TNPSC Thervupettagam

இந்தியாவுக்குத் திரும்பிய உத்தம் சிங்

August 27 , 2024 34 days 89 0

இந்தியாவுக்குத் திரும்பிய உத்தம் சிங்

  • இங்கிலாந்து நீதிமன்றம். அச்சமற்ற விழிகளுடன் குற்றவாளிக் கூண்டில் நிமிர்ந்து நின்றிருந்தான் அந்த இளைஞன். மரண தண்டனைத் தீர்ப்பை வாசித்துவிட்டுப் பேனா முனையை உடைத்தார் வெள்ளைக்கார நீதிபதி. “என் தாய் நாட்டுக்காகச் சாவதைவிட வேறென்ன பெருமை எனக்குக் கிட்ட முடியும்?” என்று அந்த வழக்கு மன்றமே அதிரும் வண்ணம் முழங்கினான் ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற அந்த இளைஞன். ராம் முகம்மது சிங் ஆசாத்... பெயரே விசித்திரமாக இருக்கிறதுதானே? யார் இந்த இளைஞன்? கொஞ்சம் பின்னோக்கிப் பயணிப்போம்.
  • ஜலியான் வாலாபாக் படுகொலை. இந்திய வரலாற்றில் கறுப்பு அத்தியாயம். இந்தப் படுகொலையை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. 1919, ஏப்ரல் 13ஆம் தேதி இந்தக் கோரச் சம்பவம் அரங்கேறியது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது, 1919ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி ‘ரௌலட் சட்டம்’ என்கிற ஒரு கொடிய சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. எது குற்றம் என்பதை இச்சட்டம் வரையறுக்கவில்லை. ஆனால், ‘சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சுருக்கமாகவும் ரகசியமாகவும் வழக்கு விசாரணை நடைபெறும். சாட்சி விசாரணை கிடையாது. மேல் முறையீடு செய்ய வழிவகை இல்லை’ என்று அதிகாரங்கள் தரப்பட்டிருந்தன. பத்திரிகைகளின் குரலையும் மக்களின் விடுதலை வேட்கையையையும் அடக்கி ஒடுக்குவதற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

அடக்குமுறை சட்டம்:

  • பஞ்சாப் லெப்டினன்ட் கவர்னர் மைக்கேல் ஓ டயர் என்பவர், இருக்கும் சட்டங்கள் போதாதென்று புதிய சட்டங்களைப் போட்டு மிரட்டி, மக்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். அடக்குமுறை தலைவிரித்தாடியது. விடுதலைப் போராட்ட வீரர் எனச் சந்தேகப்படும் யாரையும் விசாரணையின்றிக் கைது செய்து, எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறையில் வைத்திருக்கலாம். அவர்கள் வக்கீலை வைத்து வாதாட அனுமதி இல்லை.
  • இந்திய மக்கள் அனைவரும் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். இச்சட்டத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த மகாத்மா காந்தி, 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் பல தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யக் கோரியும் ரௌலட் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

ஜலியான் வாலாபாக் படுகொலை:

  • பஞ்சாப் மாகாணத்தின் அமிர்தசரஸில், சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு 400 மீட்டர் தொலைவில் உள்ள ஜலியான் வாலாபாக் என்னும் பொதுப் பூங்காவில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி கண்டனக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பெரிய சுற்றுச் சுவரையும், சிறிய நுழைவாயிலையும் கொண்ட ஜலியான் வாலாபாக் திடலில் சுமார் 15,000 - 20,000 பேர் குழுமி இருந்தனர்.
  • எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அப்பாவி ஜனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டான் ஜெனரல் டயர். அந்த மைதானத்தின் நான்கு பக்கமும் சுவர். உள்ளே செல்ல ஒரே ஒரு சின்ன சந்து மட்டுமே. அதிலும் குண்டுகள் நிரப்பிய பீரங்கி நிறுத்தப்பட்டு இருந்தது.
  • யாரும் தப்பிக்க முடியாத நிலை. டயரின் ஆணைப்படி, ஒரே சமயத்தில் 90 துப்பாக்கிகள் சரமாரியாக இயங்கிக் குண்டுகளைக் கக்கின. 10 நிமிடத்தில் 1,650 ரவுண்டுகள் காலியாயின. கோரத் தாண்டவ ஆட்டம் போட்டு முடித்தாகிவிட்டது. ஆண், பெண், குழந்தைகள் என வேறுபாடின்றி அனைவரின் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடந்தது.
  • மக்கள் வேறு வழியின்றி, உயிர் பயத்தில் அங்கிருந்த கிணற்றில் குதித்தனர். இறந்தவர்கள், படுகாயமடைந்தவர்கள் குறித்த ஆங்கிலேயே அரசின் கணக்கு வேறாக இருந்தது. ஆனால், இந்திய தேசிய காங்கிரசின் கணக்குப்படி, துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை சுமார் 1,500க்கு மேல். படுகாயம் அடைந்தவர்கள் சுமார் 3,000க்கும் மேல்.
  • ஜலியான் வாலாபாக் படுகொலைக்குப் பின், “துப்பாக்கி ரவைகள் தீரும்வரை சுடும்படி உத்தரவிட்டேன். இன்னும் குண்டுகள் இருந்திருந்தால் மேலும் சுட்டிருப்போம். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்று பாடம் புகட்டவே அப்படிச் செய்தேன்” என்று திமிரோடு விசாரணை மன்றத்தில் சொன்னான் ஜெனரல் டயர்.
  • இதையடுத்துப் பதவி நீக்கம் செய்யப்பட்டான் டயர். ஆனால், பிரிட்டனில் அவன் கொண்டாடப்பட்டான். பிரிட்டனுக்குச் சென்ற அவனுக்கு அங்கு நல்ல பதவி வழங்கப்பட்டது.

உறுதியெடுத்த உத்தம் சிங்:

  • ஜலியான் வாலாபாக் படுகொலையை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் இது தொடர்பாக மக்கள் நடத்திய போராட்டத்திலும் 12 பேர் இறந்தனர். அப்போது குண்டடிபட்டு வேதனையில் கிடந்தவர்களுக்கும், சாவின் பிடியில் இருந்தவர்களுக்கும் குடிநீர் தந்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அவன் பெயர்தான் உத்தம் சிங்.
  • இந்த நாசகாரப் படுகொலையைக் கண்டு அவன் மனதில் ஆங்கிலேயர் மீதான வெறுப்பும், கோபமும் துளிர் விட்டு வளர்ந்தன. “என் மக்களைக் கொன்று குவித்தவர்களை நானும் கொல்வேன்” என்று உறுதிமொழி எடுத்தான்.

விடாத உறுதி:

  • அவன் வளர்ந்தான். அவனது கோபமும் உறுதியும் வளர்ந்தன. 21 ஆண்டுகள் தனது கோபத்தை அடைகாத்தான். ஜலியான் வாலாபாக் படுகொலையின் காரணகர்த்தா ஜெனரல் டயரையும் உத்தரவைப் பிறப்பித்த பஞ்சாப் மாநில ஆளுநர் மைக்கேல் ஓ டயரையும் கொன்றே தீருவது என்ற உறுதியுடன் இருந்தான்.
  • இந்து - இஸ்லாமிய - சீக்கிய ஒற்றுமை, விடுதலையைக் குறிக்கும் வகையில், ராம் முகம்மது சிங் ஆசாத் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டான். “மதத்தின் பெயரால் என் மக்களிடம் இருந்து என்னைப் பிரிப்பது என்னையே துண்டுத் துண்டாக வெட்டுவதாகும்” என்று பின்னாளில் இதற்கு விளக்கம் சொன்னான்.

தோண்டப்பட்ட கல்லறை:

  • தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா வழியாகப் பயணமான அவன், 1933 இல் பிரிட்டனுக்குப் போய்ச் சேர்ந்தான். ஜெனரல் டயரைத் தேடினான். அவனுக்குக் கிடைத்த தகவல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 1927லேயே ஜெனரல் டயர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டான் என்பதுதான் அந்தத் தகவல். தன் கையால் சாக வேண்டியவன் தப்பிவிட்டானே என்று வருத்த அடைந்த உத்தம் சிங், ஜலியான் வாலாபாக் படுகொலைக்கு ஆணை பிறப்பித்த மைக்கேல் ஓ டயரைக் கண்டுபிடித்ததில் பாதி மகிழ்ச்சியடைந்தான்.
  • மைக்கேல் ஓ டயரின் மாளிகையில் வேலைக்காரனாகச் சேர்ந்தான். ரகசியமாகப் பலி வாங்கினால் முதலாளி - வேலைக்காரன் தகராறாகக் கருதப்பட்டு, அரசியல் காரணம் மறைக்கப்படும் என்பதால் தகுந்த தருணத்திற்குக் காத்திருந்தான் உத்தம்சிங்.
  • அந்நாள்களில் லண்டன் நகரம் நாஜி விமானப் படையால் எப்போதும் தாக்கப்படும் என்கிற அச்சத்தால் ராணுவக் கெடுபிடியில் நிறைந்திருந்தது. 1940ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் நாள், பக்கிங்காம் அரண்மனைக்கு மிக அருகே இருந்த அரங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் மைக்கேல் ஓ டயர். அவன் முன் சென்று நெஞ்சுக்கு நேராகத் துப்பாக்கியைத் துாக்கிப் பிடித்துச் சுட்டான்; நுாற்றுக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருக்க, மைக்கேல் ஓ டயரை ஆறுமுறை சுட்டான் உத்தம்சிங்.
  • ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமான மைக்கேல் ஓ டயர் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தான். எதற்காகத் தான் சுடப்பட்டோம் என்பதுகூடத் தெரியாமல் அவன் உயிர் பிரிந்தது.
  • “இப்படிப் பழி தீர்க்க 21 ஆண்டுகள் காத்திருந்தேன். என் நோக்கம் நிறைவேறியதற்காக நான் ஆனந்தமடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். தப்பி ஓட வழியிருந்தும் ஓடாமல் அங்கேயே இருந்த உத்தம் சிங்கை லண்டன் போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்து நீதிமன்றம், உத்தம் சிங்குக்குத் துாக்கு தண்டனை விதித்தது.
  • “அறியாமல், மனப்பேதலிப்பால் செய்துவிட்டேன்” என்று முறையிடும்படி உத்தம்சிங்க்கு யோசனை கூறினார், நேருவின் துாதர் கிருஷ்ணமேனன். மன்னிப்புக் கேட்டுத் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்கும் யோசனையைக் கோபாவேசத்துடன் நிராகரித்தான் உத்தம்சிங். கொடியவர்களில் ஒருவனையாவது சுட்டுக் கொன்ற திருப்தியுடன் இருந்த உத்தம் சிங், 1940ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி பெண்டான்வில்லாச் சிறையில் துாக்கிலிடப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டார்.
  • இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, உத்தம்சிங்கின் உடல் இங்கே கொண்டுவரப்பட வேண்டும் என்று அவரது உறவினர்களும் பஞ்சாப் மக்களும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, இந்திய அரசு எடுத்த கடும் முயற்சியின் விளைவாக, 1974ஆம் ஆண்டு, கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட உத்தம் சிங் உடலின் எஞ்சிய உடல் பாகங்கள் அடங்கிய சவப்பெட்டி இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.
  • பஞ்சாப் முழுவதும் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அந்தச் சவப்பெட்டி, உத்தம் சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக்கப்பட்டது; அவரது தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.
  • இன்றளவும், வீரதீர நாயகனாகவும், தேச விடுதலைப் போராளியாகவும் பஞ்சாப் மக்களால் போற்றப்படுகிறார் உத்தம் சிங்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories