை என்கிற ரகசியம் வெளிப்பட்டுவிட்டால், சந்தேகமும் தயக்கமும் ஒரு நொடியில் காணாமல் போய்விடும் அல்லவா? அப்படித்தான் அந்த அற்புதம் நடந்தது. கனரக மண் அகழி இயந்திரங்கள், டிப்பர் லாரிகள், மனித வளத்தைக் கொண்டு 104 நாள்கள் தொடர்ந்து தூர் அள்ளி, பேராவூரணி பெரிய ஏரியை உயிர்ப்பித்தோம்.
- இன்று அந்த ஏரி கோடையிலும் கடலாக மாறி நிற்கிறது! தற்போது அந்த ஏரிப் பாசனத்தின் மூலம் 5,500 ஏக்கர் நெல், கரும்பு விவசாயம் நடைபெற்றுவருகிறது. 300 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர், 30 அடிக்கு உயர்ந்துவிட்டது. இந்த முதல் அனுபவத்தில் நானும் நண்பர்களும் கற்றுக்கொண்டவை ஏராளம்” எனும் நிமல் ராகவன், அதன் பின்னர் தனது ‘கைபா’ குழுவுடன் சென்று டெல்டா மாவட்டங்களில் பல நீர் நிலைகளைத் தூர்வாரி, புனரமைத்துக் கொடுத்தார்.
- ‘கைபா’வின் புகழ் பரவ, வெளிமாவட்ட மக்களின் அழைப்பை ஏற்று ராமநாதபுரம், கோவை, தர்மபுரி எனத் தமிழ்நாட்டிலும் மகாராஷ்டிரம், குஜராத் எனப் பிற மாநிலங்களிலும் ஏரிகளை உயிர்ப்பிக்கும் பணிக்காகத் தன்னையும் தன் குழுவையும் அர்ப்பணித்துக்கொண்டு நீர்வழிப் பயணத்தை இவர் தொடர்ந்துவருகிறார்.
- ராமநாதபுரம் என்றாலே ஞெகிழிக் குடங்களை ஒரு கைவண்டியில் வைத்துப் பல மைல் தூரம் தள்ளிக்கொண்டு போய் குடிநீர் எடுத்துவரும் எளிய மக்களின் துயரக் காட்சி கண்களில் நீரை நிரப்பும். இனி அவை கடந்த கால நினைவுகள் ஆகும் விதமாக ஒரு செயலைச் செய்திருக்கிறார் நிமல். ராமநாதபுரத்தில் மண் மேடிட்டுப் போன 15 கி.மீ. நீளம் கொண்ட சங்கரத்தேவன் கால்வாயைத் தூர்வாரிச் சீரமைத்துக் கொடுக்க, அந்தக் கால்வாய் 150க்கும் மேற்பட்ட குளங்களையும் ஏரிகளையும் மழை நீரால் நிரப்பிவிட்டது.
- “ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டம் இல்லை, தண்ணீரைச் சேமிக்காத மாவட்டம். இப்போது மக்கள் விழிச்சுக்கிட்டாங்க” எனும் நிமல், மக்கள் தேடிவந்து அழைக்கும் தூர்வாரும் பணிக்காக ‘மெகா ஃபவுண்டேஷன்’ என்கிற தன்னார்வ அறக்கட்டளையை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறார். இவருடன் இணைந்து பணிபுரிய ஐ.டி. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தமிழகம் முழுவதுமிருந்தும் வட மாநிலங்களிலிருந்தும் ஓடோடி வருகிறார்கள்.
- இதுவரை நண்பர்கள், மக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இணைந்து நிமல் ராகவன் தூர்வாரி உயிர்ப்பித்திருக்கும் ஏரிகள், பெருங்குளங்களின் எண்ணிக்கை மட்டுமே 205. இவரது பணியைப் பார்த்து கென்யாவின் கியாட்டு நகர மக்கள் அழைக்க, இந்தியாவுக்கு வெளியேயும் நிமல் ராகவனின் நீர்ப் புரட்சி தொடர்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 07 – 2024)