TNPSC Thervupettagam

இந்தியாவும் அதன் மாநிலங்களும்: சுகாதாரம் - டேட்டா ஸ்டோரி

July 3 , 2023 369 days 335 0
  • ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல. கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு எந்த அளவுக்கு மேம்பட்ட நிலையில் இருக்கிறது என்பதும் மிக முக்கியம் ஆகும். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. தேசிய சுகாதார கொள்கையின்படி மத்திய அரசு, நாட்டின் ஜிடிபியில் 2.5 சதவீதத்தை சுகாதாரத்துக்கு செலவிட வேண்டும். ஆனால், மத்திய அரசு 2 சதவீத அளவிலேயே சுகாதாரத்துக்கு செலவிடுகிறது. எனினும், நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
  • சிறந்து விளங்கும் தென்மாநிலங்கள் சுகாதாரக் கட்டமைப்பில் வட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தென்மாநிலங்கள் மேம்பட்ட நிலையில் உள்ளன. குறிப்பாக,கேரளாவும் தமிழ்நாடும் மருத்துவக் கட்டமைப்பில் நாட்டின் முன்மாதிரி மாநிலங்களாக பார்க்கப் படுகின்றன.
  • நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு தொடர்பாக 2021-ம் ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்ட பட்டியலில் முதல் 4 இடங்களை கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் பிடித்துள்ளன.
  • நாட்டிலேயே மிக மோசமான சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் மாநிலங்களாக உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் ஆகியவை உள்ளன.

மருத்துவர்களின் எண்ணிக்கை

  • 1000 பேருக்கு 1 மருத்துவர் இருக்க வேண்டும் என உலக சுகாதார மையம் வலியுறுத்துகிறது. இந்தியாவில் 854 பேருக்கு 1 மருத்துவர் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தம் 13.08 லட்சம் அலோபதி மருத்துவர்களும் 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவர்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நாட்டின் மொத்த அலோபதி மருத்துவர்களில் 52 சதவீதத்துக்கு மேற்பட்டோர் 5 மாநிலங்களில் உள்ளனர். மகாராஷ்டிரா (15%), தமிழ்நாடு (12%), கர்நாடகா (10%), ஆந்திர பிரதேசம் (8%), உத்தர பிரதேசம் (7%) என்ற அளவில் அலோபதி மருத்துவர்களைக் கொண்டுள்ளன.

மாவட்ட அரசு மருத்துவமனைகள்

  • கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம் ஆகியவை நாட்டிலேயே அதிக மாவட்ட தலைமை மருத்தவமனைகளை கொண்டிருக்கும் பிராந்தியங்களாக உள்ளன. கேரளாவில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளன. அங்கு 47 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளன. டெல்லியில் 11 மாவட்டங்களில் 37 தலைமை மருத்துவமனைகளும் உத்தர பிரதேசத்தில் 75 மாவட்டங்களில் 168 தலைமை மருத்துவமனைகளும் உள்ளன. குறைந்த விகிதத்தில் மாவட்ட மருத்துவமனைகளைக் கொண்டிருக்கும் மாநிலமாக தெலங்கானா உள்ளது. தெலங்கானாவில் 33 மாவட்டங்கள் உள்ளன. ஆனால், அங்கு மொத்தமே 5 தலைமை மருத்துவமனைகளே உள்ளன.

மருத்துவ செலவினத்தில் அரசின் பங்களிப்பு

  • ஒரு நாடு தன் மக்கள் அனைவருக்கும் எந்தப் பாரபட்சமுமின்றி தரமான இலவச மருத்துவ சேவை வழங்குவது மிக அடிப்படையான ஒன்று. ஆனால், இந்தியாவில் தரமான மருத்துவத்துக்கு மக்கள் தங்கள் சொந்தப் பணத்தையே செலவிட வேண்டிய நிலையில் உள்ளனர். 2019-20 நிலவரப்படி, நாட்டில் மொத்தமாக மருத்துவத்துக்கு செலவிடப்பட்டதில் மக்கள் தங்கள் கையிலிருந்து செலவு செய்த தொகை 47 சதவீதம் ஆகும்.

மொத்த மருத்துவ செலவினத்தில்...

குறைந்த பங்களிப்பு வழங்கிய மாநில அரசுகள்

  • உத்தர பிரதேசம் 25%
  • கேரளா 25%
  • மேற்குவங்கம் 26%
  • மகாராஷ்டிரா 27%
  • பஞ்சாப் 29%

அதிக பங்களிப்பு வழங்கிய மாநில அரசுகள்

  • உத்தராகண்ட் 61%
  • அசாம் 55%
  • இமாச்சல பிரதேசம் 52%
  • ஜம்மு காஷ்மீர் 51%
  • தமிழ்நாடு 47%

நன்றி: இந்து தமிழ் திசை (03  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories