TNPSC Thervupettagam

இந்தியாவில் ஆங்கிலம் தொடர இந்தியர்கள் அண்ணாவுக்கு நன்றி சொல்ல

March 20 , 2019 2087 days 1676 0
  • சேவைப் பணித் துறையில் ‘அவுட்சோர்ஸிங்’ எனப்படும் அயலகப் பணி ஒப்படைவுகளைப் பெறுவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டுப் பணித் துறையில் சேவைப் பணித் துறையின் பங்களிப்பு 8%. இந்தியாவின் பொருளாதாரத்தில் இன்று ஆங்கிலம் செலுத்தும் செல்வாக்கைக் குறிப்பது இது. இந்தி பேசாத, குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்களே சேவைப் பணித் துறையில் குறிப்பிடத்தக்க பங்குவகிக்கின்றன. 2015-16-ல் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு 55.6%. தமிழ்நாட்டின் மொத்த உள்மாநில உற்பத்தியில் 54.6% சேவைப் பணித் துறையின் பங்களிப்பு. ஆங்கிலமின்றி இது சாத்தியமில்லை.
  • உலகமயமாக்கல் சூழலில், ஆங்கிலத்தின் துணை இல்லாமல் பொருளாதாரப் பாய்ச்சல் சாத்தியமே இல்லை என இந்தியா உணர்கிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் வழி இந்தியை மட்டுமே அலுவல் மொழியாக்கிக்கொண்டு, ஆங்கிலத்துக்கு முடிவுகட்ட முற்பட்ட நாடுதான் இது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்தியாவில் ஆங்கிலம் நீடிக்க யார் காரணம்? அண்ணாவைப் புறந்தள்ளிவிட்டு இந்த விஷயத்தைப் பேசவே முடியாது. அதனால்தான் நாடறிந்த பொருளாதார அறிஞரும், மூத்த பத்திரிகையாளருமான சுவாமிநாதன் எஸ்.அங்கலாசாரிய அய்யர் சொன்னார், “உலகுடன் இந்தியா உரையாடுவதற்கான சாளரமான ஆங்கிலத்தைப் பாதுகாக்க அண்ணா உதவியிருக்கிறார்!”
  • அண்ணாவின் 35-வது நினைவு தினத்தின்போது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையில் அவர் வாரந்தோறும் எழுதும் பத்தியில் எழுதினார், “தமிழ்நாட்டில் காங்கிரஸின் மேலாதிக்கத்தையும் பிராமணர்களின் ஆதிக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தவர் என்ற வகையிலேயே பெரிதும் அண்ணா நினைவுகூரப்படுகிறார். ஆனால், இன்றைக்கு அவரை நாம் புதிய வெளிச்சத்தில் பார்க்க வேண்டியிருக்கிறது. அண்ணாதான் இந்தியாவை இந்தி மேலாதிக்கத்திலிருந்து விடுவித்து, ஆங்கிலம் தொடர்வதை உறுதிப்படுத்தி, மேற்குலகிலிருந்து இந்தியாவுக்கு லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிற அவுட்சோர்ஸிங் புரட்சிக்கான சாத்தியத்தை ஏற்படுத்தியவர். ஆங்கிலம் பேசுகின்ற மக்கள்தொகையின் காரணமாகவே இன்றைக்கு நாம் அவுட்சோர்ஸிங் வாய்ப்புகளைப் பெறும் போட்டியில் முதலிடத்தில் இருக்கிறோம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறோம்.”
ஒரு குஜராத்தி உதாரணம்
  • ஆங்கிலத்தைப் புறக்கணித்து, இந்தியைத் தழுவிக்கொண்ட மாநிலங்கள் உலகமயச் சூழலுக்குப் பின் இந்தியை ஏற்றதன் பின்விளைவுகளை உணர்ந்தன. மிகச் சிறந்த உதாரணம், நாட்டுக்கே தொழில் வளர்ச்சியில் முன்னோடியாகப் பேசப்படும் மாதிரியான குஜராத். அங்குள்ள வல்லமை மிக்க நிலவுடைமைச் சமூகமான படேல்கள் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டுப் போராடி, மாநிலத்தையே ஸ்தம்பிக்கவைத்த நாட்களில் குஜராத்தி எழுத்தாளரான ஆகார் படேல் இப்படி எழுதினார்: “எங்களிடம் ஆங்கிலம் இல்லை. அதனால், இந்தியாவின் புதிய நகர்ப்புற மத்திய வர்க்கத்தால் உருவாக்கப்படும் புதிய சேவைப் பணித் தொழில்களில் பங்குபெற முடியவில்லை.”
  • ஆகார் படேல் மேலும் குறிப்பிட்டார், “படேல்களின் போராட்டங்களைப் போல மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், குருகிராம் மற்றும் நொய்டா ஆகிய நகரங்களில் போராட்டங்கள் நடக்காது. அந்நகரங்களில் இளைஞர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களால் ‘ஒயிட் காலர்’ வேலைகளை எளிதாகப் பெற முடியும். ஆங்கிலத்தின் துணையோடு பெரும்பாலானவர்கள் இந்த வேலைவாய்ப்புகளைப் பெறுகிறார்கள். அதன் வழியாக உலகப் பொருளாதாரத்தோடு தங்களை ஒருங்கிணைத்துக்கொள்கிறார்கள். இந்த வாய்ப்பு குஜராத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்களுக்குக் கிடைக்கவில்லை. ஏனென்றால், அரசுப் பள்ளிகள் இங்கு ஐந்தாம் வகுப்பு வரையில் ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதில்லை.”
  • இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தியைத் தேர்ந்தெடுப்பது குறித்து, அரசியல் நிர்ணய சபையில் வாக்கெடுப்பு நடந்தபோது, இந்திக்கு ஆதரவாக 77 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் விழுந்தன. அவையின் தலைவர் தனது ஒரே வாக்கை இந்திக்கு ஆதரவாகச் செலுத்தியபோது ஆட்சிமொழியானது இந்தி. இந்தி பேசாத மாநிலங்களின் எண்ணங்களை வெறும் ஒரு ஓட்டில் தோற்கடித்து இந்தியை ஆட்சிமொழியாக்கியவர்கள், அடுத்த கட்டமாக ஆங்கிலத்துக்கு முடிவுகட்ட எத்தனித்தார்கள். ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி. ஆனால், ‘15 ஆண்டுகள் வரை மட்டும் ஆங்கிலமும் கூடுதலாகப் பயன்படுத்தப்படலாம்’ என்ற கெடுவை இந்தி பேசாத மக்கள் மீது திணித்தபடிதான் 1950-ல் இந்தியா குடியரசு ஆனது. அதாவது, 1965 வரை மட்டுமே ஆங்கிலம் தொடர்புமொழியாக இருக்கும் என்றது அரசமைப்புச் சட்டத்தின் பகுதி 17, கூறு
  • அரசியல் சட்டத்தின் 17-வது பகுதிக்கு உயிர் கொடுப்பதற்காக 1955-ல் பி.ஜி.கேர் தலைமையில் ஆட்சிமொழிக் குழு அமைக்கப்பட்டது. விழித்தெழுந்தது தமிழகம். தமிழார்வலரான ஏ.சுப்பையாவின் ஏற்பாட்டில் 1956-ல் ராஜகோபாலாச்சாரியாரின் இல்லத்தில் தலைவர்களும் தமிழறிஞர்களும் கூடினார்கள். அக்கூட்டத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து முதல் கையெழுத்துப் போட்டார் ராஜாஜி. இந்தி மட்டுமே அலுவல்மொழி என்ற பகுதி-17ஐ உள்ளடக்கிய இந்திய அரசியல் சட்டத்தில் முதல் கையெழுத்திட்ட ராஜகோபாலாச்சாரியார்தான் இந்தித் திணிப்பை எதிர்த்தும் முதல் கையெழுத்தைப் போட்டார். 1937-ல் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தியவரும்கூட அவர்தான். 20 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தித் திணிப்பையும் அதற்குக் காரணமான ராஜகோபாலாச்சாரியாரையும் எதிர்த்த பெரியார் இரண்டாவது கையெழுத்தை இட்டார். 1949-ல் திகவிலிருந்து திமுக பிரிந்த பிறகு, திமுகவினர் பங்கேற்கும் கூட்டங்களைத் தவிர்த்த பெரியார், முதன்முதலில் அண்ணாவோடு கைகோத்தது அந்தக் கூட்டத்தில்தான்.
