TNPSC Thervupettagam

இந்தியாவில் சிவிங்கிப்புலி

October 21 , 2023 446 days 433 0
  • இந்தியாவில் இருந்த சிவிங்கிப் புலிகள், அவற்றின் அழிவு குறித்து விளக்கும் ‘End of the Trail: The Cheetah in India’ (2006) என்கிற நூலையும், ஆசிய சிங்கத்தின் வரலாறு குறித்தும் விளக்கும் ‘The Story of Asia's Lions’ (2008) என்கிற நூலையும் இயற்கையியலாளரான திவ்யபானுசிங் எழுதியிருக்கிறார். சிவிங்கிப்புலி, சிங்கம் ஆகியவற்றின் இயற்கை வரலாற்றையும், அவை இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவை என்பதையும் இந்நூல்கள் பதிவுசெய்கின்றன.
  • ஆனால், இதற்கு மாறாக 2013இல் இயற்கையியலாளர் வால்மிக் தாப்பர், வரலாற்று ஆசிரியர்களான ரொமிலா தாப்பர், யூசுப் அன்சாரி ஆகியோர் ‘Exotic Aliens: The Lion & the Cheetah in India’ என்கிற தங்களது நூலில் சிவிங்கிப்புலியும் ஆசிய சிங்கமும் அயல் உயிரினங்கள் என்கிற கூற்றை முன்வைத்தனர்.
  • அவை சுமார் 2,500-3,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டவை. அதாவது அலெக்சாண்டர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்த நேரத்திலோ (பொ.ஆ.மு. (கி.மு.) 326) அல்லது அதற்கு சற்று முன்பாகவோ அவை இங்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என நம்புகின்றனர்.
  • இவர்களது இந்தக் கருத்துகளுக்கு திவ்யபானு சிங்கும், பல அறிவியலாளர்களும் விமர்சகர்களும், ‘சிங்கமும், சிவிங்கிப்புலியும் இந்தியாவில் பல்லூழிக் காலமாக இருந்து வருபவை’ என்பதற்கான வலுவான சான்றுகளுடன் கூடிய கட்டுரைகளை எழுதினர். அவற்றில் முக்கியமானது அமெரிக்க மரபியலாளரான ஸ்டீபன் ஜே ஒ'ப்ரெயின் எழுதிய ஒரு கட்டுரை.

இந்திய ஆதாரங்கள்

  • ஓர் உயிரினம் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தது என்பதை மூன்று விதமான சான்றுகளை வைத்து முடிவுசெய்யலாம். முதலாவது, அந்த உயிரினம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் (எ.கா. பாறை ஓவியங்கள், எழுதிவைக்கப்பட்ட குறிப்புகள், பாடம்செய்து வைக்கப்பட்ட மாதிரிகள், பதப்படுத்தப் பட்ட தோல் போன்றவை).
  • இரண்டாவது, தொல்லியல், புதைபடிவ ஆய்வியல் மூலமாகக் கிடைத்த சான்றுகளின் காலத்தை அறிவியல்பூர்வமாகக் கணித்தல், மூன்றாவது, புதைபடிவங்களில் உள்ள மூலக்கூறுகள் எந்தக் காலத்திற்கு முற்பட்டவை என்பதை மூலக்கூறு மரபியல் (Molecular genetics) ஆராய்ச்சி மூலம் அறிதல்.
  • ஆப்பிரிக்க, ஆசிய சிங்கங்களின் மூலக்கூறு மரபியல் ஆராய்ச்சி செய்ததில், இந்த இரண்டு இனங்களுக்கும் கணிசமான மரபியல் இடைவெளி (Genetic distance) இருப்பது தெரியவந்தது. அதாவது இந்த இரண்டு இனங்களுக்கிடையே எந்த ஒரு மரபணுப் பரிமாற்றமும் சுமார் 1,00,000 ஆண்டுகளாக நடைபெறவில்லை என்பதுதான்.
  • ஆசிய சிங்கங்கள் அலெக்சாண்டர் வருவதற்கு முன்பு சுமார் 97,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பகுதிகளுக்கு வந்தவை. மேலும், ஆசிய சிங்கத்தின் புதைபடிவங்கள் இலங்கையிலும் மேற்கு வங்கத்திலும் கிடைத்திருக்கின்றன.
  • சிவிங்கிப்புலி விஷயத்துக்கு வருவோம். இவற்றின் புதைபடிவங்கள் வட அமெரிக்காவில் கிடைத்துள்ளன. இவற்றை ஆராய்ந்தபோது இவை பிளியோசீன் (Pliocene) ஊழிக்காலத்தில், அதாவது 20-50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை என்பது தெரியவந்தது.
  • தொல்லியல், நிலவியல், மூலக்கூறு சான்றுகள் யாவும் சிவிங்கிப்புலியின் மூதாதைகள் (Acinonyx பேரினம்) மியோசீன் (Miocene) ஊழிக்காலத்தில் தற்போதுள்ள பெரிங்க் நீர்ச்சந்தி (Bering strait) வழியே அமெரிக்காவிலிருந்து ஆசியப் பகுதிகளுக்கு வலசை வந்ததாக அறிய முடிகிறது. இவை பின்னர் தெற்கு நோக்கி ஆப்ரிக்காவிற்கும், ஆசியாவின் தென் பகுதிக்கும் (இந்திய தீபகற்பம், மத்தியத்தரைக்கடல் நாடுகள்) வந்திருக்கின்றன.
  • சிவிங்கிப்புலியின் புதைபடிவங்கள் ஆசியாவின் பல இடங்களில் கிடைத்துள்ளன. சிவிங்கிப்புலிகள் உள்ள பழம்பெரும் பாறை ஓவியங்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ளன. இவையெல்லாம் அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு வெகுகாலத் திற்கு முன்பே வரையப்பட்டவை என்பது தொல்லியல், புதைபடிவ சான்றுகளில் இருந்து அறியமுடிகிறது.
  • மூலக்கூறு மரபியல் ஆய்வுகள் மூலம் ஈரான், ஆசிய, ஆப்ரிக்க சிவங்கிப்புலிகள் யாவும் ஒரே காலகட்டத்தில் பரிணமித்தவை என்பதை அறியமுடிகிறது. அதாவது சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு என்பதைக் காட்டுகிறது. இவற்றிலிருந்து இந்தியாவில் தென்படும் உள்ளின மான (Sub species) சிங்கமும், ஒரு காலத்தில் இருந்த சிவிங்கிப்புலியின் உள்ளினமும் இந்தப் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவை என்பதை அறியலாம்.

மான் வேட்டையில் சிவிங்கிப்புலி 

  • சிவிங்கிப்புலியின் வேகத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. நிலத்தில் வாழும் உயிரினங்களில் அதிவேகமாக ஓடக்கூடியவை சிவிங்கிப்புலிகள். இவை மணிக்கு சுமார் 70-75கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியவை. இவை வெட்டவெளிகளிலும், அடர்த்தியில்லாத புதர்காடுகளிலும் தென்படுபவை. இந்தியாவில் இவற்றின் முக்கிய உணவு கொம்பு உதிராத இரலை மான் (Antelopes) இனங்களான வெளிமான் (Blackbuck), சிங்காரா மான் (Chinkara), நீல்கை மான் (Nilgai) மற்றும் கொம்பு உதிரும் இனமான புள்ளி மான் (Spotted deer) போன்றவையே.
  • மான்களை வேகமாகத் துரத்தியோடி வேட்டையாடுவதைக் கண்ட மனித இனம், ஒரு காலகட்டத்தில் சிவிங்கிப்புலிகளைப் பிடித்து மான் வேட்டைக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தது. எகிப்தில் உள்ள ஒரு கல்லறை யில் கழுத்தில் பட்டையுடன் கயிற்றால் பிணைக்கப்பட்ட சிவிங்கிப்புலியை ஒருவர் அழைத்து வருவது போன்ற ஓவியம் (சுமார் பொ.ஆ. 1700 ஆண்டு வாக்கில்) உள்ளது. 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அபிலாஷ்தார்த்த சிந்தாமணி அல்லது மனசோலசா எனும் சமஸ்கிருத நூல் சிவிங்கிப்புலிகள் மான் வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டதைப் பதிவுசெய்திருக்கிறது.
  • எனினும் இந்தியாவைப் பொறுத்தவரை சிவிங்கிப்புலிகளைப் பிடித்துப் பழக்கி வெளிமான் வேட்டைக்காகப் பயன்படுத்தியதில் முக்கியமான வர்கள் முகலாய அரசர்களே. பேரரசர் அக்பர் தனது ஆட்சிக்காலத்தில் சுமார் 1,000 சிவிங்கிப்புலிகளை வளர்த்து வந்ததற்கான குறிப்புகள் உள்ளன. அபுல் ஃபசல் எழுதிய அக்பர்நாமா என்கிற நூலில் சிவிங்கிப்புலிகளை வைத்து மான் வேட்டையாடும் ஓவியங்கள் பல உள்ளன. சிவிங்கிப்புலிகளைக் குட்டி பருவத்திலிருந்து பிடித்து வளர்த்து, அவற்றை மான் வேட்டைக்குப் பழக்கப்படுத்த முடியாது. எனவே நன்கு வளர்ந்த சிவிங்கிப்புலிகளைப் பிடித்து வந்து, அவற்றைப் பழக்கி, மான் வேட்டைக்குப் பயன்படுத்தினர்.

அழிவின் தொடக்கம்

  • மான் வேட்டைக்காக சிவிங்கிப்புலிகள் தொடர்ந்து இயற்கையான சூழலில் பிடிக்கப்பட்ட தாலும், அடைக்கப்பட்ட சூழலில் இவை பொதுவாக இனப்பெருக்கம் செய்யாத காரணத்தி னாலும் ஆங்கிலேயர்களின் வரவிற்குப் பிறகு 18ஆம் நூற்றாண்டிலிருந்து சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்தது.
  • மேலும், இவற்றை வைத்து மான்களைப் பிடிப்பதைவிட துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுவதையே ஆங்கிலேயர்கள் விரும்பி னார்கள். ஒரு காலத்தில் இந்தியாவின் பல இடங்களில் பரவியிருந்த சிவிங்கிப்புலி 20ஆம் நூற்றாண்டில் மிகவும் அரிய உயிரினமானது. சுமார் பொ.ஆ. 1871 வாக்கில் சிவிங்கிப்புலிகளை ஒரு தொந்தரவு தரும் உயிரினமாக ஆங்கிலேயர்கள் அறிவித்த காரணத்தால், அவை சகட்டுமேனிக்குச் சுட்டுக் கொல்லப்பட்டன.

கடைசி சிவிங்கிப்புலி

  • பம்பாய் இயற்கை வரலாறு கழக இதழின் ஆசிரியர்களுக்கு 1947இல் சர்குஜா மாகாணத்தின் (தற்போது சத்தீஸ்கர் மாவட்டத்தில் உள்ளது) மகாராஜாவின் அந்தரங்க காரியதரிசி எழுதிய படத்துடன் கூடிய ஒரு கடிதம் வந்தது. அந்தப் படத்தில் மூன்று சிவிங்கிப்புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டு வரிசையாகத் தரையில் கிடத்தப்பட்டிருந்தன.
  • அவற்றின் பின்னே சர்குஜா மாகாணத்தின் மகாராஜா ராமானுஜ் பிரதாப் சிங் தியோ துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்தார். உடனிருந்த கடிதத்தில். "இரவு நேரத்தில் மோட்டார் வாகனத்தில் மகாராஜா சென்றுகொண்டிருந்தபோது இவை மூன்றும் அருகருகில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
  • சுட்டதில் முதல் குண்டு ஒரு சிவிங்கிப்புலியையும், இரண்டாம் குண்டு மீதி இரண்டு சிவிங்கிப்புலிகளையும் ஒருங்கே துளைத்தன. அவை அளவுகளில் ஒரே மாதிரியாக இருந்ததால் மூன்றும் ஒரு தாயின் குடிகளாக இருக்கக்கூடும்."படத்தையும் கடிதத்தையும் இதழில் அச்சிட்டு அதன் கீழே இதழின் ஆசிரியர்கள் மிகவும் காட்டமான ஒரு குறிப்பை வெளியிட்டிருந்தனர். "சிவிங்கிப்புலி ஒரு சாதுவான உயிரினம். அவை அழியும் நிலையில் உள்ளன.
  • இவையே இந்த இனத்தின் கடைசி உயிரினமாகவும் இருக்கக்கூடும். மேலும், இரவு நேரத்தில் வாகனத்தில் சென்று ஒளிமிக்க விளக்குகளைப் பயன்படுத்திக் கொல்வது வேட்டையின் தர்மத்திற்கும் சட்டத்திற் கும் புறம்பானது. இந்தக் கடிதத்தைக் கண்டவுடன் அருவருப்படைந்து குப்பையில் தூக்கி எறியவே எண்ணினோம்.
  • எனினும் இந்த இதழில் வெளியிட்டதன் நோக்கம்: இதை ஒரு குற்றமாகக் கருதியே அன்றி பாராட்டுக்காக அல்ல.” இதழின் ஆசிரியர்களில் ஒருவர் இந்தியப் பறவையியல் முன்னோடிகளில் ஒருவரான சாலிம் அலி என்பது குறிப்பிடத்தக்கது.
  •  
  • இதற்குப் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக சிவிங்கிப்புலிகள் இருந்ததற்கான தகவல்கள் 1960களின் இறுதி வரை இருந்தாலும், தகுந்த ஆதாரத்துடன் இருப்பது சர்குஜா மாகாணத்தின் மகாராஜா டிசம்பர் 1947இல் சுட்டுக் கொன்ற அந்த மூன்று ஆண் சிவிங்கிப்புலிகள்தாம், இந்தியாவின் கடைசி சிவிங்கிப்புலிகள்!

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories