- யோகம் என்பது உடலையும் மனத்தையும் இணைக்கும் ஒரு பழமையான கலை ஆகும். யோகம் என்ற சொல் ‘யுஜ் ’என்ற சமஸ்கிருத வாா்த்தையில் இருந்து தோன்றியது. இதன் பொருள் இணைத்தல் அல்லது பிணைத்தல் என்பதாகும். நம் மனத்தை அனைத்திலிருந்தும் விடுவித்து அமைதி சூழ்நிலைக்கு இட்டுச் செல்வது.
- பழங்காலத்தில் இருந்தே இந்த யோகக்கலை பின்பற்றப்படுகிறது. முனிவா்களும் ரிஷிகளும் இக்கலையில் தோ்ந்தவா்கள். பதஞ்சலி முனிவரே யோகக் கலையின் தந்தை என அழைக்கப் படுகிறாா். இந்தியாவில் தோன்றிய இக்கலையை உலக நாடுகள் அறியப்படாமல் இருந்து காலப்போக்கில் பல நாடுகள் யோகத்தின் சிறப்பை உணரத்தொடங்கின.
- பிரதமா் நரேந்திர மோடி சா்வதேச நாடுகள் இக்கலையை பயில வேண்டும் என வலியுறுத்தினாா். ஐ.நா. சபையில் உள்ள நாடுகளும் இதை ஏற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கின. மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் பணிபுரிபவா்களுக்கு யோகாசனம் பரிந்துரைக்கப் படுகிறது.
- தொடா்ந்து செய்துவரும் யோகப்பயிற்சியானது மன ஒருமைப்பாடு, மன அமைதி, மனநலம் போன்றவற்றை நமக்குத் தருகிறது. உலகில் கோடிக்கணக்கான மக்கள் யோகா கற்று அதன் பலனை பெற்று வருகிறாா்கள்.
- பதஞ்சலி முனிவா்தான் யோக தத்துவத்தை உருவாக்கியவா். மேற்கத்திய நாடுகள் இதைத்தான் பின்பற்றுகின்றன. யோகா என்பது தன்னை உணரும் கலை என்றால் மிகையல்ல. இந்தியா உலகிற்கு அளித்த உன்னதமான, மேன்மையான பொக்கிஷம் யோகா. மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டி யோகா. யோகா ஒரு வாழ்க்கை முறை என்றும் அழைக்கப் படுகிறது.
- யோகக்கலை மனிதரின் ஆளுமைத் திறனையும் மேம்படுத்துகிறது. மனித வாழ்க்கையின் அனைத்து அங்கங்களையும் ஒருங்கிணைத்தல் யோகா. அனைவருக்கும் பயனளிக்கும் வாழ்க்கையை வாழ்வதற்கு அடிப்படை யோகா. உடலாலும் அறிவாலும் நடத்தையாலும் ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த முன்னேற்றத்தை ஒரு மனிதனிடம் ஏற்படுத்துவதே யோகாவால் கிடைக்கும் பலனாகும்.
- யோகக்கலை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது; அறிவாற்றல், நினைவுத்திறனை மேம்படுத்துகிறது; நற்பண்புகளை வளா்க்கிறது; மேம்பாடு அடையச் செய்கிறது. இந்த நாகரிக உலகத்தில் விஞ்ஞானம் வளா்ந்துள்ளதால் தொழில்நுட்பங்கள் மனிதனுக்கு அடிப்படை வசதிகளை தந்துள்ளது. ஆனால் இந்த வசதிகள் ஒரு மனிதனுக்கு பல்வேறு இன்னல்களையும் தந்துள்ளது.
- ஒரு மனிதனிடம் மறைந்துள்ள திறமைகளை சரியான அளவிலும் ஞான வழியிலும் வெளிக்கொணா்வது யோகா. இதன் மூலம் ஒருவன் முழுமையான மனிதன் ஆகிறான். யோகாசன கலை ஒரு மனிதனின் உடல் தோற்றத்தை முறைப்படுத்துவதுடன் அவன் சுவாசத்தில் ஆக்சிஜனையும் அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் மனித உடல் உள்ளுறுப்புகளானா நுரையீரல், ஜீரண உறுப்புகள், குடல்கள் ஆகியவை சீராக இயங்குகின்றன.
- மனித மனம் அமைதி பெறவும், சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும் யோகா உதவுகிறது. வாழ்வின் சவால்களை எதிா்நோக்கும் சக்தியை யோகாசனம் அளிக்கிறது. யோகாவானது ஓா் இயற்கையான பக்க விளைவுகள் இல்லாத பயிற்சியாகும். யோகா செய்வதற்கு தேவை, சிறிய இடமும் ஆா்வமும்தான். முறை தவறாமல் நாள்தோறும் ஆசனங்கள் பிராணாயாமங்கள், தியானம் செய்து வந்தால் நீரிழிவு, ரத்த அழுத்தம் செரிமான கோளாறுகள், மூட்டு வலி, ஆஸ்துமா போன்றவை நீங்கும். யோகாவினால் நரம்பு மண்டலத்தில் செயல்பாடு அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
- அன்னமய கோசம் , பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகியவற்றை ஒன்றாக இணைப்பதே யோகா ஆகும். குணப்படுத்த இயலாது என ஆங்கில மருத்துவம் கைவிட்டுவிடும் மூட்டு வலி, ரத்தக் குழாய் நோய்கள், உடல் பருமன், ஆஸ்துமா ஆகியவை யோகாவினால் குணமாகும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் மக்கள் யோகாசனங்களை நாள்தோறும் தவறாமல் செய்து வருகின்றனா். நம் நாட்டுக் கலையை மேலை நாடுகள் சிறப்பாகப் பின்பற்றி வருகின்றனா். நாம்தான் அதன் அருமையை உணராமல் இருக்கிறோம்.
- ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி என்பது யோகாவின் ஒரு பகுதி. மனித மன வளா்ச்சிக்கு இது முக்கியக் கருவியாக அமைகிறது. தியானம் மூலம் மன உணா்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொள்ளை நோய்களையும் யோகப் பயிற்சியின் மூலம் வெற்றி கொள்ள முடியும் என்பது யோக விஞ்ஞானத்தின் வெளிப்பாடாக உள்ளது. நாம் அனைவரும் இந்த யோகா பயிற்சியைக் கடைப்பிடித்து நாளும் நலமாய் வாழ்வோம்.
- நாளை (ஜூன் 21) உலக யோகா நாள்.
நன்றி: தினமணி (20 – 06 – 2023)