இந்தி எதிர்ப்புப் போராளியான ராஜாஜி
  • தொடர்ந்து தமிழ்நாட்டில் வெடித்த மொழிப் போர், அதில் தன்னுயிர் கொடுத்து இந்தி ஆதிக்கத்துக்குத் தடைபோட்ட திராவிட இயக்கத்தினருடைய தியாகம் ஆகியவற்றின் விளைவாகவே இன்றும் தொடர்புமொழியாக ஆங்கிலம் நீடிக்கிறது. விளைவாக, மொழிப் பாடமாகவும் பயிற்றுமொழியாகவும் நாடெங்கும் ஆங்கிலம் கற்பிக்கப்படும் சூழல் உருவானது. அண்ணாவின் தொலைநோக்குப் பார்வைக்கு இதில் முக்கியமான பங்குண்டு. 9.1957 அன்று திருவண்ணாமலையில் நடந்த திமுக மாநாட்டின் முதல் நாள், இந்தி எதிர்ப்பு மாநாடாக நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் சைவ சமயவாதியான அருணகிரி அடிகள். 1958-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் அலுவல்மொழி சார்ந்த பிரச்சினையை திமுக கையிலெடுத்தது. குறைவான உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டிருந்த எதிர்க்கட்சி என்ற நிலையிலும், அரசியல் சட்டத்தின் பகுதி 17 திருத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைச் சட்டமன்றத்தின் முன் வைத்தது. க.அன்பழகன் முன்மொழிந்த அந்தத் தீர்மானத்தை 14 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரித்தார்கள். 121 பேர் எதிர்த்து வாக்களித்தார்கள். வங்க சட்டமன்றத்தில் இந்தியை ஆட்சிமொழியாக ஏற்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவோ அந்தத் தீர்மானத்தை அடுத்த மக்கள் மன்றத்தில்தான் நிறைவேற்றியது.
அண்ணா முன்னெடுத்த போராட்டங்கள்
  • 1960-ல் குமாரபாளையத்தில் திமுகவின் பொதுக்குழு கூடி, போராட்டங்களில் இறங்கியது. 1963-ல் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய அண்ணா, இந்தித் திணிப்பைக் கடுமையாக எதிர்த்துப் பேசினார். பொதுமொழியின் அடிப்படையில் இந்தியாவைப் பலப்படுத்திவிட முடியாது என்பதை வலியுறுத்தினார். அவரது உரையின் இடையே திமுகவின் மொழிக் கொள்கை என்ன என்ற கேள்வியை எழுப்பினார் அக்பர் அலிகான். “எட்டாவது பட்டியலில் உள்ள பதினான்கு மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், ஆட்சிமொழிகளாகும் தகுதி தரப்பட வேண்டும், பதினான்கு மொழிகளும் ஆட்சிமொழிகளாகும் வரை ஆங்கிலமே தொடர்ந்து இருக்கட்டும் என்பதே எங்கள் கொள்கை” என்றார் அண்ணா.
  • 1963-ல் ஆட்சிமொழிச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 1965 முதல் இந்தி மட்டுமே அலுவல்மொழி என்பது உறுதிசெய்யப்பட்டது. மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருக்கும் என்ற நேருவின் உறுதிமொழியைக் கைவிட்டது காங்கிரஸ் அரசு. தமிழகம் போர்க்களமானது. தீக்குளிப்பு, துப்பாக்கிச்சூடு, தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்று நிலைமை கட்டுமீறியது. இந்தி பேசாத மாநிலங்களின் மொழியுரிமைப் போராட்டத்துக்காகத் தமிழகம் தனது உயிர்களை விலையாகக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து, வங்க முதல்வர் பி.சி.சென், ஆந்திர முதல்வர் பிரம்மானந்த ரெட்டி, கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பா ஆகியோரும் இந்தித் திணிப்பு எதிர்ப்பில் தீவிரம் காட்டினார்கள். 1968-ல் ஆங்கிலமே தொடர்புமொழியாக நீடிக்கும் என்று ஆட்சிமொழிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போது அண்ணா தமிழகத்தின் முதல்வராக இருந்தார்.
  • ஆங்கிலத்தைத் தொடர்புமொழியாக நீடிக்கவைத்து இந்திய மாநிலங்களை உலகத்தோடு உறவாடவைத்தவர் என்பதால் மட்டுமல்ல, அனைத்து இந்திய மொழிகளின் அரசியல் உரிமைகளுக்கும் குரல்கொடுத்தவர் என்பதாலுமே அகில இந்தியத் தலைவராக உயர்ந்து நிற்கிறார் அண்ணா.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories