TNPSC Thervupettagam

இந்தியா, அமெரிக்கா, சீனா: முழக்கம் ஒன்று, பாதை மூன்று

February 4 , 2025 1 hrs 0 min 12 0

இந்தியா, அமெரிக்கா, சீனா: முழக்கம் ஒன்று, பாதை மூன்று

  • டிரம்ப் அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட மூன்றாம் நாள் பன்னாட்டுத் தொழிலதிபர்களின் மாநாட்டில் பேசினார். அவர்களிடம் ஓர் அறைகூவல் விடுத்தார் - ‘அமெரிக்காவில் தயாரிப்பீர்’ (Make in America). அந்தத் தொழிலதிபர்களின் ஆலைகள் சீனாவிலும் வேறு பல நாடுகளிலும் உள்ளன. அங்கு உருவாகும் பொருள்கள் அமெரிக்காவில் விற்பனையாகின்றன. இது அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கிறது என்கிறார் டிரம்ப். இதனால் தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமெரிக்காவில் நிறுவ வேண்டும்; அவர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.
  • மாறாக, அவர்கள் வெளிநாடுகளிலேயே தொடர்ந்து உற்பத்தி செய்தால், அது அவர்கள் விருப்பம். ஆனால், அந்தப் பொருள்கள் அமெரிக்கத் துறைமுகங்கள் வழியே உள்ளே வரும்போது கடுமையான தீர்வைகள் விதிக்கப்படும். டிரம்ப்பின் அறைகூவலுக்கு இணங்கி, அந்தத் தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலைகளை இடம் மாற்றுவார்களா?
  • இதன் சாத்தி​யங்களை ஆராயும் முன்பு, இன்னொரு முழக்​கத்​தையும் சேர்த்​துக்​கொள்ள வேண்டும். அது 2014இல் பிரதமர் மோடி முன்வைத்த முழக்கம் - ‘இந்தியாவில் தயாரிப்​போம்’ (Make In India). இது அரசின் திட்ட​மாகவும் நீடிக்​கிறது. அப்போது, அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவி​யிருந்த ஆலைகள் அதிகமும் கார், மருந்து ஆகிய இரண்டு துறைகள் சார்ந்​தவை​யாகவே இருந்தன. இன்னபிற துறைகளைச் சார்ந்த முன்னணி நிறுவனங்​களும் தமது ஆலைகளை இந்தியாவில் அமைக்க வேண்டும்.
  • அதுதான் பிரதமரின் திட்டம். அதனால், இந்தியா​வுக்கு அந்நிய முதலீடு வரும்; கூடவே தொழில்​நுட்​பமும் வரும். மேலும், இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டி​யிருக்​காது. முக்கியமாக, உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும். ‘உலகின் தொழிற்​சாலை’யாக இந்தியா உருவாகும். ஆனால், அப்போதும் இப்போதும் சீனாதான் ‘உலகின் தொழிற்​சாலை’ என்கிற பெயரைப் பெற்றிருக்​கிறது. ஏன் இந்தியாவால் உலகின் தொழிற்சாலை ஆக முடிய​வில்லை?
  • இந்த இடத்தில் மூன்றாவது முழக்கம் ஒன்றையும் சேர்த்​துக்​கொள்​ளலாம். அது 2015இல் சீன அதிபர் ஷி ஜின்பிங் முன்வைத்த முழக்கம் - ‘சீனாவில் தயாரிக்​கப்​பட்டது - 2025’ (Made in China-2025). 2015இல் தொழில் துறையில் சீனாதான் முன்னணியில் இருந்தது. சீன அதிபரின் முழக்கம் தொழில் துறை சார்ந்ததாக அல்ல, அதன் அடுத்த கட்டமாக, உயர் தொழில்​நுட்பம் சார்ந்ததாக இருந்தது. சூரிய ஆற்றல், மின் வாகனங்கள், செயற்​கைக்​கோள், கணினித் தொழில்​நுட்பம் முதலான துறைகளில் 2025க்குள் சீனா தற்சார்​புடன் இயங்க வேண்டும் என்பதுதான் குறிக்​கோள். அது நிறைவேறி​யிருக்​கிறதா?
  • மேற்கூறிய மூன்று முழக்​கங்​களும் கூடவே, நாம் எழுப்​பிக்​கொண்​டிருக்கும் கேள்வி​களும் ஒன்றோடொன்று தொடர்​புடைய​வை​தாம். நாம் இந்தியா​விலிருந்து தொடங்​கு​வோம்.

ஏன் முடிய​வில்லை இந்தியா​வால்?

  • ‘இந்தியாவில் தயாரிப்​போம்’ என்கிற திட்டத்தின் நோக்கம் நமது நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பது. ஆனால், கடந்த பத்தாண்​டு​களில் அப்படிநடக்க​வில்லை. 2013-14ஆம் நிதியாண்டில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு உள்நாட்டு உற்பத்​தியில் (ஜிடிபி) 16.7%ஆக இருந்தது.
  • 2023-24இல் இது 15.9%ஆகக் குறைந்​து​விட்டது. சீனாவைப் போல ஏன் பன்னாட்டு மூலதனத்தை இந்தியாவால் ஈர்க்க முடிய​வில்லை? ஒரு புள்ளி​விவரத்​தின்படி ஓர் இந்தியத் தொழிலா​ளியின் ஒரு மணி நேர சராசரி ஊதியம் ரூ.77. இது பல உலக நாடுகளைக் காட்டிலும் குறைவானது.
  • சீனாவில் இந்த ஊதியம் ரூ.300. மேலும், சீனாவில் உழைக்கும் வயதினரின் (18 முதல் 64 வயது) விகிதம் 2000இல் 70%ஆக இருந்தது. இப்போது 61%ஆகக் குறைந்​து​விட்டது. இந்தியாவின் நிலைமை நேர்மாறானது. 2000இல் 55%ஆக இருந்த உழைக்கும் வயதினரின் விகிதம் இப்போது 64%ஆக உயர்ந்​து​விட்டது. ஆக, நம் நாட்டில் மனிதவளம் இருக்​கிறது, அது அதிகரித்​தும்​வரு​கிறது, அது சகாயமாகவும் கிடைக்​கிறது.
  • என்றாலும், சீனாதான் உலகின் தொழிற்​சாலையாக விளங்​கு​கிறது. ஏன்? இந்தியாவின் உள்கட்​டமைப்பு பலவீனமாக இருக்​கிறது என்கிறார்கள் வல்லுநர்கள். சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், ரயில், தண்ணீர், மின்சாரம் முதலானவை உலகத் தரத்தில் இல்லை. இந்தியாவின் நிர்வாக அலகு துடிப்பாக இயங்கு​வ​தில்லை என்பது அடுத்த குற்றச்​சாட்டு.
  • நமது உள் கட்​டமைப்பும் நிர்வாகமும் மேம்படுத்​தப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்​துக்கு இடமில்லை. அதைவிட முக்கியமாக நாம் இரண்டு அடிப்​படையான அம்சங்​களில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் நோபல் விருது பெற்ற அமர்த்திய சென். அவை, கல்வியும் ஆரோக்​கிய​மும். இந்த அம்சங்​களில் சீனாவிட​மிருந்து நாம் பாடம் கற்க வேண்டும் என்றும் சொல்கிறார் சென்.
  • சமீபத்திய புள்ளி​விவரத்​தின்படி இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்​தவர்கள் 78% பேர். சீனாவில் இது 99%. இந்தியா இப்போது எட்டி​யிருக்கிற விகிதத்தை சீனா 1990இலேயே எட்டி​விட்டது. தவிர, இந்தியாவில் கல்வியின் தரமும் பொதுச் சுகாதா​ரமும் பலவீன​மாகத்தான் இருக்​கின்றன. இந்தி​யர்​களின் தற்போதைய சராசரி ஆயுட்​காலம் 68. ஒரு சராசரி சீனர், ஒரு சராசரி இந்தி​யரைக் காட்டிலும் 11 ஆண்டுகள் அதிகம் வாழ்கிறார். ஆயுள்​காலக் கணக்கிலும் 1990இலேயே இந்தியாவின் நிலையை சீனா எட்டி​விட்டது.

ஏன் முடியாது அமெரிக்​கா​வால்?

  • இந்தியாவின் இந்தப் பிரச்​சினைகள் எதுவும் அமெரிக்​காவில் இல்லை. அமெரிக்​காவில் தலைசிறந்த உள்கட்​டமைப்பு வசதி உள்ளது. நாட்டின் கல்வியும் உடல்நலமும் சிறப்​பானவை. அப்படி​யா​னால், அமெரிக்​காவால் உலகின் தொழிற்சாலை ஆகிவிட முடியுமா என்றால், முடியாது. ஏனெனில், அமெரிக்​காவில் பெருமளவில் தொழிற்​சாலைகள் நிறுவப்​பட்​டால், அதில் பணியாற்றத் தேவையான மனித வளம், குறிப்பாக உழைக்கும் வயதினர் கணிசமாக இல்லை. ஆகவே, பன்னாட்டுத் தொழில்​அதிபர்கள் அமெரிக்கா​வுக்கு இடம்பெயரும் சாத்தி​யங்கள் குறைவு.

எப்படிச் சாதிக்​கிறது சீனா?

  • உற்பத்தித் துறையில் கோலோச்சி வரும் சீனா, உயர் தொழில்​நுட்பத் துறையிலும் சாதனை நிகழ்த்​திவரு​கிறது. உலக அளவில் உற்பத்​தி​யாகும் சூரிய ஆற்றல் கலங்களில் (photovoltaic cells) மூன்றில் இரண்டு பங்கு சீனாவில் தயாராகிறது. 2023இல் விற்பனையான மின் கார்களில் 60% சீனத் தயாரிப்புகள் (ஐரோப்பா 25%, அமெரிக்கா 10%). கடந்த டிசம்பர் மாதம் செயற்​கைக்​கோளி​லிருந்து பூமிக்குத் தரவுகளை அனுப்பு​வதில் அளவிலும் வேகத்​திலும் (100 giga bit per second) சீனா பெரும் சாதனையை நிகழ்த்​தி​யிருக்​கிறது.
  • இது எலான் மஸ்க்கின் நிறுவனமான ஸ்டார்​-லிங்க் எட்டி​யிருந்த வேகத்தைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம். அடுத்து, கடந்த வாரம் ‘டீப்​-சீக்’ என்னும் சீனச் செயலி செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிகழ்த்​தி​யிருக்கும் பாய்ச்சலை உலகம் பிரமிப்போடு பார்க்​கிறது. இதன் ஆற்றல் அமெரிக்கச் செயலிகளுக்கு நிகரானது. ஆனால், அவற்றைவிட 30 மடங்கு விலை குறைவானது.
  • ஆக, ‘சீனாவில் தயாரிக்​கப்​பட்​டது-2025’ திட்டத்​தில், சீனா இலக்கை எட்டி​விட்டது என்பதை வல்லுநர்கள் ஏற்றுக்​கொள்​கிறார்கள். தொடர்ந்து ‘விஷன் 2035’ என்கிற திட்டத்தை சீனா கையில் எடுத்​திருக்​கிறது. அடுத்து, ‘அமெரிக்​காவில் தயாரிப்​போம்’ திட்டம் நடைமுறைச் சாத்தி​யமில்லை என்பது டிரம்ப்​புக்கும் தெரிந்​திருக்​கும். தனது மேலாதிக்​கத்தை இயன்றவரை நிலைநாட்​டிக் கொள்வது மட்டுமே அவரது நோக்கமாக இருக்​கலாம்.

என்ன செய்ய​லாம்?

  • இந்தியாவால் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை நடைமுறைப்​படுத்த முடியும். அதற்கு உள்கட்​டமைப்பு வசதிகளையும் நிர்வாக அலகுகளையும் மேம்படுத்த வேண்டும். சாதி, மதச் சச்சர​வுகளை விட்டொழிக்க வேண்டும். கூடவே, நமது மனித வளத்தைத் திறன்​மிக்கதாக மேம்படுத்த வேண்டும். திறமையும் பயிற்​சியுமே ஒரு நல்ல தொழிலாளியை உருவாக்​கும். இதற்கு அடிப்​படைக் கல்வியும் நல்ல ஆரோக்​கியமும் அவசியம். நீண்ட காலத் திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போது, இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் மனித வளத்தின் மதிப்பு உயரும்; உலகின் தொழிற்​சாலை​யாகவும் இந்தியா மாறும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories